காதல் கூடம் – முதல் பகுதி

தலைமையாசிரியர் அறைக்குள்
பயத்தோடு நகம் கடித்தபடி நீயும்
பயமில்லாமல் முகம் நடித்தபடி நானும் நின்றிருக்க
இயல்பாய்ப் பேசினார் அவர்.…அருகிலிருக்கும் கான்வெண்ட் பள்ளியொன்றில்
நிகழும் கலாச்சாரப் போட்டிக்கு செல்லும் குழு
நம்முடைய தலைமையில்…

செய்தியைச் சொன்னதும் ஒன்றாய் நிமிர்கிறோம்.
பிறவிவரங்கள் பெற்றுக்கொண்டு
நாம் வெளியேறுகையில்
நம் நெருக்கம் பற்றி அறிந்தவராய்
பரிசுகளோடு நம் பள்ளிப் பெயரும் முக்கியமென
நாசூக்காய் சொல்லி அமர்ந்தார்.

வகுப்பறையுள் நுழையும்போதே
வியர்வையுடன் படபடக்கிறாய்.
தண்ணீர் குடிக்கிறாய்.
‘எதாவது பேசேன்’ என்று
பயத்தில் என்னை அடிக்கிறாய்.

எங்கிருந்தோ நானனுப்பிய
காதல்மேகம் உன்னிடம் வந்து பொழிகிறது
மழையாய்.

நாம் கைகோர்த்து நடந்த
பாதச்சுவடுகளையெல்லாம்
காதல்சுவடுகளாய்ப் பத்திரபடுத்துகிறது
பூமி.

நம் நிழல்களைக் கூட
இணைத்தேப் பார்க்கிறது
வெயில்.

நம்மைச் சுற்றி மட்டும்
காதலுடன் மணக்கிறது
காற்று.

சந்திக்கமுடியாத இரவுகளில்
நம் முகம் பார்த்துக்கொள்ளும்
மாயக்கண்ணாடியென
நிலவைச் சுமந்து நிற்கிறது
வானம்.

இப்படி நம்காதலுடன்
பஞ்ச பூதங்களும் துணையிருக்க
பயமேன்?
ஆற்றுகிறேன் நான்.

இத்தனை செய்பவை பூதங்களா?
இல்லை… இல்லை…
பஞ்ச தெய்வங்களென சிரித்துக் கொள்கிறாய்.
காதல் இன்னும் நெருங்க,
பயம் விலகி
மீண்டும் பழையபடி புதியவளாய் நீ!

ஒரு வெள்ளி மாலையில்
அந்த பள்ளி நோக்கி
நம் பயணம் துவங்குகிறது.

பேருந்தில் ஒரு சன்னலோர இருக்கையில் நீ.
உன்னருகில் இடம்பிடித்து அமர்ந்திருக்கிறது உன் கூச்சம்.
அருகில் நின்றபடி நான்.
தலையில் தட்டி கூச்சத்தை எழுப்பிவிட்டு
தானமர்ந்துகொண்டு எனக்கும் இடமளிக்கிறது காதல்.

பேருந்து நகரத்தொடங்கியதும்
சன்னல் சதுரத்தில் ஓடத் துவங்குகிறது
உலக சினிமா.

இருக்கைகளில் நாமிருக்க…
காணும் காட்சிகளிலெல்லாம்
இறக்கை கட்டுகிறது நம் மனம்.

அந்தப் பள்ளியின்
பசும்புல்தரை காட்சி வந்ததும்
பயணம் முடிகிறது.

அங்கு
பயமின்றி சிறகடிக்கும்
கான்வெண்ட் காதல்களைப் பார்த்து
நம் காதல் பிரம்மித்து நிற்க,
சட்டை பிடித்து இழுத்துப் போகிறாய் உள்ளரங்குக்கு.

ஓவியப்போட்டி நடக்குமிடத்தை நெருங்குகிறாய்.
நானும் வருகிறேன்.
‘உனக்கும் ஓவியம் வரையத் தெரியுமா?’
ஆச்சர்யமாய் என்னைப் பார்க்கிறாய்.
‘தெரியும். ஆனால் கண்ணாடியில்தான் வரைவேன்’
‘கண்ணாடியிலா?’
‘ம்ம்ம். உலகிலிருக்கும் எல்லாக் கண்ணாடிகளிலும் அதைத்தான் வரைந்து வைத்திருக்கிறேன்’
கேட்டு கேட்டு சலித்தவளாய் முறைத்துவிட்டு
‘கவிதை போட்டி அந்தப்பக்கம்’ என்று அனுப்பி வைக்கிறாய்.

கவிதையெழுதுகையில்
சொற்களுக்கிடையே நீ மறைந்து மறைந்து எட்டிப்பார்த்தது போல
நீ தீட்டிய வண்ணங்களுக்கிடையே நான் வந்திருப்பேனா?

அன்று
நம்மிருவருக்குமே
பரிசு கிடைக்க
எப்படியெல்லாம் வேண்டிக்கொண்டதோ நம் காதல்.
நமக்குப் பரிசு கொடுத்து
அந்தப் பள்ளியும் காதல்கூடமானது!

அடுத்தவாரம்
பரிசு பெற்ற உன் ஓவியமும், என் கவிதையும்
நம் பள்ளியின் அறிவிப்புப் பலகையில் அருகருகே.

நீ தீட்டிய ஓவியத்தில்
என் முகத்தையும்,

‘இருளை
அளவெடுக்கும்
பொன்வண்டின்
ரீங்காரத்தில்
இதயம் சிறைபடுதல் போல…’

எனத் துவங்கும் என் கவிதைவரிகளில் உன் பெயரையும்
நாம் ஒளித்து வைத்ததைக் கண்டுகொள்ள
எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும்?

நாம் வாங்கி வந்த கோப்பைகள்
மேசையின் மீது கம்பீரமாய்
நம் பிள்ளைகளைப் போல…

மேடையேறி இருவரும்
சான்றிதழ் வாங்குகையில்
திருமணப்பரிசு வாங்க
மனதை உறுதிப்படுத்துகிறது
காதல் களம்.

அதுதான் அந்தப்பள்ளியில்
நாம் இணைந்திருக்கும் கடைசி நாளெனெத் தெரியாமல்தான்
வழக்கத்தைவிட அதிகமாகவே அன்று காதலித்தோமா?

நம் காதலை உன் வீடுவரைக்கும்
யாரோ இழுத்துப் போய்விட
அரையாண்டுக்குள்
அடுத்தப் பள்ளியில் சேர்க்க வேண்டுமென
அவசரமாய் உன்னுடன்
அயலூருக்கு காலியாகிறது உன் குடும்பம்.

நொடிப்பொழுதில்
ஆயுளின் முழு ஆண்டுகளும்
முடிந்துபோனவனாய் நான்.
இசையிழந்த பாடலென பரிதவிப்போடு நீ.
காற்று நின்ற காற்றாடியாய் நம் காதல்.

( காற்று வரும்…)

 

kaadhal koodam 5

காதலும் முத்தம் தான்.
காதலிப்பது, கொடுக்கும் முத்தம்
காதலிக்கப்படுவது, வாங்கும் முத்தம்.
காதலிப்பவராலேயே காதலிக்கப்படுவது,
கொடுத்து வாங்கும் இதழ்முத்தம்!

முத்தத்தில் முதல்நிலை அடையவும்,
காதலில் மூன்றாம் நிலை கடந்தும்
நாம் நெடுந்தொலைவில் நிற்கிறோம்.

சற்றுமுன் பிறந்த சிசுவென இருந்த காதல்
குழந்தையென வளர்ந்து
தன் குறும்புகளைத் துவங்குகிறது.

மழலையின் ஆசைகள் நிறைவேற்றும்
தாய்மனமென மாறுகின்றன
நம் இதயங்கள்.

காதல் தனிமையாகிறதாம்.
நாம் சந்தித்துக் கொள்கிறோம்.
காதலும் சேர்ந்து கொள்கிறது.

காதலுக்கு வெயிலடிக்கிறதாம்.
மரநிழலில் அமர்ந்து பேசிக்கொள்கிறோம்.
காதல் குளிர்கிறது.

காதலுக்கு தாகமாம்.
ஒன்றாய் ஐஸ்க்ரீம்கடை செல்கிறோம்.
காதல் தணிகிறது.

காதலுக்கு சோம்பலாம்.
ஒரு மிதிவண்டியில் ஊர்வலம் வருகிறோம்.
காதல் சுறுசுறுப்பாகிறது.

காதலுக்கு குழப்பம்.
விருப்பு, வெறுப்பு பகிர்கிறோம்.
காதல் தெளிகிறது.

காதலுக்கு பயம்.
எதிர்காலம் திட்டமிடுகிறோம்.
காதல் துணிகிறது.

காதல் குறைகிறதாய்த் தோன்றுகிறது.
மீண்டும் முதல் நாளிலிருந்து நேசிக்கத் துவங்குகிறோம்.
காதல் பூரணமாகிறது.

காதல் பூரணமாகையில்
மூளை தூங்கிவிடுகிறது.
மனம் விழித்துக் கொள்கிறது.
விழித்த மனம் கவிதையெனப் பிதற்றுகிறது.

‘நிற்கிறாய்’,
‘பார்க்கிறாய்’,
‘புன்னகைக்கிறாய்’,
‘பேசுகிறாய்’,
என்பதையெல்லாம்…
“அழகுகிறாய்” என்று ஒற்றை வார்த்தையில் குறிப்பிடுகிறேன்.
கேட்டதும் கலகலவென அழகுகிறாய்.

உன் வீட்டுக்கும்
என் வீட்டுக்கும்
கனவுகளில் அகவழிச்சாலை அமைக்கிறேன்.
வந்து வந்து போகிறாய்.
போய் போய் வருகிறாய்.

கணக்கு,இயற்பியல், வேதியியல் என வகுப்பில்
எந்த இயல் நடந்தாலும்
எனக்குள் உன் உயிரியலே நடக்கிறதென்கிறேன்.
நமட்டுச் சிரிப்பில் உதடு சுழித்து இதழியல் நடத்துகிறாய்.

உன்னிடம் ஒப்பிக்க
காதல் சிரத்தையோடு கவிதை புத்தகம் வாசிக்கிறேன்.
நீயோ இயல்பாக கவிதைகளைப் பேசி விட்டுப் போகிறாய்.

என் வீட்டுக் கண்ணாடியில் எனக்கு நீ தெரிகிறாய்.
உன் வீட்டுக் கண்ணாடியில் உனக்கு நான் தெரிகிறேன்.
இதயங்களைப் போல கண்ணாடிகளையும் இடம் மாற்றியிருக்குமோ, காதல்? – உளறுகிறேன் நான்.
நம் வீட்டுக்கண்ணாடியில் நாம் தெரிவோமென கண்ணடிக்கிறாய்.

நட்சத்திரங்கள் துடைத்து
என் இரவுகளை சுத்தமாக வைத்திருக்கிறேன்.
நிலவென நீ வருகிறாய்.
எங்கிருந்தோ வந்து மொய்க்கத் துவங்குகின்றன நட்சத்திரங்கள்.

கல்விக்கூடமே நம் காதல்கூடமானதென நகைக்கிறேன்.
கல்வி போல காதலும் கைகூடுமென நம்பிக்கை நல்குகிறாய்.

இப்படி
கணம் தோறும்
கனவுகள் சுமக்கும்
இரண்டு உயிர்களும்
உருகி உருகி
ஒற்றைக் காதலுக்கு
அடங்குகின்றன.

அந்த மரநிழலில்
நம் காதல் குளிர்ந்து கொண்டிருந்த
ஒரு மதியவேளையில்,
நம்மிருவரையும் தலைமையாசிரியர் அழைத்து வரச்சொன்னதாக
உன் தோழி சொல்ல,
நம்மை நாம் பார்த்துக் கொண்டோம்.
நான்கு கண்களிலும் ஒரே பயம்.

(தொடரும்…)

 

Kaadhal Koodam 4

எல்லோரும் குடையுடன் வருகையில்
நீ மட்டும் மழையுடன் வரும் மழைக்காலமது.
வயலுக்கு உரம் தெளிக்கும் பெண்ணைப் போல
நிலமெங்கும் நீர்த்துளிகளை
சாரலென தூவிக் கொண்டிருக்கிறது மேகம்.

கைக்குட்டையை தலைக்கு(ட்)டையாக்கி
நீர் வழியும் முகத்தோடு பாலம் நெருங்குகிறேன்.

பாலிதீன் உடையணிந்த பூங்கொத்து போல,
மழையங்கியில் ஒரு மலர்ச்செடியாய்,
மரத்தடியில் நின்றிருக்கிறாய்.

புடவை முந்தானையால்
குழந்தையைப் போர்த்தும் தாயென,
கிளைகளால் உன்னைப் போர்த்தி நிற்கிறது மரம்.

‘மழையிலும் காத்திருக்க வேண்டுமா?’
பார்வையில் சிறு கோபம் கலக்கிறேன்.
‘மழையில்லை, வெறும் சாரல்தான்’ எனும் பொருளோடு
என் கோபத்தையும் புன்னகையோடு வரவேற்கிறாய்.
சாரலில் கரைந்து நிலத்தில் விழுந்து தெறிக்கிறது என் கோபம்.

குளித்துக்கொண்டிருந்த மிதிவண்டிக்கு
தலை துவட்டிவிட்டு ஏறிக்கொண்டாய்.
பாலத்தில் நீர்க்கம்பளம் விரித்து
நம்மை அழைக்கிறது மழை.

மழைத்துளிகளின் ஸ்பரிசத்தில் நானும்
துளியொலிகளின் இசையில் நீயும்
நனைந்து கொள்கிறோம்.
புன்னகை கோர்த்தபடி சாரலோடு துவங்குகிறது இன்றைய நம் பயணம்.

நாம் வகுப்பறை நுழையும் வரை
ஒரு மெல்லிசையாய் வழிந்த சாரல்
சில பொழுதில் பெரு மழையாய் மாறுகிறது.

ஈரமானத் தலையை
ஈரமானக் கைக்குட்டை கொண்டே
துவட்டிக் கொள்கிறேன்.

உணவுக் கூடை மூடும்
பூத்துண்டை நீட்டுகிறாய்.
வாங்கிக் கொண்டு என் இடம் அடைகிறேன்.
முதல் பாடவேளை – இயற்பியல் – துவங்குகிறது.
நொடிக்கொரு முறை
தலை துவட்டினேனா என
திரும்பி திரும்பிப் பார்க்கிறாய்.
அதற்காகவே
துவட்டாமல் வைத்திருந்த
துண்டுக்கு நன்றி.

மழையோடு காற்றும் கைகோர்க்க
நட்டு வைத்த மதயானைகளென
மரங்கள் திமிருகின்றன.
மழையின் காரணமாக முதல் பாடவேளையோடு
பள்ளிக்கு விடுமுறை விடப் படுகிறது.

எல்லோரும் வீடு கிளம்ப,
ஏடு திறந்து எழுதுபவனைப் போல
நண்பர்களை விரட்டுகிறேன்…
போக மனமில்லாமல்!

என் குறிப்பறிந்தவளாய்
புத்தகம் விரித்து படிப்பவளைப் போல
தோழிகளைத் துரத்துகிறாய்.

முதல் தளத்தில் இருந்த ஓட்டுக்கூடம் நம் வகுப்பு.
கழுத்தளவு உயரத்தில் சுற்றுச்சுவர்.
நட்பு எல்லாம் விலகிப் போக
மழை மட்டுமே சுற்றம்.

ஒரு கண்ணாடிக்கூடு போல
எல்லாத் திசையிலும் நம்மை சூழ்ந்து நிற்கிறது மழை.
மழைக்கூட்டில் குடியிருக்கும்
இணைப் பறவைகளென
வார்த்தைச் சிறகுகள் ஒடுக்கி
மௌனமாய் இருக்கிறோம்.

பேனா மூடுகிறேன் நான்.
புத்தகம் மூடுகிறாய் நீ.

முதலில் சிறகடிக்க ஆவலாகிறேன்.
உன்னை நெருங்கி துண்டைத் திருப்பிக் கொடுத்து,
நினைத்ததை சொல்வதற்குள்,
வார்த்தை வந்து விழுகிறது “இயற்பியல் புத்தகம் இருக்கா?”
என் தவிப்புகளையெல்லாம் ரசித்துக்கொண்டவள்
சிரித்தபடி புத்தகம் நீட்டினாய்.

என் இயல்பை நொந்தபடி
இயற்பியல் புத்தகத்தோடு
என் இடம் திரும்புகிறேன்.

காலை நடத்தியப் பாடம் விரிக்கிறேன்.
பக்க எண் 143 எனக் காட்ட,
பக்க எண்ணுக்குப் பக்கத்தில்
உன் பெயர் எழுதுகிறேன்.
அன்று நடத்தியது புரியாததால்
மறுபடி படித்ததாய்ச் சொல்லிப் புத்தகத்தை
உன்னிடமேத் திருப்பித் தருகிறேன்.

பாடநூலில் நான்
நூல் விட
மனம் பட்டமாய்ப் பறக்கிறது.

முகம் மழையைப் பார்த்துக் கொண்டிருக்க
விழி உன்னை நோக்கியபடியே இருந்தது.
புத்தகம் திறக்கப்படாமலே பைக்குள் நுழைய
சிறகொடிந்து மீண்டும் அமைதியாகிறேன் நான்.

அமைதியிழந்தவளாய்
உணவுக்கூடை தூக்கிக்கொண்டு
என்னிடம் வந்து அமர்ந்தாய்.
முதன்முறையாய்ப் பகிர்ந்து உண்ணுகிறோம்.

‘குழம்பு எப்படி?’ என்கிறாய்.
‘சுவையாயிருக்கிறது’ என்கிறேன்.
‘நாந்தான் வெங்காயம் உரிச்சேன்’ என
முழுச்சமையலும் செய்தவள் போல பெருமை பட்டுக்கொள்கிறாய்.
வெங்காயம் துழாவுகின்றன என் விரல்கள்.

எவருமில்லாததால் தயக்கம் நீங்கியவளாய்
சாரலெனத் துவங்கி பெருமழையெனப் பேசுகிறாய்.
தட்டுத்தடுமாறி நடை பழகும் மழலை போல
உன்னிடம் உரை பழகுகிறேன்.

அத்தனை நாளும் தேக்கிவைத்த நம் எண்ணமேகங்கள்
எல்லாம் ஒரே நாளில் உடைந்து மழையெனப் பொழிந்தன.

அன்று மாலை மழை நிற்கும் வரை பேசினோம்.
நின்ற பிறகும் பேசினோம்.
வீடு திரும்புகையில்
உன்னிடம் நான் பேசிய வார்த்தைகள் அனைத்தும் மறந்து போனாலும்,
நீ உச்சரித்த ஒவ்வொரு ‘ம்’ மும் நினைவில் நின்றது.

அன்று இரவு முழுவதும்
அந்த 143 – ஆம் பக்கம் கனவில் படபடத்தபடியே இருக்க,
அடுத்தநாள் உனக்கு முன்னே வந்து பாலத்தில் காத்திருக்கிறேன்.

நிதானமாய் வந்தவள் நின்று புத்தகம் நீட்டி சொன்னாய் -
‘நேத்தே முதல் பக்கத்திலிருந்து படிச்சிருந்தா எல்லாம் புரிஞ்சிருக்கும்’

முதல் பக்கம் விரிக்கிறேன்.
மேலே மையமாய் எழுதியிருந்தாய் ‘அருள்முருகன் துணை!’
படித்துமுடிக்குமுன் நாணம் வந்தவளாய்
புத்தகம்பிடுங்கி மிதிவண்டியில் பறக்கிறாய்.
தொட்டுவிடாமல் துரத்துகிறேன்.

காதல் மனத்தில் துவங்கியது முதல் ‘பருவ’ மழை!

அடுத்த பகுதி

 

காதல் கூடம் மூன்றாம் பகுதியில் வந்த இலக்கண விதிகளுக்கான விளக்கப் பதிவு :)

பெருமை + ஊர் = பேருர்

முதலில், ஈறு போதல் என்ற விதிப்படி நிலைமொழியின் ஈற்றில் உள்ள ‘மை’ அழிந்து பெரு + ஊர் ஆனது.
பின், உயிர் வரின் உ குறள் மெய் விட்டோடும் எனும் விதிப்படி வருமொழியில் ஊ எனும் உயிரெழுத்து வர நிலைமொழியீற்றிலுள்ள ரு எனுமெழுத்தில் ர் எனும் மெய்யெழுத்தைவிட்டு உகரம் அழைந்து பெர் + ஊர் ஆனது.
பின், ஆதி நீடல் எனும் விதிப்படி நிலைமொழியின் ஆதியெழுத்தான பெ என்பது பே என நீண்டு பேர் + ஊர் ஆனது.
பின், உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி ர் எனும் மெய்யெழுத்தோடு + ஊ எனும் உயிரெழுத்து ஒன்றி ரூ என்றாகி பேரூர் ஆனது.

(இது 10 / +1 வகுப்புகளில் மிகவும் பிரபலமான இலக்கணக் கேள்வி  . ஏதேனும் தவறிருப்பின் தமிழறிஞர்கள் திருத்தவும்!!!)

அடுத்தது இந்தக் கவிதை எழுதும்போது ஒரு முக்கியமான ஐயம் வந்தது.
பூ தொட்டி, பூத்தொட்டி, பூந்தொட்டி – இவற்றில் ( இவைகளில் என்று எழுதுவது தவறு, இவற்றில் என்பதே சரி!) எது சரியென்று எனக்குத் தெரியவில்லை.
தெரிந்தவர்களிடம் கேட்போமென இராம.கி ஐயாவிடம் கேட்டேன். அவர் மிகப் பெரிய விளக்கமளித்தார் பூந்தொட்டி, பூத்தொட்டி இரண்டுமே சரிதானென. அது வட்டார வழக்கைப் பொருத்து எப்படியும் வரும் என்று சொல்லியிருந்தார். ஆனாலும் எனக்கு திருப்தியாயில்லை.  பூங்கா என்றுதான் சொல்கிறோம் பூக்கா என்று சொல்வதில்லை. பூக்கூடை என்கிறோம். பூங்கூடை என்று கேள்விப்பட்டதில்லை. ஆனால் பூத்தோட்டம் என்பதை விட பூந்தோட்டம் என்பதே சரியெனத் தோன்றுகிறது. குழப்பத்தோடு வலையில் தேடிய போது இரண்டுமே சரியென்று தான் தோன்றுகிறது.

வல்லினம் மிகும் இடங்கள் எனும் பகுதியில் ஓரேழுத்து ஒருமொழியையடுத்து வல்லினம் மிகும் என்று சொல்லப் பட்டிருக்கிறது.

எ-கா தீ+பெட்டி = தீப்பெட்டி, பூ + சரம் = பூச்சரம்.

அதே சமயம் புணர்ச்சி விதிகளில் பூ எனும் நிலைமொழிக்கு சிறப்பு விதியாக இது கொடுக்கப்பட்டுள்ளது.

பூ பெயர் முன் இன மென்மை உம் தோன்றும்

பூ எனும் பெயரை அடுத்து வரும் வல்லின எழுத்துக்களுக்கு இனமான மெல்லெழுத்தும் தோன்றும்.

இன மென்மை தோன்றும் என சொல்லாமல் இன மென்மை உம் தோன்றும் என்று சொல்லியதால் வல்லெழுத்தும் மிகலாம் எனக் கருதலாம்.

எனவே பூ + தோட்டம் = பூத்தோட்டம், பூந்தொட்டி இரண்டுமே சரி.
பூ + கூடை = பூக்கூடை , பூங்கூடை இரண்டுமே சரி.

பூப் போன்ற பெண்களிடம் உம் கொட்டும் ஆண்களின் சுபாவத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை ;)

Kaadhal Koodam 3


ஆசிரியரில்லாப் பொழுதுகளில்
சதுரத்தில் சிறைபட்ட
சிறு நகரமென வாழ்கிறது
நம் வகுப்பறை.
பெர்மா தேற்றம்*, E=mc2, சவ்வூடு அழுத்தம் **
என தாவணியணிந்த கல்விக்கூடம் போல
புத்தகத்தோடு போரிடும் சில ‘சரஸ்வதி’கள்.
கொய்யா, கடலை, பட்டாணி, நாவல்பழமென
ஒரு சாப்பாட்டு ராமனின் மேசைக்கடியில்
ரகசிய உணவகம் செயல்பட்டுக்கொண்டிருக்கும்.

திரைப்படம், ஊர்க்கதை, அரட்டையென
வாய்க்குள் கச்சேரி கட்டி
ஒலிபெருக்கிக் கொண்டிருப்பாள் ஒரு முத்துப்பேச்சி.

விகடன், சாண்டில்யன், ராஜேஷ்குமாரென
மேசைக்கடியில் நூலகம் திறந்திருப்பான்
கண்டதையும் படிக்கும் ஒரு பண்டிதன்.

ஆளுக்கொரு பாட்டு கேட்க, மேசையில் தாளமிட்டபடி
நேயர் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பான்
வானொலி நிலையமாக மாறிய ஒரு இளையராஜா.

இவர்களுக்கு மத்தியில்,
புன்னகை, கண்சிமிட்டல்,
உதட்டுசுழி, கன்னக்குழியென
விதவிதமானப் பூக்கள் பூத்து
முகத்திலொரு பூங்கா சுமந்தபடி நீ.

தொலைதூரப்பூங்காவை
தொடுதூரத்தில் பார்க்க,
இமைகளை சிலையாக்கி
கண்களை தொலைநோக்கியென
மாற்றியபடி நான்.

இருபுறமும் வீடுகள் அடைத்த வீதியாய்
நடுவில் கிடக்கிறது நீண்ட இடைவெளி.
இடப்பக்க முதல் மேசையில் வலது ஓரமாய் நீ.
வலப்பக்க இறுதி மேசையில் இடது ஓரமாய் நான்.

உன்னைப் பார்த்தபடியே ஒடியும்,
என் நிமிடங்களின் எல்லா நொடியும்.
இடைவெளியெங்கும் நிரம்பிக்கிடக்கும்
உனக்கான என் பார்வைகள்.
இடையூறின்றி விலகிச் செல்லும்
காற்று.

நோக்கம் எதுவுமின்றி
மயில் போல மெதுவாய்த்தான்
பின்புறம் திரும்புவாய்.
ரயில் போன தண்டவாளமாய்
தடுமாறும் என் பார்வைகள்.
காற்றில் அங்கங்கே புள்ளிவைத்து விட்டு
ஏட்டில் கோலமிட ஆரம்பிக்கும் என் விழிகள்.

அடுத்த வகுப்புக்கான மணியடிக்கிறது.
தமிழய்யா நுழைந்ததும்
உணவகம் முதல் நூலகம் வரை எல்லாம் மூடப்பட்டாலும்.
பூங்காவும், தொலைநோக்கும் தொய்வின்றித் தொடரும்.

அது ஓர் இலக்கண வகுப்பு.
அய்யா உன்னையெழுந்து வாசிக்க சொல்ல.
அவர் அருகில் நின்றபடி வகுப்பைப் பார்க்கிறாய்.
வகுப்பாய் மாறுகிறேன் நான்.

கரும்பலகை
இரவென பின்னணி கொடுக்க
நீ நிலவாகிறாய்.
என் எழுதுகோல்
தன் தொழில் மறந்து
தூரிகையாகிறது.

பென்சிலைக் கார்பனில் செய்தவனின் காதலி
கருப்பாய் இருந்திருப்பாளோ?
உன்னை வரைய
பொன்னில் செய்த பொன்சில்தான் வேண்டும்.

“இரு சொற்களின் புணர்ச்சியில்,
முதலிலுள்ள சொல் நிலைமொழியெனவும்,
இரண்டாவதாக வந்து சேரும் சொல் வருமொழியெனவும் அழைக்கப்படும்”

வாசிப்பினிடையே என்னைப் பார்க்கிறாய்.

நிலைமொழி நீ
வருமொழி நான்
காதலும் புணர்ச்சிதான்.

உணர்ந்தவளாய்,
உதட்டில் நகுகிறாய்.
விழிகளில் நாணுகிறாய்.

நீ விழிகளில் காதல் பரிமாறிய பின்னும்
என் உதடுகளில் உதறலெடுக்கிறதே.

ஏன்?

நண்பர்களோடு சிலம்பம் ஆடும்
என்சொற்கள் எல்லாம்
உன்னைக் கொண்டதும்
தியானத்தில் மூழ்கி விடுகிறதே.

எதற்கு?

தூரத்தில் நீ வருகையில்
இதயத்தில் இருந்து எழுந்து
தொண்டை வரை வார்த்தையாக வருபவையும்
அருகில் நீ வந்ததும்
குரலாக மாறாமல் காற்றாக கலைந்து மறைகிறதே.

எப்படி?

“உயிர் வரின் உ குறள் மெய் விட்டு ஓடும்” -
புணர்ச்சி இலக்கண விதியொன்றை
கரும்பலகையில் எழுதுகிறார் தமிழய்யா.

ஏட்டில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
“உயிர் வரின் உ குறள், மெய் விட்டோடும்”
“உயிர் வரின் என் குரல், மெய் விட்டோடும்”
“என்னுயிர் வரின் என் குரல், மெய் விட்டோடும்”
“என்னுயிர் நீ வரின் என் குரல், மெய் விட்டோடும்”

பெருங்கூட்டம் முன்னிலும்
பெருமழையெனப் பொழிகின்றன
என் வார்த்தைகள்.

ஒற்றைப் பெண்
உன் முன்நிற்கையிலோ
பூ மீது படியும் பனி போல
மென்மையாய் ‘உம்’ மட்டுமே கொட்டுகிறது.

அதற்குமொரு விதியெழுதுகிறார் தமிழய்யா.
“பூ பெயர் முன் இன மென்மை உம் தோன்றும்”
என் கதை அவருக்கும் தெரிந்திருக்குமோ?

“பேரூர்” – பிரித்தெழுதி புணர்ச்சி விதிகளையும்
எழுதச் சொல்லிவிட்டுச் செல்கிறார் அய்யா.

புணர்ச்சி விதி ஒவ்வொன்றின் இடையியிலும்
கவிதைகளென நாமும் சேர்ந்து கொள்கிறோம்.

பெருமை + ஊர் -> பெரு + ஊர் (புணர்ச்சி விதி – ஈறுபோதல்)

மணமாகிறேன்.
நிறமாகிறாய்.
காதல் பூக்கிறது.
சொல்லாகிறேன்.
இசையாகிறாய்.
காதல் கவிதையாகிறது.
 

 

பெரு + ஊர் -> பெர் + ஊர் ( புணர்ச்சி விதி – உயிர் வரின் உ குறள் மெய் விட்டோடும் )

கடலாகிறேன்.
கரையாகிறாய்.
காதல் அலையடிக்கிறது.
மழையாகிறேன்.
நிலமாகிறாய்.
காதல் மண்வாசமாகிறது.
 

 

பெர் + ஊர் -> பேர் + ஊர் ( புணர்ச்சி விதி – ஆதி நீடல்)

பாதமாகிறேன்.
பாதையாகிறாய்.
காதல் பயணிக்கிறது.

நீயாகிறேன்.
நானாகிறாய்.
காதல் நாமாகிறது.
காரணங்கள் எதுவுமின்றி
இதுபோல் என்னோடு வந்து
நீ ஒன்றானது ஏன்? எதற்கு?? எப்படி???

‘பேரூருக்கான’ கடைசி புணர்ச்சி விதிமூலம்
காதல் தேவதை பதில் சொல்லிப் போகிறாள்.

பேர் + ஊர் -> பேருர் ( புணர்ச்சி விதி – “உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” )

(அடுத்தப் பகுதி)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

*பெர்மா தேற்றம் – Fermat’s theorem.
**சவ்வூடு அழுத்தம் – Osmotic pressure

பின்குறிப்பு : ஆணித்தொல்லை அதிகமாப் போச்சு! ஆணியப் பார்த்ததும் ஆணியா?னு நான் தெறிச்சு ஓட்றேன். என்னப் பார்த்ததும் ஆ!நீயா? னு ஆணியும் தெறிச்சு ஓடுது. ஓடிப்பிடிச்சு வெளாடிட்டு இருக்கோம். வெளாட்டு முடிஞ்சதும் புணர்ச்சி விதிகளுக்கான விளக்கம் + பாடல் வரிகள் மாலையில் பதிக்கிறேன்

© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD