Jul 30

ஜனனி : மாமா எங்கம்மாவும் உங்கள மாதிரி எஞ்சினியர் ஆகப்போறாங்க
அண்ணா : என்ன பாப்பா சொல்ற?
ஜனனி : ஆமா, மாமா எங்கம்மா டெய்லர் க்ளாஸ் போறாங்க, அப்றம் டெய்லர் எஞ்சினியர் ஆகிடுவாங்க!

*

ஜனனி : அம்மா, மூச்சுவிடாம நாம இருக்க முடியுமா?
அக்கா : இல்ல பாப்பா. மூச்சு விட்டாதான் நாம உயிரோட இருக்க முடியும். எதுக்கு கேட்கற?
ஜனனி : எங்க மிஸ் எப்ப பாத்தாலும் ‘யாரும் மூச்சு விடக்கூடாது’, ‘யாரும் மூச்சு விடக்கூடாது’ ன்னே சொல்றாங்கம்மா..
அக்கா : யாரும் பேசக்கூடாதுங்கறத தான் அப்படி சொல்றாங்க. மிஸ் சொல்றாங்கன்னு நீ மூச்சு விடாம இருந்துடாத பாப்பா!

*

அப்பா : என்ன ஜனனி நீ. நல்லாவே எழுத மாட்டேங்கற. நிறுத்தி நிதானமா எழுது.
ஜனனி : தாத்தா, நான் ஒழுங்காதான் தாத்தா எழுதறேன். இந்த பென்சிலுக்கு தான் தூக்கமா வருதுன்னு நெனைக்கறேன். அதான் இப்படி எழுதுது.

இதற்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாமல் அப்பா முழிக்க, அடுத்து அவள் சொன்னது…’நான் எப்பவும் உண்மையேதான் தாத்தா பேசுவேன். பொய்யெல்லாம் பேச மாட்டேன்’

*

அக்கா : கையெழுத்தெல்லாம் முத்து முத்தா இருக்கனும் பாப்பா.
ஜனனி : ஹைதராபாத்ல இருந்து மாமா வாங்கிட்டு வந்த முத்தாம்மா?
அக்கா : ஜனனீஈஈஈஈ, அழகா குண்டு குண்டா எழுதுன்னு சொல்றேன்.
(நல்ல வேளை பெங்களூர்ல வெடிச்ச குண்டான்னு கேட்கல)

*
அம்மா : சரி ஜனனி நான் ஊருக்கு போயிட்டு வர்றேன்.
ஜனனி : சரி அம்மாச்சி. மனசுல என் ஞாபகம் வந்துச்சுனா ஒடனே கெளம்பி வந்துடுங்க. காலைலயா இருந்தா வாங்க. நைட்டா இருந்தா வராதீங்க இருட்டா இருக்கும். நான் கனவுல வந்து பிஸ்கட் தர்றேன், சாப்பிட்டு தூங்கிட்டு காலைல எந்திருச்சு வந்துடுங்க.

*
ஜனனி : மாமா, நான் சின்ன பாப்பாவா, பெரிய பாப்பாவா?
நான் : நீ சின்ன பாப்பா தான்.
ஜனனி : நான் சென்னைக்குப் போனா?
நான் : சென்னைக்குப் போனா, மித்ரா சின்ன பாப்பா. நீ பெரிய பாப்பா.
ஜனனி : சேலத்துக்குப் போனா?
நான் : சேலத்துக்குப் போனா, அம்சா பெரிய பாப்பா. நீ சின்ன பாப்பா.
ஜனனி : என்ன மாமா. மாத்தி மாத்தி சொல்ற? எதாவது ஒன்னு சொல்லு மாமா!
(வர வர ஜனனி கூட என்னைக் கலாய்க்க ஆரம்பித்து விட்டாள்)

*
நான் : ஜனனி, ஊருக்கு வரும்போது உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும்?
ஜனனி : பச்சக் கலர் கேரட் வாங்கிட்டு வா மாமா.
(இனிமேல் அவளிடம் எதுவும் கேட்க் கூடாதென்று முடிவு செய்திருக்கிறேன்)

written by அருட்பெருங்கோ \\ tags: , ,

Dec 20
முதல் பாகத்திலிருந்து வாசிக்க இடுகையின் தலைப்பின் மீது சொடுக்கவும்.
“காதல் குறும்பு” என்ற கருத்தில் இப்பாகம் மட்டும் தேன்கூடு போட்டிக்கு இணைக்கப்பட்டுள்ளது.

நான் உன்னையும் , நீ என்னையும்,
தேடிக் கொண்டிருப்பதால்,
நம்மை இணைக்க
முடியாமல் தடுமாறுகிறது
நம் காதல்!

காதலுக்கென்றே படைக்கப்பட்ட மாலைப்பொழுதொன்றில்,
யாருமற்ற அந்த வாய்க்காலின் படித்துறையில் நாமிருவர் மட்டுமே அமர்ந்திருக்கிறோம்.
குளிப்பவர், துவைப்பவர் எவரும் இன்றி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிற வாய்க்கால் நீர்,
உள்ளே நீந்திக் கொண்டிருக்கும் மீன்களெல்லாம் தெளிவாகத் தெரியும்படி தெளிந்து இருக்கிறது.

“எல்லா மீனும் எவ்வளவு சந்தோசமா நீந்திக்கிட்டு இருக்கில்ல?” என்று மெதுவாக நீ பேச்செடுக்கும் போது,
ஒரு மீன் மட்டும் நீர்ப்பரப்புக்கு மேல் வருவதும் பின் உள் செல்வதுமாய் இருக்கிறது.
அந்த மீனைக் காட்டி, என்னிடம் கேட்கிறாய்,”அது மட்டும் ஏன் மேலே வந்து, வந்து போகுது?”
“அத சொல்றதுக்கு முன்னாடி, அது ஆண் மீனா, இல்லப் பெண் மீனான்னு கண்டுபிடி” – இது நான்.
“அது எப்படிக் கண்டு பிடிக்கிறது? எனக்கு தெரியாதே!” – உதடு சுழிக்கிறாய் நீ.
“ஆனா, எனக்குத் தெரியும்! அது ஆண் மீன் தான்”
“எப்படிடாக் கண்டு பிடிச்ச?”
“வாய்க்கால்ல இருக்கும் பெண் மீன்கள் எல்லாத்த விடவும் இந்த ரெண்டு மீனும் அழகா இருக்கேன்னு,
மேல வந்து, வந்து உன்னோட ரெண்டு கண்ணையும் பார்த்துக் கண்ணடிச்சுட்டுப் போகுதே!
அப்பவேத் தெரியலையா அது ஆண் மீனாதான் இருக்கும்னு?”
வள்ளுவர் காலத்து உவமையைத் தான் சொன்னேன், ஆனாலும் வெட்கப்பட்டாய் நீ.

“இன்னொரு முற அது மேல வரட்டும், அதப் பிடிச்சுப் பொரிச்சுட வேண்டியதுதான்!” கோபப்பட்டேன் நான்.
“அப்போ நீ அசைவமா?” என சந்தேகப் படுகிறாய்.
“அப்போ, உனக்கு மீன் கறிப் பிடிக்காதா?” – என் பங்குக்கு நானும்!
“மீன் கறி பிடிக்காது, ஆனா மீன் கடி பிடிக்கும்!”
“அதென்ன மீன் கடி?”

“இப்போ வாய்க்காலுக்குள்ள எறங்கிக் கொஞ்ச நேரம் ஆடாம,
அசையாம அப்படியே நின்னோம்னா, சின்ன சின்ன மீனெல்லாம் வந்து நம்மக் கால வலிக்காமக் கடிக்க ஆரம்பிக்கும்,
அது எவ்வளவு சொகமா இருக்கும் தெரியுமா?”
என்று சொல்லிக் கொண்டே படித்துறையின் கடைசிப் படிக்கட்டுக்குப் போய்விட்டாய்.
பாவாடையை முழங்கால் வரை சுருட்டிக் கொண்டவள், என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு,
உடனே வாய்க்காலுக்குள் இறங்கினாய்.

நீ சொன்னது போலவே கொஞ்ச நேரத்தில் உன் காலைக் கடிக்க ஓடி வந்தன மீன்கள் எல்லாம்.
அந்த சுகத்தில், பால் கொடுக்கும் தாயைப்போல் பரவசமாய் உன் முகம்.
உன்னைக் கடித்துக் கொண்டிருக்கும் மீன்களையேப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான்.

“என்னடா அப்படிப் பார்க்கற?” என முறைக்கிறாய்!
“இல்ல, உன்னக் கடிக்கிறதெல்லாம் ஆண் மீனா, இல்லப் பெண் மீனான்னுப் பார்த்துட்டு இருக்கேன்”
“திரும்பவும் ஆரம்பிச்சுட்டியா, உன்னோட ஆராய்ச்சிய! சரி அதையும் சொல்லேன் கேட்போம்!”

“மீன் கடிக்கிறது உனக்கு வலிக்குதா? இல்லையா?”
“வலிக்கல, சுகமாத்தான் இருக்கு!”
“அப்படின்னாக் கடிக்கிறதெல்லாம் பெண் மீனாதான் இருக்கும்”
எதையோ நினைத்து சிரித்துக் கொள்கிறாய் நீ.

“நீயும் எறங்கி நில்லேன்” என என்னையும் அழைக்கிறாய்.
வேட்டியை மடித்து விட்டு வாய்க்காலுக்குள் இறங்கிய வேகத்தில் ஏறுகிறேன் நான்.
“ஏன் என்னாச்சு?”
“மீனெல்லாம் இப்படி வலிக்கிற மாதிரிக் கடிக்குது! நீ என்னமோ சுகமா இருக்குன்னு சொல்ற?”
சிரித்துக் கொண்டே,“அப்போ உங்களக் கடிச்ச மீனெல்லாம் ஒருவேளை ஆம்பள மீனோ?”
“ஆமாமா, எல்லா ஆம்பள மீனும் சேர்ந்து, உனக்குப் போய் இப்படி ஒரு தேவதையாடான்னுப் பொறாமையில் கடிச்சிருக்கும்!”
“சரி, சரி போதும்” என சொல்லிக்கொண்டே மேலே வருகிறாய்.

“மீனப் பத்தி இவ்வளவு ஆராய்ச்சி பண்றியே, என்னை ஏன் ஒரு ஆண் மீனும் கடிக்கல?”
“உன்னை யார் முதல்ல வந்து தொடுறதுன்னு சண்டை போடவே, அதுக்கெல்லாம் நேரம் சரியாப் போயிருக்கும்!”
ஈரப் பாவாடையைப் பிழிந்து கொண்டே “அப்போ, உன்ன ஏன் ஒரு பெண் மீனும் தொட வரல?” எனக் கேட்கிறாய் நீ.
“இதென்னக் கேள்வி? கோவிலுக்குப் போனா நீ அம்மனக் கும்பிடுவியா? பூசாரியக் கும்பிடுவியா?”

“சரிங்க பூசாரி, இப்போ அம்மன் வீட்டுக்குக் கெளம்பப் போகுது, நாளைக்குப் பார்க்கலாம்” என ஆயத்தமாகிறாய் நீ.
“கல்யாணத்துக்கப்புறம், இந்த மீன் கடிக்காக நீ வாய்க்காலுக்கெல்லாம் வரவேண்டியதில்ல,
அதெல்லாம் வீட்டிலேயே வச்சுக்கலாம்” என்கிறேன் நான்.

“ச்சீப் போடா…” என்று வெட்கத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்கிறாய் நீ.

“அட! வீட்டிலேயே கொஞ்சம் மீன் வளர்க்கலாம்னு சொல்ல வந்தேன்” என விளக்கிவிட்டு,
உன்னிடம் முதல் “ச்சீப் போடா” வாங்கிய சந்தோஷத்தில் நானும் கிளம்புகிறேன்.

அப்போது வாய்க்காலில், என்னைக் கடித்த மீன்களெல்லாம்,
உன்னைக் கடித்த மீன்களைத் துரத்திக் கொண்டு நீந்துகின்றன.

காதல் குறும்பு எங்கும் இருக்கிறது!

அடுத்தப் பகுதி

written by அருட்பெருங்கோ \\ tags: ,