May 28

இடைவேளைக்கு முன்னாடிப் படம் பார்க்காதவங்க இங்க
போயி முதல் பாதியப் பார்த்துட்டு வாங்க…
இதயம் பலகீனமானவங்க தொடர்ந்து படிக்க வேண்டாம்.
ஆங்..இடைவேளைக்கு முன்னாடி, நான் ஒரு விஷயத்த சொல்ல மறந்துட்டேன்….
அமெரிக்கா போறதுக்கு முன்னாடி, பானுவுக்கு, தேவ் ஒரு காதல் பரிசு கொடுப்பார்
–அது ஒரு, ஒரு ரூபாய் நாணயம்….
( கொடுக்கும் போதே, “ஆனந்தம்” படம் மாதிரி, இந்த ஒத்த ரூபாய வச்சி ஒரு பாட்டுப்
போடுவாங்கன்னு எதிர் பாத்தேன்!
நல்ல வேளை பாட்டெல்லாம் எதுவும் இல்ல…ஆனா அந்த ஒரு ரூபாய வச்சி……அப்புறம்
சொல்றேன்….)

இடைவேளைக்கப்புறம் பாரதியார் பானுவ , அமெரிக்கா கூட்டிட்டுப் போயிடறார்.
அமெரிக்காவுல ஒரு காட்சி:
ஒரு ரெஸ்டாரண்ட்ல பானு குடும்பத்தோட உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு
இருக்காங்க…
அப்போ பாரதியார் , பானுவுக்கு எப்படி தேவதாஸ மறக்க சொல்லி மறைமுகமா சொல்றதுன்னு
யோசிக்கிறார்…
உடனே பானுகிட்ட இருந்து தேவ் கொடுத்த அந்த ஒத்த ரூபாய எடுத்து, அத
பாத்துக்கிட்டே ” பானு! இந்தியாக் காசெல்லாம் அமெரிக்காவுல செல்லாதுமா”ன்னு
சொல்லிட்டு அதத் தூக்கிப் போடறார். அந்த வசனத்துலேயே எல்லாத்தையும்
புரிஞ்சுக்கிற புத்திசாலி பானு, ஓடிப் போய் அந்தக் காச எடுத்துக்கறாங்க.
பானுவும் பதிலுக்கு ஒரு வசனம் பேசுறாங்க “அப்பா! நீங்க வேணா அமெரிக்கா வந்த
வுடனே இந்தியாவ மறந்திருக்கலாம், நான் மறக்கல” அப்பிடின்னு சொல்றாங்க…
அதுக்கு பாரதியார் நேரடியா விஷயத்த சொல்வாரு : “இங்க இருக்கவங்கள்ல ஒரு
மாப்பிள்ளைய செலெக்ட் பண்ணு, உனக்கு சீக்கிரமே கல்யாணம்”
கொஞ்சம் யோசிச்சுட்டு பானு சொல்வாங்க : “உங்க இஷ்டம்ப்பா”

( என்ன தேவதாஸ காதலிச்சுட்டு வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்க பானு
ஒத்துக்கிட்டாங்களேன்னு அதிர்ச்சியா இருக்கா…கொஞ்சம் பொறுங்க…முடிச்சு(!)
அவிழும் )

இப்போ இந்தியாவுல ஒரு காட்சி :

ஏமாத்தி, பானுவ அவங்கப்பா அமெரிக்கா கூட்டிட்டுப் போய்ட்டத, நண்பர்கள்ட்ட
சொல்லி வருத்தப்படறார் தேவ்.
தேவதாஸ உடனே அமெரிக்கா கெளம்ப சொல்லி நண்பர்கள் உசுப்பேத்துறாங்க….
நான்….எப்படி….அமெரிக்கா….ப்ச்….அப்பிடின்னு கமல் மாதிரி ரியாக்ஷன் காட்டுறார்
தேவ்….
அப்போ அது வரைக்கும் காமெடி பண்ணிக்கிட்டு இருந்த தேவோட நட்புவட்டாரம்…..,
நட்பப் பத்தி ஒரு மினி லெக்சர் எடுக்கறாங்க….
தியேட்டரே ஒரு மயான அமைதியில இருக்கு…
எல்லாத்துக்கும் மேல எனக்கு பக்கத்துல உக்காந்திருந்தவர் எங்க நான்
பார்த்திடுவனோன்னு எனக்குத் தெரியாம கண்ணத் தொடச்சிக்கிறார்… ( சோகத்துல
அழுகறாராமாம் )
எனக்கு அழுவதா இல்ல சிரிக்கிறதான்னு தெரியல ….
லெக்சர் முடிஞ்ச வுடனே எல்லாரும் ஆளுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து தேவதாஸ
சென்னைக்கு அனுப்பி வைக்கறாங்க…
சென்னை வர்ற தேவ், அமெரிக்க தூதரகத்துக்குப் போறார்….
அவர் அனாதை, சொந்த வீடு இல்லை அப்பிடி இப்பிடி காரணம் சொல்லி அங்க அவரோட விசா
அப்ளிகேஷன ரிஜக்ட் பண்ணிடறாங்க……
( ரிஜக்டட் அப்பிடின்னு அந்த அபீஸர் சீல் குத்துறத 4 தடவ திருப்பி திருப்பி
காட்டுறாங்க…எங்களுக்கு நெஞ்சுலக் குத்தின மாதிரியே இருந்துச்சு! )

அப்பிடியே இடிஞ்சு போய் நிக்கற தேவ், ஒரு நடை பிணமா, பீச்ல
சுத்தறார்…பிண்ணனியில ஒரு சோகப் பாட்டு பாடுது….
ரோட்ல நடந்து வரும்போது தேவ் ஒரு கார்ல மோதி விழறார்…கார்ல இருந்து எறங்கி
வர்றது யாருன்னு பாத்தா…படம் ஆரம்பிச்சப்போ ஒரு குத்துப் பாட்டுக்கு தேவோட ஆடின
மழை ஷ்ரேயா…தேவோட கதைய முழுசாக் கேட்ட ஷ்ரேயா சோகம்+கோபத்துல கண் செவக்கறாங்க…
உடனே செல்லெடுத்து ஒரு மியூசிக் டைரக்டருக்கு போன் போடறாங்க….அவரு டைரக்டருக்கு
போன் போடறார்…
டைரக்டர் ஷ்ரேயாக்கிட்ட பேசறார்…. ஷ்ரேயா “கண்டிப்பா நீங்க எனக்காக இத பண்ணனும்
” அப்படின்னு சொல்றாங்க…

அடுத்த நாள் பாத்தா ஒரு ஷூட்டிங்க்காக ஒரு சினிமா குழு அமெரிக்காப் போகுது… ஒரே
ராத்திரியில அந்தப் படத்துக்கு அஸிஸ்டண்ட் டைரக்டராய்ட்டார் நம்ம தேவ்…
அஸிஸ்டண்ட் டைரக்டர்ங்கறதால உடனே விசா கெடைச்சுடுது….அந்த சினிமாக் கூட்டத்தோட
தேவும் அமெரிக்கா போய்டறார்…
( அப்ரூவ்ட் அப்பிடின்னு அந்த அபீஸர் சீல் குத்துறத 10 தடவ திருப்பி திருப்பி
காட்டுறாங்க…எங்களுக்கு முதுகுலக் குத்தின மாதிரியே இருந்துச்சு! )

அமெரிக்கா ஏர்போர்ட்ல எறங்குற தேவோட கெட்டப் : அமெரிக்க கொடி ப்ரிண்ட்
ஆகியிருக்கிற ஒரு கோட் மாதிரி ஒரு பனியன்…தலைக்கு ஒரு குல்லா….
ஏர்போர்ட்ட விட்டு “ஹே …ஹே…”ன்னு கத்திக்கிட்டே ஒரு “ஏ இந்தா..ஏ இந்தா” னு ஒரு
ஆட்டத்த போட்டுக்கிட்டு வெளியே வர்றார்….
தேவ் கையில ஒரு 2000 டாலரக் குடுத்துட்டு “All the Best” சொல்லிட்டு
மறைஞ்சுடறார் அந்த டைரக்டர்…( நீங்க புத்திசாலியா இருந்தீங்கன்னா இவர் தான்
இந்த படத்தோட உண்மையான டைரக்டர்னு நான் சொல்லாமலேயே புரிஞ்சுப்பீங்க! )

தேவ், எப்படியோ பாரதியாரோட வீட்ட கண்டுபிடிச்சு அது முன்னாடி நின்னு நோட்டம்
விட்டுக்கிட்டு இருப்பார். பாரதியார் வந்து அமெரிக்காவுல ஒரு செனட்டர்…அதனால
பாதுகாப்பு அதிகமா இருக்கும்….திடீர்னு தேவ போலீஸ் சுத்தி வளைச்சுடுது….
“who r u?”
“what r u doing here”
அப்பிடின்னு போலீஸ் துப்பாக்கி முனையில அவர மெரட்டுவாங்க….
(….தியேட்டரே திக் திக் னு துடிச்சுட்டு இருக்கு…)
அங்க தான் ஹீரோ தன்னோட மூளையப் பயன்படுத்துவார்…
தன்னோட Passport, visa எல்லாத்தையும் எடுத்துக் காட்டி தான் ஒரு Assistant
Director, location பாக்கிறதுக்காக வந்ததா சொல்லி தப்பிச்சுடுவார்…
( தியேட்டரில் விசில் பறக்கிறதுன்னு நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியணுமா? )

அப்புறம் தேவ் தனியா அமெரிக்காவுல சுத்திக்கிட்டு இருக்கும்போது ஒரு பொண்ணு (
கண்டிப்பா அது ஒரு தெலுங்குப் பேசற பொண்ணு! ) ஆத்துல குதிச்சு தற்கொலை
பண்ணிக்கப் போறத பாக்குறார்…
அதுக்கிட்ட போய் இங்க இருந்து குதிச்சா தப்பிக்க சான்ஸ் இருக்கு, அதோ அந்த
பில்டிங் மேல இருந்து குதிச்சீன்னா உடனே சாகலாம், அப்பிடின்னு ஐடியா
கொடுப்பார்.
தன்னோட மனச திசை திருப்பதான் சொன்னான்னு, லேட்டா புரிஞ்சிக்கிற அந்த பொண்ணு,
தேவ் பின்னாடியே வந்து “நீ போனதுக்கப்புறம் நான் தற்கொலை பண்ணிக்கிட்டா என்னப்
பண்ணுவ? ” அப்பிடின்னு கேட்கும்…
“ஒரு தடவ தற்கொலை பண்ணிக்கப் போய் தப்பிச்சவங்க, அதுக்கப்புறம் சாகத் துணிய
மாட்டாங்க” அப்பிடினு ஒரு அற்புதமான(!) வசனத்த அசால்ட்டா சொல்லிட்டு கேஷுவலா
நடக்க ஆரம்பிச்சுடுவார் நம்ம தேவ்.

அதுல இம்ப்ரஸ் ஆகுற அந்தப் பொண்ணு தன்னோட “காதல் தோல்வி சோக”த்த தேவ்கிட்ட
கொட்டுது.
தேவ் தன்னோட சோகத்த கொட்டுவார். அதக் கேட்டுட்டு ஃபீல் ஆகுற அந்த பொண்ணு தேவ்
காதலுக்கு தான் உதவி பண்றதா சொல்லி,
அவளோட வீட்டுக்கு கூட்டிட்டுப் போகுது…

இதுக்கு நடுவுல பானுவுக்கு வீட்ல மாப்பிள்ளை பார்த்திருப்பாங்க….
மாப்பிள்ளை குடும்பத்துக் காரங்க எல்லாம் பொண்ணு பாக்குற வைபவத்துக்காக நம்ம
பாரதியார் வீட்டுக்கு வருவாங்க….
( அமெரிக்கா போனாலும் பொண்ணு பாக்கப் போற பழக்கம் இன்னும் மறக்கல )
( பாரதியார் வீட்ல நீங்க பாக்க வேண்டிய விஷயம் சுவர்ல “புஷ்”சோட போட்டோ
மாட்டியிருப்பாங்க…அவர் அங்க அரசியல்வாதி இல்லையா? டைரக்டரோட அறிவப்
புரிஞ்சுக்குங்கப்பா!) ( புஷ் கால்ல பாரதியார் விழற மாதிரி ஒரு சீன்
கிராபிக்ஸ்ல பண்ணியிருந்தாங்களாம்…எடிட்டிங்ல போயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன் )
“சரி பொண்ண வரச் சொல்லுங்கப்பா”- மாதிரி ஒரு வசனத்த தெலுங்குல ஒரு பெருசு
சொன்னவுடனே மாடிப் படிய காட்டுறாங்க….
தழையத் தழையப் பொடவையக் கட்டிக்கிட்டு, வெட்கப்பட்டுக்கிட்டே பானு,
மாடிப்படியில இருந்து எறங்கி வரும்னு எதிர்பார்த்தா ஒரு கவர்ச்சிப்
பாட்டுக்குத் தேவையான காஸ்ட்யூம்ல எறங்கி வந்து நடு வீட்டுல ஒரு குத்துப்
பாட்டுக்கு டான்ஸ் ஆடுறாங்க….ஆடி முடிச்சுட்டு,
“நான் தேவதாஸ தான் கல்யாணம் பண்ணிப்பேன், தேவத் தவிர வேற யாருக்கும் எம் மனசுல
எடமில்ல” அப்பிடின்னு வசனம் பேசிட்டு மாடிப்படியேறிப் போய்டுது….
சரி வந்ததுக்கு ஒரு டான்ஸாவது பாத்தமே அப்பிடின்னு ஜொள்ள தொடச்சிட்டு
மாப்பிள்ளை வீட்டுக் காரங்களும் கெளம்பி போய்டுவாங்க….

கோபம் தலைக்கேறின நம்ம பாரதியார், நேரா மாடிக்குப் போறார்…
எதிர்பார்த்த மாதிரியே பானுவ ஒரு ரூமுக்குள்ள தள்ளிப் பூட்டி வச்சிடறார்.

நம்ம மாமி ( அதாம்ப்பா தேவதாஸையும், பானுமதியையும் சேத்து வைக்கிறதுக்கு உதவி
பண்றேன்னு சொன்ன பொண்ணு ) ,
தேவ்க்கு ஒரு புது செல்லு, ஒரு புது காரு…எல்லாம் வாங்கிக் கொடுக்குது….
எப்படி பானு வீட்டுக்குள்ள நுழையறதுன்னு ரெண்டு பேரும் யோசிக்கறாங்க…
ஒரு சூப்பர் ஐடியா ( பாரதியார பேட்டி எடுக்கிற மாதிரி அவர் வீட்டுக்கு போறது )
கண்டு பிடிச்சு அவர் வீட்டுக்குப் போறாங்க…
அங்க இருக்க பத்திரிக்கைக் காரங்க கூட்டத்துக்கு நடுவுல எப்படியோ பூந்து
வீட்டுக்குள்ள போய்டுவார், தேவ்…
அங்க பானு இருக்கிற ரூமக் கண்டுபிடிச்சு…ஜன்னல் வழியா பானுவக் கூப்பிட்டு எதோ
பேச ஆரம்பிப்பார்…அதுக்குள்ள பாரதியார் உள்ள வந்திடுவார்….
தேவ், ஒளிஞ்சு ஒளிஞ்சு ஒரு பேப்பர்ல எதையோ எழுதி அந்த வீட்டு நாய்(!)கிட்ட
கொடுத்திட்டு எஸ்கேப் ஆகிடுவார்…

நாய் வாயில ஒரு பேப்பர் இருக்கிறத பாத்துட்டு பாரதியார் அத எடுக்கப் போக,
அதுக்குள்ள வேலக்காரர் அத எடுத்து படிக்க ஆரம்பிச்சுடுவார்…
( பானு, பாரதியார், பானுவோடப் பாட்டி, அந்த நாய், எல்லார் முகத்தையும் க்ளோஸ்
அப் ல காட்டுறாங்க…ஒரு விதப் பதட்டமும், பரிதவிப்பும் தெரியுது எல்லார்
முகத்திலயும், இப்ப உங்க முகத்துல கூடத் தான் J)
“I MISS U” னு அதுல எழுதி இருக்கு ….எதையோ சொல்லி பானுவோட பாட்டி பாரதியார
சமாளிச்சுடுவாங்க…
ஆனா அத கவனிக்கிற பானு, பேப்பர், பென்ஸில் எடுத்து, அத டீக்கோட் பண்ணி, தகவலப்
புரிஞ்சுக்குவாங்க……

( அது என்ன தகவல்னு கதைய மேலப் படிக்காம சரியாக் கண்டுபிடிச்சு பின்னூட்டமாக
இடுபவருக்கு இந்தப் படத்தோட சிடி பரிசாக(!) உங்கள் செலவில் அனுப்பி
வைக்கப்படும்! )

அடுத்த நாள் பானு, தேவ்க்கு ஃபோன் பண்ணி பேசுறாங்க…ரொம்ப நாள் கழிச்சு
காதலர்கள் பேசிக்கிறத வெறும் வசனத்துல எப்படிக் காட்டறதுனு யோசிச்ச டைரக்டர்,
அவங்கள அப்படியே போன்லேயே ஒரு பாட்டு பாட வச்சிடறார்….ஃபோன்ல பாடிக்கிட்டே
அவங்களும் பீச், பார்க் எல்லாம் போய்ட்டு வந்திடறாங்க…

ஒரு தடவ, பாரதியார் வீட்டு மாடியில இருந்து கீழ லிஃப்ட்ல போய்க்கிட்டு
இருப்பார்…
அதப் பாக்குற பானு, ரூம்ல இருக்க பல்ப எடுத்துட்டு, பல்புக்கு பின்னாடி தேவ்
தந்த ஒரு ரூபாய வச்சி திரும்பவும் பல்ப மாட்டிட்டு, சுவிட்ச்சப் போட்டு, ப்யூஸ்
போக வச்சிடுவாங்க…
கரண்ட் போனதால லிஃப்ட் பாதியிலேயே நின்னுடும்…லிஃப்டுக்குள்ள மாட்டுன
பாரதியார், ஏதோ சுனாமியே வந்துட்ட மாதிரி கத்துவார், கதறுவார், கொஞ்ச நேரத்துல
செக்யூரிட்டி ஆளுங்க வந்து ப்யூஸ் சரி பண்ணி, லிஃப்ட கீழ எறக்குவாங்க…
லிஃப்டத் தொறந்து தொபுக்கடீர்னு வெளில வந்து விழுவார் – பாரதியார்… டிரெஸ்
எல்லாம் நனஞ்சு போயிருக்கும்.. ( பயத்துல வியர்த்து கொட்டிடுச்சி வேற ஒன்னும்
இல்ல! )

சந்திரமுகி மாதிரி லக..லக..லக…ன்னு சிரிச்சுட்டு “இந்தியாக் காசு அமெரிக்காவுல
செல்லாதுன்னு சொன்னீங்களே – இப்ப எப்படி உங்கள பயமுறுத்துச்சி பாத்தீங்களா”
அப்பிடின்னு பானு, தன்னோட அப்பாவப் பாத்துக் கேட்பாங்க…. தியேட்டர்ல ஒரே
கைத்தட்டல் தான் போங்க!!

பானுவ எப்படி வீட்டுச்சிறையில இருந்து மீட்கறதுன்னு தேவும், மாமியும் தீவிரமா
யோசிச்சு ஒரு ஐடியா பண்ணி பானுவுக்கு போன் பண்ணி சொல்றாங்க….

அடுத்த நாள் பானுவ கோயிலுக்கு கூட்டிட்டுப் போகறதுக்கு பாரதியார்ட்ட பர்மிஷன்
வாங்கிடறாங்க பானுவோட பாட்டி….கார்ல பானு, பானுவோட பாட்டி, பாரதியார்,
வேலைக்காரர் எல்லாரும் கோவிலுக்குப் போய்க்கிட்டு இருக்கும்போது வழியில ஒரு
பஞ்சாபிக் கூட்டம் “பல்லே பல்லே”னு டான்ஸ் ஆடிக்கிட்டு வருது….கார்ல இருந்து
எறங்கி எல்லாரும் வேடிக்கைப் பாக்குறாங்க…பஞ்சாபிப் பொண்ணு ஒன்னு ஒரு பஞ்சாபிக்
குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆடுது…. அத , பாரதியார், வாயப் பொளந்து வேடிக்கப்
பாத்துட்டு இருக்கிற கேப்ல, தேவும், மாமியும், வந்து பானுவ கடத்திட்டுப்
போய்டுவாங்க….

டென்ஷன் ஆகிடற நம்ம பாரதியார் போலீஸ், அடியாள் எல்லாரையும் அனுப்பி பானுவ தேடச்
சொல்றார்..

பானுவையும், தேவதாஸையும், கார்ல கூட்டிட்டுப் போற மாமி, ஒரு தனித் தீவுக்கு
வந்து சேர்றாங்க….

“இந்தத் தீவுக்கு யாரும் வர முடியாது, உங்கள யாரும் கண்டுபிடிக்க முடியாது,
எஞ்சாய்”- அப்பிடின்னு சொல்லிட்டு மாமி எஸ்கேப் ஆகிடறாங்க….

பானுவப் பாத்து தேவ் கேட்பார் : ” நாம ஒரு விளையாட்டு விளையாடலாமா”
அப்பிடின்னு…
சரி ஏதோ கண்ணாமூச்சி, நொண்டி இது மாதிரி ஏதோ விளையாடப் போறாங்கன்னுப் பாத்தா
அது “செல்லமே” படத்துல வர்ற மாதிரி ஒரு வெவகாரமான வெளையாட்டு…
( என்ன விளையாட்டுன்னு கேட்கிறீங்களா? நான் மட்டும் 30 ரூபா குடுத்துப்
பார்ப்பேன்…நீங்க ஓசியிலயே கேட்டுக்கலாம்னு பாக்குறீங்களா? அஸ்கு…புஸ்கு….அது
மட்டும் முடியாது! )
விளையாட்டு முடிஞ்சவுடனே பாட்டு ஆரம்பிக்குது… ( பின்ன என்னப்பா தனித்தீவு
கெடைச்சதுக்கப்புறமும் ஒரு டூயட் பாடலைன்னா அவங்கல்லாம் என்ன காதலர்கள்? )

அவங்க அப்பிடியே இந்தியாவுக்கு தப்பிச்சுப் போயிட்டா படம் சப்புனு முடிஞ்சுடும்
இல்லையா? அதனால பானுவக் கொண்டுவந்து திரும்பவும் பாரதியார் வீட்லயே விட்டுட்டு
போனஸா ஒரு சவாலும் விட்டுட்டுப் போறார்…நம்ம ஹீரோ!

சவால் என்னன்னா :
” நீங்க பானுவ, எங்கிட்ட இருந்து பிரிச்ச மாதிரி, நானும் உங்க முன்னாடியே அவளக்
கடத்திட்டுப் போய் 24 மணி நேரத்துக்குள்ள அமெரிக்காவ விட்டேப்
போயிடுவோம்….உங்களால முடிஞ்சா தடுத்துக்குங்க…”
இதக் கேட்டு முதல் முறையா பாரதியார் ( ரொம்ப நேரமா நானும் பாரதியார் னே
சொல்லிட்டு இருக்கேன்! மன்னிச்சுக்குங்க நம்ம கதைல இனிமே அவர் – யூ. எஸ்.
செனட்டர் ) முகத்துல ஒரு கவலை ரேகை படியுது….

படம் இப்ப சூடு பிடிச்சுட்டுதா தியேட்டர்ல ஒரு பரபரப்பு பத்திக்குது….எனக்குப்
பக்கத்து சீட்காரர் தம்மெடுத்துப் பத்தவைக்கிறார்…

சொன்ன மாதிரியே பானுவ வூடு பூந்து கடத்திடறார் தேவ்…சோஃபா பின்னாடி, கதவு
பின்னாடி ஒளிஞ்சு ஒளிஞ்சு, யூ. எஸ் போலீஸ் காதுல ( நம்ம காதுலையும் தான்! ) ஒரு
ரெண்டு முழம் பூவ சுத்திட்டு பானுவக் கூட்டிட்டுப் போயிடறார்….

கோபப்படற செனட்டர், போலீஸ்கிட்ட கத்துறார்…எப்படியாவது பானுவ 24 மணி நேரத்துல
மீட்டுடனும்னு கட்டளை போடறார்…
போலீஸ் ஒரு பத்து ஹெலிகாப்டர எடுத்துக்கிட்டு அமெரிக்காவையே அலசி எடுக்கிறாங்க…

செனட்டரும் தன்னோட பங்குக்கு ஒரு கார எடுத்துக்கிட்டு தெரு தெருவா சுத்துறார்….
காருக்குள்ள செனட்டர க்ளோஸ்-அப் ல காட்டுற கேமரா, அப்பிடியே மெதுவா வெளிய வந்து
மேலப் போயி, கார டாப் ஆங்க்ள்-ல காட்டுது….கார் பின்னாடியே ஒரு அல்ட்ரா மாடர்ன்
பஸ் ( ஸ்வதேஷ் படத்துல ஷாருக்கான் வருவார்ல – அது மாதிரி அட்டாச்டு பாத்ரூம்,
பெட்ரூம், டி.வி., எல்லாம் இருக்கிற ஒரு மினி வீடு மாதிரியான பஸ்) போய்க்கிட்டு
இருக்குது….இப்போ கேமரா அப்பிடியே மெதுவா கீழ எறங்கி, அந்த பஸ்சுக்குள்ள
போகுது…..அங்க….ஹீரோ உக்காந்து சிப்ஸ் சாப்பிட்டுக்கிட்டு F-Tv பாத்துக்கிட்டு
இருக்கார்….

பஸ்சுக்குள்ளேயே இன்னொரு ரூம்ல இருந்து வர்ற பானு… இதப் பாத்துட்டு
கடுப்பாயிடறாங்க….
தேவ் ,” இல்ல பானு, அந்த ட்ரெஸ்ல ரொம்ப கவர்ச்சியா இருக்காங்க இல்ல?”
அப்ப்டின்னு அசடு வழியறார்.
எங்கடா இவன் நம்மள விட்டுட்டு எதாவது அமெரிக்காப் பொண்ண செட்டப்
பண்ணிடுவானோன்னு பயந்த, பானு :
“இந்தியாவோட புடவைல இத விட கவர்ச்சி அதிகம்” அப்பிடின்னு சொல்லிட்டு உள்ளப்
போய்ட்டு கொஞ்ச நேரத்துல வெளிய வர்றாங்க…
ஜன்னல், பால்கனி, போர்ட்டிகோ எல்லாம் வச்ச ஒரு ஜாக்கெட் போட்டுக்கிட்டு
(பெண்ணியவாதிகள் சண்டைக்கு வந்துடாதீங்க !!!) ஒரு புடவைய சுத்திக்கிட்டு
பஸ்சுக்குள்ள ஒரு “கேட் வாக்” நடக்கறாங்க…
இது மாதிரி ஒரு நாலஞ்சு புடவைல மாறி மாறி நடந்து வந்து ஹீரோவத்
தெணறடிக்கிறாங்க……….
நாங்க தெலுங்கு படத்துக்கு தான் வந்திருக்கோமா இல்ல மலையாள படத்துக்கு
வந்திட்டோமான்னு ஒரு நிமிஷம் சந்தேகம் வந்திடுது….
பானு மொத புடவைல வரும்போது சோஃபா மேல உக்காந்திருந்த தேவ் கடைசி புடவைல
வரும்போது தரைல சரிஞ்சு கெடக்கறார்…
உள்ள கேட் வாக் நடக்கிற அதே சமயத்துல வெளிய நம்ம செனட்டர் பாவம் கார்லயே
அமெரிக்காவ குறுக்கும் நெடுக்கும் அளந்துக்கிட்டு இருக்கார்….

திடீர்னு செனட்டருக்கு ஒரு ஞாபகம் வருது….
வீட்ல நாய் வாயில இருந்து ஒரு லெட்டர்ல “I miss you “னு வேலக் காரன்
படிக்கும்போது, பானு பூடகமா சிரிக்கிறத நெனச்சிப் பாக்குறார்…அதுல ஏதோ விஷயம்
இருக்குன்னு திரும்பவும் வீட்டுக்குப் போறார்.. பானு பெட்ரூம்லத் தேடி ஒரு
பேப்பர எடுக்கிறார்…அதுல

I – 9 m-13 i-9 s-19 s-19 u-21
9139191921 னு ஒரு ஃபோன் நம்பர் எழுதியிருக்கு…

அந்த ஃபோன் நம்பர நெட்ல போட்டு தேடி, மாமியோட அட்ரெஸ கண்டுபிடிச்சிடறார்…
மாமி வீட்டுக்குப் போயி, மாமிய மெரட்டி, அவங்க மூலமா, பானுவும் தேவும்
போய்க்கிட்டு இருக்கிற பஸ் நம்பர வாங்கிடறார், செனட்டர்….
அடியாளுங்களுக்கு ஃபோனப் போட்டு பஸ் நம்பர சொல்லி மடக்கிப் பிடிக்க சொல்றார்…

அதே சமயம் பானுவும் தேவும் அந்த பஸ்ல இருந்து எறங்கி வேற ஒரு காருக்கு மாறப்
போறாங்க…
நம்ம பக்கத்து சீட்டுக்காரர் முகத்துல நிம்மதி தெரியுது….
விடுவாரா டைரக்டர்?
பஸ்ல எதையோ மறந்து வச்சிட்டதா சொல்லி திரும்ப எடுக்கப் போறாங்க பானு…
அதுக்குள்ள அவங்கள ரவுண்டு கட்டிடறாங்க…நம்ம அடியாட்கள்!
( ஆமா! நான்- அடியாட்கள், அடியாட்கள் னு சொல்றனே அமெரிக்காவுல அடியாட்கள்
எப்படி இருப்பாங்கன்னு யாரும் கேட்கவேயில்லையே? அடியாட்கள் எல்லாரும் நீக்ரோ )

பானுவையும், தேவையும் தனித் தனியா இழுத்துட்டுப் போயிடறாங்க…
ஒரு இருட்டான எடத்துல, ஒரு முரட்டு நீக்ரோகிட்ட, தேவதாஸ தனியா விட்டுடறாங்க…
அந்த நீக்ரோவும், தேவதாஸ கட்டி வச்சி, சரமாரியா அடிச்சுத் தாக்கிடுவார்….
திடீர்னு கட்ட எல்லாம் பிரிச்சிக்கிட்டு திமிறி வர்ற தேவதாஸ் பக்கத்துல இருந்த
ஒரு இரும்பு ராட கையில எடுக்கிறார்…

சரி நீக்ரோ தொலஞ்சார்னு பாத்தா…
அந்த இரும்பு ராடால தன்னோட மண்டையிலேயே, நச்சு, நச்சு, நச்சு, நச்சு, நச்சுனு
அடிச்சிக்கிறார் தேவ்……….
என்னடா ஒரு லூசுப்பயகிட்ட நம்மள தனியாவிட்டுட்டுப் போயிட்டாங்களேன்னு, பயந்து
போற நீக்ரோ, பானுவ எங்க தூக்கிட்டு போயிருப்பாங்கன்னு சொல்லிடறார்…

அந்த எடத்துக்கு கெளம்பிப் போறார் தேவ்….

(கொட்டாவியெல்லாம் அப்புறம் விட்டுக்கலாம் கதையக் கேளுங்க…)

ஒரு பெரிய சண்டையெல்லாம் நடக்குது, துரத்தல் சீனெல்லாம் முடிஞ்சு….கடைசியா…
தேவ்க்கு ரைட்ல ஒரு பைக் இருக்கு…
லெஃப்ட்ல பானு நின்னுட்டு இருக்காங்க…
எதிர்ல ஒரு 20 பேர் தேவ நோக்கி ஓடி வர்றாங்க…
வண்டிய ஸ்டார்ட் பண்ணி பானுவ உக்கார வச்சி எஸ்கேப் ஆயிடுவான்னு பாத்தா…
தேவ் மட்டும் தெறிச்சு ஓட ஆரம்பிச்சுடுவான்…..அவனத் தொரத்திக்கிட்டே
அடியாட்களும் போறாங்க…
பானுவும் என்னோட பக்கத்து சீட் காரரும் பேந்த பேந்த முழிக்கிறாங்க…
அப்போ ஓடிக்கிட்டு இருக்க தேவ் சரக்குனு ஒரு U turn அடிச்சு மறுபடியும் வந்து
வண்டிய ஸ்டார்ட் பண்ணி பானுவ உக்கார வச்சி தப்பிச்சு போயிடுவான்………

ஏர்போர்ட்ட நெருங்கும்போதே செனட்டர் கிட்ட சொன்ன 24 மணி நேரம் தாண்டி ஒரு
நிமிஷம் ஆயிடும்…

அடுத்த காட்சி..

செனட்டர் வீடு…. பானுவ கொண்டு வந்து அவங்க வீட்டுலயே வீட்டுட்டு செனட்டர பாத்து
தேவ் இந்த வசனத்த பேசுவார் :

“நீங்க இந்தியாவுல இருந்து பானுவ ஏமாத்தி இங்க அமெரிக்காவுக்கு கூட்டிட்டு
வந்தீங்க அது உங்க கேரக்டர்!
நான் சவால்ல சொன்ன மாதிரி 24 மணி நேரத்துக்குள்ள பானுவ கூட்டிட்டுப் போக
முடியல…
ஆனா சவால்ல தோத்துட்டு உங்கள ஏமாத்தி கூட்டிட்டுப் போக நான் விரும்பல…
அதனால தான் பானுவ இங்க விட்டுட்டுப் போக வந்தேன்….
இது தான் இந்த தேவோட கேரக்டர்”

அப்பிடின்னு சொல்லிட்டு பானுவ அங்கேயே விட்டுட்டு அவர் மட்டும் தனியா ஏர்போர்ட்
வந்துடுவார்….

சரி நம்மூர்ல ரெயில்வே ஸ்டேஷன்ல க்ளைமாக்ஸ் சீன் காட்டுற மாதிரி தெலுங்குல
கொஞ்சம் ரிச்சா, ஏர்போர்ட்ல காட்டுவாங்க போல இருக்குன்னு நெனச்சா….
தேவ் பாட்டுக்கு ஃப்ளைட்ல ஏறிடுவான்..ஃப்ளைட்டும் கெளம்பிடும்…..
இப்போ ஃப்ளைட்டுக்குள்ள காட்டுறாங்க…..
தேவ் அப்படியே நினவுகள்ல மூழ்கி சோகமா உக்காந்து இருப்பார்….
அப்போ Air Hostess வந்து excuse me sir…chocolates please … அப்பிடின்னு சொல்லி
சாக்லேட்ட நீட்டுவாங்க…
ஒரு சாக்லேட்ட எடுத்து, கவர பிரிப்பார்…. கவருக்குள்ள எழுதி இருக்கும் –”we
miss you” அப்பிடின்னு ….
பின்னாடி திரும்பிப் பாத்தா பானுவும், செனட்டரும் “ஈ”ன்னு இளிச்சுட்டு
நிப்பாங்க….

“ஏ தெலுசா தெலுசா பிரேமம் தெலுசா…” பாட்டு திரும்பவும் ஒலிக்குது…………..

நீங்க கொஞ்சம் இதயம் வீக்கானவர்னா இந்த படத்தோட சில ஸ்டில்ச மட்டும் இங்க
போயிப் பாருங்க :
லேசான மனசுக் காரங்களுக்கு<http://www.indiaglitz.com/channels/telugu/moviegallery/8001.html>

இந்த படத்தோட சில காட்சிகளையாவது பாக்கனும்னு உங்களுக்கு மனசுல ஆசையும்,
தெம்பும் இருந்தா இங்கப் போயி பாருங்க :
கொஞ்சம் தெம்புள்ளவங்களுக்கு<http://www.indiaglitz.com/channels/telugu/trailer/8001.html>
இவ்வளவுக்கப்புறமும், இல்ல ! நான் அந்தப் படத்தையே முழுசாப் பாக்கனும்னு
அடம்புடிச்சீங்கன்னா…
நீங்க ஆயுள் காப்பீடு எடுத்ததுக்கு ஒரு அத்தாட்சிய எனக்கு மின்மடலா அனுப்பி
வையுங்க…அந்த படத்தோட DVD- ய இலவசமா நானே உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்…

written by அருட்பெருங்கோ \\ tags: , ,

Apr 08

சுந்தரா ட்ராவல்ஸ் படத்துல காமெடியெல்லாம் பாத்திருப்பீங்க. அந்த சுந்தரா ட்ராவல்ஸ் வண்டியில பயணம் பண்ணியிருக்கீங்களா? போன வெள்ளிக்கிழமை நான் அதுலதான் ஹைதராபாத்ல இருந்து சென்னைக்கு போனேன். எப்பவும் தொடர்வண்டியில, இல்லனா அரசு பேருந்துல போற நான், இந்த பயணத்த திடீர்னு முடிவு பண்ணினதுனால முன்பதிவு பண்ணாம வெள்ளிக்கிழமை இரவு வீட்ல இருந்து கிளம்பி நேரா நாம்ப்பள்ளி (தனியார் ட்ராவல்ஸ் நிறுவனங்கள் இருக்கிற இடம்) போய்ட்டேன். மூனு நாள் விடுமுறைங்கறதால எந்த ட்ராவல்ஸ்லையும் இடம் இல்ல. இருக்குதுன்னு சொல்றவங்க 1500 ரூபாய் கேட்டாங்க. மறுபேச்சு பேசாம அடுத்த வண்டிய தேடினேன். கடைசில ஒரு ட்ராவல்ஸ்ல கேபின் சீட் தான் இருக்குனு சொல்லி 450 ரூபாய்க்கு ஒரு டிக்கட் கொடுத்தாங்க. டிக்கட்ட பாத்தேன். சுந்தரா ட்ராவல்ஸ்னு போட்டிருந்தது என் கண்ணுக்கு ஷாமா சர்தார் ட்ராவல்ஸ்னு எப்படி தெரிஞ்சதுனு புரியல. 8:30 மணிக்கு வண்டி கிளம்பும்னு சொன்னாங்க. வண்டியில ஏறி உட்காந்துக்கலாம்னு போனப்ப “கேபின் சீட்டா? அப்படின்னா கடைசில ஏறு”ன்னு ஓட்டுனர் என்ன கொஞ்சம் ஓட்டுனதும், ‘கேபின் முன்னாடிதான இருக்கும். அப்புறம் எதுக்கு கடைசியில போய் ஏற சொல்றாரு?’ன்னு புரியாம பைய கைல வச்சிட்டே வண்டி பக்கத்துலையே நிக்க ஆரம்பிச்சேன்.

கொஞ்ச நேரத்துல என்ன மாதிரியே ஒரு அஞ்சாறு பேரு அதே மாதிரி கைல பைய வச்சிட்டு என் பக்கத்துல ஒதுங்க ஆரம்பிச்சாங்க. அதுல ஒருத்தர் “நீங்க மைக்ரோசாஃப்டா?” னு கேட்கிற தோரணைல “நீங்க கேபின் சீட்டா”னு கேட்டார். ஆமாம்னு சொல்லி கை குலுக்கி அறிமுகமானதுல அந்த ஆறு பேரும் அதே கேபின் சீட்டுக்குதான் வந்திருக்கோம்னு புரிஞ்சது. எல்லாரும் தமிழ் பசங்கதான். அதே சமயம் லக்கேஜ்ங்கற பேர்ல அந்த வண்டிக்கு மேல இன்னொரு வண்டி ஏறிகிட்டு இருந்தது. ஒருவழியா 9 மணிக்கு வண்டி பு..ற..ப்..ப..ட்..டு..து. ரெண்டு பேரு சரியா ஓட்டுனருக்கு பின்னாடி ஒதுங்கிட்டாங்க. நானும் இன்னொருத்தரும் எஞ்சின் மேல கால நீட்டி ஒருவழியா செட்டில் ஆனோம். ஒருத்தர் தனியா இருந்த ஒரு மடக்கு சீட்ல மடங்கி உட்காந்துக்க, இன்னொருத்தர் வண்டி உள்ள கீழ படுத்துக்கறேன்னு போயிட்டார்.

வண்டி ரொம்ப மெதுவாவே போய்கிட்டு இருந்தது. நாங்களும் சிட்டி ட்ராபிக்தான் அதுக்கு காரணம்னு தப்பா நெனச்சுட்டு இருந்தோம்.எஞ்சின் பயங்கர சூடாக ஆரம்பிச்சதால, சென்னை வரைக்கும் தீ மிதிக்க முடியாதுன்னு கால தூக்கி கைல வச்சிக்கட்டோம். அப்பறம் லேசா பொக வர ஆரம்பிச்சது. அதுக்கு போட்டியா ஓட்டுனரும் பொக விட ஆரம்பிச்சார். சன்னல தெறக்கலாம்னு பார்த்தா அத கயிறு போட்டு கட்டி வச்சிருந்தாங்க. அந்த பக்கம் கதவும் மூடியாச்சு. பேருந்து கொஞ்சம் கொஞ்சமா புகைவண்டியா மாறிட்டே வந்தது. ரெண்டர வருசமா எனக்கு பொக ஒத்துக்கறதில்ல ;) சரி, ஓட்டுனரோட டென்சன கொறச்சு சிரிக்க வைக்கலாம்னு நெனச்சு, ‘அண்ணே. ஒரே பொகையா இருக்கு. அந்த கண்ணாடிய கொஞ்சம் தெறந்து விடுங்களேன்’னு அவருக்கு முன்னாடியிருந்த கண்ணாடிய காட்டி கேட்டேன். இன்னும் கடுப்பாகி என்ன பார்த்து மொறைக்க ஆரம்பிச்சாட்டார். அமைதியே ஆனந்தம்ங்கற தத்துவம் அந்த பார்வைல எனக்குப் புரிஞ்சது!

தில்சுக்நகர் தாண்டியும் வண்டி வேகமெடுக்கவே இல்ல. ஓட்டுனர், கியர் மேல கைய வைக்கிறதும் எடுக்கிறதுமாவே இருந்தார். அவர் எதுக்கு கியர தடவிக்கொடுக்குறார்னு ஒன்னும் புரியாம பாத்துட்டு இருந்தோம். பின்னாடி இருந்த இன்னொரு ஓட்டுனர கூப்பிட்டு “என்னண்ணே கியர் மாற மாட்டேங்குது”னு ரொம்ப அப்பாவியா கேட்டார். நாங்க அப்படியே ஷாக்காயிட்டோம்! அவர் வந்து கியர அசச்சு பாத்துட்டு “நீ கிளட்ச அழுத்திப் பிடி”னு சொல்லி இவர் கியர ஆட்ட.. இல்ல கிட்டத்தட்ட ஒடைக்க ஆரம்பிச்சுட்டார். கொஞ்ச நேரத்துல “படக்”னு ஒரு சத்தம் கேட்டுச்சு. “ம்ம்ம் இப்ப விழுந்துடுச்சு பாரு”னு வில்ல ஒடச்ச அர்ச்சுனன் எஃபக்ட்ல ஒரு சிரிப்பு சிரிக்கவும்… கியர் உண்மையிலேயே கீழ விழுந்திருக்குமோனு எனக்கு பயமே வந்துடுச்சு. அப்புறம் அடிக்கடி இந்த ஓட்டுனர் கியர் மாத்துறப்பலாம் அவரக் கூப்பிட அவர் வந்து எஞ்சின் மேலயே உட்காந்து உரல்ல மாவாட்ற மாதிரி கியர் மாத்த, முதல் ஓட்டுனர் ஸ்டியரிங்க பிடிச்சு. கிளட்ச அமுக்கி ஒரு மார்க்கமா ரெண்டு பேரும் சேர்ந்து வண்டி ஓட்ட ஆரம்பிச்சாங்க. பொதுவா ரொம்ப தூரம் போற ட்ராவல்ஸ் வண்டியில ரெண்டு ஓட்டுனருங்க வண்டி ஓட்டுவாங்கனு தெரியும். ஆனா இந்த மாதிரி ரெண்டு ஓட்டுனரும் சேர்ந்து வண்டியோட்டினத பார்க்க கண்கொள்ளா காட்சியா இருந்துது.

கொஞ்ச தூரம் போனதும் மறுபடியும் “அண்ணே…”னு அந்த ஓட்டுனர் இழுத்தார். இப்ப என்னடா பிரச்சினைங்கற மாதிரி ரெண்டாவது ஆளு பார்த்தார். ‘கிளட்ச மிதிக்க முடியலண்ணே! கல்லு மாதிரி இருக்கு’னு ரொம்ப பாவமா சொன்னார். “சரி ஒரு மணி நேரம் ஆஃப் பண்ணிட்டு எடுப்போமோ?”னு ஒரு அற்புத ஐடியாவ சொன்னதும் அததான் எதிர்பார்த்த மாதிரி முதல் ஓட்டுனருக்கு முகத்துல அப்படி ஒரு சந்தோசம். கொஞ்ச தூரம் போனதும் ஒரு எடத்துல நிறுத்தினாங்க. பின்னாடி எட்டிப்பார்த்த கிளீனர், “வண்டி கால்(?) மணி நேரம் நிக்கும், டின்னர் சாப்பிட்றவங்க சாப்பிட்டுக்கலாம்”னு சத்தம் போட்டார். நடுராத்திரி 12:30 மணிக்கு பேய் கூட டின்னர் சாப்பிடாதேன்னு நெனச்சா, வண்டியில இருந்த மொத்த கூட்டமும் கொலவெறியோட ஹோட்டலுக்குள்ள போச்சு. என்னனு விசாரிச்சா வண்டி 7 மணிக்கு கிளம்பும்னு சொல்லி 6:30 க்கே வண்டியேறினவங்களாம் அவங்க எல்லாம். இருந்தாலும் அதுல ரெண்டு பேரு ஃபுல் மீல்ஸ் வாங்கி சாப்பிட்டதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். நான் வழக்கம்போல ரெண்டு டீய குடிச்சுட்டு நின்னுட்டு இருந்தேன். பக்கத்துல “போனதடவ இந்த எடத்துல 11 மணிக்கு நிறுத்தினான். அப்பவே கோயம்பேட்டுக்கு மத்தியானம் 12 மணிக்கு தான் கொண்டு போய் சேர்த்தான். இன்னைக்கு இங்கயே 12:30 ஆச்சு. எத்தன மணிக்கு நாளைக்கு போகுமோ”னு ஒருத்தர் அலுத்துக்கிட்டார். “தலைவா என்ன சொல்றீங்க?”னு பதட்டத்தோட நான் அந்த க்ரூப்புக்குள்ள நொழஞ்சேன். “ஆமாங்க இந்த வண்டி எப்பவும் 12 மணிக்கு மேலதான் சென்னை போகும்”னு அவர் அசால்ட்டா சொன்னார். “தெரிஞ்சும் இதலயே ஏன் வர்றீங்க”னு கேட்டா “எல்லாம் என் தலையெழுத்து”னு சொல்லி வருத்தப்பட்டார். “சரி விடுங்க பாஸ் இனிமே இது உங்க சோகம் இல்ல. நம்ம சோகம்”னு சொல்லி அவரத்தேத்திட்டு கொஞ்ச நேரம் மொக்கையப் போட்டுட்டு இருந்தோம். மறுபடியும் 1 மணிக்கு வண்டிய எடுத்தாங்க.

இப்போ கியர் ஸ்பெஷலிஸ்ட் வண்டியோட்ட ஆரம்பிச்சார். கொஞ்ச தூரம் போனதும் லாரிகள் அதிகமா ஜாமாகி நிக்கவும் எங்க வண்டியும் நின்னுது. மறுபடியும் ஸ்டார்ட் பண்ணா வண்டி உறுமுதே ஒழிய நகரல. இப்போ இவர் அவர கூப்பிட, அவர் பாத்துட்டு “எதுக்குண்ணே நியூட்ரல் வந்தீங்க? இப்போ ரிவர்ஸ் மாத்தி டைரக்டா செகண்டுக்கு போனாதான் நகரும்”னு அவரோட அனுபவ அறிவ பகிர்ந்துக்கவும் இந்த ஓட்டுனர் ரிவர்ஸ் கியர் போட வண்டி மெதுவா பின்னாடி நகர பின்னாடி இருந்த லாரிகள்ல இருந்து ஹாரன் சத்தம் அலற மறுபடி ப்ரேக்க போட்டு நிறுத்தினார். ரெண்டு ஓட்டுனரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டாங்க. அப்புறம் ரெண்டு பேரும் செர்ந்து க்ளீனர பாத்தாங்க. நெலமைய புரிஞ்சிகிட்ட அவர் அவசர அவசரமா கீழ எறங்கி ஒரு கல்ல எடுத்து டயருக்கு பின்னாடி வைக்க, இப்போ ப்ரேக்ல இருந்து கால எடுத்துட்டு ரிவர்ஸ்ல இருந்து மெதுவா செகண்ட் கியருக்கு மாத்தி ஆக்ஸலேட்டர அமுக்க வண்டி ஒரு குதி குதிச்சுட்டு முன்னாடி போக ஆரம்பிச்சுது. என்னமோ டீசலே இல்லாம வண்டியோடற மாதிரி ரெண்டு ஓட்டுனர்ங்க முகத்துலையும் அப்படி ஒரு வெற்றிப்புன்னகை. நாங்களும் ஒரு ஆர்வத்துல கையெல்லாம் தட்டிட்டோம். அதுக்கப்புறம் வண்டியோட தாலாட்டுல நானும் தூங்கிட்டேன்.

கண்முழிச்சுப்பார்த்தப்ப மணி 6. வண்டி ஒரு டீக்கடை முன்னாடி நிறுத்தியிருந்தது. வாய் கொப்பளிச்சுட்டு மறுபடியும் ஒரு டீய குடிச்சுட்டு அங்க இருந்த ஒரு பலகைய பார்த்தா chennai – 220 KM னு போட்டிருந்தது. அடப்பாவிகளா விடிய விடிய ஓட்டி இன்னும் இவ்வளவு தூரம் போகனுமானு அலுப்போட ஏறினேன். அந்த ஓட்டுனர் டிவி சீரியல் இயக்குனரா இருந்திருப்பார் போல. 20 கிலோமீட்டர ஒரு மணி நேரமா ஓட்றார். ஒரு 9:30 மணிவாக்குல மறுபடியும் ஒரு எடத்துல வண்டி நின்னுது. ‘வண்டி கால் மணி நேரம் நிக்கும் டிபன் சாப்பிட்றவங்க சாப்ட்டுக்கலாம்’னு சத்தம் போட்டுட்டு க்ளீனர் எறங்கிட்டார். நானும் உண்மையிலேயே சாப்பிட்றதுக்காகதான் நிறுத்தியிருக்காங்கனு நம்பி எறங்கினேன். ரெண்டு ஓட்டுனர்களும் ஒரு ஸ்ப்ளண்டர்ல ஏறி எங்கேயோ போறத பார்த்ததும் மைல்டா ஒரு சந்தேகம் வந்தது. க்ளீனர கூப்பிட்டு அவங்க எங்க போறாங்கனு கேட்டா ‘அந்த க்ளட்சு ராடு ஒடஞ்சிடுச்சு. பத்த வைக்க போயிருக்காங்க’னு சொல்லி எங்களுக்கு பத்த வச்சார். ‘என்னண்ணே இதையெல்லாம் கெளம்பும்போதே பாக்கறதில்லையா’னு கேட்டா, ‘வரும்போதே ஒரு தடவ பத்த வச்சுட்டுதான் வந்தோம். மறுபடி எப்படி ஒடஞ்சுதுன்னுதான் தெரியல’னு ரொம்ப சீரியசா வருத்தப்பட்டார்.

பத்த வைக்க போன ஓட்டுனருங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரத்துல இன்னொரு மெக்கானிக்கோட திரும்பி வந்தாங்க. வந்த மெக்கானிக் அவரோட ஆயுதங்கள எடுத்துட்டு, ஒரு சாக்க விரிச்சு போட்டு வண்டிக்கடியில போனவருதான், வெளிய வர்றதுக்கான அறிகுறியே தெரியல. வண்டிக்கடியில ரெண்டு டீ, இன்னும் சில பல ஆயுதங்கள்லாம் போனதும், ஒரு முக்கால் மணிநேரம் கழிச்சு சிரிச்சுட்டே வெளிய வந்தார். ‘பத்த வச்சுட்டியே பரட்ட’ னு அவர வாழ்த்திட்டு எல்லாரும் வண்டிக்குள்ள ஏறினாங்க. இப்போ ஓட்டுனர் புது தெம்போட வண்டிய ஸ்டார்ட் பண்ணி கியர் போட்டார். ஒரு 150 மில்லி மீட்டர் நாங்க பயணம் பண்ணதும், மறுபடியும் வண்டி நின்னுடுச்சு. கெளம்பிப்போன மெக்கானிக்க மறுபடி இழுத்து சாக்க விரிச்சுப்போட்டு வண்டிக்கடியில தள்ளிவிட்டாங்க. இதுக்கு மேல இந்த வண்டி ஒரு அங்குலம் கூட நகராதுனு கேபின் மேட்ஸ்(;)) எல்லாம் முடிவு பண்ணி, லாரி புடிச்சாவது போய்டலாம்னு, லக்கேஜ எடுத்துட்டு மெயின் ரோட்டுக்கு வந்தோம். நல்லவேளையா நெல்லூர்ல இருந்து சென்னைக்கு போற ஒரு தமிழ்நாடு அரசுப்பேருந்து வரவும், அதுல ஏறி ஒருவழியா சென்னை போய் சேர்ந்தாச்சு. அண்ணன் வீட்டுக்கு போகும்போது மணி மதியம் 3:30!

திரும்பி ஐதராபாத் வர்றதுக்காக, ஞாயிற்றுக்கிழமை சாயங்காலமா கோயம்பேடு போயிருந்தேன். அங்கேயும் டிக்கட்டே கிடைக்கல. ஒருத்தர் வந்து ஐதராபாத்தா? கேபின் சீட் இருக்கு ஓக்கே வா? னு கேட்டார். என்ன ட்ராவல்ஸ்னு போர்ட பார்த்தா, ஷாமா சர்தார் ட்ராவல்ஸ்னு போட்டிருந்தது. ஆனா இப்போ எனக்கு அது ‘சுந்தரா ட்ராவல்ஸ்’னு தெளிவா தெரிஞ்சதால நான் சிக்கல. கூட வந்திருந்த நண்பர் ப்ரேம் ‘யோவ், ஏன்யா டிக்கட்ட வேணாங்கற’னு புரியாம கேட்டார். ‘தலைவா, இதுதான் நான் சொன்ன சுந்தரா ட்ராவல்ஸ், கம்முனு வாங்க’னு சொல்லி அப்பறம் வேற ட்ராவல்ஸ் ல டிக்கட் கிடைச்சு ஒருவழியா ஐதராபாத் திரும்பியாச்சு!

பின்குறிப்பு 1 : நாங்க ஏறின அரசுப்பேருந்து பாதி தூரம் போனதும், சாப்பிடறதுக்காக ஒரு எடத்துல ஒரு மணி நேரம் நிறுத்தினதையும், அப்போ நம்ம சுந்தரா ட்ராவல்ஸ் எங்களக்கடந்து போனதையும் நான் சொல்லாம விட்டதுக்கு சிறப்புக்காரணம் எதுவும் இல்லை :)

பின்குறிப்பு 2 : வர்ற திங்கட்கிழமையும் விடுமுறைங்கறதால, நாளைக்கு கிளம்பி திருப்பூர் போலாம்னு ஒரு எண்ணம் இருக்கு. இன்னும் டிக்கட் எதுவும் முன்பதிவு பண்ணாததால இந்த சுந்தரா ட்ராவல்ஸ் வண்டிகள நெனச்சாதான் பயமா இருக்கு :(

written by அருட்பெருங்கோ \\ tags: ,

Feb 18

“யாருன்னே தெரியல இந்த நம்பர்ல இருந்து மிஸ்டு கால் வந்துட்டே இருக்குடா”

“ஒரு ரூபா காயின்ஸ் இருக்கா?”

“இருக்கு”

“எடுத்துட்டு வா!”

***

“ஹலோ யார் பேசறது?”

“நான் பாரதியார் பேசறேன்”

“யாரு?”

“பாரதியார் தெரியாதா? சரி அங்க திருவள்ளுவர் இருக்காரா?”

“திருவள்ளுவரா?”

“திருவள்ளுவர் இல்லையா? இந்த நம்பர் கொடுத்து கால் பண்ண சொன்னதே அவர்தாங்க…”

“அப்படிலாம் யாரும் இங்க இல்ல…”

“ஹலோ ஹலோ”

கொஞ்ச நேரம் கழித்து…

“ஹலோ யாரு?”

“நான் திருவள்ளுவர் பேசறேன்”

“என்னது?”

“திருவள்ளுவர தெரியலையா? சரி விடுங்க… என்னக் கேட்டு கொஞ்ச நேரம் முன்னாடி பாரதியார் கால் பண்ணாரா?”

“ஹலோ உங்களுக்கு இப்போ என்ன வேணும்?”

“என்ன மீட் பண்ணனும்னு பாரதியார் சொன்னார். நாந்தான் உங்க நம்பர் கொடுத்தேன். மறுபடியும் கால் பண்ணாருன்னா என்ன கி.மு 23 வது வருசத்துல வந்து மீட் பண்ண சொல்றீங்களா? ஹலோ ஹலோ…”

கொஞ்ச நேரம் கழித்து…

“ஹலோ”

“நான் பாரதியார் பேசறேன்…”

“இங்க பாரதியாரும் இல்ல திருவள்ளுவரும் இல்ல போன வைக்கிறியா இல்லையா?”

“ஹலோ… ப்ளீஸ்…ப்ளீஸ்…”

(தொடரும்)

written by அருட்பெருங்கோ \\ tags:

Feb 06

‘டேய் எங்களுக்கும் தான் நாளைக்கு செம் இருக்கு. எதுக்கு இப்போ படிக்கிற மாதிரி சீன் போடற?’‘அடப்பாவிகளா… கிளாஸ் புள்ளயோட மூனு இண்டர்னல் பேப்பர் மட்டும்தாண்டா ஜெராக்ஸ் எடுத்துப் பாத்துட்டு இருக்கேன். இதுவே உங்களுக்குப் பொறுக்கலையா?’

‘புக்க பாத்து மண்ட காயற நாங்கலாம் அப்ப கேணையனுகளா?’

‘மக்கா உனக்கு நாளைக்கு மதியம் தான் எக்ஸாம். எனக்கு காலையில இருக்கு. ச்சும்மா அலப்பறையக் கொடுக்காத’

‘டேய் இவன் ஓவரா பேசறாண்டா. புடுங்குடா அந்த ஜெராக்ச’

ஜெராக்ஸ் பேப்பர்கள் பிடுங்கப்பட்டு, கிழிக்கப்பட்டு ஜன்னலில் பறக்கின்றன.

‘நிம்மதியாடா? படிக்கிறதுக்கு ஒரு மெட்டிரியலும் எங்கிட்ட இல்ல. இப்போ என்னய என்ன பண்ண சொல்றீங்க?’

‘FMல இவரு ஒருத்தர் இனிய இர்ர்ர்ர்ரவில் னு எப்ப பாத்தாலும் அடித்தொண்டையிலேயே கத்திட்டு இருக்காரு. இவருதான் இப்படினா விளம்பரம் போட்றவனுங்க தொல்ல அதுக்கு மேல. ஒரு ரவை, மைதாவுக்கு எத்தன தடவதான் போன் நம்பர் கொடுப்பானுங்களோ… ஒரு பாட்டு ஒழுங்கா போட மாட்டேன்றானுங்கனு நாங்க கடுப்புல இருக்கோம். நீ மட்டும் படிக்கிற மாதிரி சீன் போட்டுட்டு இருந்தா எரிச்சல் வராதா?’

‘சரி விடு. ஒரு ரூபா காயின் இருக்கா?’

‘ம்ம்ம்’

‘எடுத்துட்டு வா’

…..‘ஹலோ **** ரவா மைதா கம்பெனிங்களா?’

‘ஆமாங்க’

‘வணக்கமுங்க… நாங்க சின்னியம்பாளையத்துக்கு பக்கத்துல இருந்து பேசறமுங்க…நம்மூர்ல ரொம்ப வருசமா மழையே இல்லாமப் போயிருச்சுங்க’

‘சரி’

‘மழை பெய்யறதுக்காவ நம்மூரு சடங்கொன்னு பண்ணிறலாம்னு… அதாங்க கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் பண்ணலாம்னு ஊர்ல கூட்டம்போட்டு முடிவு பண்ணிருக்கோமுங்க.. மொத்தம் ஒரு முன்னூறு, நானூறு பேரு கூடுவாங்க… கல்யாணம்னு சொல்லிட்டு சாப்பாடு போடாம இருக்க முடியுமுங்களா?’

‘சரி…உங்களுக்கு என்ன வேணும்?’

‘சாப்பாடு போட்டா கட்டுபடியாகாதுன்னு அதுக்குப் பதிலா டிபன் போட்டுக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம்… ஒரு நானூறு பேருக்கு உப்புமா கிண்டனும்னா எவ்வளவு ரவை வேனுங்க?’

‘ஒரு அம்பது கிலோ ஆகுங்க…ஆர்டர் கொடுக்கனும்ங்களா?’

‘ஆமாங்க ஆர்டர் கொடுக்கனும். ஆனா அம்பது கிலோ வேணாம். ஒரு அர கிலோ இருந்தா போதும்’

‘என்னது அர கிலோவா?’

‘ஆமாங்க எங்களுக்கெல்லாம் வேற கம்பெனில வாங்கிட்டோம். ஆனா பொண்ணும், மாப்பிள்ளையும் உங்க கம்பெனி ரவைல தான் உப்புமா சாப்பிடுவோம்னு ஒரே அடம் பண்றாங்கங்க…’

‘நீங்க மொதலாளிகிட்டவே நேரா பேசிக்குங்க… ’

‘ஹலோ… ஹலோ…’

 

written by அருட்பெருங்கோ \\ tags: ,

Jan 29

கல்லூரியில ரெண்டாவது வருசம் படிக்கும்போது நடந்தது இது. எங்கள மாதிரி மொத்தம் முப்பதே பேர் இருக்கிற வகுப்புல ப்ராக்ஸி போட்றதுங்கறது கஷ்டம்தான். செமஸ்டர் ஆரம்பமா இருந்ததால எல்லாரும் புது லெக்சரருங்க. ஆளு, பேரெல்லாம் அவங்க தெரிஞ்சிக்கிற வரைக்கும், ஷிஃப்ட் வச்சு மாத்தி மாத்தி ப்ராக்ஸி போட்டு கட்டடிச்சிட்டு இருந்தோம். ஒரு நாள் இன்னொருத்தனுக்குப் பதிலா நான் ப்ராக்ஸி போட்டேன். அன்னைக்குனு பாத்து வகுப்புக்கு வந்த வாத்தி அட்டெண்டன்ச எடுத்து வச்சிட்டு (அட்டெண்டன்ஸ்ல பேரப் பாத்துதான் கூப்பிடனுமா? அப்படியே உட்காந்திருக்கவங்களப் பாத்து கூப்பிட்டா என்னவாம்?) ஏதோ ஒரு பேரக் கூப்பிட்டு கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டார். கொஞ்ச நேரத்துல நான் ப்ராக்சி போட்ட பையனோட பேர அவர் கூப்பிட்டதும் எனக்கு என்னப் பண்றதுன்னு தெரியல. அவனுக்கு அட்டெண்டன்ஸ் போச்சுன்னா அப்பறம் அடுத்த நாள் எனக்கு ப்ராக்சி போட மாட்டானேன்னு அவன் பேர கூப்பிட்டதும் நான் எந்திரிச்சுட்டேன். ஏதோ கேள்வி கேட்டார். யோசிக்கிற மாதிரி நடிக்கிறது, நெத்திய சுருக்குறது, கேள்வியையே இன்னொருதடவ சொல்றது, அரைகுறையா எதையாவது உளறுறது இதெல்லாம் முதல்வருசமே முயற்சி செஞ்சு பல்பு வாங்கிட்டதால, கேள்விய அவர் முடிக்கிறதுக்கு முன்னாடியே ‘நோ ஐடியா’னு சொல்லிட்டேன். என்னை அப்படியே நிக்க சொல்லிட்டு, அடுத்த பேர கூப்பிட அட்டெண்டன்ஸ் எடுத்தவர் சொல்லி வச்ச மாதிரி என்னோட பெயரையேக் கூப்பிட்டதும் வகுப்புல எல்லாப் பயலுகளும் சிரிக்க ஆரம்பிச்சுட்டானுங்க. அவரு கடுப்பாகி திரும்பவும் என் பேர சத்தமா சொல்லி ‘கெட் அப்’ அப்படிங்கறார். “நான் நிக்கறேன்! நான் நிக்கறேன்!” னு பார்த்திபன்கிட்ட நம்ம கஜேந்திரன் சொன்ன மாதிரி சொல்லவா முடியும்? நாந்தான் இன்னொருத்தன் பேர்ல நின்னுகிட்டு இருக்கேனே!!! என் பேர்ல வேற எவனாவது எந்திரிச்சு என்னக் காப்பாத்துவான்னு பாத்தா எல்லாப் பயலுகளும் வடிவேலு காமெடியப் பாக்கற மாதிரி சிரிச்சுக்கிட்டே இருக்கானுங்க. அவரு கடுப்பாகி ‘வேர் இஸ் ஹி?’ னு கத்தறார். ‘ஹி இஸ் ஆப்செண்ட்’ னு ( அதாவது நான் இன்னைக்கு ஆப்செண்ட்னு ) நானே சொல்லித் தொலைக்கிறேன். ‘தென் ஹு கேவ் அட்டெண்டன்ஸ் ஃபார் ஹிம்?’ னு முறைக்கிறார். அதுக்காவது எவனாவது கையத் தூக்குவான்னுப் பாத்தா அதுக்கும் ஒரு பயலும் கையத் தூக்கல. பாவிகளானு திட்டிகிட்டே அதுக்கும் நானே கையத் தூக்கறேன். அவரு கடுப்பாகி என்ன வெளியப் போக சொல்லிட்டு ஒரு வார்த்த சொன்னார் பாருங்க எனக்கு சிரிப்ப அடக்கவே முடியல. என்ன சொன்னாரா? “யு க்காண்ட்ட் ச்சீட் மீ” னு தான்!

*கடைசி செமஸ்டர் முழுக்க ப்ராஜக்ட் வேலைதான். அதனால கிளாஸ் எதுவும் நடக்காது. தினமும் காலைலயும் சாயங்காலமும், போய் டிப்பார்மெண்ட் ஆஃபிஸ்ல ஒரு ரெஜிஸ்டர்ல கையெழுத்துப் போட்டுட்டு வந்தாப் போதும். கிளாஸ் இருந்த செமஸ்டர்லயே காலேஜ்க்கு போகாம அட்டெண்டன்ஸ் லேக் ஆகி நம்ம வீட்டுக்கு லெட்டர் போகும். கிளாசே இல்லனா கையெழுத்துப் போடறதுக்கு மட்டும் காலேஜ் போக முடியுமா? நம்மப் பசங்களயே கையெழுத்துப் போட சொல்லிட்டு எஸ்கேப் ஆகிட்டு இருந்தேன். ஒருத்தன்கிட்ட சொல்லி அவன் போகலேன்னா மிஸ் ஆகிடுமேன்னு என் செட்டுப் பசங்க எல்லார்கிட்டவும் சொல்லியிருந்தேன். அப்படியும் மிஸ் ஆச்சுன்னா தினமும் பொறுப்பா போற தங்கச்சி ஒருத்திகிட்டவும் சொல்லி வச்சிருந்தேன். இப்படி எல்லாம் சுமூகமாப் போயிட்டு இருந்தப்ப நான் காசாளரா இருந்த அசோஷியனோட பொறுப்பாசிரியர் என்ன வந்து பாக்க சொல்லி பசங்ககிட்ட சொல்லியிருக்கார். அவரும் எங்க டிப்பார்ட்மெண்டுதான். நான் கொஞ்சம் சினிமா, ஊர் சுத்துறதுனு பிசியா இருந்ததாலப் போய் பாக்கவே முடியலங்க :( நான் வர்றேனா இல்லையானு பாக்க ரெஜிஸ்டர எடுத்துப் பாத்திருக்கார், எல்லா நாளும் என் கையெழுத்து இருந்திருக்கு. என்னடா இவன் தினமும் வர்றான் ஆனா நம்மளப் பாக்க மாட்டேங்கறானேன்னு கடுப்பாக ஆரம்பிச்சுட்டார். இது கொஞ்ச நாள் நடந்திருக்கு. அப்புறம் அவருக்கு சந்தேகமாகி ரெஜிஸ்டர எடுத்து ஆஃபிசுக்கு உள்ள வச்சிட்டார். ஒருத்தன் ஒரு கையெழுத்துதான் போடறானான்னு ஒரு ஆஃபிஸ் அசிஸ்டெண்ட் பொண்ண வச்சு கண்காணிக்க ஆரம்பிச்சுட்டார். நம்மப் பசங்க கில்லாடியாச்சே. அந்தப் பொண்ணு அசரற நேரம் பார்த்து கையெழுத்தப் போட்டுடுவானுங்க. அவருக்கு தினமும் டென்சன் ஏறிக்கிட்டேப் போயிருக்கு. அப்போ நான் ஊர்ல இல்ல. அவரு கிளாஸ் ரெப்புகிட்ட கூப்பிட்டு இத சொல்லியிருக்கார். அவனும் யாரும் ப்ராக்ஸி சைன் போடவேணாம்னு எல்லார்கிட்டவும் சொல்லியிருக்கான். பிரச்சினை பெருசாகவும் யாரையும் கையெழுத்துப் போட வேணாம்னு நானும் தனித்தனியா கால் பண்ணி சொல்லிட்டு ஒரு வாரம் கழிச்சு அவரப் பாக்கறதுக்காக காலேஜ் பக்கம் போனேன், உள்ள இருந்து ஒருத்தன் வந்தான், அவனும் என்ன மாதிரி ஒரு பத்து நாளைக்கு மேல ஊருக்குப் போயிட்டு அன்னைக்குதான் வந்திருந்தான். ‘என்ன மச்சான் உனக்கு ரெண்டு வாரமா யாரும் சைன் போடாம இருந்திருக்கானுங்க… இப்போதான் உனக்கும் நானே போட்டுட்டு வர்றேன்’ னு சொன்னதும் எனக்கு அவனக் கொலையே பண்ணலாம் போல இருந்துச்சு. அதுக்கப்புறம் “நான் அவன் இல்லை” மாதிரி “தினமும் நாந்தான் கையெழுத்துப் போட்டேன்”னு திரும்ப திரும்ப சொல்லியேதான் எஸ்கேப்பாக முடிஞ்சது.

*

இது ஒருத்தனுக்கு உதவலாம்னு போய் நான் சிக்கினது. ஆறாவது செமஸ்டர்ல communication skills னு ஒரு பேப்பர் இருக்கும். இங்கிலீஸ் மாதிரிதான். அது நமக்குக் கொஞ்சம் சுமாரா வரும்ங்கறதால முதல் ரெண்டு இண்டர்னல்லயும் நல்ல மார்க் இருந்துச்சு. மூணாவது இண்டர்னல் எழுத வேணாம்னு இருந்தேன். எப்படி இருந்தாலும் பெஸ்ட் ரெண்டுதான் எடுத்துப்பாங்க. இன்னொருத்தன் முதல் ரெண்டுலயும் ஃபெயில் ஆகியிருந்ததால மூணாவத அவனுக்குப் பதிலா எழுத சொன்னான். ரெண்டு பேரும் மாத்தி எழுதினோம். இன்னொரு பேப்பர் இதே மாதிரி வேற ஒருத்தன மாத்தி எழுத சொல்லியிருந்தான். ஆனா அந்த லெக்சரர் அத க்ளாஸ்லயே கண்டு பிடிச்சுட்டார். மாத்தி எழுதினவன் அந்த விசயத்தப் போய் communication skills எடுத்த மேடம்கிட்டவும் பொலம்பியிருக்கான். யாருக்குப் பதிலா எழுதின? ன்னு அவங்க கேட்க எழுத சொன்னவன் பேர இவன் சொல்ல…. Communication skills ல அவன் பேருக்கு நேரா மார்க்கப் பாத்திருக்காங்க. முப்பதுக்கு – 13, 12, 25 னு இருந்த்திருக்கு. அப்படியே மேலப் போனா 27, 29, 11 னு ஒரு மார்க் வந்திருக்கு – அதுக்கு நேரா என்னோட பேரு :) இந்தப் பையன வந்து என்ன பாக்க சொல்லுனு சொல்லியனுப்பியிருக்காங்க. வழக்கம்போல நான் பிஸியா இருந்ததால போகவே முடியல. ஃபைனல் எக்சாம் எழுதும்போது, முடிச்சிட்டு வந்து அவங்களப் பாக்கலன்னா பேப்பர் திருத்தமாட்டாங்கன்னு சொல்லியனுப்பினதால போய் அவங்களப் பாத்தேன். எதுவும் தெரியாத மாதிரி என்னப்பா மூனாவது இண்டர்னல்ல மார்க் கொறஞ்சிருக்குனு கேட்டாங்க. எனக்கு ஏற்கனவே நல்ல மார்க் இருந்ததால நான் மூனாவது இண்டர்னல் எழுத வேணாம்னுதான் இருந்தேன், அட்டெண்டன்ஸ் லேக் ஆகியிருந்ததால அட்டெண்டன்ஸ்க்காகதான் வந்தேன். படிக்கல! அப்படி னு ஏதோ சமாளிச்சேன். இந்த பையன் என்ன 13, 12, வாங்கிட்டு இருந்தவன் மூனாவது இண்டர்னல்ல 25 வாங்கியிருக்கான்? அப்படினு கேட்கவும் , ஏற்கனவே ஃபெயிலாகிட்டதால நல்லாப் படிச்சிருப்பான் மேடம்னு சொல்லி வச்சேன். திருத்தினப் பேப்பர் எல்லாம் ஏற்கனவே எங்க கைக்கு வந்திட்டதால அந்தம்மா அதுக்கு மேல எதுவும் கேட்க முடியாம அனுப்பிட்டாங்க.ஆனாலும் அந்த செம் ரிசல்ட் வர்ற வரைக்கும் கொஞ்சம் பதட்டமாதான் இருந்தது.

 

*இன்னொரு செமஸ்டர்ல ஒரு லெக்சரர் கிட்ட மாட்டினது இது எல்லாத்த விடவும் பெரிய காமெடி. Fluid mechanics class ங்க அது. கால்குலேட்டர் இல்லாம அந்த க்ளாஸ்க்கு வரக்கூடாதுனு நான் போகாத என்னைக்கோ அந்த லெக்சரர் சொல்லியிருக்கார். 8:30 மணி காலேஜ்க்கு 8:20 க்கே எந்திரிச்சு ஒரு கையால ப்ரஷ் பண்ணிகிட்டே இன்னொரு கையால மூஞ்சியக் கழுவிட்டு, டிபன் சாப்பிடக்கூட நேரம் இல்லாம பேக்கரியில ஒரு டீயக் குடிச்சுட்டு ஓடி வர்ற அவசரத்துல டைம் டேபிள் எல்லாம் பாத்து கால்குலேட்டர் தூக்கிட்டு வர்றதுக்கு எவனுக்குதாங்க நேரம் இருக்கும்? (அப்பாடா எம்மேல தப்பே இல்லனு சொல்லியாச்சு). அன்னைக்கு கால்குலேட்டர் இல்லாமப் போய் உட்காந்துட்டேன். அட்டெண்டன்ஸ் எடுத்து முடிச்சதும் ஒரு நாலு பேர வெளிய அனுப்பலன்னா அவருக்கு தூக்கமே வராது. யாரெல்லாம் கால்குலேட்டர் கொண்டுவரலன்னு கேட்டதும் இன்னைக்கு நமக்கு அட்டெண்டன்ஸ் காலியாகப் போகுதுனு தோணுச்சு. கிளாஸ்ல இந்த மாதிரி கேள்வி கேட்டதும் நம்மப் பயலுகளோட ரியாக்ஷன பாத்திருக்கீங்களா? முன்னாடி பெஞ்சுல இருக்கவன் பின்னாடி திரும்பிப் பாப்பான். பின்னாடி இருக்கவன் பக்கத்துல இருக்கவனப் பாப்பான். ரொம்ப நல்லப் பையனா இருக்கிற ஒருத்தன் மெதுவா எந்திரிப்பான், அப்படியே ஸ்லோ மோஷன்ல அங்க இங்க னு கொஞ்சம் பேரு எந்திரிப்பாங்க. ( வேற மாதிரி நடக்கிறதும் உண்டு! ஒரு தடவ எங்க கிளாஸ்ல ஒருத்தன் தூங்கிட்டு இருக்கிறத ஒரு லெக்சரர் பாத்துட்டார். கடுப்புல, ‘ஹௌ டேர் யூ ஸ்லீப் இன் மை க்ளாஸ்’ னு கொஞ்சம் சத்தமாவே கத்திடவும், தூங்கிட்டு இருந்த ஒரு அஞ்சாறு பேரு படக்குனு எந்திரிச்சு நிக்கவும் அவரே சிரிச்சுட்டார் :) ) அன்னைக்கும் ஒரு அஞ்சாறு பேரு எந்திரிச்சாங்க. அவருக்குத் தேவையான கவுண்ட் கெடச்சிடுச்சுனு நான் எந்திரிக்காம உட்காந்தே இருந்தேன். அவங்கள வெளிய அனுப்பிட்டு கொஞ்சம் கணக்குகளக் கொடுத்து சால்வ் பண்ண சொன்னார். அப்பாடா இன்னைக்குத் தப்பிச்சோம்னு நெனச்சா, அவரு கிளாசையே சுத்தி சுத்தி வர ஆரம்பிச்சுட்டார். ஆகா, சனியன் சைட்டடிக்க ஆரம்பிச்சுடுச்சேனு ஒரு பதட்டம் வந்துடுச்சு. முன்னாடி இருந்த ரெண்டு பேர்கிட்ட கால்குலேட்டரோட கவர மட்டும் வாங்கி, அத ஒன்னு மேல ஒன்னு கவுத்து பாக்கறதுக்கு ஒரு கால் குலேட்டர் மாதிரி தெரியறாப்ல டேபிள் மேல வச்சிட்டு கணக்குப் போடற மாதிரி ஆக்ட் கொடுக்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் ஓவர் ஆக்ட்டா போயிடுச்சு போல. சுத்திகிட்டே இருந்தவர், கணக்கா என் பக்கத்துல வந்து நின்னுகிட்டு நான் கணக்குப் போடற அழகையேப் பாத்துகிட்டு இருந்தார். இந்த பரிட்சை எழுதும்போது கொடுமையான விசயம் என்னத் தெரியுங்களா? எந்த கேள்விக்கும் பதில் தெரியாமப் போறது கிடையாது. ஒன்னுமேத் தெரியாம நாம முழிச்சிட்டு இருக்கும்போது இந்த வாத்திங்க வந்து நம்ம பக்கத்துலயே நின்னுக்குவாங்க பாருங்க. செம கடுப்பா இருக்கும். எக்ஸாம் ஹாலா இருந்தாக்கூட அந்த மாதிரி சமயத்துல நான் தண்ணி குடிக்க எந்திரிச்சுப் போயிடுவேன். வெறும் பேப்பரப் பாத்துட்டு அவரே வெறுத்துப் போய் நகந்துடுவார், ஆனா இங்க ஒன்னும் பண்ண முடியல. எவ்வளவு நேரம் தான் நானும் சிந்திக்கிற மாதிரியே நடிக்கிறது? ‘நெக்ஸ்ட் வேல்யூ கால்குலேட் பண்ணுப்பா’னு அவர் கால்குலேட்டரத் திறக்க, “நாங்க கால்குலேட்டர் இல்ல… கால்குலேட்டர் மாதிரி!”ன்னு அந்த மூடிங்க ரெண்டும் கிகிகி னு சிரிக்கவும், ரெண்டு மூடியையும் தூக்கிகிட்டு கிளாஸ் முன்னாடிப் போய், ‘வீ ஹேவ் அ சயிண்ட்டிஸ்ட் ஹியர்’ அப்படினு ஆரம்பிச்சார். ஆகா நம்மப் பெருமை இன்னைக்கு காலேஜ் முழுக்கப் பரவப் போகுதுன்னு அந்த லெக்சர கேட்க ஆரம்பிச்சேன். முடிச்சதும், அடுத்த அஞ்சு நாளும் நான் அவர் கிளாசுக்கு வந்தாலும் ஆப்செண்ட் தான் போடுவேன்னும், அட்டெண்டன்ஸ் இல்லையேன்னு வராமப் போனா அடுத்த அஞ்சு நாளைக்கும் ஆப்செண்ட் தான் போடுவேன்னு சொல்லி ஒரு அப்பாலஜி லெட்டர் எழுதிக் கொடுக்க சொன்னார். நானும் ரொம்ப பாலிஷா ‘I am sorry for having misbehaved in the class. I assure you that this will not repeat again’ அப்படின்னு எழுதிக் கொடுத்தா, இதெல்லாம் செல்லாது செல்லாது னு சொல்லி ‘I have tried to cheat the lecturer by making two calculator covers look like a calculator….blah..blah…’ னு இந்த பதிவு நீளத்துக்கு ஒரு கடிதம் அவரே எழுதி எங்கிட்ட கையெழுத்து மட்டும் வாங்கிகிட்டு அனுப்பிட்டார். ஒரு சின்ன கால்குலேட்டருக்காக இத்தன ரணகளமா?



மீதியெல்லாம் வேறொரு நாளில்…அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

 

written by அருட்பெருங்கோ \\ tags: