காதல் யந்திரம்

சிறியவனாயிருந்த காலத்தில் எந்தப் பொருளையாவது தொலைத்துவிட்டு அப்பாவிடம் அடி வாங்கும்பொழுதெல்லாம் யோசித்திருக்கிறேன், கடந்த காலத்துக்கு சென்று அந்தப் பொருளை எங்கு வைத்தேனெனெத் தெரிந்து கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? காலயந்திரம் உருவாக்கும் சாத்தியக்கூறுகளுக்கான எனது தேடல் இப்படித்தான் துவங்கியது. பள்ளிக்காலம் வரைக்கும் எப்படியாவது கடந்த காலத்துக்கு செல்வதே எனது எதிர்கால இலட்சியமாக இருந்ததென்று சொல்லலாம். பள்ளியிறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த சமயம் உலகம் அழியப்போவதாக பரபரப்பான செய்திகள் வந்தபொழுதுதான் Nostradamus அறிமுகமானார். எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே கணித்திருக்கிறார் என்ற ஆர்வத்தில் அவரது The Prophecies புத்தகத்தை தேடிப்படித்தபோதும் எனக்கதில் பெரிய ஈர்ப்பு வரவில்லை. அறிவியலுக்கு அப்பாற்பட்ட எதனையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

+2 முடித்து திருச்சி RECயில் EEE சேர்ந்தபின்னர் எலக்ட்ரானிக்ஸ் சிப்புகள் எல்லாம் விதவிதமாக பிணைந்து காலயந்திரமாக உருவாவது போல கனவு கண்டேன், இரவு பகல் இரண்டிலும். கல்லூரிகாலத்தில் தான் வெறும் தேடலாக இருந்த எனதார்வம் ஓர் ஆராய்ச்சிக்கான துவக்கமாக உருமாறியிருந்தது. Time machine, time travel குறித்த புனைவுகள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள் என எல்லாவற்றையும் தேடித்தேடி வாசித்தேன். Sci-Fi திரைப்படங்கள் எனது கணினித் திரையில் விடிய விடிய ஓடிக்கொண்டிருந்த காலமது. காலம் என்பது நான்காவது பரிமாணம் என்பதும், கடந்த காலமும் எதிர்காலமும் சந்திக்கும் புள்ளிதான் நிகழ்காலமென்பதால், நிகழ்காலம் என்ற ஒன்றே கிடையாதென்பதும் புரிபடத் துவங்கியது. எனது புரிதலைக்கொண்டு கல்லூரி இறுதியாண்டில் காலயந்திரம் உருவாக்குவதற்கான Proof Of Concept மாதிரி நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் விளக்கினேன். எவனும் மதிக்கவில்லை. வெறுப்பாக வந்தது.

 

கல்லூரி முடித்ததும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து டெல்லிக்கு வந்த பின்னரும் காலயந்திரம் தன்னை உருவாக்க சொல்லி என்னைத் துரத்திக்கொண்டே இருந்தது. அலுவல் நேரம் போக தினமும் ஆறு மணிநேரமாவது இதற்காக செலவு செய்தேன். எனது அறை கிட்டத்தட்ட ஓர் ஆய்வுக்கூடம் போலவே வளர்ச்சியடைந்திருந்தது. நான்காண்டு உழைப்பு பெரிய முன்னேற்றமெதனையும் தந்துவிடவில்லை. போகாத ஊருக்கு வழித் தேடுகிறேனோ என்று சலிப்பேற்பட்ட போதும் புதிய ஊரினைக்கண்டு பிடிக்கும் காட்டுவழிப் பயணத்தைப்போல எனது ஆராய்ச்சி தொடர்ந்துகொண்டிருந்தது. எனது விடாமுயற்சி வீண்போகவில்லை. கடந்த காலம், எதிர்காலம் இரண்டுக்கும் பயணிக்கும்படி உருவாக்கியிருந்த எனது காலயந்திரம் அன்றிரவு எதிர்காலத்துக்கு மட்டும் வேலை செய்ய துவங்கியிருந்தது. காலயந்திரத்தில் என்னை இணைத்துக் கொண்டு அம்மாவை நினைத்தபடி கண்மூடினேன். அடுத்த ஓராண்டில் எனக்கும் அம்மாவுக்கும் நடக்கும் சந்திப்புகள் மனத்திரையில் ஓடத் துவங்கின. ஓராண்டுக்குப்பிறகு வெற்றுத்திரையே தெரிந்தது. காலயந்திரத்திலிருந்து வெளியே வந்தேன். எதையோ சாதித்துவிட்ட திருப்தியிருந்தது. சட்டென அந்த யோசனை வரவும் மீண்டும் காலயந்திரத்தில் என்னை இணைத்துக் கொண்டு காலயந்திரத்தையே நினைத்த படி கண்மூடினேன். முதல் காட்சியைப் பார்த்ததுமே என் இதயம் துடிப்பதை நிறுத்தி மகிழ்ச்சியில் குதிக்கத் துவங்கியது. ஆம், அடுத்தநாள் காலை அது கடந்த காலத்துக்கும் வேலை செய்வதை நான் பரிசோதிக்கும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. காலயந்திரத்திலிருந்து வெளியே வந்தேன். யுரேகா யுரேகா என்று கத்திக்கொண்டு வீதியில் ஓட வேண்டும் போலிருந்தது. உற்சாகமிகுதியில் மதுவருந்துவதற்காக அந்த மதுவிடுதிக்குப் போயிருந்தேன். மூன்றாவது கோப்பை VSOP உள்ளே போனபிறகுதான் பக்கத்து டேபிளில் தனியே இருந்த அவனை நன்றாகப் பார்க்க முடிந்தது.

 

‘டேய், நீ அருள் தான?’ என்று கேட்டுக்கொண்டு அவனை நெருங்கினேன். அருள்முருகன் எனது கல்லூரித் தோழன். இத்தனை ஆண்டுகள் கழித்து இங்கெப்படி? அதுவும் தனியாக மதுவருந்திக்கொண்டு? விசாரித்த பிறகு எல்லாவற்றையும் சொன்னான் விரக்தியோடு. கல்லூரி முடிந்ததும் அவனும் பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் மூன்றாண்டுகள் வேலை பார்த்துவிட்டு MBA படிக்க இங்கு டெல்லி கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். அங்கே இளாவும் சேர்ந்திருக்கிறாள். இளா என்றால் இளவரசி. அவளும் எங்களுடையக் கல்லூரித்தோழி தான். பழைய கல்லூரித்தோழர்கள் என்பதால் இயல்பாகவே நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். இரண்டாமாண்டு தான் அவர்களுடைய நட்பு காதலாக மலர்ந்திருக்கிறது. காதலே வெட்கப்படுமளவுக்கு  ஆறுமாதம் காதலித்திருக்கிறார்கள். அதன்பிறகு வழக்கம்போல இளா வீட்டில் அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் வரை செல்கையில் தன் காதலை வீட்டில் சொல்லியிருக்கிறாள். ஆனால் அன்பையே ஆயுதமாக்கி அவளை அந்தத்  திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்திருக்கிறார்கள். இவனிடம் வந்து ‘என்ன மன்னிச்சிடு அருள். எல்லாத்தையும் மறந்துட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோ’ என்று அறிவுறை கூறிவிட்டுக் கொஞ்ச நேரம் அழுதுவிட்டு சென்றிருக்கிறாள். நாளைக்கு அவளுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறதாம். இவன் துக்கம் தாங்காமல் இங்கு வந்திருக்கிறான்.

 

அவன் கதை முழுவதையும் கேட்டதும் எனக்கிருந்த உற்சாகமே போய் விட்டிருந்தது. இருவரும் இன்னும் மூன்று கோப்பை அருந்தினோம். அவன் தானே பேசிக்கொண்டு அழ ஆரம்பித்தான். நான் சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்தேன். புகைக்குள் அருள் தெரிந்தான். இளா தெரிந்தாள். கால யந்திரமும் தெரிந்தது. அருளை எழுப்பி அவன் காதலை நான் காப்பாற்றுவதாக சொன்னேன். அவன் நம்பாமல் பார்த்தான். எனது செல்பேசியெண்ணை அவனிடம் கொடுத்து அடுத்த நாள் காலை 11 மணிக்கு என்னை தொடர்புகொள்ள சொல்லிவிட்டு அறைக்குத் திரும்பினேன். எனக்கு ‘திக்’ ‘திக்’ என்றிருந்தது.

 

அடுத்த நாள் காலை ‘எதிர்காலம்’ சொன்ன படியே, எனது காலயந்திரம் கடந்த காலத்துக்கும் வேலை செய்யத்துவங்கியிருந்தது. எதிர்காலம் போலவே இதுவும் ஓராண்டுக்கு மட்டுமே. எதிர்கால நிகழ்வுகளைப் பார்க்க மட்டும்தான் முடியும். ஆனால் கடந்த கால நிகழ்வுகளை மனத்திரையில் பார்க்கலாம் + குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சென்று நமது செயல்களை மாற்றிவிடலாம். அதுதான் எனக்கு அருளையும் இளாவையும் சேர்த்துவிடும் நம்பிக்கையைத் தந்தது. பரிசோதனை செய்துகொள்வதற்காக காலயந்திரத்துடன் என்னை இணைத்துக்கொண்டு கடந்தகாலத்தை தெரிவு செய்தேன். அருளை மனதில் நினைத்துக்கொண்டு கண்மூடினேன். முந்தைய நாள் சந்திப்பு மனத்திரையில் ஓடியது. எனக்குத் தேவையான கடைசி இரண்டு நிமிட கால இடைவெளியைத் தெரிவு செய்து கொண்டு கடந்த காலத்துக்குள் நுழைந்தேன். என்னுடைய செல்பேசிக்கு பதிலாக வேறொரு எண்ணை அவனிடம் கொடுத்துவிட்டு கால யந்திரத்திலிருந்து வெளியேறினேன். எதிர்பார்த்தபடியே 11.15 வரை அவனிடமிருந்து அழைப்பு வரவில்லை. அதன்பிறகு அவனுடைய எண்ணுக்கு நானே அழைத்தேன். வேறொரு எண்ணைக் கொடுத்துவிட்டதற்காக என்னைத்திட்டினான். நான் போதையில் தவறாக சொல்லியிருப்பேனென்று மன்னிப்பு கேட்டுவிட்டு என் முகவரி சொல்லி எனதறைக்கு அவனை வரச்சொல்லியிருந்தேன். அவன் வரும்வரை எனக்கு இருப்பு கொள்ள வில்லை.

 

நான் செய்யப்போவது எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்குமா என்று படபடப்பாக இருந்தது. கால யந்திரந்திலேயே பார்த்துவிடலாமென அதனுடன் என்னை இணைத்துக்கொண்டு எதிர்காலத்தை தெரிவு செய்தேன். அருளையும், இளாவையும் மனதில் நினைத்துக்கொண்டு கண்மூடினேன். கதவு தட்டப்படும் அலாரம் காலயந்திரத்தில் கேட்டது. எரிச்சலோடு கால யந்திரத்திலிருந்து வெளியேறினேன். அருள் தான் வந்திருந்தான். எனது அறையையே வித்தியாசமாகப் பார்த்தான். அவனை அமரச் சொல்லிவிட்டு அவனுக்கு எனது காலயந்திரம் பற்றி முழுமையாக விளக்கினேன். நான் அதனை முழுமையாக பரிசோதித்துவிட்டேன் என்பதை நான் கடந்த காலத்துக்கு போய்தான் அவனிடம் கொடுத்த செல்பேசியெண்ணை மாற்றியதைச் சொல்லிப் புரிய வைத்தேன். நம்பியும் நம்பாமலும் என்னைப் பார்த்தான். நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும், எல்லாம் நல்லபடியாக நடக்குமென நம்பிக்கையளித்தேன். தலையாட்டினான். அவர்களுக்கிடையேயான கடைசிச் சந்திப்பில் என்ன நடந்ததென விசாரித்தேன். எல்லாவற்றையும் சொன்னான். கடைசியாக அவள் ‘என்ன மன்னிச்சிடு அருள். எல்லாத்தையும் மறந்துட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோ’ என்று சொன்னதாகவும் இவன் அமைதியாக இருந்ததாகவும், அவள் அழுதுகொண்டே சென்று விட்டதாகவும் சொன்னான். எனக்கு எரிச்சலாக வந்தது. விழுந்து விழுந்து காதலிக்கிறான்கள். ஆனால் அதைக் காப்பாற்றத் தெரியவில்லை.

அவர்களின் பெற்றோரைப் போலவே அவனும் அன்பையே ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டுமென சொல்லி அவனை காலயந்திரத்தோடு இணைத்தேன். இளாவை நினைத்துக்கொண்டு கண்மூடினான். அவன் கடந்த காலத்துக்குள் நுழையவேண்டிய கால இடைவெளியைத் தெரிவு செய்தான்.

 

‘…என்ன மன்னிச்சிடு அருள். எல்லாத்தையும் மறந்துட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோ’

‘இளா, உன்னோட சூழ்நிலை எனக்குப் புரியுது. நீ என்ன தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் உன்னக் கட்டாயப்படுத்தல. அதே மாதிரி நான் இன்னொரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கனும்னு தயவு செஞ்சு என்னக் கட்டாயப்படுத்தாத. எனக்கு இன்னொரு கல்யாணம் கண்டிப்பா நடக்காது.பை’

 

சொல்லிக்கொடுத்த மாதிரியே சொல்லிவிட்டு கால யந்திரத்திலிருந்து வெளியேறினான்.

‘அப்பாடா இப்போதான் கொஞ்சம் பாரம் கொறஞ்ச மாதிரி இருக்குடா’

‘அருள், ஒன்னும் கவலப்படாத. எல்லாம் நல்லபடியா நடக்கும்! இளாவோட நம்பர் கொடுத்துட்டுப் போ’

‘நோட் பண்ணிக்கோ 9948645533’

அன்று கவலை குறைந்தவனாக அவனது விடுதிக்குக் கிளம்பிப் போனான்.

 

கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு இளாவுக்குத் தொலைபேசினேன். மிகவும் பதற்றமாக இருந்தது அவள் குரல். என் பெயரைச் சொன்னதும் அழ ஆரம்பித்துவிட்டாள். முந்தைய நாளிரவு மதுவருந்திவிட்டு வந்து விடுதியறையில் அருள் தற்கொலை செய்து கொண்டதாகவும் விடுதியே பரபரப்பாக இருப்பதாகவும் காவல்துறைக்கு தகவல் சொல்லப்பட்டிருப்பதாகவும் சொன்னாள். கடந்த காலத்தில் மாற்றம் செய்ததால் எல்லாமே மாறிவிட்டிருந்தது. முந்தைய நாளிரவு என்னுடன் மதுவருந்திவிட்டுப் போனவன் தற்கொலை செய்துகொண்டிருக்கிறான். அப்படியானால் இளாவின் செல்பேசியெண் எனக்கு எப்படி கிடைத்திருக்கும்? குழப்பமாக இருந்தது. விடுதிக்கு உள்ளேயிருந்து யாரையும் வெளியிலும், வெளியிலிருந்து யாரையும் உள்ளேயும் அனுமதிக்கவில்லையெனவும் அவள் வெளியில் மாட்டிக்கொண்டதாகவும் உள்ளே போக முடியவில்லையெனவும் அழுதாள். நான் வரும்வரை அவளை வெளியிலேயே இருக்க சொல்லிவிட்டு அவர்களுடைய விடுதிக்கு கிளம்பினேன்.

 

வாசலருகே இளா அழுதவாறு நின்றுகொண்டிருந்தாள். காவல்துறை அவள் மீதுதான் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குத் தொடரும் ஆபத்திருப்பதைச் சொன்னதும் பதற்றமாய் என்னைப் பார்த்தாள். எனக்கெல்லாம் தெரியுமென சொல்லி அவளை எதுவும் பேச வேண்டாமெனக் கேட்டுக்கொண்டு எனதறைக்கு அழைத்துப்போனேன். எனது அறையையே வித்தியாசமாகப் பார்த்தாள். அவளை அமரச் சொல்லிவிட்டு அவளுக்கு எனது காலயந்திரம் பற்றி முழுமையாக விளக்கினேன். நான் அதனை முழுமையாக பரிசோதித்துவிட்டேன் என்பதையும் புரிய வைத்தேன். நம்பியும் நம்பாமலும் என்னைப் பார்த்தாள். நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும், எல்லாம் நல்லபடியாக நடக்குமென நம்பிக்கையளித்தேன். தலையாட்டினாள். அவர்களுக்கிடையேயான கடைசிச் சந்திப்பில் என்ன நடந்ததென விசாரித்தேன். எல்லாவற்றையும் சொன்னாள். கடைசியாக அவன்

இளா, உன்னோட சூழ்நிலை எனக்குப் புரியுது. நீ என்ன தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் உன்னக் கட்டாயப்படுத்தல. அதே மாதிரி நான் இன்னொரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கனும்னு தயவு செஞ்சு என்னக் கட்டாயப்படுத்தாத. எனக்கு இன்னொரு கல்யாணம் கண்டிப்பா நடக்காது.பை

 என்று சொன்னதாகவும், இவள்

‘இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு மட்டும் இஷ்டமா அருள்? நீ பையனா பொறந்துட்ட, உன்னால கல்யாணமே பண்ணிக்காம இருக்க முடியும். நா பொண்ணாப் பொறந்துட்டேன் கல்யாணம் பண்ணிக்காம இருக்க நா விருப்பப்பட்டாலும், இந்த சமுதாயம் விடாது. மனசுல உன்ன நெனச்சுட்டு இன்னொருத்தனோட வாழ்ந்துதான் ஆகனும். அதத்தான் பண்ணப்போறேன்.பை.’ என்று சொல்லிவிட்டு அழுதுகொண்டே சென்று விட்டதாகவும் சொன்னாள். எனக்கு எரிச்சலாக வந்தது. விழுந்து விழுந்து காதலிக்கிறாள்கள். ஆனால் அதைக் காப்பாற்றத் தெரியவில்லை. அருளைப் போலவே அவளும் மரணத்தையே ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டுமென சொல்லி அவளை காலயந்திரத்தோடு இணைத்தேன். அருளை நினைத்துக்கொண்டு கண்மூடினாள். அவள் கடந்த காலத்துக்குள் நுழையவேண்டிய கால இடைவெளியைத் தெரிவு செய்தாள்.

 

‘இளா, உன்னோட சூழ்நிலை எனக்குப் புரியுது. நீ என்ன தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் உன்னக் கட்டாயப்படுத்தல. அதே மாதிரி நான் இன்னொரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கனும்னு தயவு செஞ்சு என்னக் கட்டாயப்படுத்தாத. எனக்கு இன்னொரு கல்யாணம் கண்டிப்பா நடக்காது.பை’

 

‘மன்னிச்சிடு அருள். நீயும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவன்னு எதிர்பார்த்துதான் நான் இப்படியொரு முடிவுக்கு ஒத்துக்கிட்டேன். நீ இப்படி சொன்னபின்னாடி நான் மட்டும் சந்தோசமாவா இருந்திடப்போறேன்? உன்னதான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு முடிஞ்ச வரைக்கும் போராடுவேன். இன்னொருத்தருக்கு தான்னு முடிவாயிடுச்சுன்னா, அந்த கல்யாணத்துக்கு முன்னாடி என் உயிர் போயிடும்.’

 

சொல்லிக்கொடுத்த மாதிரியே சொல்லிவிட்டு கால யந்திரத்திலிருந்து வெளியேறினாள்.

‘அப்பாடா, இப்பதான் கொஞ்சம் பாரம் கொறஞ்ச மாதிரி இருக்குப்பா’

‘இளா, ஒன்னும் கவலப்படாத. எல்லாம் நல்லபடியா நடக்கும்’

அன்று கவலை குறைந்தவளாக அவளது விடுதிக்குக் கிளம்பிப் போனாள்.

 

ஒரு மாதம் கழித்து ஒருமுறை இருவரையும் ஒரு திரையரங்கில் சந்தித்தேன். மீண்டும் இணைந்து விட்டார்கள் போல. அவனுக்குத் தெரியாமல் அவளும், அவளுக்குத் தெரியாமல் அவனும் ரகசியமாக நன்றி சொன்னார்கள். நான் இருவருக்கும் பொதுவாக புன்னகைத்தேன்.

 

ஆறுமாதம் கழித்து அருள் தொலைபேசியில் என்னையழைத்து மிகவும் பதற்றமாகப் பேசினான்.

 

‘மச்சான், தப்புப் பண்ணிட்டோம்டா…இளா செத்துட்டாடா…’

‘எப்படிடா? என்ன நடந்தது?’

‘லீவ்ல வீட்டுக்குப் போயிருக்கா. அப்பவே கல்யாணத்த முடிச்சிடனும்னு அவங்க வீட்ல ரொம்ப கம்பல் பண்ணியிருப்பாங்க போல… விஷம் குடிச்சிட்டா… போலீஸ் இப்போ என்னத்தேடுதாம். அனேகமா உன் வீட்டுக்கும் இந்நேரம் போலீஸ் வந்துட்டிருக்கும்’

அவன் சொல்லி முடிப்பதற்குள் ஒரு சத்தத்தோடு அவன் செல்பேசி உயிரிழந்தது.

 

பதற்றத்தோடு கால யந்திரத்துடன் என்னை இணைத்துக்கொண்டு கடந்த காலத்தை தெரிவு செய்தேன். இளாவை மனதில் நினைத்துக்கொண்டு கண்மூடினேன். கடந்த காலத்துக்குள் நுழையவேண்டிய கால இடைவெளியைத் தெரிவு செய்தேன்.

 

‘அப்பாடா, இப்பதான் கொஞ்சம் பாரம் கொறஞ்ச மாதிரி இருக்குப்பா’

‘இளா, ஒன்னும் கவலப்படாத. எல்லாம் நல்லபடியா நடக்கும். அப்பறம் ஒரு விசயம். இது சும்மா அருளுக்காக தான். நீ எந்த சூழ்நிலையிலயும் தற்கொலை முடிவுக்கெல்லாம் போகக்கூடாது. தற்கொலை பண்ணிக்கிறத விட நீங்க இப்பவே ஒரு பதிவுத்திருமணம் பண்ணிக்கிறது உங்களப் பாதுகாக்கும்’

 

நினைத்த மாதிரியே சொல்லிவிட்டு கால யந்திரத்திலிருந்து வெளியேறினேன்.

 

ஒரு மாதம் கழித்து அருளும், இளாவும் வந்திருந்தார்கள். அருள் வீட்டு சம்மதத்தோடு சொன்ன மாதிரியே பதிவுத்திருமணம் செய்துகொண்டு விட்டார்களாம். அப்புறம் இளா வீட்டிலும் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டு இரண்டாவது முறையாகத் திருமணம் நடக்கவிருக்கிறதாம். அழைப்பிதழ் கொடுத்துவிட்டுப் போனார்கள். எனது கால யந்திரம் காதல் யந்திரமாய் மாறிப்போனதில் மகிழ்ச்சியே.

 

அவர்களுடையத் திருமணத்திற்கும் சென்றிருந்தேன். பரிசுப்பொருளைக் கொடுத்துவிட்டு கேமராவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்த போது கதவு தட்டப்படும் அலாரம் காலயந்திரத்தில் கேட்டது. எரிச்சலோடு கால யந்திரத்திலிருந்து வெளியேறினேன். அருள் தான் வந்திருந்தான். எனது அறையையே வித்தியாசமாகப் பார்த்தான். அவனை அமரச் சொல்லிவிட்டு அவனுக்கு எனது காலயந்திரம் பற்றி முழுமையாக விளக்கினேன். நான் அதனை முழுமையாக பரிசோதித்துவிட்டேன் என்பதை நான் கடந்த காலத்துக்கு போய்தான் அவனிடம் கொடுத்த செல்பேசியெண்ணை மாற்றியதைச் சொல்லிப் புரிய வைத்தேன். நம்பியும் நம்பாமலும் என்னைப் பார்த்தான். நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும், எல்லாம் நல்லபடியாக நடக்குமென நம்பிக்கையளித்தேன். தற்பொழுதுதான் இனி நடக்கப்போகிற எல்லாவற்றையும் எதிர்காலத்துக்குப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்ததைச் சொன்னேன்.

முதன்மதலாக அவன் கடந்த காலத்துக்கு சென்று பேசியதையும், இருந்தும் இளா பிடிவாதமாக இருந்ததால் அவன் தற்கொலை செய்துகொண்டதையும், பிறகு இளா கடந்தகாலத்துக்கு சென்று அவன் மனதை மாற்றியதையும், பின்னர் அவளும் தற்கொலை செய்துகொண்டதையும், இறுதியில் நான் கடந்த காலத்துக்கு சென்று இளா மனதை மாற்றி பதிவுத்திருமணம் செய்துகொள்ள வைத்ததையும், இரு வீட்டு சம்மதத்தோடு நடந்த இரண்டாவது திருமணத்தில் நான் கலந்து கொண்டதைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது அவன் இப்போது வந்ததையும் சுருக்கமாகக்கூறினேன்.

 

பேயறைந்தவனைப்போல இருந்த அருள் , ‘நீ இன்னும் மாறவே இல்லையாடா’ என்று திட்டிவிட்டு தப்பித்து ஓடுபவனைப்போல் ஓடிவிட்டான்.

 

அதன்பிறகு என்னைக் கொண்டு வந்து இங்கே அடைத்துவிட்டார்கள். எல்லாம் அவனுக்கு உதவப்போய் வந்த வினை.

 

அந்த நோயாளி சொன்ன பதிலை ஒரு கதையைப்போல குறிப்பெடுத்துக்கொண்ட பொழிலன், பொன்னியிடம் சொன்னான் ‘its really different ponni’ . ‘yeah, But interesting. இத அதீத கற்பனைனு பாராட்டறதா இல்ல மனச்சிதைவு நோய்னு சொல்றதானு எனக்குத் தெரியல’ ஆமோதித்துவிட்டு அடுத்த வார்டுக்கு நகர்ந்தாள் பொன்னி.

 

‘முருகேசன்… நாங்க உளவியல் ஆய்வுக்காக உங்க கிட்ட பேச வந்திருக்கோம். நீங்க எப்படி இங்க வந்தீங்க?’

‘எனக்கு ரொம்ப நாளா என் முதுகுல யாரோ உட்காந்திருக்கிற மாதிரியே பயமா இருக்கு மேடம்…நான் சின்ன வயசுல எல்லாரையும் உப்பு மூட்டைத் தூக்கிட்டு விளையாடிட்டு இருக்கும்போது….’

இப்பொழுது வந்ததற்கு பதிலாக, நீங்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பே வந்திருக்கலாம்.

அப்பொழுது அவரெனக்கு நல்ல தோழியாக மட்டும் தான் இருந்தார். எனது குறைகளை குறையென மட்டுமே சொல்லாமல் திருத்திக்கொள்ளும் வழியினை சொல்லித் தருவதிலும், என்னால் தீர்த்துவிட முடியாதெனத் தெரிந்த போதும் தனது வருத்தங்களை என்னிடம்… என்னிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டதிலும், தனது நெருங்கிய தோழிகளைக்காட்டிலும் என் மீது அவருக்கு அன்பும், நம்பிக்கையும் அதிகமுண்டென்பதை அவருடைய செயல்கள் அனிச்சையாய் நிரூபித்துக்கொண்டே இருந்தன. எனக்குள் மட்டுமே கூடு கட்டிக் குடியிருந்த எனது எதிர்காலக் கனவுகளெல்லாம் சிறகடித்து அவரிடம் பறந்து சென்றபோதும், அவரது அருகாமையில் மட்டுமே நான் முழுமையடைவதாய் உணர்ந்துகொள்ளத் துவங்கிய போதும், எங்களுக்குள் முளைத்த நட்பு காதலாய் மலருமென நான் எதிர்பார்க்க வில்லைதான். ஆனாலென்ன? நல்ல நட்பிலிருந்து மலர்வது காதலுக்கும் அழகுதானே?

காதலிக்கிறோமெனத் தெரிந்த பின்னும் வெளிப்படையாய்ச் சொல்லிக்கொள்ளாமலே காதலிக்கும் இன்ப அவஸ்தையை அனுபவித்திருக்கிறீர்களா? காதலிக்குப் பிடித்த பாடலை செல்பேசியில் அழைப்பிசையாகவும், காதலிக்குப் பிடித்த புகைப்படத்தை கணினித் திரையிலும், காதலியின் பிறந்த நாளைக்குறிப்பிடும் எண்ணில் செல்பேசி இணைப்பும் வைத்துக்கொண்டதுண்டா? காதலியின் அறைத்தோழி உதவியுடன் காதலிக்குப் பிடித்த பரிசுப்பொருளை அவள் தலையணைக்கடியில் ஒளித்துவைத்து, இரவு பனிரண்டு மணிக்கு அழைத்து பிறந்த நாளுக்கு வாழ்த்தி, தலையணையை எடுத்துப்பார்க்க சொன்னதுண்டா? நீங்கள் தேநீரும் உங்கள் காதலி குளிர்பானமும் குடிக்கின்றபோதும் தேநீர் சுட்டுவிட்டதாய்ச் சொல்லி அவள் குடித்த பாதி குளிர்பானம் குடித்ததுண்டா? இந்த கிறுக்குத்தனங்கள் கூட இல்லையென்றால் அப்புறமென்ன காதல்?

இரவுநேரப் பேருந்தில் தனியேப் பயணிக்கும் உங்கள் காதலி நெடுஞ்சாலை உணவகத்தில் பேருந்து நின்றபோதும் தனியே செல்ல பயந்து சாப்பிடவில்லையென அனுப்பிய ஒரு குறுஞ்செய்தி இரவு முழுக்க உங்களை உறக்கமிழக்கச் செய்திருக்கிறதா? உங்களுக்கு நம்பிக்கையில்லாத போதும் உங்கள் பிறந்தநாளில் நெடுந்தூரம் தனியே பயணித்து கோவிலுக்கு சென்று பிரார்த்திக்கும் உங்கள் காதலியின் அன்பைப் புரிந்து கொள்ள, உங்கள் மனம் பக்குவப்பட்டிருக்கிறதா? சின்ன விசயத்துக்கெல்லாம் கோபித்துக்கொள்ளும் உங்கள் காதலியிடம் பெரிய விசயத்தையும் கோபமூட்டாமல் சொல்லிவிடும் கலையை, காதல் உங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறதா? இப்படி கட்டுப்பாடற்ற அன்பில் துவங்கவில்லையென்றால் அப்புறமென்ன காதல்?

தனிமையில் உங்களைப் பொய்யாக கிண்டலடித்துக் கொண்டேயிருக்கும் காதலி, அவள் தோழிகளுக்கு முன்னால் உங்களை விட்டுக்கொடுக்காமல் பேசுவதைக் கவனித்திருக்கிறீர்களா? உங்களிடம் பேசும்போது ஒருமையில் அழைக்கும் காதலி, உங்களைப் பற்றி பிறரிடம் சொல்லும்போது மரியாதையோடுக் குறிப்பிடுவதை ரசித்திருக்கிறீர்களா? அது, உங்கள் காதலியைப்பற்றி மூன்றாம் நபரிடம் நீங்கள் பேசுகையில் ‘அவள்’ என்பதற்குப் பதிலாக ‘அவர்’ என்று விளிக்க உங்களைப் பழக்கியிருக்கிறதா? இப்படி ஒருவர் மீது ஒருவருக்கு மரியாதை ஏற்படுத்தாவிட்டால் அப்புறமென்னக் காதல்?

பெற்றோர் சம்மதிக்காத நிலையில் வீட்டைவிட்டு ஓடிவந்தாலும் இப்பொழுதிருப்பதைக் காட்டிலும் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வீர்களெனும் நம்பிக்கை தனக்கிருப்பதாக உங்கள் காதலி உங்களிடம் உளறியதுண்டா? அப்படி சொன்னபோதும் கூட நீங்கள் அவரை வீட்டைவிட்டு ஓடிவர சொல்லிவிட மாட்டீர்கள் எனும் அவரது நம்பிக்கையை நீங்கள் காப்பாற்றியிருக்கிறீர்களா? இப்படி ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை உருவாகாவிட்டால் அப்புறமென்ன காதல்?

காதலுக்காக உயிரிழப்பதைப்போலவே நீங்கள் காதலுக்காக உயிரை இழந்ததுண்டா எனக்கேட்பதும் முட்டாள்தனம் தான். ஆனால் உங்கள் உயிரை விட அதிகமாய் நீங்கள் நேசிப்பவர்கள் உங்கள் மீது வைத்திருந்த மதிப்பை, காதலினால் இழந்திருக்கிறீர்களா எனக் கேட்கலாம். உங்கள் காதலி உங்களைத்தவிர வேறொருவரை மணக்கமாட்டாள், உங்களுக்காக வீட்டைவிட்டு வரவும் தயாராயிருக்கிறாள் என்பதையெல்லாம் சொல்லி உங்கள் வீட்டில் சம்மதம் வாங்கிக் காத்திருக்கையில் காதலிக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதையறிந்து பதறியிருக்கிறீர்களா? காதலை நேரடியாய்ச் சொன்ன காதலி தன்னை மறந்துவிடச்சொல்வதற்கு தோழியைத் தூதனுப்பிய போதும் உங்களுக்கு அவர் மீது கோபம் வராமல் பரிதாபம் வந்ததுண்டா? குடும்பத்தின் மதிப்பையும் இழந்து காதலியையும் இழந்து சொந்த வீட்டுக்குள்ளேயே ஓர் அகதியைப் போல வெறுமையை உணர்ந்திருக்கிறீர்களா? இந்த இழப்பைக்கூட ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் அப்புறமென்ன காதல்?

விடிந்தால் உங்கள் காதலிக்கு திருமணம் என்ற நிலையில் உறங்கப் பிடிக்காமல் இரவு முழுக்க வோட்கா குடித்திருக்கிறீர்களா? நான் குடித்துக்கொண்டிருக்கிறேன். இது இருபத்து நான்காவது கோப்பை. பார்த்தீர்களா… அவருக்கும் இருபத்து நான்கு வயதுதான். என்ன? காதல் தோல்விக்காக குடிப்பது முட்டாள்தனமா? காதல் தோல்விக்காக யார் குடிக்கிறது? என்னுடைய துயரங்கள் உங்களுக்குப் புரியுமா? அவருக்கு சைனஸ் தொல்லை இருப்பதால் மழைக்காலத்தில் அடிக்கடி சளி பிடிக்கும். சின்ன விசயத்துக்கெல்லாம் கோபம் வரும். ஒரு விபத்தில் அவருடைய இடது கையில் எலும்புமுறிந்து பிளேட் வைத்திருப்பதால் எடை தூக்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். செண்ட், டியோடரண்ட் எல்லாம் அவருக்கு அலர்ஜி. கூட்டத்தில் சாப்பிடப்பிடிக்காது. அதிக நகைகளோ, மேக்கப்போ விரும்ப மாட்டார். புடவையைவிட சுடிதார்தான் பிடிக்கும். இப்படி ஆயிரம் விசயங்கள் அவரைப்பற்றி எனக்குத் தெரியும். எல்லாவற்றையும் அவருடையக் கணவர் சரியாகப் புரிந்து கொண்டு அவரை நேசிப்பாரா என்று நான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வந்ததற்குப் பதிலாக மகிழ்ச்சியாக இருந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே வந்திருக்கலாம்.

யெஸ்! மிஸ்டர் எமன்! நீங்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பே வந்திருக்கலாம்.

———————————————————-

ஸ்ரீ துவங்கிய தொடருக்காக எழுதிய சிறுகதை.

விதிமுறைகள்:

1. பதிவின் தலைப்பு – “காதல் எனப்படுவது யாதெனில்…” (மாற்றக்கூடாது).
2. என்ன பதிவிடலாம் – இது தான் எழுதணும் என்கிற கட்டாயம் கிடையாது. பதிவு எதைப்பற்றி வேண்டுமானால் இருக்கலாம். கதை, கவிதை, நக்கல், கட்டுரை, மொக்கை………. என்ன வேணும்னா எழுதுங்க உங்கள் விருப்பம். (ஆனால் தலைப்போட கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கணும்)
3. பதிவு போட இன்னும் ஒருவரை அழைக்கணும். முன்பெல்லாம் இரண்டு மூன்று பேர் அழைக்கப்பட்டதால் தொடர் சங்கிலிகள் எங்காவது ஒரு தொடர்பு அறுந்தாலும் அவை கொஞ்சம் பயணித்தன. இங்கு ஒருவர் தான் அழைக்கப்படுகிறார் அதனால் நீங்கள் அழைப்பவரின் வசதியைக் கேட்டுவிட்டு கூப்பிடுங்கள்.

நான் அழைப்பவர் – இம்சையரசி

பொனாசிப்பட்டி ஆறுமுவம் பொண்டாட்டின்னா தெக்க அந்தரப்பட்டியில இருந்து வடக்க மகிளிப்பட்டி வரைக்கும் கொணமான பொம்பளைனு அத்தன சனத்துக்கிட்டயும் நல்ல பேரு. அவளும் யாருக்கும் எந்தக் கெட்டதும் மனசுல கூட நெனைக்க மாட்டா.நல்லது கெட்டதுக்கு வூட்டுக்கு வார சனத்த ஒரு வேலையும் செய்யவுட்டதில்ல.’அடநீங்க ஒக்காருங்கத்தாச்சி. செத்த நேரத்து வேல..நான் பாத்துக்கறேன்’ னு சொல்லிட்டு அவளே செஞ்சு முடிச்சிருவா. யார் வூட்டு கண்ணாலங்காச்சினாலும் சரி, எழவுழுந்த வூடாருந்தாலும் சரி காய்கசவ அரியற எடத்துலயோ, யாணம்பாணம் வெளக்கற எடத்துலயோ அவள பாக்கலாம்.’ஆளுக்கு அஞ்சாறா செஞ்சா செத்த நேரத்துல செஞ்சிரலாம்’னு சிரிச்சுக்கிட்டே சொந்த வூடு மாரி மளமளன்னு வேலைய பாத்துக்கிட்டு இருப்பா. ஆறுமுவம் பொண்டாட்டி இருந்தா ஏழூரு வேலையயும் என்னா சேதி?ன்னு கேட்றுவான்னு பொம்பளையாளுங்க மெச்சிக்குவாங்க.

சாமி கும்பிட்டாக்கூட’ஆத்தா மகமாயி… இந்த வருசமாவது ஊர்ல மழயக்கொண்டா. எல்லா சனத்தையும் காப்பாத்து’ னு வேண்டிக்கிட்டு ‘எம்புருசனுக்கு நல்ல புத்தியக்கொடு’ன்னு கடசியாதான் வேண்டிக்குவா.ஆனா, போன செம்மத்துல அவ என்ன பாவம்பண்ணாளோ இப்புடி ஆறுமுவத்துக்கு வாக்கப்பட்டு சீரழியறா. கட்டிக்கொடுக்கும்போது அவங்கப்பாரோட சேந்து காடுகரய பாத்துக்கிட்டு ஆறுமுவம் ஒழுங்காதான் இருந்தான். வருசம் ஒன்னா வரிசையா நாலு புள்ள பொறந்துச்சு. நாளும் பொட்ட. அவங்கப்பாரு போய் சேந்த பின்னாடிதான் அவனுக்கு புத்தி கெட்டுப்போச்சு.’இந்தூர்ல ஈனப்பயதாங் இருப்பான்.நா அரிசி யாவாரம் பண்றேன்’னு பொண்டாட்டி புள்ளய ஊர்லயே வுட்டுட்டு உடுமலைப்பேட்டைக்கு ஓடிப்போயிட்டான். நாலு வருசமா ஆளு அட்ரசே காணோம். தேடிப்போன ஆளுங்களுக்கும் ஒரு ருசுவுங் கெடைக்கல. ஆனா அவன் திரும்பி வருவான்னு அவ நம்பிகிட்டு இருந்தா. ‘ஏதோ ஆறுமுவம்பொண்டாட்டிங்கறதால இன்னும் இந்தூர்ல இருக்கா; வேற ஒருத்தியா இருந்தா இந்நேரம் பொறந்த ஊருக்கே பொட்டியக் கட்டியிருப்பா’ ன்னு ஒரக்கேணியில தண்ணியெறச்ச சனம் பேசிக்கிச்சுங்க.

அந்த வருசம் மாரியாயி நோம்பியப்ப வந்திருந்தான். பொண்டாட்டி, புள்ளைங்களுக்கு இந்தான்னு ஒரு சீலத்துணி, சட்டத்துணி வாங்கியாரல. அப்பானு போயி கட்டிகிட்ட புள்ளைங்க ஏமாந்து போச்சுங்க. ஊர்ல இருந்த நாள்ல ஒரு நாக்கூட அவன் வூடு தங்கல. இச்சி மரத்தடில சீட்டாடுனான், மொட்டயன் காட்டுல சேத்தாளிங்க கூட மொடாமுழுங்கி மாரி கள்ளுக் குடிச்சான். குளித்தல போயி சினிமா பாத்தான். ஆனா கொண்டாந்த காசுல ஒத்த பைசா வூட்டுக்குனு குடுக்கல. நோம்பிக்கு மக்யா நாளு ராத்திரி கரகாட்டம்னு சொல்லி ரெக்கார்ட் டான்சு நடக்க மத்திப்பட்டிக்காரன் கொழா செட்டுல ஊரு முழுக்க பாட்டு சத்தம் மொழங்குச்சு. புள்ளைங்கள தூங்க வச்சிட்டு படுத்திருந்த ஆறுமுவம்பொண்டாட்டி அழுதுகிட்டே அவன திட்டிட்டு இருந்தா. ‘நம்முடைய நடனத்தைப் பாராட்டி, இப்பொழுது உடுமலைப்பேட்டை அரிசி வியாபாரி திரு. ஆறுமுகம்பிள்ளை அவர்கள் ரூபாய் இரண்டாயிரத்தை அன்பளிப்பாக அளித்துள்ளார்கள். அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டு அடுத்த பாடலாக…’ காதுல அதக்கேட்டதும் ஆங்காரம் வந்தவாளாட்டம் எந்திரிச்சுப் போனா…ரெக்கார்டு டான்சு நடந்த நாடகக்கொட்டாய்க்கு. அங்க தண்ணியப்போட்டுட்டு தள்ளாட்டத்துலதான் இருந்தான் ஆறுமுவம். அங்கன ரெண்டு பேருக்கும் நடந்த சண்டைல ரெக்கார்டு டான்சு நின்னு எல்லாரும் இவங்க சண்டய வேடிக்க பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. கடசில ‘நீயெனக்கு பொண்டாட்டியுமில்ல;நா ஒனக்கு புருசனும்மில்ல’ னு சொல்லிட்டு அப்பவே உடுமலப்பேட்டைக்கு போயிட்டான். அன்னைக்கு வூடு வர்றவரைக்கும் எல்லா சாமிக்கும் சாபம் குடுத்துக்கிட்டே வந்தா. நாலு பொட்டப்புள்ளைய வச்சிருக்காளே, அந்த மாரியாயி, ஆறுமுவம் பொண்டாட்டிய இப்படி சோதிக்குதேன்னு ஊரு சனம் வெசனப்பட்டுக்குச்சு.

அப்பறம் அவன் அங்கயே இன்னொருத்திய சேத்துக்கிட்டான்னு தெரிஞ்சதும், அவன் திரும்பி வருவான்;புள்ளைங்கள கர சேப்பாங்கற நெனப்பெல்லாம் அவளுக்கு அத்துப்போச்சு. தனியா வெள்ளாம வைக்க அவளால முடியாதுன்னு, இருந்த நெலத்தையும் குத்தைக்கு வுட்டுட்டு அவ கொத்து வேலைக்கு போவ ஆரம்பிச்சுட்டா. அப்பறம் ஊர்லயும் மழயில்லாம என்னப்பண்றதுன்னு தெரியாம கரும்பு வெட்ற வேலைக்குப் போவ ஆரம்பிச்சா. மில்லு தொறந்திருக்கற மாசத்துல சத்தியமங்கலத்துக்கோ, பெருகமணிக்கோ புள்ளைங்கள இழுத்துக்கிட்டுப் போயிருவா. மூனு மாசம், நாலு மாசம்னு வேலையிருக்கும். மில்லு மூடிட்டா ஊருக்கு வந்துரனும். ரெண்டு வருசம் இப்படியேப்போச்சு. புள்ளைங்க பள்ளியோடம் படிக்க ஒரே ஊர்ல இருந்தாதா சொகப்படும்னு ஊர்லயே இருக்கனும்னு மூனாவது வருசம் கரும்பு வெட்ற வேலைக்கும் போவல. பொழப்புக்கு என்னப்பண்றதுன்னு தெரியாம முழிச்சவளுக்கு ஒரு கரும்பின்ஸ்பெக்டர் சொன்னது சரியாப்பட்டுச்சு. ஏதோ மகளிர் சுய உதவிக்குழுவுன்னு பொம்பளைங்களுக்கு தொழில் செய்ய கவர்மெண்டு லோன் குடுக்குதுன்னு சொல்லவும், யார் யாரையோ புடிச்சு பட்டுப்புழு வளக்கறதுக்கு லோன் வாங்கிட்டா. குளித்தலைல இருந்து அதுக்கு கூடெல்லாம் வந்து எறக்கிட்டுப்போயிட்டாங்க. ஒரே வருசத்துல நல்லா பெருக்க ஆரம்பிச்சிருச்சு. அவளப்பாத்து ஊருப்பொம்பளைங்க கொஞ்சம்பேரும் சேர அடுத்த வருசம் குளித்தல தாலுக்காவுல அவங்க குழுதான் நெறய லாபம் பாத்துதுன்னு அதிகாரிங்க எல்லாம் பாராட்டுனாங்க.புருசன் வுட்டுட்டு ஓடுனாலும் ஒத்தப் பொம்பளையாவே ஆறுமுவம்பொண்டாட்டி நாலு புள்ளைங்களையும் கர சேத்துடுவான்னு ஊருக்குள்ள ஆம்பளைங்களும் பேசிக்கிட்டாங்க.

அந்த வருசம் தேர்தல்ல பிள்ளாபாளையம் பஞ்சாயத்து தலைவர் பதவி பொம்பளைங்களக்குனு ஒதுக்கியிருந்தாங்க. பொனாசிப்பட்டில இருந்து அந்த பஞ்சாயத்துக்கு மூனு மெம்பருங்க. மகிளிப்பட்டியில ரெண்டு, தெக்கியூர்ல மூனு. மொத்தம் பதனஞ்சு மெம்பருங்க பஞ்சாயத்துல இந்த மூனூருக்காரங்க மெஜாரிட்டி வந்தா அதுல யாரோ ஒருத்தர் தலைவராயிடலாம். மீதி ரெண்டு ஊர்க்காரங்க சம்மதம் வாங்கி போட்டியில்லாம யார அனுப்புறதுன்னு முடிவு பேச இச்சி மரத்தடியில கூட்டம் போட்டிருந்தாங்க. ஆறுமுவம்பொண்டாட்டி தான் சரியான ஆளுன்னு பள்ளியோட வாத்தியார் சொன்னதுக்கப்பறம் ஊரே அதுக்கு தலையாட்டுச்சு. மொதல்ல இதுக்கு அவ ஒத்துக்கலன்னாலும், நம்மூரு ஆளு தலைவராயிட்டா, நம்ம கம்மாய தூருவாரலாம், நம்மூருக்கு பெரிய பள்ளியோடம் கட்டலாம்னு சொல்லி அவள சம்மதிக்க வச்சிட்டாங்க. மூனூரு சனமும் ஒத்துமையா இருந்ததுல அவளே செயிச்சு தலைவராயிட்டா. முடிவு தெரிஞ்சன்னைக்கு பொனாசிப்பட்டியில வேட்டு வெடிச்சுக் கொண்டாடி, சாயுங்காலம் கூட்டம் போட்டிருந்தாங்க. பள்ளியோட வாத்தியாரு எல்லாருக்கும் முட்டாய்க்கொடுத்துக்கிட்டே சந்தோசமா சொல்லிக்கிட்டு இருந்தாரு ‘நம்ம ஆறுமுவம் பொண்டாட்டிதான் இனிமே பிள்ளபாளையத்துக்கே பஞ்சாயத்துத் தலைவர்!’

அப்பறமா அவ பேச ஆரம்பிச்சா… ‘எம்பேரு ஆறுமுவம் பொண்டாட்டியில்ல…லெச்சுமி. நம்மூருக்கு…’

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு – முதல் பகுதி

“ஹலோ, நான் வினோத் பேசறண்டா”

“ம்ம்ம்… சொல்றா, உயிரோடதான் இருக்கியா?” சலிப்பு + கோபத்துடன் கேட்டான் அருள்.

“மச்சி போனவாரம் வந்தவுடனே ஆஃபிஸ்ல கொல்கத்தா அனுப்பிட்டானுங்கடா இன்னைக்குதான்
வர்றேன்.. சாரிடா போறதுக்கு முன்னாடி கால் பண்ண முடியல”

“சரி சரி ஈவினிங் ஃப்ரியா இருந்தா வீட்டுப் பக்கம் வா”

“வர்றேன் வர்றேன்… இளவரசிகிட்ட இருந்து எதுவும் கால் வந்துச்சா? என்ன சொன்னா?
எப்படி ஃபீல் பண்ணா”

“காலும் வரல.. கையும் வரல… நீ ஈவ்னிங் வா நேர்லப் பேசிக்கலாம்”

வினோத்துக்குக் கொஞ்சம் குழப்பமாயிருந்தது.
அன்று மாலையே வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு அருள் வீட்டுக்கு வந்தான்.

மாடியில் தனியாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தான் அருள்.

“டேய் என்னடா தனியா மொட்டமாடியில உட்காந்திருக்க?”

தன்னுடைய வீட்டில் விசயத்தைச் சொல்லி பாதி சம்மதம் வாங்கியது, இளவரசி இன்னும்
அவனிடம் பேசாதது எல்லாம் சொல்லி முடித்தான்.

“அவ கிட்டப் பேசனும் போல இருக்குடா”

“அதான் இந்த வாரம் நேர்ல சந்திக்கப் போறீங்கல்ல.. அப்போ நேர்லையேப் பேசிக்க
வேண்டியதுதான?”

“நேர்லப் பாக்கறதுக்கு முன்னாடி ஒரு தடவையாவதுப் பேசலாம்னு பாத்தேன் ”

“சரி இரு நம்ம ஜூனியர் பசங்க மூலமா ட்ரை பண்ணிப் பாக்கறேன்”

கல்லூரி ஜூனியர் ஒருவனை அழைத்து அவன் மூலம் இன்னொரு பெண் நம்பர் வாங்கி,
அவளிடம் ஒரு பொய்யை சொல்லி இளவரசி நம்பரை வாங்கிக் கொண்டான்.

“ஜாப் விஷயமா.. அப்டி இப்டி னு சொல்லி அவ நம்பர் வாங்கியாச்சு… ந்தா ட்ரை
பண்ணு”

“மச்சி… நீயே மொதல்லப் பேசுடா… அவங்கப்பா விசயத்த அவகிட்ட சொல்லிட்டாரா
இல்லையான்னு தெரியல… நான் பேசினா உடனே கட் பண்ணிட்டான்னா?”

“சரி இரு நானேக் கால் பண்றேன்”

“ஹலோ இளவரசி… நான் வினோத் பேசறேன்”

“வினோத்?”

“சுத்தமா மறந்தாச்சா? ‘மாடு’ வினோத் பேசறேன்… இப்பவாது ஞாபகம் இருக்கா?”
.கல்லூரியில் அவன் செல்லப் பெயர் ‘மாடு’.

“ஹே சாரிப்பா… நீ எப்படியிருக்க? இப்போ எங்க இருக்க?”

“நான் நல்லா இருக்கேன்.. இப்போ சென்னைல இருக்கேன்… சரி ஒரு நிமிசம், அருள்
பக்கத்துல தான் இருக்கான்.. உங்கிட்டப் பேசனுமாம்… இரு கொடுக்கறேன்” அவள்
இயல்பாகவே பேசுவதைக் கேட்டு விட்டு செல்லை அருளிடம் கொடுத்தான்.
செல்லை வாங்கியவன் அவள் பேசட்டுமென்று செல்லைக் காதில் வைத்து அமைதியாகவே
இருந்தான்.

அந்தப் பக்கம் இன்னும் அமைதியாகவே இருக்கவும், அவனே “ஹலோ…” என்றான்.

பதில் எதுவும் இல்லை. மறுபடி மறுபடி ஹலோ… ஹலோ… என்று சொல்லிப் பார்த்தும்
பயனில்லை.இணைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது.

“கால கட் பண்ணிட்டாடா”

“சரி போன்ல எதுக்குப் பேசிக்கிட்டு? எல்லாத்தையும் நேர்ல பாக்கும்போது பேசிக்க…
ஓக்கேவா? சரி நான் கிளம்பறேன்… எதுவா இருந்தாலும் எனக்குக் கால் பண்ணுடா”

“ம்ம்.. போயிட்டு வந்து கூப்பிட்றேன்”
தானே அழைத்தும் அவள் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது அவனுக்கு வேதனையாக
இருந்தது. அன்றிரவு முழுவதும் எதை எதையோ நினைத்துக்கொண்டேப் படுத்திருந்தவன்
விடிந்ததும் தூங்கிப் போனான். நேரில் பார்ப்பதற்குமுன் ஒருமுறையாவதுப் பேசிவிட
வேண்டுமென்று நினைத்து அவள் செல்லுக்கு அழைக்கும்போதெல்லாம் முதல் முறை யாருமே
எடுப்பதில்லை. அடுத்தமுறை அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப் பட்டிருக்கும்.

அவள் தன் மேல் கோபத்தில் இருக்கிறாள் என்ற கவலையை விட ஏன் கோபமாய் இருக்கிறாள்
என்றக் குழப்பமே அவனை அதிகமாக வாட்டியது.
அடுத்த வாரம் இரு குடும்பமும் சந்தித்த போது, அவனுடைய அப்பாவும் அவளுடைய
அப்பாவும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் என்ற விசயம் தெரிய வர, நண்பர்களே
சம்பந்திகளாவதில் இருவருக்குமே மகிழ்ச்சிதான். இரண்டு குடும்பத்திலும்
எல்லோருக்குமேப் பிடித்துப் போக அப்பொழுதே அடுத்த மாதத்தில் திருமணத் தேதியும்
குறிக்கப்பட்டது. பெண் பார்க்க வருவதற்கு மட்டும் ஒத்துக் கொண்ட அப்பா,
கடைசியில் திருமணத்தையே முடிவு செய்தது அவனுக்கு ஆச்சர்யமாகவும், சந்தோசமாகவும்
இருந்தது. ஆனால் இளவரசி வீட்டில் இருந்த அன்று முழுவதும் இளவரசியிடம் தனியாகப்
பேச எவ்வளவோ முயற்சி செய்தும் அவனால் அவளிடம் பேச முடியவில்லை. அவளுடைய
அப்பாவிடம் தான் பேசியபோது அவர்கள் காதலித்ததை அவன் சொல்லவே இல்லை என்பதும்,
அவர்கள் நண்பர்களாக தான் பழகினார்கள் என்று சொன்னதும் அவளுக்குத் தெரியுமா,
தெரியாதா என்பதையும் அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. மற்றவர்களும்
“அவங்களுக்குப் பிடிச்சிருக்குன்னா நாம சம்மதம் சொல்லிட்றதுதான் மரியாதை” என்ற
ரீதியில் பொதுவாகவேப் பேசிக்கொண்டிருக்க அவனால் எதையும் தெரிந்து கொள்ள
முடியவில்லை. இரண்டு பேர் வீட்டிலுமே அவனால் இதைக் கேட்க முடியாத நிலையில் என்ன
செய்வதென்றே தெரியாமல் இருந்தான். ஆனால் அவள் முகத்தில் சொல்ல முடியாத ஓர்
உணர்ச்சி இருப்பதை மட்டும் அவனால் கவனிக்க முடிந்தது. அது சோகமா தன் மேல்
இருக்கும் கோபமா எனத் தெரிந்து கொள்ள முடியாமலேயே சென்னைக்குத் திரும்பி
விட்டான்.
மெரீனாக் கடற்கரை.

“மச்சி உனக்கு எங்கேயோ மச்சமிருக்குடா… எல்லாத்தையும் இவ்வளவு ஈசியா
முடிச்சிட்ட… அடுத்த மாசம் குடும்பஸ்தனாகப் போற…” சிரித்துக் கொண்டே சொன்னான்
வினோத்.

“டேய் எனக்கு எல்லாமே கனவு மாதிரி இருக்குடா… நாந்தான் அவங்கப்பாகிட்டப் போய்
அப்படியெல்லாம் பேசினேனா? எங்கப்பா கிட்ட எந்த விஷயமும் ஓப்பனா நான்
பேசினதேயில்ல… எந்த தைரியத்துல அவர்ட்ட பேசினேன்னும் தெரியல… இளாவ விட்டுப்
பிரிஞ்சிடுவேனோன்ற பயமே எனக்கு தைரியமா மாறிடுச்சுனு நெனைக்கிறேன்”

“அதான் எல்லாமே சுபமா முடிஞ்சிடுச்சுல்ல… அப்புறம் ஏண்டா பழையக் கதையெல்லாம்?”

“இல்லடா… யாரால எல்லாம் காதலுக்குப் பிரச்சினை வரும்னு நெனச்சனோ அவங்க எல்லாம்
சமாதானம் ஆயிட்டாங்க… ஆனாக் காதலிக்கிறப் பொண்ணே இப்பக் கண்டுக்கலன்னா…
கஷ்டமாருக்குடா”

“மச்சி நீ ஃபீல் பண்ணாத… நான் அவ ஃப்ரெண்டுகிட்டப் பேசி அவ மனசுல என்னதான்
இருக்குனு தெரிஞ்சிக்குறேன்…நீ கல்யாண வேலைய மட்டும் பாரு… எல்லாம் நல்லபடியா
முடியும்”

அருளுக்கு,அவன் பேசுவதுக் கொஞ்சம் நம்பிக்கையாக இருந்தது.
அந்த ஒரு மாத இடைவெளியிலும் கூட அவன் இளவரசியோடு எதுவும் பேசமுடியவில்லை.
வீட்டிலிருப்பவர்களிடமும் அதை சொல்ல முடியாத நிலை. அந்த விசயம்
மற்றவர்களுக்குத் தெரியாமலும் சமளித்துக் கொண்டான். திருமண ஏற்பாடுகள்
எல்லாவற்றிலுமே அவனை சந்திக்காமல் தப்பித்துக் கொள்ளவேப் பார்த்தாள். சந்திக்க
வேண்டிய நிலையிலும் கூட நேருக்கு நேராக அவனைப் பார்ப்பதை அவள் தவிர்ப்பது
அவனுக்குப் புரிந்தது. திருமணம் முடிந்தபிறகு தன்னிடமிருந்த அவள் தப்பிக்க
முடியாது என்றெண்ணியவன், எந்தக் கோபமாக இருந்தாலும் திருமணம் முடிந்தபிறகு
அவளிடம் கேட்டு சமாதானப் படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில்
இருந்தான்.திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு. திருமண மண்டபத்தில், மணமகன்
அறையில் நண்பர்கள் எல்லோரும்போன பிறகுத் தனிமையில் இருந்தவன் தன்னுடையப்
சூட்கேஸில் தேடி, அதையெடுத்தான்.

அவனுக்கு அவள் எழுதியக் கடைசிக் கடிதம். மீண்டுமொரு முறை படித்துப் பார்த்தான்.
கண் லேசாகக் கலங்கியது.
“எப்படி இளவரசி உன்னால இன்னொருத்தர கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சாதாரணமா
சொல்ல முடிஞ்சது? காதலிக்கிறப்ப பேசின வார்த்தையெல்லாம் ஆயுசுக்கும் மறக்காதே?
அப்போ செஞ்ச சத்தியமெல்லாம் காத்தோடப் போகட்டும்னு விட்டிருந்தியா? எவ்வளவு
கனவு கண்டோம்… எல்லாத்தையும் கனவாவே நெனச்சுக்கலாம்னு விட்டுட்டியா? எப்படி
இந்த மாதிரி ஒரு லெட்டர் எழுத உனக்கு மனசு வந்தது?” அவளிடம் கேட்பதாக
நினைத்துக் கொண்டு கடிதத்திடம் கேட்டுக் கொண்டிருந்தான். அதை மடித்து
வைத்துவிட்டுக் கண்களை மூடியபடி மறுபடி மனசுக்குள் பேச ஆரம்பித்தான்.
“இளவரசி, இப்ப உனக்கு எம்மேல என்னக் கோபம்னு எனக்குத்தெரியல… உங்க அப்பாவே
சம்மதம் சொன்ன பின்னாடி நீ ரொம்ப சந்தோசப்படுவன்னு எவ்வளவு ஆசையா இருந்தேன்…
ஆனா இப்பவரைக்கும் நீ எங்கிட்டப் பேசாம இருக்கிறது ஏன்னே எனக்குப் புரியல…
உன்கிட்ட சொல்லாமலயே உங்கப்பாகிட்ட வந்து பேசிட்டேன்னுக் கோபமா? நாமக் காதலிச்ச
விசயமே அவருக்குத் தெரியாதே… அது உனக்கு தெரியுமா தெரியாதான்னும் என்னால
தெரிஞ்சிக்க முடியல… ஒரு தடவையாது எங்கிட்டப் பேசியிருந்தீன்னா எல்லாத்தையும்
சொல்லியிருப்பேன்…மனசுக்குள்ள ஒருத்தர நெனச்சுட்டு இன்னொருத்தரோட வாழ என்னால
முடியாதும்மா… அதனாலதான் உங்கிட்ட சொல்லாமலேயே உங்கப்பாகிட்ட நேர்ல வந்து
பேசிட்டேன்… என்ன மன்னிச்சுடு! நாமக் காதலிச்ச விசயத்த உங்கப்பாவுக்குத் தெரிய
வச்சு, உம்மேல அவருக்கு இருந்த நம்பிக்கைய இல்லாமப் பண்ணிட்டனோன்னு என்னத்
தப்பா நெனச்சிக்கிட்டு இருந்தாலும் பரவால்ல… எல்லா விவரத்தையும் நாளைக்கு
சொல்லிட்றேன்… நாளைக்காவது என்னோட பேசுவியா?” அவன் குழப்பத்தில் இருப்பது
அவனுக்கேத் தெளிவாகத் தெரிந்தது. சம்பந்தமில்லாமல் எதை எதையோ யோசித்துக்
கொண்டிருந்தான். கொஞ்சம் மனதை மாற்ற, கதவைத் திறந்து பாலக்னி பக்கம்
போனான்.அப்போது மணமகள் அறையில் இருந்து ஒரு பேச்சு சத்தம் அவன் காதில் விழ
ஆரம்பித்தது.
“இளா! உனக்கு அருள் மேல இவ்வளவு நம்பிக்கையாடி? ஒரு வேளை உன்னோட லெட்டரப்
பார்த்துட்டு சரி எங்கிருந்தாலும் வாழ்கனு போயிருந்தார்னா என்னப் பண்ணியிருப்ப”

“அதெப்படிப் போக முடியும்? லவ்வர்ஸ்க்கு காதல விட அதிகமா இருக்க வேண்டியது
நம்பிக்கை! எங்கிட்ட அருள் காதல சொன்னப்ப நான் மறுத்தாலும் ஆறு மாசமா
எங்கிட்டப் பேசாமலே எந்த நம்பிக்கைல அவன் காத்திட்டிருந்தான்? அதே நம்பிக்கைல
தான் நானும் அப்படி ஒரு லெட்டர் எழுதினேன்! நானாவது ஆறு மாசம் கழிச்சுதான்
என்னோட லவ்வ சொன்னேன், அருள் பார்த்தியா லெட்டரப் பார்த்த அடுத்த வாரமே
எங்கப்பாகிட்ட பொண்ணு கேட்டு வந்துட்டான். என்ன விட அவனுக்கு தான்டி எம்மேல
காதல் அதிகம்! அதுவும் நாங்க லவ் பண்ண மாதிரி எங்கப்பாகிட்ட அவன் காட்டிக்கவே
இல்ல! அதனாலேயே எங்கப்பாவுக்கு அவனப் பிடிச்சுப் போயிருக்கும்!”
“அடிப்பாவி அருள டெஸ்ட் பண்றதுக்குதான் இப்படி சீரியஸா ஒரு லெட்டர் எழுதினியா?”

“சீச்சீ…எனக்கு அருளப் பத்திதான் முழுசாத் தெரியுமே அப்புறமென்னப் புதுசா
டெஸ்ட் பண்ணப்போறேன்? இன்னமும் அவனுக்கு அந்த inferiority complex மட்டும்
போகல. நான் பல தடவை எங்கப்பாகிட்ட வந்து பேசுன்னு சொல்லியும் என்னதான் பேச
சொன்னானேத் தவிர அவன் வந்து பேசறேன்னு சொல்லல. எங்க வீட்ல வேற, ஜாதகத்தப்
பாத்துட்டு சீக்கிரம் கல்யாணம் முடிக்கனும்னு சீரியசா அலையன்ஸ் பாக்க
ஆரம்பிச்சுட்டாங்க, அதான் அப்படி ஒரு லெட்டர் எழுதிட்டேன். அதுவும் சரியா
வொர்க் அவுட் ஆயிடுச்சு! பின்ன என்னடி வீட்டுக்கு வந்து பொண்ணுக் கேட்கவே
தைரியமில்லாதவன எந்தப் பொண்ணோட அப்பாவுக்கு தான் பிடிக்கும்?”
“அது சரி நீ அப்படி ஒரு லெட்டர் எழுதிட்டேன்னு சொன்னவுடனே நானே உண்மையாதான்
இருக்குமோன்னு நெனச்சிட்டேன். நீயும் காலேஜ்லேயே அருள்கிட்டப் பட்டும்
படாமதானப் பழகின!”

“ம்ம்… வெளியில அப்படித் தெரிஞ்சிருக்கலாம்… ஏன்னுத் தெரியல அருளுக்குப்
பணக்காரங்களப் பார்த்தாலேக் கொஞ்சம் அலர்ஜி. அதான் நானும் சினிமா,
ரெஸ்டாரண்ட்னு அவன வெளியில கூட்டிட்டு சுத்தியிருந்தேன்னு வச்சிக்கோ, என்னையும்
பிடிக்காமப் போயிடுச்சுன்னா என்னப் பண்றதுன்னு பயந்துட்டேன். எனக்கும் அதுல
இஷ்டம் இல்லாததும் ஒரு காரணம்”
“அதெல்லாம் சரி, ஆனா ஒரு நாள் அருள்ட்ட ஃபோன்ல பேசலன்னாக் கூட மூடவுட் ஆன
மாதிரி இருப்ப, எப்டி அவ்ளோ நாளாப் பேசாம இருந்த???”

“தினமும் மனசுக்குள்ளேயே சாரி கேட்டுக்கிறதத் தவிர வேற என்னப் பண்ண முடியும்?
தனக்குப் பிடிச்சது தன்ன விட்டு விலகிப் போறப்பதான எவ்வளவுக் கஷ்டப்பட்டாவது அத
அடையனும்னு தோணும்? அதனாலதான் பேசாம இருந்தேன்”
“அதுக்காக… எல்லாம் நல்ல படியா முடிஞ்சபின்னாடியுமா அலையவிடனும்?”

“அவன் வந்து எங்கப்பாகிட்டப் பேசிட்டுப் போனதுல இருந்து இன்னைக்கு வரைக்கும்
அவன்ட்டப் பேசனும்னுதான் துடிக்கிறேன்… ஆனா இவ்வளவு நாள் பேசாம இருந்து அருளக்
கஷ்டப்படுத்திட்டு இப்போ பேசனும்னு நெனச்சா வார்த்தை வர்றதுக்கு முன்னாடி
எனக்கு அழுகதான் வருது, அதனாலேயே அவனப் பார்க்கிறதையே அவாய்ட் பண்ணிட்டு
இருந்தேன்! ரொம்ப கஷ்டமா இருக்குடி” விட்டால் அழுது விடுவாள் போலிருந்தாள்.

“ஏ..ஏ…இன்னைக்கு அழாதம்மா…நாளைக்குப் போய் உன் ஹப்பிய கட்டிப்புடிச்சு
அழுதுக்கோ…இப்ப தூங்கு நானும் தூங்கப் போறேன்”

“ஆமாக் கண்டிப்பா நாளைக்கு first nightல அவனக் கட்டிப்பிடிச்சு அழத்தான்
போறேன்” கண்ணீரோடு் சிரித்தாள்.
தன் மேல் உள்ளக் கோபத்தில்தான் பேசாமள் இருக்கிறாள் என்று நினைத்துக்
கொண்டிருந்தவனுக்கு, தான் கோபப்படுவேனோ என்றுதான் அவள் பேச முடியாமல்
இருக்கிறாள் எனத்தெரிந்ததும் கவலை குறைந்தது.

“நீ சரியான லூசுடி” என்று நினைத்துக்கொண்டே கனவோடுத் தூங்கினான்.
அடுத்த நாள், திருமணம் முடிந்தது. முதலிரவு அறை. அருளைப் பார்த்ததும் பொங்கி
வந்த அழுகையோடு அவனை நெருங்குகையில், அவனும் கண்ணில் கண்ணீரோடு நிற்பதைப்
பார்த்து ஒன்றும் புரியாமல், அழுதுகொண்டே அவனைக் கட்டிப்பிடித்தாள் இளவரசி.
அழுகையோடு ஆரம்பமானது ஒரு முதலிரவு.

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு – முதல் பகுதி

“ஒரு ரெண்டு நிமிசம் நான் சொல்றத முழுசாக் கேட்டீங்கன்னா
சந்தோசப்படுவேன்…எம்ப்பேர் அருள். நான் காலேஜ்ல இளவரசியோட கிளாஸ்மேட். இப்போ
இளவரசிக்கு நீங்க மாப்பிள்ள பார்த்துட்டு இருக்கிறதாக் கேள்விப்பட்டு தான்
உங்களப் பார்க்க வந்திருக்கேன். உங்களுக்கு மருமகனா வர்றதுக்கு நீங்க என்னத்
தகுதிகள் எதிர்பார்க்கறீங்கனு எனக்குத் தெரியாது, நான் என்னோடத் தகுதிய
சொல்லிட்றேன். இப்போ நான் சென்னைல ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில ப்ராஜெக்ட் லீடரா
வொர்க் பண்றேன். மாசம் 30000 சம்பாதிக்கிறேன். எனக்கு எப்பவுமே எந்தக் கெட்டப்
பழக்கமும் இல்லனு சொல்ல முடியாது. காலேஜ்ல ஸ்மோக், ட்ரிங்க்ஸ் பண்ணதுண்டு, ஆனா
அதெல்லாம் நிறுத்தி இப்போ 5 வருஷம் ஆச்சு. இது நான் போன வருஷம் ஹெல்த் செக்கப்
பண்ணிக்கிட்ட ரிப்போர்ட். அப்புறம் எனக்கு ஜாதகத்துல நம்பிக்கை இல்ல,
இருந்தாலும் உங்க திருப்திக்காக இந்தாங்க என்னோட ஜாதகம். இளவரசிக்கூட 7
வருஷமாப் பழகினதுல எனக்கு அவளோட பாஸிட்டிவ், நெகட்டிவ்னு அவளப் பத்தி முழுசாத்
தெரியும். நான் இவ்வளோப் பேசறதுனால நானும், உங்கப் பொண்ணும் லவ் பண்றோம்னு
நெனச்சிடாதீங்க. இதுவரைக்கும் இளவரசிக்கிட்ட இதப் பத்தி நான் பேசினதில்ல. உங்க
அனுமதி இல்லாம அவகிட்ட நான் இதப் பத்திப் பேசறதும் நல்லா இருக்காதுனு
நெனைக்கிறேன். இதுல என்னப் பத்தி, என்னோடக் குடும்பத்துல இருக்கவங்களப் பத்தி
முழுசா எழுதியிருக்கேன்…படிச்சுப் பாருங்க… கிழிக்கிறதா இருந்தாலும் பரவால்ல,
ஒரே ஒரு தடவப் படிச்சுட்டு அப்புறமா கிழிங்க….அதுலையே என்னோட க்ளோஸ்
ஃப்ரெண்ட்சோட போன் நம்பர்ஸ் கூட இருக்கு, என்னப் பத்தி முழுசாத் தெரிஞ்சவங்க
இவங்க. என்னப் பத்தி விசாரிக்கனும்னா இவங்ககிட்ட நீங்கப் பேசலாம். நீங்க என்ன
ஜாதினு எனக்குத் தெரியாதுங்க, அதனால நான் உங்க ஜாதிதானான்னும் எனக்குத்
தெரியாது. உங்க statusசுக்கும் நான் சமம்னு சொல்ல முடியாது. ஆனா அவளோட
கேரக்டருக்கு நான் பொருத்தமானவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனால, உங்களோட
statusக்கு ஏத்த மாதிரி உங்க ஜாதியில மாப்பிள்ள பார்க்கிறதுதான் உங்களோட
விருப்பம்னா, நான் எதுவும் சொல்லல. ஏன்னா அவ உங்கப் பொண்ணு, அவளோட வாழ்க்கையப்
பத்தி முடிவெடுக்கறதுல உங்களுக்கும் பங்கு இருக்கு. நான் என்னோட விருப்பத்த
மட்டும் தான் சொல்லியிருக்கேன், முடிவு உங்களோடதாவே இருக்கட்டும். ஒருவேளை
நீங்க என்ன நிராகரிச்சா, நான் வந்துப் பேசின விஷயம் எதுவும் இளவரசிக்குத் தெரிய
வேண்டாம்!”
சொல்லவந்ததை எல்லாம் சுருக்கமாக சொல்லிவிட்டு அவரிடம் தான் கொண்டு வந்திருந்த
கடிதத்தைக் கொடுத்தான். ஒரு மாதிரியாக அவனைப் பார்த்துவிட்டுக் கடிதத்தை
வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். அவர் படிக்கும் வரை அமைதியாகவே இருந்தவன்,
அவரும் படித்து விட்டு அமைதியாகவே இருக்கவும் அவரைப் பார்த்துப் பேசினான்.
“சார் நான் ரொம்ப நல்லவன்னு சொல்லிக்க விரும்பல, ஆனா எங்கம்மாகிட்ட எங்கப்பா
எப்படி நடந்துக்கனும்னு நான் விரும்பறனோ, அப்படிதான் என்னோட மனைவிகிட்ட நானும்
நடந்துக்குவேன். இதுக்கப்புறமும் நான் சொல்றதுக்கு எதுவுமில்ல. நாங்க வர்றோம்
சார்”
சொல்லிவிட்டு கேட்டை நோக்கி இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.
“தம்பி ஒரு நிமிஷம்…”
திரும்பிப் பார்த்தார்கள்.
“வீட்டுக்குள்ள வாங்க…” புன்னகையோடு சொன்னார்.
எதையோ எதிர்பார்த்து வந்த வினோத் ஒன்றும்புரியாமல் அவனோடு உள்ளே சென்றான்.
இளவரசியின் அப்பா, அம்மாவோடு பேசி விட்டு “அடுத்த வாரம் அப்பாகிட்டப் பேசிட்டு
உங்ககிட்ட பேச சொல்றேங்க” என்று சொல்லிவிட்டு வெளியே வரும்போது காற்றில்
மிதப்பவனை போல இருந்தான் அருள்.விஷயம் இவ்வளவு சுலபமாக முடியும் என்று அவன்
எதிர்பார்க்கவேயில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அன்று இரவு இருவரும் சென்னை திரும்ப ரயிலேறினார்கள். அதுவரைக்கும் எதுவுமேக்
கேட்காமல் இருந்த வினோத் வாயைத் திறந்தான்.
“மச்சி ஏண்டா அவர்ட்ட நீங்கக் காதலிச்ச விசயத்த சொல்லவேயில்ல?”
“டேய் எந்த அப்பன்கிட்டப் போய் நான் உங்கப் பொண்ணக் காதலிக்கிறேன்னு சொன்னாலும்
அது அவங்களுக்கு நம்ம மேல கோபத்ததான் வரவழைக்கும்… இல்ல உங்கப் பொண்ணும்தான்
என்னக் காதலிச்சான்னு சொன்னாலும் கோபம் அப்படியே பொண்ணு மேலத் திரும்பிடும்…
என்னமோ உலகத்துலப் பண்ணக்கூடாத பெரியத் தப்ப தான் பொண்ணு பண்ணிட்ட மாதிரி…
அதான் சொல்லல”
“சரி அந்த லெட்டர்ல அப்படி என்னதான் எழுதியிருந்த?”
“ம்ம்ம்… I am suffering from love. Please grant me your daughter னு
எழுதியிருந்தேன்”
“மச்சி நக்கல் பண்ணாதடா… அதுல ஒரு காப்பி கொடுத்தா நமக்கும் பின்னாடி உதவியா
இருக்கும்ல?”
“டேய் கடுப்பக் கிளப்பாத… இந்நேரம் இளவரசிக்கு விஷயம் தெரிஞ்சிருக்கனும்… நான்
அவ கால் பண்ணுவான்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்”
“அவங்கப்பா கிட்டயே அவ நம்பர வாங்கியிருக்கலாம்ல”
“போடாங்க… 7 வருச ஃப்ரெண்டுனு சொல்லிட்டு… மொபைல் நம்பர அவர்கிட்டயேக் கேட்க
சொல்றியா?”
“சாரி”
ரொம்ப நேரம் படியிலேயே அமர்ந்திருந்தவன், கடைசி வரை அவளிடமிருந்து கால் எதுவும்
வராததால், வந்து படுத்துக் கொன்டான், செல்போனைக் கையில் பிடித்தபடியே.
அடுத்த இரண்டு நாட்களும் அவளிடமிருந்து அழைப்பை எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாந்துபோனான். தன்னுடைய வீட்டில் இந்த விசயத்தை எப்படிக் கொண்டுபோவது என்பதும்
பெரும் கவலையாகவே இருக்க, இரண்டு நாள் வேலை பார்த்தவன், மூன்றாம் நாளே
ஊருக்குக் கிளம்பினான். அப்பாவிடம் நேரடியாக இதை எப்படி சொல்வதெனத் தெரியாமல்
துணைக்கு அக்காவையும் அழைத்துக் கொண்டான். அப்பா வேலைக்கு போன பின், அக்கா
மூலமாக, அம்மாவுக்கு விசயத்தை முதலில் சொல்ல அம்மா குதித்த குதியில் இருவரும்
ஆடிப்போனார்கள். அவன் அம்மாவுக்கு எவ்வளவு வேகமாக கோபம் வந்ததோ, இரண்டு பேரும்
பேசப் பேச அவ்வளவு வேகத்திலேயேக் குறைந்தது.
“நான்லாம் உங்கப்பாகிட்டப் பேச மாட்டேண்டா… நீயாச்சு உங்கப்பாவாச்சு” என்று
சொன்னவள், “எல்லாம் பெரிய மனுசனாயிட்டாங்க நாம சொல்றத இனிமே எங்க கேட்கப்
போகுதுங்க” என்று முனக ஆரம்பித்தாள்.
“ம்மா… அந்தப் பொண்ணும் உன்ன மாதிரி ரொம்ப நல்லப் பொண்ணுதாம்மா” – என்கிற
ரீதியில் ஐஸ் வைக்க ஆரம்பித்தான்.
கிட்டத்தட்ட அம்மாவை சமாளித்துவிட்ட சந்தோசம் இருந்தாலும் அப்பாவை நினைத்தாலே
பயமாக இருந்தது.

அவன் எப்போதுமே அம்மா செல்லம் தான். அப்பாவிடம் அளவுக்கு அதிகமாகப்
பேசுவதில்லை.
அக்காவிடம் சொன்னான், “க்கா… அப்பாகிட்ட நீதான் பேசி எப்படியாவது சம்மதிக்க
வைக்கனும்…”
“அப்பாகிட்ட விஷயத்தக் கொண்டு போறது வரைக்கும்தான் என்னோட வேல… அதுக்கப்புறம்
அவர சம்மதிக்க வைக்கிறது உங்கைல தான் இருக்கு”
இரவு எல்லோரும் சாப்பிட்டு முடித்தப் பிறகு, அவன் அக்கா மெதுவாக அப்பாவிடம்
விசயத்தைச் சொல்ல… கேட்டு முடித்தவர் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்தார். அவன்
தரையைப் பார்த்தான். அவராக எதுவும் கேட்டால் பதில் சொல்லலாம் என்று இருந்தான்.
“கொஞ்சம் தண்ணிக் கொடும்மா”
“நம்மத் தலைல தெளிச்சு வெளிய அனுப்பிடுவாரோ” என்று பயத்தோடே இருந்தான்.
தண்ணீரை வாங்கி மிச்சம் வைக்காமல் குடித்தார்.

அக்கா அவளைப் பார்த்து “எதாவது பேசுடா” என்ற அர்த்தத்தில் முறைத்தாள்.
“அந்தப் பொண்ண எனக்குப் பிடிச்சிருக்குன்னு மட்டும் நான் சொல்லல… கண்டிப்பா
உங்க எல்லாருக்கும் பிடிக்கும்” நிமிராமல் பேசினான்.
“எங்களுக்குப் பிடிக்கும்னு நீயே முடிவு பண்ணிட்டியா?” – அவன் அப்பா.
“உங்களுக்குப் பிடிச்ச மாதிரி நீங்களே எனக்கு ஒருப் பொண்ணப் பார்த்தாலும்,
எனக்கும் அந்தப் பொண்ணப் பிடிக்கும்னு நீங்களே முடிவுபண்ணிதானப் பாப்பீங்க” –
சத்தமாக பேச வேண்டும் என்று நினைத்தாலும் அவனிடமிருந்து சத்தம் அதிகம்
வரவில்லை.
“நாங்க ஒரு பொண்ணுப் பார்த்து அது உனக்கு பிடிக்கலன்னா… கண்டிப்பா வேற
பொண்ணதான் பாப்போம்… ஒரேப் பொண்ணக்காட்டி இவளதான் கல்யாணம் பண்ணனும்னு
சொல்லமாட்டேன்”
“நீங்க வந்து அந்த பொண்ணப் பாருங்க…அவங்க அப்பாகிட்டப் பேசுங்க… உங்களுக்குப்
பிடிக்கலன்னா அதுக்கப்புறம் நான் எதுவும் சொல்லல”
“ப்பா… அந்தப் பொண்ண எனக்கு நல்லாத் தெரியும்ப்பா… என்னோடக் கல்யாணத்துக்கு
வந்திருக்கு… நம்ம வீட்டுப் பொண்ணு மாதிரி நல்லாதான் பேசினா… ஒரு தடவ நீங்கப்
போய்ப் பார்த்துட்டு வர்றதுல என்ன இருக்கு” – அவன் அக்காவும் துணைக்கு வந்தாள்.
ரொம்ப நேரம் எதுவும் பேசாமல் இருந்தவர் , சொன்னார், “சரி இந்த ஞாயித்துக் கிழமை
வர்றோம்னு அவங்க கிட்ட சொல்லிடு… பொண்ணு ஃபோட்டோ இருக்கா?”
“நான் என்ன அவள லவ்வாப் பண்றேன் போட்டோ வச்சிக்கிறதுக்கு… அக்கா கல்யாண
ஆல்பத்துல இருப்பான்னு நெனைக்கிறேன்” – தான் அவளைக் காதலிக்கவில்லை என்று
நம்பவைக்க பொய் சொன்னான்.
எப்படியோ தன்னுடைய வீட்டிலும் பாதி சம்மதிக்க வைத்துவிட்டதில் சந்தோசமாய்
இருந்தாலும் இளவரசியிடம் இன்னும் பேசாமலே இருப்பது அவனுக்குக் கஷ்டமாயிருந்தது.
சென்னை திரும்பிய பிறகும் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவித்துக்
கொண்டிருந்தான். எப்பொழுது வேண்டுமானாலும் அவளிடம் இருந்து அழைப்பு வரும் என்று
எங்கு போனாலும் செல்லைக் கையில் வைத்துக் கொண்டே இருந்தான். அன்று மதியம்
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவன் செல் அலறியது.

( அடுத்தப் பகுதி )

© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD