Jul 29

நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!

*

 

இரண்டு முத்தங்கள் கொடுத்து

இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.

இயலாத செயலென

இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.

 

*

 

யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்

எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள

என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.

எப்பொழுதும் அளந்தே பேசுபவன்

உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே

அளவின்றி பேசுகிறேன்.

 

*

 

உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்

எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட

சிறகடித்து தவிக்கும் இமைகள்!

 

*

 

தனியே நீ முணுமுணுக்கும்

இனிய பாடல்கள்

இசைத்தட்டில் ஒலிக்கையில்

இனிமை இழப்பதேன்?

written by அருட்பெருங்கோ \\ tags: , , ,

Jun 02

உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!

*

இமைப்பொழுதிலும்
கவிதை எழுதுவேன்.
இமைப்பது நீயெனில்.

*

உலகின் பெண்களுக்கெல்லாம்
உனதுருவம் அமைந்துவிட்ட மாயக்கனவிலும்…
உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
உனது பார்வை!

*

நீ குடை விரித்ததும்
குடை சாய்ந்தது
மழை வண்டி!

*

இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்
அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன…
சில கவிதைகள்!

written by அருட்பெருங்கோ \\ tags: , , , ,

May 26

என் கண்களைக் கட்டிப்பிடித்து
உன் பார்வை செய்யும் குறும்புகள்தான்
‘கண் கட்டி வித்தை’யா?

*

விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
இமைவாசலில் தவம் கிடக்கின்றன
நம் பார்வைகள்.

*

நீ பார்க்கும்பொழுதெல்லாம்
கண்களை மூடிக்கொள்கிறேனா?
உன் பார்வைகளை இமைக்குள் சேமிக்கிறேன்!

*

நேற்றிரவு நிலவை
நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
நிலா குளிர்ச்சியாக இருந்தது!

*

செடி நீட்டும் பூவுடன் சேர்த்து
பூ நீட்டும் செடியினையும் நேசிக்க
உன் பார்வைதான் கற்றுக் கொடுத்தது.

written by அருட்பெருங்கோ \\ tags: , ,

Jul 13

இருள் கவிந்த ஒரு மாலைநேரம்.
உன் வருகையை
ஊருக்கே சொல்லிக்கொண்டு
மணக்கிறது உன் கூந்தலின் மல்லிகை.
என்ன மல்லிகையோ…
உன் புன்னகையைப் போல
ஒளிரத்தெரியவில்லை.

மணக்கும் மல்லிகை
கூடவே கொஞ்சம் ஒளிர்ந்தால்
எப்படி இருக்குமென
உனக்கொரு ஏக்கம்.

அதற்காகவே,
ஒரு மழைக்காலம் முழுவதுமாய் சேகரித்த
மின்னல்களை ஒடித்து
மல்லிகையோடு மல்லிகையாய்
சரம் தொடுத்தேன்.

மீண்டும் ஒரு மாலைநேரத்தில்
உன் கூந்தலில் சூடிக்கொள்ள
உன் கண்களைப் பொத்திவிட்டு
மின்னல்சரத்தை நான் நீட்ட…
நீ கண் திறந்தாய்.

உன் கண்களை
நேர்கொண்டு பார்க்க முடியாமல்
சரசரவென சரிந்து விழுந்தன…
சரமாய்த் தொடுத்திருந்த
அத்தனை மின்னல்களும்!

“ம்ஹும்… இப்போ எதுக்கு வழவழனு அளந்துட்டு இருக்க… சின்னதா சொல்லத் தெரியாதா?”

“ம்ம்ம்…சரி”

உன் பார்வை பட்டதில்
குருடாகிப் போனது
மின்னல்!

written by அருட்பெருங்கோ \\ tags: , ,

May 13


பார்வைகளால் கவிதை எழுதுகிறேன்.
முத்தங்களால் இசை அமைக்கிறாய்.


“சுற்றுலா போக என்னவெல்லாம்
எடுத்து வைக்க?” – அப்பாவியாய்க் கேட்கிறாய்.
இரண்டு இதயமும், ஒரு கனவும் போதாதா?


யாருக்கும் கேட்டுவிடாமல்
சத்தமின்றிதான் முத்தமிடுகிறாய்.
இருந்தும் சங்கடத்தில் நெளிகின்றன…
செல்பேசிகள் இரண்டும்!

 

“எப்போதென்னைக்
காதலிக்க ஆரம்பித்தாய்?”

எத்தனை முறை
கேட்டாலும் உதட்டுப் பிதுக்கலே பதிலாய்…

ம்ம்ம்…எப்போது மலர்ந்தோமென
எந்த மலருக்குதான் தெரிகிறது?

கோபம்…
சூரியனுக்கு வந்தால்
அக்னி நட்சத்திரம்.
உனக்கு வந்தால்
அக்னி நிலா!


என் பெயரை
தமிழில் இருந்து
காதலுக்கு மொழிபெயர்த்தேன்.
உன் பெயர் வந்தது!

written by அருட்பெருங்கோ \\ tags: , , ,