சிகரெட் முதல்
கடல் குளியல்
ECR பயணம்
பெரிய ராட்டினத்தில் சுற்றுதல் வரை
உனது பயங்களுக்கு அடிபணிந்து
எனது விருப்பங்களையெல்லாம்
உனக்காக விட்டுக்கொடுத்திருக்கிறேன்.
இறுதியில்… என் காதலையும்!
அர்த்தமிழந்த சொற்களை சுமக்கும்
உன் பழைய காதல் கடிதமொன்று
தன்னை அழித்துக்கொள்ள உயிரில்லாமல் தவிக்கிறது.
*
காதலித்து கைவிட்டதற்குப் பதிலாக
காதலிக்கவில்லையென நீ
பொய்யே சொல்லியிருக்கலாம்
*
நீ சொன்னபடியே
உன்னை மறந்துவிடுகிறேன்.
என்னுடன் கலந்துவிடு.
*
என்னை இதயத்தில் சுமந்தாய்.
உன்னை உயிரில் வைத்தேன்.
இதய மாற்று சிகிச்சை எளிது.
உயிர் மாற்று சிகிச்சை?
*
செல்லரித்துப் போன
உனது பழையப் படமொன்று
என் செல்லரித்துக் கொண்டிருக்கிறது.
நிழல் தேடி நெருங்கும்பொழுதெல்லாம்
வெயில் பொழியும் விருட்சம்
நீ.
*
நம் பிரிவைப் பற்றி அறியாமல்
வழக்கம்போல வந்து ஏமாறுகின்றன
உன் கனவுகள்.
*
கிழிக்க மனமின்றி
பத்திரப்படுத்திய உன் கடிதங்களை
வாசிக்கும்பொழுதெல்லாம் கிழிகிறது
மனம்.
*
நம் பிரிவுக்குப் பிறகு
128 முறை தூக்கியெறிந்திருக்கிறேன்
நீ பரிசளித்த பொருட்களை.
*
நீயும் தேவதைதான்.
நம் காதலும் தெய்வீகமானதுதான்.
என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்?
*
தொலைந்து போய் அழும்பிள்ளையின் துயரும்
தொலைத்துவிட்டுக் கதறும் தாயின் வலியும்
ஒன்றாகத் தந்தாய்.
பாதி உயிரை இழந்த உடலின் கதறலும்
உடல் நீங்கிய உயிரின் தவிப்பும்
ஒன்றாகத் தந்தாய்.
பார்வையற்ற கண்களின் இருமையும்
வாயில்லா இதயத்தின் வெறுமையும்
ஒன்றாகத் தந்தாய்.
இனிமைகொள்ள ஒரு நினைவும்
தனிமைகொல்ல ஒரு நினைவும்
ஒன்றாகத் தந்தாய்.
எடுத்துப்போன இதயத்தை மட்டும் ஏன்
இரண்டாகத் தந்தாய்?
குருதி தோய்ந்த நகங்களை நாவால் நக்கியபடி,
உயிர் குடிக்கும் உக்கிரத்துடன்
பதுங்கி பதுங்கி திரும்பவும் வருகிறது.
சிக்கிவிட்ட இரையென நடுங்குகிறேன் நான்.
இரக்கமேதுமின்றி மீண்டுமொருமுறை
என்னைக் கொன்றுவிட்டு
சலனமேயில்லாமல்
என்னருகிலேயே படுத்துறங்குகிறது உன் நினைவு.
மறுபடியும் உயிரூட்டி
மரண விளையாட்டு விளையாட!
*
நம் காதலின்
மிக நீண்ட உரையாடல்
உனது மௌனம்.
*
அழகான கவிதையாய்
நுழைந்தவள்
கனமான கவிதையை
விட்டுச் செல்கிறாய்
*
நீ. நான். காதல்.
முக்கோண விளையாட்டில்
எப்போதும் தோற்கிறோம்
நானும் காதலும்.
*
நாளை முதல்
உன்னை மறந்துவிடுவதாக சொன்னது உண்மைதான்.
ஆனால் எல்லா ‘நாளை’க்கும் ஒரு ‘நாளை’ இருக்கிறது.

காதல் வாங்கினால் முத்தம் இலவசம்!
நா செஞ்ச குத்தமென்ன?
பிறந்த நாள் வாழ்த்து!
அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு – 1
பிப்ரவரி 14(3) சிறப்புக் கவிதைகள் :-)
அன்புள்ள காதலிக்கு
ஆத்தா நான் Physics ல பாசாகிட்டேன்!!!
சென்னைக் காதலும், திருச்சிக் காதலும்
மாண்டு போனவள் உயிர்த்தெழுந்து வருகையில்…(சிறுகதை)
ஜனனி.. ஜனனி..
காதல் செ(ய்)வ்வாய்
முத்தம்
பேரலையும் மாமழையும்
குழந்தை கவிதை
இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்
Commentators - July