May 30

‘வரும்போது குட் ந்யூசோட வரனும். ஓக்கே வா?’
‘பாப்போம் பாப்போம்’
தோழிகள் வழியனுப்ப, சிரித்துக்கொண்டே இளா கையசைக்க, எழும்பூரில் இருந்து
மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் கிளம்பியது.
அப்பர் பெர்த்திலேறி படுத்துக்கொண்டாலும் தூக்கம் வரவேயில்லை. நாளை
முதன்முறையாய் அவளைப் பெண்பார்க்க வருகிறார்கள். அங்கு போய் பொம்மை மாதிரி
உட்கார்ந்திருக்க வேண்டுமென்ற கடுப்பு கொஞ்சம் இருந்தாலும் ஒருமாதிரி
குறுகுறுப்பாகவும் இருந்தது.

அந்த வரனின் விவரங்களை அவளுடைய அம்மா தொலைபேசியில் முன்பே சொல்லியிருந்தார்.
அவனுடைய உயரம், எடையெல்லாம் தெரிந்தபோதே தனக்கு ஏற்ற மாதிரிதான் இருக்கிறது
என்று நினைத்துக் கொண்டாள். போட்டோவிலும் சுமாராக இருந்தான். ஓக்கேதான். ஆனால்
போட்டோவை வைத்து என்ன முடிவு செய்வது? நேரில் பார்த்தால் எப்படியிருக்கிறானோத்
தெரியவில்லை. முதல் இண்டர்வியூவிலேயே வேலை கிடைத்துவிட்டமாதிரி இப்பொழுதும்
நடந்துவிட்டாலென்ன என்று தோணியது. ‘இளா! இது உன்னோட வாழ்க்கை…. லூசு மாதிரி
யோசிக்காதே’ தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள்.

ஆனாலும் அப்படியொருவேளை நாளைக்கு வரப்போகிறவனுக்கே நம்மைப்
பிடித்துவிட்டாலும்…அது என்ன அவனுக்கு நம்மைப் பிடிப்பது? நமக்கு அவனைப்
பிடித்துவிட்டால் என்று வைத்துக்கொள்வோம். அது எப்படி இருக்கும் என்று யோசிக்க
ஆரம்பித்துவிட்டாள். ‘மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தனக்கும்
ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அவனுக்கும் பொருந்தி வருமா?
இங்கிருக்கும் வொர்க் கல்ச்சர் அவனுக்குப் புரிந்திருக்குமா? ஆட்டோமொபைல்
கம்பெனியில் வேலையென்றால் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் தான் படித்திருப்பான்.
காலேஜில் பெண்களுடன் பழகியிருப்பானோ இல்லையோ தெரியவில்லை. நாம் இப்படி
நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவன் சரியான கடலை பார்ட்டியாக இருந்தாலும்
தெரியவாப் போகிறது. ச்சே இப்படியும் இருக்கக் கூடாது. அப்படியும்
இருக்கக்கூடாதென்று எதிர்பார்த்தால் பிறகு எப்படித்தான் இருப்பான்?’ அவளால்
யோசித்துக் கொண்டிருப்பதை விட்டு வெளியேவரமுடியவில்லை. தானாக வலிய வேறு எங்கோ
நினைவைத் திருப்பினாள்.

எங்கெங்கோ சுற்றி விட்டு மறுபடியும் அங்கேயே வந்தது.
‘இந்த அப்பா எப்படி இந்த வரனைப் பிடித்திருக்கிறது என்று சொன்னாரோ
தெரியவில்லையே!’
அவள் அப்பா அம்மா இருவருமே திருச்சியில் ஒரு துவக்கப்பள்ளியொன்றில்
ஆசிரியர்கள். அவன் குடும்பமோ சேலத்தில் இருந்தது.
‘அவர்கள் ஏதோ பிஸினஸ் என்று மட்டும்தான் சொன்னார்கள். என்ன பிஸினஸ் என்று
நமக்கெப்படி தெரியும்? பெட்டிக்கடையும் பிஸினஸ்தான் எக்ஸ்போர்ட் கம்பெனியும்
பிஸினஸ் தான். குழந்தைகளுக்கு பாடம் எடுக்கிறவர்கள் மெண்டாலிட்டியும் பிஸினஸ்
பண்ணுகிறவர்கள் மெண்டாலிட்டியும் ஒன்று போலவா இருக்கும்?’
யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு திடீரென சிரிப்பு வந்தது. ‘என்னமோ கல்யாணமே
நிச்சயமான மாதிரி எதற்கிப்படி யோசிக்கிறோம்? எதுவாக இருந்தாலும் அவனைப் பார்த்த
பிறகு யோசித்துக் கொள்ளலாம். ஆனால் எப்படியாவது அவனிடம் தனியாகப் பேசிப்
பார்த்துவிட வேண்டும். பேசிப் பார்த்தால்தான் ஆள் எப்படி என்று கொஞ்சமாவது எடை
போடலாம். இந்த சினிமாவில் எல்லாம் வருகிற மாதிரி ‘பொண்ணுகிட்ட மாப்பிள்ள
கொஞ்சம் தனியாப் பேசனுமாம்’ என்று யாராவது சொன்னால் நன்றாகத்தான் இருக்கும்.
ஆனால் அதெல்லாம் நம் வீட்டில் நடக்க வாய்ப்பில்லை. யாரிடமாவது அவன் செல்நம்பர்
வாங்கி வெளியில் எங்காவது சந்திக்கலாம். அதுவரை வீட்டில் எந்த முடிவும்
சொல்லிவிடக்கூடாது’ கனவுகளில் முடிவெடுத்துக்கொண்டே தூங்கிப்போனாள்.

மறுநாள் மாலை. அவளைப் பெண்பார்க்க வந்திருந்தார்கள். அவள் உள்ளறையில்
உட்கார்ந்திருந்தாள். மாப்பிள்ளை மட்டும் வரவில்லையாம். அவனோடு மற்றொரு நாள்
மீண்டும் வருவதாகப் பேசிக்கொண்டார்கள். அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. “ச்சே
இப்படி கவுத்துட்டானே! இதற்காக இன்னொரு நாள்வேறு வர வேண்டுமா?” என்று கோபமும்
இருந்தது. சம்பிரதாயமானப் பேச்சுக்கள் எல்லாம் முடிந்து இரு குடும்பங்களுக்கும்
அந்த சம்பந்தம் பிடித்துப் போயிருந்தாலும் மாப்பிள்ளையுடன் அடுத்த வாரம்
வந்தபிறகு மேற்கொண்டு முடிவெடுக்கலாம் என்று சொல்லி அவர்கள் கிளம்புகிற நேரம்.
மாப்பிள்ளையின் அக்கா மட்டும் உள்ளறைக்கு வந்தாள்.

‘இவரிடம், அவனுடைய மொபைல் நம்பர் கேட்டுப் பார்க்கலாமா? குறைந்தது போனிலாவது
பேசிப் பார்ப்போம். பிடிக்கவில்லையென்றால் சொல்லிவிடலாம். இதற்காக இன்னொரு முறை
எதற்கு வரவேண்டும்’ என்று யோசித்தாள்.
‘உன்னோட மொபைல்நம்பர் கொடுப்பா… தம்பி கேட்டிருந்தான்’ என்று மெதுவாக கேட்டு
அவள் எண்ணையும் வாங்கிக் கொண்டு ‘நாங்க கிளம்பறோம். அடுத்த வாரம் தம்பியோட
வர்றோம்’ என்று சொல்லிக் கிளம்பிப் போய்விட்டார்கள்.
‘ச்சே அவன் நம்பரை ஏன் கேட்காமல் போனோம்?’ என்று வருத்தப்பட்டுக்கொண்டாள்.

அடுத்த நாள் காலை அவள் செல்பேசிக்கு ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
‘ஹலோ. நான் அருள் பேசறேன். நேத்து பொண்ணு பாக்க வந்தாங்களே…’
‘ம்ம்ம் சொல்லுங்க’
‘உங்கள மீட் பண்ணலாம்னுதான் திருச்சி வந்திருக்கேன். மீட் பண்ண முடியுமா?’
‘…’ என்ன சொல்வதென்று யோசித்தாள்.
‘இல்ல போன்லயே பேசலாம்னாலும் எனக்கு ஓக்கே. ஒரு அர மணி நேரம் போதும். எப்போ
ஃப்ரியா இருப்பீங்கன்னு சொல்லுங்க நானே கால் பண்றேன்’
‘இல்லப் பரவால்ல எங்கனு சொல்லுங்க நானே வர்றேன்’

வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து யோசித்துக் கொண்டே வந்தாள். அவனைப்
பிடித்திருக்கிறதா இல்லையா என்று கேட்டால் எதையும் வாயைத் திறக்கக் கூடாது.
முதலில் அவனிடம் என்னவெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை வரிசைப்
படுத்திக் கொண்டாள். பேசும்போதே பொய் சொல்கிறானா என்பதையும் கவனிக்க வேண்டும்.
முடிவெல்லாம் பொறுமையாக எடுத்துக் கொள்ளலாம். முதலில் என்ன கேட்பது?
அவன் படித்த பள்ளி, கல்லூரியைப் பற்றி கேட்க வேண்டும்.
வீட்டிலிருந்து படித்தானா இல்லை ஹாஸ்டலா?
எந்த மாதிரிப் படங்கள் பார்ப்பான்?
புத்தகம் எதுவும் படிக்கிற பழக்கமிருக்குமா?
ஏற்கனவே யாரையாவது காதல், கீதல் பண்ணியிருக்கிறானா?
திருமணத்திற்குப் பிறகு நான் வேலைக்குப் போவதை பற்றி என்ன சொல்லுவான்?

கேட்க வேண்டியவற்றையெல்லாம் யோசித்துக் கொண்டே சொன்ன இடத்திற்கு வந்து
சேர்ந்ததும் அவன் மொபைலுக்கு அழைத்தாள்.
அவனும் வந்ததும் தனியே சென்று அமர்ந்தார்கள். அவனே ஆரம்பிக்கட்டும் என்று
அமைதியாக இருந்தாள்.

‘நேத்தே நான் வந்திருந்தா அங்கேயே எங்கிட்ட உங்களப் பிடிச்சிருக்கான்னு
கேட்டிருப்பாங்க. போட்டோவுல சிம்பிளா இருந்த உங்களப் பாத்ததுமே எனக்குப்
பிடிச்சிருந்தாலும், உங்களுக்கும் என்னப் பிடிச்சிருக்கான்னுத் தெரியல. அங்க
எல்லார் முன்னாடியும் நீங்க ஃப்ரியா உங்க விருப்பத்த சொல்லிட முடியுமான்னு
சந்தேகமா இருந்ததாலதான் தனியா மீட் பண்ணலாம்னு கூப்பிட்டேன்.’

ரொம்ப ஸ்மார்ட்டாக நடிக்கிறானோ? ஆனால் கண்களைப் பார்த்தால் அப்படியொன்றும்
தெரியவில்லை. அவனேப் பேசட்டும் என்று புன்னகைத்தபடியே இருந்தாள்.

‘ஒரு மணி நேரத்துல ஒருத்தர முழுசா ஜட்ஜ் பண்ணிட முடியாதுதான். ஆனா வெளிப்படையா
பேசினோம்னா ஒரு சின்ன அண்டர்ஸ்டாண்டிங் வரலாம். அதுக்கப்புறம் உங்களுக்கும்
என்னைப் பிடிச்சிருக்குன்னுத் தெரிஞ்சா வீட்ல சொல்லிக்கலாம். அந்த ஐடியால தான்
வந்திருக்கேன். என்னப் பொருத்தவரைக்கும் எனக்கு ஆப்போசிட் கேரக்டர்
உள்ளவங்ககூடவும் என்னால அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியும்… சின்ன வயசுல இருந்தே பெரிய
எதிர்பார்ப்பு எதுவுமில்லாம வளர்ந்துட்டேன். அதனால எனக்கு வரப் போறவ
இப்படித்தான் இருக்கனும்னு கனவு கண்டதில்ல. அதனால உங்களப் பத்தி நீங்க
சொல்லுங்க தெரிஞ்சுக்கறேன்… எந்த காலேஜ்ல படிச்சீங்க? என்ன மாதிரி புக்ஸ்
பிடிக்கும்? இந்த மாதிரி…’

‘உண்மைய சொன்னா எனக்கும் இப்போ உங்களப் பாத்ததுமே பிடிச்சிடுச்சு…சோ தாராளமா
வீட்ல சம்மதம் சொல்லிடுங்க…. அப்பறம் என்னப் பத்தி சொல்லனும்னா…’

எந்த முடிவை பேசிமுடித்தபிறகு எடுக்கலாமென்று நினைத்தாளோ, அதனை முதலிலேயே
எடுத்ததற்கும், அதனை அப்பொழுதே அவனிடம் சொல்லிவிட்டதற்கும், அரை மணிநேரம் என்று
சென்றவள் மூன்றுமணிநேரம் அவனிடம் பேசிக்கொண்டிருந்ததற்கும்… வீடுவரும்வரை
அவளுக்குக் காரணம் தெரியவில்லை.
வீட்டில் நுழைகையில் பண்பலையில் ‘பிரிவோம் சந்திப்போம்’ படத்திலிருந்து பாடல்
ஒலித்துக் கொண்டிருந்தது. ‘கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை…கொண்டேன்
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை…’

o0o

குறுந்தொகை :

பாடல் எண் – 40 குறிஞ்சி. தலைவன் கூற்று.

“யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே”

-செம்புலப் பெயல்நீரார்

என் தாயும் உன் தாயும் யாரோ? எவரோ?
என் தந்தையும் உன் தந்தையும் எந்த வகையில் உறவினர்?
நீயும் நானும் தான் எந்த வகையில் அறிமுகமாகியிருந்தோம்?
(ஆனாலும் முதல் சந்திப்பிலேயே)
செம்மண்ணில் விழுந்த மழைநீர்போல
நம்நெஞ்சங்கள் அன்பினால் இரண்டறக் கலந்துவிட்டன.

written by அருட்பெருங்கோ \\ tags: ,

May 14

தீப்பெட்டியென
நிலையாய் உன் நினைவு.
தீக்குச்சியாய்
உரசி உரசி எரியும் மனது.

*

என்னுடன் வாழாமல்
என்னில் வாழத்தான்
பிரிந்தாயா?

*

என் சொற்களுக்கும்
உன் மவுனத்திற்குமான இடைவெளியில்
புதைக்கப்பட்டது நம் காதல்.

*

உன் நினைவு
வரும்பொழுதெல்லாம்
உன்னை மறந்து விடுகிறேன்.

*

இரவுதோறும் வரும்
பகல் கனவு நீ!

***

வெறும் உவமை மட்டுமே கவிதையாக முடியுமா? மலரைப்போன்ற முகம், இசை மாதிரி குரல், கவிதை மாதிரி பெண் – இந்த கிளிஷேக்கள் எல்லாம் சலித்துப்போனாலும் சில உவமைகள் காலம் கடந்தும் நிற்கின்றன. பொருட்களை உவமையாக காட்டுவதைக் காட்டிலும் நிகழ்வுகளை உவமையாகக் காட்டுவது கவித்துவத்தோடு இருப்பதாகப்படுகிறது.

குறுந்தொகையில் பிரிவுத்துயரைச்சொல்லும் ஒரு பாடலில் வரும் உவமை :

‘மக்கள் போகிய அணிலாடு முன்றிற்
புலம்பில் போலப் புல்லென்று அலப்பென்’

மக்கள் சென்றபிறகு முற்றத்தில் அணில் விளையாடும் தனிமை/வெறுமை நிறைந்த வீட்டைப்போல தனிமையில் வாடுவதாக தலைவி வருந்துகிறாள்.

அணில் விளையாடுவது பெரிய உவமையா? எனத் தோன்றக்கூடும். ஆனால் அணிலின் இயல்பு மக்கள் இருக்குமிடங்களில் நெருங்காமல் இருப்பதுதான். அத்தகைய அணில் முற்றத்தில் துள்ளி விளையாடுகிறது எனும்போது மக்கள் இல்லாமல் அந்த வீடு நெடுங்காலம் வெறுமையாகக் கிடக்கிறதென்பதைப் புரிந்து கொள்ளலாம்.

கரூரில் நாங்கள் கடந்த ஆண்டு புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்த பிறகும் சில பொருட்கள் மட்டும் பழைய வீட்டிலேயேக் கிடந்தன. அடுத்து யாரும் குடி வராத அந்த அரசு குடியிருப்புக்கு ஒரு மாதம் கழித்து சென்ற போது இந்த சங்க காலத்துப் பாடலில் வரும் உவமை நிகழ்வு அங்கு கண்ணெதிரே நிகழ்ந்து கொண்டிருந்தது. சமையலறை அடுக்குகளில் பிறந்த குழந்தையின் பிஞ்சுக்கரம் போல மென்மையான கூடு கட்டிக்கொண்டு அணில்கள் விளையாடிக்கொண்டிருந்தன. எங்கள் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு அணில்களின் வீட்டை அணில்களிடமே விட்டுவிட்டுத் திரும்பினோம். அன்று, அந்த அழகான உவமை, அழகான காட்சியாகியிருந்தது.

இந்த பாடலின் ஆசிரியர் பெயர் தெரியாததால் இந்த உவமையாலேயே ‘அணிலாடு முன்றிலார்’ என அவருக்கு பெயர் வைத்துவிட்டார்கள்!

குறுந்தொகை – பாலைத்திணை – பாடல் எண் 41

காதலர் உழையர் ஆகப்பெரிது உவந்து
சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற
அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றிற்
புலம்பில் போலப் புல்லென்று
அலப்பென் – தோழி! – அவர் அகன்ற ஞான்றே.

- அணிலாடு முன்றிலார்

(எனக்குத் தெரிந்த) பொருள் :

காதலன் அருகிலிருக்கும்பொழுது, திருவிழா நடக்கும் ஊரைப்போல பெரிதும் மகிழ்ந்தேன். அவன் விலகிய நாளில், நெறி நிறைந்த நல்லவர் வாழும் ஊரில், மக்கள் சென்றபிறகு முற்றத்தில் அணில் விளையாடுகிற துயரமான வீட்டைப்போல தனிமையால் அழகழிந்து வாடுகிறேன்.

written by அருட்பெருங்கோ \\ tags: , , ,

Jan 31

வாப்பா… அருள். எப்படி இருக்க? நேரத்துலையே வர்றேன்னு சொல்லியிருந்த?’‘சாரி ஆண்ட்டி. வர்ற வழில கொஞ்சம் லேட்டாகிடுச்சு.இளா எங்க ஆண்ட்டி?’

‘மாடியில்’ என்று அவர் கைகாட்ட படியில் ஏறினான். அவனுக்கும் இளாவுக்கும் இடையில் இருப்பது கெமிஸ்ட்ரி, பையாலஜி எல்லாம் கலந்த ஒரு ‘இது’வாலஜி. அவனுக்கு குன்னூர். அவளுக்கு கோயம்புத்தூர். +1, +2 இருவரும் ஒன்றாக குன்னூரில் படிக்கும்போது அறிமுகம். அதன்பிறகு கோவையில் ஒரே கல்லூரியில் இடம் கிடைத்து இன்னும் நான்கு வருடங்களும் சேர்ந்தே படித்தார்கள். இப்பொழுது அவன் சென்னையிலும், அவள் கோயம்புத்தூரிலும் மென்பொருள் துறையில் பணி. அவர்களுக்குள் இருப்பது நட்பா? காதலா? என்றால், நட்பையும் காதலையும் பிரிக்கிற கோட்டில் அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். சொல்லி விட்டால் காதல். சொல்லாமல் விட்டால் நட்பு.

அவளிடமே கேட்டுவிடுவதில் அவனுக்கும் தயக்கமில்லைதான். ஆனால் அவள் மறுக்கும் பட்சத்தில், அவனை விட அவளுக்கே அது பெரிய வலியாகப் போய்விடுமென்றே தவிர்த்துவிட்டான். அவளுக்கோ தன் அப்பாவை நினைத்து பயம். சாதிப்பற்றும், அதைவிட அதிகமாய் ஜாதகம் மேல் நம்பிக்கையும் உள்ளவரிடம் என்ன பேச முடியும்? அவர் மனதைப் புண்படுத்தவும் அவளுக்கு விருப்பமில்லை. ஆனாலும் இப்போதெல்லாம் அவனே காதலைச் சொல்லிவிடக்கூடாதா என்று ஏங்க ஆரம்பித்துவிட்டாள்.

‘ஹலோ… இதான் நீ சொன்ன டைமா?’
‘சாரி கேட்டுக்கறேன் மேடம்…உடனே கெளம்புங்க சீக்கிரம் போய்ட்டு வந்துடலாம்’

“ம்மா… நாங்க மதியம் வெளியவே சாப்டுக்கறோம்” என்று சொல்லிவிட்டு அவனை பின்னால் உட்காரசொல்லிவிட்டு ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.

நாளை வரும் அவளுடைய இருபத்து நான்காவது பிறந்தநாளுக்காகத்தான் புடவை எடுக்க அவனையும் அழைத்துக்கொண்டு சேரன் டவர்சுக்குப் போகிறாள். அவனுக்குப் பிடித்த புடவைகளில் அவளுக்குப் பிடித்த ஒன்றை தேர்ந்தெடுப்பதா இல்லை அவளுக்குப் பிடித்த புடவைகளில் அவனுக்குப் பிடித்த ஒன்றை தேர்ந்தெடுப்பதா என்ற சண்டை முடியும்போது ஒரு ரோஸ் நிற புடவை தேர்வாகியிருந்தது. மதியம் அன்னபூர்ணாவில் சாப்பிட்டுவிட்டு மூன்று மணிக்கு வீட்டுக்கு வந்தார்கள்.

‘அங்கிள இன்னைக்குப் பாக்க முடியலயே! சரி ஆண்ட்டி நான் ஃப்ரெண்ட்ஸ்ங்களையும் பாக்கனும். இப்போ கிளம்பறேன்.நாளைக்கு வர்றேன்’ என்று சொல்லி கிளம்பிவிட்டான்.

ன்னடி இந்த கலர் எடுத்துட்டு வந்திருக்க? உனக்கு ரோஸ் கலர் புடிக்காதுன்னு சொல்லுவ!’
‘இல்லமா… இது எனக்கு நல்லாருக்கும்னு அருளும் சொன்னான். சரி ட்ரை பண்ணலாம்னு எடுத்துட்டேன்’

அவளுடைய அம்மாவுக்கும் அவள் மனதிலிருப்பது தெரியாமல் இல்லை. அவர்கள் காதலிக்கிறார்கள் என்றே நம்பிக்கொண்டு அவளாக சொல்வாள் என்றுதான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். அவள் அப்பாவிடம் சொன்னால் அவர் குதிப்பார்தான். இருந்தாலும் ஒற்றை மகளின் தகப்பனிடம் சம்மதம் வாங்குவதில் சிரமம் இருக்காதுதான். ஜாடை மாடையாக அவரிடம் இந்த பேச்சையெடுக்கும்போதெல்லாம் மௌனம் மட்டும்தான் பதில்.

றுநாள் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அவள் வீட்டுக்கு வந்திருந்தான். அவர்களும் பேரூர் கோயிலுக்குப் போய்விட்டு அப்போதுதான் வந்திருந்தார்கள். அவளுக்குப் பிடித்த பாடல்களாக தேர்வு செய்து பதிவு செய்யப்பட்ட ஐபாட் ஒன்றை பரிசாகக் கொடுத்தான். ஐபாட் வாங்க வேண்டுமென்று போனவாரம்தான் அவனிடம் சொல்லிக் கொண்டிருந்ததை நினைத்துக் கொண்டாள். அவள் அப்பாவுடன் சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவன் முன்னிலையிலேயே அப்பாவிடம் அதனைச் சொல்லிவிடலாமா என்று துடிப்பாக இருந்தது அவளுக்கு. உள்ளே பயமும், காதலும் அலைக்கழிக்க வெளியே அமைதியாக இருந்தாள்.

‘என்னப்பா..நேத்து வீட்டுக்கு வந்துட்டு நான் வர்றதுக்குள்ள ஓடிட்ட போல…’ சிரித்துக்கொண்டே கேட்டார் இளாவின் அப்பா.
‘இல்ல அங்கிள். பசங்களயும் பாக்க வர்றேன்னு சொல்லியிருந்தேன்…அதான் போயிட்டேன்’
‘அப்போ குன்னூர் போகவேயில்லையா?’
‘இல்ல அங்கிள் அப்பாவும், அம்மாவும் ஒரு கல்யாணத்துக்காக மதுரை போயிருக்காங்க. நான் இப்படியே சென்னை திரும்ப வேண்டியதுதான்.’
‘கல்யாணம்னு சொல்லவும் தான் ஞாபகம் வருது’ என்று சொல்லிவிட்டு ‘ஜெயாஆஆ’ என்று உள்ளே அழைத்தார்.

இளாவுடைய அத்தைதான் ஜெயா.ஈரோட்டில் பள்ளியொன்றின் தலைமையாசிரியை. ஜோதிடத்தில் ஆர்வம் வந்து அதில் பட்டயப்படிப்பெல்லாம் படித்தவர். ஆனால் தொழில்முறையாக ஜோதிடம் பார்ப்பவரில்லை. நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மட்டும் பொழுதுபோக்கு மாதிரி ஜாதகம் பார்த்து சொல்வார். இளாவின் அப்பாவுக்கும் காசுக்காக ஜோதிடம் பார்ப்பவர்களை விட இவர் மேல் நம்பிக்கை அதிகம். அவர் வர சொல்லியிருந்ததால் அன்று வந்திருந்தார்.

அவரையும் உட்கார சொல்லிவிட்டு, இளாவின் ஜாதகத்தை எடுத்துக் கொடுத்தார்.
‘இந்த பொறந்தநாள்ல இருந்தாவது இளாவுக்கு கல்யாண யோகம் வருதான்னு பாரு ஜெயா. இருபத்தஞ்சு ஆரம்பிக்குதில்ல’
அவள் அத்தையும் சிரித்துக்கொண்டே ஜாதகத்தை வாங்கி பார்க்க ஆரம்பித்தார்.
இளாவுக்கு திக் திக் என்று அடித்துக்கொண்டது. கல்யாணத்துக்கு என்ன அவசரமென்று மனதுக்குள் திட்டிக்கொண்டாள்.

‘ம்ம்ம்… வர்ற சித்திரைல இருந்து குருபலன் வருதுண்ணா. கல்யாணம் பண்ற யோகம் தான்’ என்று ஆரம்பித்தார் அவள் அத்தை.
‘எப்படிப்பட்ட வரன் அமையும்னு எதாவது இருக்கா? ’
‘அமைப்பெல்லாம் பார்த்தா மணவாழ்க்கை சிறப்பா இருந்தாலும், வேற இனத்துலதான் சம்பந்தம் ஆகற மாதிரி இருக்கு’
‘….’
‘தீர்க்கசுமங்கலியா இருப்பா. அதுல ஒரு குறையும் இருக்காது’
‘எந்தப்பக்கமிருந்து வரன் வரும்னு ஒன்னும் தெரியலையா’
‘வடக்கு திசைல இருந்துதான் வரன் அமையும். கொஞ்சம் மேட்டுப்பகுதில இருந்துதான் வரப்போற மாதிரி தெரியுது’
‘வடக்கு திசையா?’
‘வடக்குதிசைன்னதும் ஏண்ணா பயப்படுறீங்க. என்ன இமயமலைல இருந்தா சம்பந்தம் பேச வரப்போறாங்க? பக்கத்துல ஊட்டியோ, குன்னூரோ நல்ல வரனாத் தேடுங்க’

அதுவரை அமைதியாக இருந்த இளா,
‘எந்தூர்னு சொன்னீங்கத்த?’ என்று ஆர்வத்தில் சத்தமாகவே கேட்டுவிட்டாள்.
‘ஊட்டியோ, குன்னூரோனு சொன்னேன்’
அருள் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தான்.
அவர்களிருவரையும் பார்த்துக்கொண்டிருந்தார் அவள் அப்பா.

ஜாதகத்தை வாங்கி வைத்தவர், அவள் அத்தை உள்ளே சென்றதும், அவர்களிடம் கேட்டார்.
‘என்ன ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா?’
பயத்துடன், அவள், அவன் கண்களையும், அவன், அவள் கண்களையும் பார்த்துக்கொண்டாலும் இருவரும் எந்த பதிலும் சொல்லவில்லை.
‘ஏன் முழிக்கிறீங்க. அதான் உங்க கதையெல்லாம் ஜாதகத்துல தெரிஞ்சு போச்சே! சரி உங்கப்பாம்மா திரும்பி வரும்போது கோயம்புத்தூர் வழியாதான போவாங்க. பாத்துப் பேசறேன்.’ எந்த உணர்வோடு சொல்கிறார் என்று தெரியவில்லையென்றாலும், அதில் கோபம் மட்டும் இல்லையென்று தெரிந்தது.
அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

ள்ளறையில்…
‘அப்பாடா.. நான் நெனச்ச மாதிரியே நடந்துடுச்சு ஜெயா. நீ மட்டும் அப்படி சொல்லலன்னா உங்கண்ணன்கிட்ட இத எப்படி சொல்லியிருப்பேன்னே எனக்குத் தெரியல’
‘என்னண்ணி… நம்ம இளாவுக்காக ஒரு பொய் கூட சொல்ல மாட்டேனா’ சிரித்தார் ஜெயா.


—-

குறுந்தொகை :23. குறிஞ்சி – தோழி கூற்று


அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப்பன்ன நன்னெடுங்கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டேஅவர்
நன்னெடுங்குன்றம் பாடியபாட்டே.
- அவ்வையார்.

“குறி சொல்பவளே!
குறி சொல்பவளே!
நல்ல நீண்ட கூந்தல் கொண்ட
குறிசொல்பவளே!
மீண்டும் சொல்!
அவன் வாழும்
நல்ல உயர்ந்த மலையைப் பற்றி
மீண்டும் சொல்!”

( காதலை குறிப்பால் உணர்த்தியது )

written by அருட்பெருங்கோ \\ tags: ,