வலைப்பதிவுல எழுதறதெல்லாம் நெனச்சத அப்படியே எழுதினதா என்ன? இல்லல்ல? வடிகட்டி , அடிச்சுத் திருத்திதான எழுதிகிட்டிருக்கோம். நெனைக்கிறத அப்படியே எழுதினா எப்படி இருக்கும்? ரொம்ப கேவலமா இருக்கும்! என்னமோ மறந்துட்ட மாதிரி இருக்கே. இன்னைக்கு வெள்ளிக்கிழமை. ஷூ போட வேண்டியதில்ல. பர்ஸ், மொபைல், ஐடிகார்ட் எல்லாம் இருக்கு கெளம்புவோம். போக போக யோசிப்போம். இன்னைக்கு அந்தமாதிரி ஒன்னு எழுதி இந்த ப்ரூஃப் ரீடிங்க் வெங்காயமெல்லாம் பண்ணாம அப்படியே போட்டு பாப்போம்.வர வர என்ன எழுதறதுன்னு தெரியாம என்னத்தையோ எழுதிகிட்டு இருக்கிறதுக்கு நெனச்சதையே எழுதுறது நல்லதுதான். நெனச்சதையோ எழுதறதுனு முடிவு பண்ணிக்கிட்டா என்னெல்லாம் எழுதலாம்னு யோசிச்சு அத மட்டுமே மனசு நெனைக்க ஆரம்பிச்சுட்டா என்னப்பண்றது? ரொம்ப கொழம்பிட்டேன்னு நெனைக்கிறேன். மொதல்ல ஆட்டோ வருதான்னுப் பாப்போம். நெனைக்கறத எல்லாம் ஆட்டோவுல வச்சுக்குவோம். வெயில் ஆரம்பிச்சிடுச்சா? என்ன ஊரோ இது. குளிருன்னா ரொம்ப குளிருது. வெயிலடிச்சா இப்படி கொளுத்துது.ஹும் இன்னைக்கும் முன்னாடிதான் உட்காரனுமா? சரி நம்ம சைசுக்கு முன்னாடியே வசதியா உக்காந்துக்கலாம்தான். ம்ம்ம் இப்போலருந்து ‘நெனைக்க’ ஆரம்பிப்போம். பதிவுல எழுதனுமே. ச்சே என்னதான் அப்படி குசுகுசுன்னு பேசிகிட்டே இருப்பாங்களோ! இந்த தெலுங்குப் பொண்ணுங்க என்ன பேசினாலும் ரொமாண்டிக்கா வேற இருக்கு. குரல் காரணமா இல்ல தெலுங்கே இப்படிதானா. எல்லாப் பொண்ணுங்களுமே இப்படிதான் பேசறாங்க. ஒருவேளை நமக்குதான் வயசுக்கோளாறோ? செல்லம் நீ யூத்து இல்ல. வயசாகிடுச்சு. அத மொதல்லப் புரிஞ்சிக்கோ. சரி அப்போ தெலுங்கே இப்படித்தான்னு வச்சுக்குவோம்.சுந்தரத்தெலுங்குனு சும்மாவா சொன்னான்? ம்ம்ம் கண்ணாடில பாத்தா ஒருத்திதான் தெரியறா. ம்ம்ம் நல்லாதான் இருக்கா. டேய் இதையெல்லாம்கூட பதிவுல எழுதப்போறியா? என்ன பாத்ரூம்லையா எட்டிப் பாத்தோம்? சைட்டடிக்கிறது ஒரு தப்பா? நம்மள ‘நெனைக்க’ விடாம எடஞ்சல் பண்ணது இவங்க சத்தம்தான். ஹும் சரி நாம மறுபடி உருப்படியா எதாவது ‘நெனைக்க’ ஆரம்பிப்போம்.பதிவுல எழுதனுமே! போட்டான்யா சடன் ப்ரேக்கு. ஏற்கனவே எலும்புல தோலப்போத்திகிட்டு சுத்திகிட்டு இருக்கோம். இப்படியெல்லாம் வண்டியோட்டினா இருக்குற எலும்பும் தேஞ்சுதான் போகும். எலும்பு மஜ்ஜைதானம்னு பதிவுல யாரோ எழுதிருந்தாங்க. அப்பறம் அதுமாதிரி எலும்புதானம் தான் வாங்கனும்! ஆகா நம்ம பாட்ட போட்டுட்டானா. நாம எதாவது நெனைக்கலாம்னாதான் பாட்ட போட்டு நெனைக்கவுடாம பண்றானுங்க. சரிவிடு பாவனா செல்லம் கண்ணு முன்னாடி தெரியுதில்ல அப்பறமென்ன? ம்ம்ம் நல்லாதான் இருந்தா ஆனா கொஞ்சம் குண்டா இருந்தானு சத்தி சொன்னான். நமக்கு ஒல்லியாதான் தெரிஞ்சா. பாவிங்க அநியாயமா பாதியிலேயே கொன்னுட்டானுங்க. தெலுங்கு படத்துலையும் வர வர சோகமா முடிக்க ஆரம்பிச்சுட்டானுங்க. ரெண்டாவது தடவை பாக்கப்போனா பாவனா சாகறதுக்கு முன்னாடி வந்துடனும். இந்த வாரம் போலாமா. ஆகா போஸ்டர் மாறியிருக்கே. அதுக்குள்ள தூக்கிட்டானுங்களா?இந்த பாட்டுக்கு தமிழ் வரி எழுதினா நல்லாதான் இருக்கும். செப்பாலனுந்தி சின்ன மாட்டைனா… ஆகநந்தி தாகநந்தி லோலோனா… இதுக்கு என்னத்த எழுதறது? தன்னான தன்ன்ன்ன தன்ன தானேனா தான னன்ன னான னன்ன னானானா… பெரிய இசை வித்துவான்…பாடிப்பாக்கறாரு நாம பாடும்போது எவ்ளோ நாராசமா இருக்கும்னு தெரியுமில்ல அப்பறம் எதுக்கு? மனசுக்குள்ளதான பாட்றோம். மனசுக்குள்ள பாடும்போது எல்லாரும் எஸ்பிபிதான். பாட்டக் கேளு பாட்டக்கேளு…கிள்ளாமல் கிள்ளும் பார்வைபார்த்தாலே வண்ணமின்னல் கொண்டகண்ணில் விழுவேனா… ஆபிஸ்ல போய் முழுபாட்டையும் கேட்டுட்டு எழுதுவோம். இதுக்காடா சம்பளம் கொடுக்கறானுங்க? எங்க கொடுக்கறானுங்க? பாதி பேங்க் லோனுக்கே போயிடுது. ஆகா பாட்ட வுட்டாச்சே. ஆட்டோவுல கேட்டுட்டே எழுதறதுக்கு நாம என்ன வாலியா பக்கெட்டா? கருமம்புடிச்சவனே உருப்படியா எதாவது நெனைடா! பதிவுல எழுதனும்ல? இந்தப் பொண்ணு எதுக்கு கண்ணாடில நம்மளயே பாக்கறா? இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா! அநேகமா நெனைக்கறோம்னு நெனச்சிக்கிட்டு தானா பேச ஆரம்பிச்சுட்டோம்னு நெனைக்கிறேன்? ம்ம்ம் ம்ம்ம் ஒன்னும் ஆகல. முடி நெறைய வளந்துடுச்சோ? இந்த வாரம் வெட்டனும். ஆபிஸ் சலூன்லயே இருவத்தஞ்சு ரூபாய்க்கு பூ மாதிரி வெட்டிவிட்றாங்கனு சத்தி சொன்னான். பூவதான் பூ மாதிரி வெட்ட முடியும். முடிய எப்படி பூ மாதிரி வெட்டுவாங்க? நம்ம முடி என்ன பூ மாதிரியா இருக்கு? மயிர் மாதிரி இருக்கு. லூசு! முடியும் மயிரும் ஒன்னுதாண்டா. முடினும் சொல்லலாம். மயிரும்னும் சொல்லலாம். நீங்க சொன்ன மாதிரியும் சொல்லலாம்ணே. இப்ப எதுக்கு செந்தில் வசனமெல்லாம்? வள்ளுவரே மயிர்னு சொல்லிருக்கார்ல கற்றது தமிழ்ல கூட வருமே. அந்த ஹீரோயின் கூட நல்லாதான் இருந்தா. நெசமாதான்
சொல்றியா? நெசமாதான் சொல்றேன். அடுத்த படத்துலயே ஜீன்ஸ்ல வந்தான்னா வேற ஹீரோயின்னு நெனச்சுதான் பாக்கப் போற அப்பறமென்ன? இந்த சத்தியெல்லாம் எப்படிதான் ஞாபகம் வச்சிக்கிறானோ. நமக்கு மட்டும் ஒரே பொண்ண வேற ட்ரஸ்ல பாத்தா அடையாளம் தெரிய மாட்டேங்குது. இந்த வீக்னஸ் எல்லாம் இப்போ ரொம்ப முக்கியமா? உருப்படியா எதாவது நெனைடா! பதிவுல எழுதனும்ல? நான் நெனைக்க மாட்டேன்னா சொல்றேன். இந்த மனசு ஒன்னும் நெனைக்க மாட்டேங்குது. இன்னைக்கு புதன் கிழமை கூட இல்லியே எதுக்கு இப்படி பொலம்பறோம்? இந்த நெனைக்கிறத எழுதறது எல்லாம் நமக்கு ஒத்து வராது. கம்முனு எதாவது கவுஜை யோசிப்போம். அட இந்த பொண்ணு மறுபடியும் என்னையே பாக்கறா. ம்ஹும்… இது என்னவோ முள்ள போய் கால்ல ஏத்திகிட்டு ‘முள்ளு குத்திடுச்சு’னு சொல்ற மாதிரி தான் இருக்கு. சரி கவுஜயாவது யோசி. வழக்கம்போல கண்ணுல இருந்தே ஆரம்பிப்போம். ஏன் கால்ல இருந்து ஆரம்பிச்சா கவுஜ வராதா? என் கண்கள், உன் கண்களின் அடிமையா என்ன? உனது பார்வைகளையும் சேர்த்து சுமக்கிறதே. அப்பறம் ஆச்சர்யக்குறி! கவித கவித, சைட்டடிக்கிறேங்கறத எப்படியெல்லாம் சொல்ற. இப்படியே எழுதிகிட்டிருந்தா அய்யனாரோ ஆசிப்போ ஒருநாள் தேடிவந்து கும்மப் போறாங்க. அது மட்டும் நிச்சயம். டேய் உருப்படியா எதாவது நெனைடா! பதிவுல எழுதனும்ல… ஆபிசே வந்தாச்சு இனிமே உருப்படியா நெனச்சு ஒன்னும் பண்ணப் போறதில்ல. இன்னைக்கும் கொஞ்சம் இண்டர்வியூ கூட்டம் வந்திருக்கு போல. ம்ம்ம் எல் கே ஜி சேர்றதுக்கு ஜனனியே ரெண்டு ஸ்கூல்ல இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டா. வாழ்க்கைல நாமளே இதுவரைக்கும் ஒரே ஒரு இண்டர்வியூதான் அட்டெண்ட் பண்ணிருக்கோம். என்ன கொடும சார் இது. நாம வேல தேடும்போதுதானா டாலர் மதிப்பு தகிடுதத்தம் போடனும்? ஒருத்தனும் கால் பண்ண மாட்டேங்கறான். முன்னவாது we will get back to you னு சொல்லுவானுங்க. இப்ப அதகூட சொல்றதில்ல. இட்லி? ஜூசே போதும். மொசம்பி சனியன் சாத்துக்குடின்னு வந்து தொலைய மாட்டேங்குது. ஒரு சாத்துக்குடி ஜூசக் குடிச்சுட்டுப் போய் நெனச்சத எல்லாம் பதிவெழுதலாம். என்னத்த நெனச்சோம். பதிவுல எழுதற மாதிரி உருப்படியா ஒன்னுமே நெனைக்கல. என்ன தலைப்பு வைக்கிறது? ‘தொடர்பயணத்தின் தொடர்பறுந்த குறிப்புகள் தொடர்பான பிரதி’ னு வைக்கலாமா? தலைப்ப பாத்ததும் தெறிச்சு ஓடிடுவாங்க. அய்யனார் ஜ்யோவ்ராம் சுந்தர் சுகுணா திவாகர் மாதிரி நாலு பேரு படிச்சாதான் உண்டு. இப்படியொரு மொக்கைப் பதிவ எழுதிட்டு எதாவது மொக்கத்தலைப்ப வைப்போம். அதுக்கப்புறம் படிக்கிறவங்க பாடு. நாளைக்காவது உருப்படியா எதாவது நெனைடா. வலைப்பதிவுல எழுதனும்ல!

அண்மைக்காலமாக
எனக்குள்ளும் புதிய மாற்றங்கள்
தென்படத் துவங்கியிருக்கின்றன.
என்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றுவது எனக்கேத் தெரிகிறது.
இராத்திரியின் நீளம் விளங்குகிறது.
நானும் கவுஜை ஜொள்ளுகிறேன்.
என் பிம்பம் விழுந்தே கண்ணாடிகள் உடைகின்றன.
கண்களிரண்டும் ஒளிகொள்வதாக நண்பன் சொல்கிறான்.
தலையணை நனைக்கிறேன்.
மூன்று முறை பல்துலக்குகிறேன்.
காத்திருக்கும்போது நிமிடங்கள் வருடங்களாகின்றன.
வந்துவிட்டால் வருடங்கள் நிமிடங்களாகின்றன.
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
தொண்டைக்கும் தலைக்கும்
உருவமில்லா உருண்டையொன்று உருளுகிறது.
உண்மையாகவே இருதயம் அடிக்கடி இடம்மாறித் துடிக்கிறது.
நிசப்த அலைவரிசைகளில்
எனது குரல் மட்டும் ஒலிபரப்பாகிறது மிக மிக சத்தமாக.
எனது நரம்பே நாணேற்றி எனக்குள் அம்புவிடுகிறது.
புதிய ஹார்மோன்கள் நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கின்றன.
எனினும் உதடுகள் மட்டும் சகாராவாகிறது.
வாழ்ந்துகொண்டே சாகவும் முடிகிறது.
செத்துக்கொண்டே வாழவும் முடிகிறது.
ஆம். நானும் காதலிக்கத் துவங்கியிருக்கிறேன்,
கண்ணாடிக் கோப்பையில் நிறைந்து கொண்டிருக்கும் இந்த மதுவை.
சியர்ஸ் :)

(கொலைவெறியோடு முறைக்காமல் இந்த மொக்கையையும் பார்த்துவிடுங்கள் ;-) )

மொக்கைப் போட தீவிரமாக சிந்திக்க வேண்டுமென்பதால் என்னால் மொக்கை போட முடியாதெனத் தெரிந்தும் என்னை ஒரு மொக்கைப் பதிவு எழுத அழைத்திருக்கிறார் பிரேம்குமார். புதிதாக எதுவும் யோசிக்க நேரம் இல்லாததால் பொங்கல் விடுமுறையில் என் அக்காவின் மூன்று வயது மகளுக்கு சொன்ன கதையை அவள் பேச்சோடு சேர்த்து அப்படியே இங்கே.மாமா ஒரு கத சொல்லு மாமா

உனக்கு தான் எல்லாக் கதையும் தெரியும்னு அம்மா சொல்றாங்களே.

ஐயோ கத சொன்னாதான் நான் தூங்குவேன். நீ சொல்லு மாமா.

சரி என்ன கதை சொல்லட்டும்?

முட்டக் கத சொல்லு மாமா.

முட்டக் கதையா? சரி சொல்றேன். ஒரு ஊர்ல ஒரு பாட்டியும் பேரனும் இருந்தாங்களாம். பேரன் வேலை தேடி பட்டணத்துக்குப் போறதுக்காக பாட்டிகிட்ட காசு கேட்டானாம். பாட்டிகிட்ட காசே இல்லையாம். அதனால பாட்டி ஒரு வட்டிக்கடக்காரன்கிட்ட ஆயிரம் ரூபா கடன் வாங்கி பேரனுக்குக் கொடுத்தாங்களாம். பட்டணத்துக்குப் போன பேரன் ரொம்ப நாளாகியும் திரும்ப வரவேயில்லையாம். காசத் திருப்பிக் கொடுக்கலன்னு வட்டிக்கடக்காரன் வந்து பாட்டிகிட்ட கேட்டானாம். பேரம் திரும்பி வந்ததும் தர்றேன்னு பாட்டி சொன்னாங்களாம்; ஆனா வட்டிக் கடக்காரான் அதுக்கு ஒத்துக்கலையாம். சீக்கிரமா பணத்த திருப்பித் தரணும்னு சொல்லி மெரட்டிட்டுப் போயிட்டானாம்.

அப்புறம் ஒரு நாளு பாட்டி, கடைல முட்ட வாங்கிட்டு வந்து அஞ்சு முட்டைல நால ஒடச்சிட்டு அஞ்சாவது முட்டைய ஒடைக்கும்போது ஒரு அழுக சத்தம் கேட்டுச்சாம். என்னான்னு பாத்தா கைல இருந்த முட்டதான் அழுதுச்சாம். “பாட்டி பாட்டி என்ன ஒடைக்காத. நான் உன் கூடவே இருக்கேன். உனக்கு எல்லா உதவியும் பண்றேன்” அப்படினு சொன்னுச்சாம். பாட்டியும் பாவம்னு அந்த முட்டைய மட்டும் ஒடைக்காம விட்டுடுச்சாம். அன்னைக்கும் அந்த வட்டிக் கடக்காரன் வந்தானாம். பாட்டிகிட்ட காசு கேட்டு மெரட்டவும், பேரன் வந்ததும் கொடுத்துட்றேன்னு பாட்டி சொன்னாங்களாம். வட்டிக்கடக்காரனுக்குக் கோபம் வந்து பாட்டிய அடிச்சுட்டுப் போயிட்டானாம். பாட்டி அழுதுட்டே இருந்தாங்களாம். முட்ட வந்து பாட்டிகிட்ட “ஏன் பாட்டி அழறீங்க”னு கேட்டுச்சாம். இந்த மாதிரி வட்டிக்கடக்காரன்கிட்ட கடன் வாங்கி பேரனுக்குக் கொடுத்தேன். பேரன் இன்னும் வரவேயில்ல. வட்டிக்கடக்காரன் காசு கேட்டு என்ன அடிச்சுட்டுப் போறான்னு சொல்லி அழுதாங்களாம். “நீங்க அழாதீங்க பாட்டி நான் போய் வட்டிக்கடக்காரன என்னானு கேட்டுட்டு வர்றே”ன்னு சொல்லிட்டு முட்ட கெளம்பிடுச்சாம் வட்டிக்கடக்காரன் வீட்டுக்கு.

முட்ட போயிகிட்டு இருந்த வழியில ஒரு சிங்கம் வந்துச்சாம்.
“முட்டண்ணே முட்டண்ணே எங்கப் போறீங்க”னு கேட்டுச்சாம்.
“காசு கொடுக்க சொல்லி என்னோட பாட்டிய அந்த வட்டிக்கடக்காரன் அடிச்சு மெரட்றான். அவனுக்கு ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கப் போயிகிட்டு இருக்கேன்”னு முட்ட சொல்லுச்சாம்.
“நானும் உன் கூட வரட்டுமா”னு சிங்கம் கேட்டுச்சாம்.
“சரி எம்பின்னாடி வா”னு சொல்லிட்டு முட்ட நடக்க ஆரம்பிச்சுச்சாம்.

கொஞ்ச தூரம் போனதும் ஒரு யானை வந்துச்சாம்.
“முட்டண்ணே முட்டண்ணே எங்கப் போறீங்க”னு கேட்டுச்சாம்.
“காசு கொடுக்க சொல்லி என்னோட பாட்டிய அந்த வட்டிக்கடக்காரன் அடிச்சு மெரட்றான். அவனுக்கு ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கப் போயிகிட்டு இருக்கேன்”னு முட்ட சொல்லுச்சாம்.
“நானும் உன் கூட வரட்டுமா”னு யானை கேட்டுச்சாம்.
“சரி நீயும் எங்க பின்னாடி வா”னு சொல்லிட்டு முட்ட நடக்க ஆரம்பிச்சுச்சாம்.

இன்னும் கொஞ்ச தூரம் போனதும் ஒரு புலி வந்துச்சாம்.
“முட்டண்ணே முட்டண்ணே எங்கப் போறீங்க”னு கேட்டுச்சாம்.
அதுக்கு முட்ட என்ன தங்கம் சொன்னுச்சு?

ம்ம்ம் அவன் காசு தர சொல்லி அடிக்கிறான்….

யாரு?

வட்டிக்கடக்காரந்தான்

யார அடிக்கிறான்?

அழுதுச்சுல்ல அந்தப் பாட்டிய…

ம்ம்ம் அப்புறம்?

அதனால அவனுக்கு பாடம் சொல்லித் தரப் போறேன்னு சொல்லுச்சாம்.

ம்ம்ம்ம் முட்ட அப்படி சொன்னதும்,
“நானும் உன் கூட வரட்டுமா”னு புலி கேட்டுச்சாம்.

“சரி நீயும் எங்க பின்னாடி வா”னு சொல்லிட்டு முட்ட நடக்க ஆரம்பிச்சுச்சாம்.
இப்போ முட்ட பின்னாடி யாரெல்லாம் வர்றாங்கனு சொல்லு…

சிங்கம்ம்ம்ம்… யானை…அப்பறம் புலி

ம்ம்ம்ம்… இன்னும் கொஞ்சம் தூரம் போனதும் ஒரு கழுதை வந்துச்சாம்.
“முட்டண்ணே முட்டண்ணே எங்கப் போறீங்க”னு கேட்டுச்சாம்.
அதுக்கு முட்ட என்ன தங்கம் சொன்னுச்சு?

ம்ம்ம் பாட்டிய காசு தர சொல்லி வட்டிக்கடக்காரன் அடிக்கிறான்…. அவனுக்கு பாடம் சொல்லித் தரப் போறேன்னு சொல்லுச்சாம்.

ம்ம்ம்ம் முட்ட அப்படி சொன்னதும்,
“நானும் உங்க கூட வரட்டுமா”னு கழுதை கேட்டுச்சாம்.

“சரி நீயும் எங்க பின்னாடி வா”னு சொல்லிட்டு முட்ட நடக்க ஆரம்பிச்சுச்சாம்.
இப்போ முட்ட பின்னாடி யாரெல்லாம் வர்றாங்க?

சிங்கம்ம்ம்ம்… யானை… புலி… அப்பறம்… லயன்…

சிங்கம் தான் பாப்பா லயன்… கடசியா வந்த விலங்கு எது?

கழுதை.

ம்ம்ம் முட்ட பின்னாடி சிங்கம், யானை, புலி, கழுதை எல்லாம் போனாங்களாம்
( இன்னும்பாம்பு, தேள், பூரான் என்று கதையை நீட்டிக் கொண்டேன்)

முட்டையும் அப்பறம் எல்லா விலங்குகளும் வட்டிக்கடக்காரன் வீட்டுக்கு வரும்போது இருட்டாயிடுச்சாம். எல்லா விலங்குகளையும் ஒரு ஒரு எடத்துல போய் ஒளிஞ்சிக்க சொல்லுச்சாம் முட்டை.

சிங்கம் போய் வாசல்ல ஒளிஞ்சிக்கிச்சாம்.
யானை போய் வீட்டுக்குப் பின்னாடி ஒளிஞ்சிக்கிச்சாம்.
புலி போய் கட்டிலுக்கு அடியில ஒளிஞ்சிக்கிச்சாம்.
கழுதை போய் கதவுக்கு பின்னாடி ஒளிஞ்சிகிச்சாம்.
ஒலக்கை மேல பாம்பு உட்காந்துகிச்சாம்.

ஒலக்கைனா என்ன மாமா?

ஒலக்கைனா பெரிய குச்சி மாதிரி இருக்கும் பாப்பா. அம்மாச்சி வீட்ல உரல் இருந்துச்சுல்ல? அரிசிய அரைக்கனும்னா அதுல தான் அரிசியப் போட்டு ஒலக்கைல இடிப்பாங்க. பாட்டி ஊருக்குப் போகும்போது உனக்குக் காட்றேன் சரியா?

சரி மாமா.

அந்த ஒலக்கை மேல பாம்பு உட்காந்துகிச்சாம்.
கதவுக்குப் பின்னாடி கழுதை ஒளிஞ்சிகிச்சாம்.
தீப்பெட்டிகுள்ள தேள் ஒளிஞ்சிகிச்சாம்.
அடுப்புக்கு பக்கத்துல பூரான் ஒளிஞ்சிகிச்சாம்.

கட்டில்ல படுத்து வட்டிக்கடக்காரன் தூங்கிட்டு இருந்தானாம். இந்த முட்டை அவன் நெத்தி மேல ஏறி டிங்கு டிங்குனு ஆடுச்சாம். வட்டிக்கடக்காரன் முழிச்சுப் பாத்தானாம். முட்டை கீழ குதிச்சு ஆடிட்டு இருந்துச்சாம். வட்டிக்கடக்காரன் “ஏய் முட்ட. என் மேலயே வந்து குதிக்கிறியா? இப்பவே ஒன்ன ஒடைக்கப் போறேன்”னு மெரட்டுனானாம்.
“எங்க பாட்டியோட பேரன் வர்ற வரைக்கும் எங்க பாட்டிய நீ எதுவும் பண்ணக்கூடாதுனு ஒன்ன மெரட்டிட்டுப் போகதான் நான் வந்திருக்கேன்”னு முட்ட சொல்லுச்சாம். வட்டிக்கடக்காரனுக்கு கோபம் வந்து “இப்பவே உன்ன என்னப் பண்றேன் பாரு”னு சொல்லிகிட்டே கட்டில விட்டுக் கீழ எறங்குனானாம்.

கட்டிக்கு கீழ என்ன இருக்குதுனு சொன்னேன்?

புலி.

ம்ம்ம் அந்த புலி அவன் காலப் புடிச்சு கடிச்சுதாம். ஐயோ என்னமோ கடிக்குதே அத அடிக்கலாம்னு ஒலக்கைய எடுத்தானாம்.

ஒலக்கை மேல என்ன உட்காந்திருக்கு?

பாம்பு.

ம்ம்ம் அந்த பாம்பு அவன் கையிலேயே கொத்துச்சாம். ஐயோ அம்மா னு கத்திகிட்டே இருட்டா இருக்கிறதாலதான் நமக்கு ஒன்னும் தெரியல. வெளக்கப் பொருத்திப் பாக்கலாம்னு தீப்பெட்டியத் தெறந்தானாம்.

தீப்பெட்டிக்குள்ள என்ன இருக்கு?

தேளு.

ம்ம்ம் அந்த தேளும் அவன் கைலயே கொட்டுச்சாம். ஐயோ னு கத்திகிட்டே அடுப்பு நெருப்பு எடுக்கலாம்னு அடுப்புகிட்ட துழாவுனானாம்.

அடுப்புகிட்ட என்ன இருக்கு?

நெருப்பு.

அடுப்புக்குள்ள நெருப்பு இருக்குது பாப்பா. அடுப்புக்குப் பக்கத்துல எந்த விலங்கு போய் ஒளிஞ்சிகிச்சுனு சொன்னேன்?

பெருக்கான்.

அது பெருக்கான் இல்ல! பூரான். அந்த பூரானும் அவனக் கடிச்சுதாம். ஐயையோ இந்த வீட்டுக்குள்ள என்னென்னமோ புகுந்திடுச்சு. நாம கம்முனு ஒரு எடத்துல போயி ஒளிஞ்சிக்கலாம்னு சொல்லிட்டு கதவுக்குப் பின்னாடி ஒளியப் போனானாம்.

கதவுக்குப் பின்னாடி என்ன இருக்குது?

கழுதை.

ம்ம்ம்… அந்த கழுதை அவன ஓங்கி ஒரு உதை உதைச்சுதாம். வாசல்ல போய் விழுந்தானாம்.

வாசல்ல என்ன இருக்குது?

சிங்கம்.

ம்ம்ம்… சிங்கமும் அவனக் கடிச்சுதாம். அழுதுகிட்டே வீட்டுக்குப் பின்னாடி ஓடுனானாம்.

வீட்டுக்குப் பின்னாடி என்ன இருக்கு?

யானை.

ம்ம்ம்…. அந்த யானை தும்பிக்கைலையே அவனத் தூக்கிப் போட்டு மிதிக்கப் போச்சாம். அப்போ அங்க முட்டை வந்து அவன் கிட்டே “இனிமே எங்க பாட்டிய அடிப்பியா?”னு கேட்டுச்சாம். அதுக்கு அவன் “சத்தியமா இனிமே நான் பாட்டிய எதுவும் பண்ண மாட்டேன். பேரன் வந்த பின்னாடியே நான் காச வாங்கிக்கிறேன். என்ன மன்னிச்சிடுங்க”னு கெஞ்சுனானாம். முட்டையும் அவன மன்னிச்சிட்டு வந்திடுச்சாம்.

அப்பறம்?

அப்பறம்… அந்த வட்டிக்கடக்காரன் பாட்டிய அடிக்கவே இல்லையாம். பாட்டியும் முட்டையும் சந்தோசமா இருந்தாங்களாம்.

அப்பறம்?

அப்பறம் அவ்வளோதான் ஜனனி.

அந்த அனிமல்ஸ்லாம் எங்கப் போனாங்க?

அவங்களாம் காட்டுக்குப் போயிட்டாங்க…

போயி…

ஜனனி, இந்த கதை முடிஞ்சு போயிடுச்சு. அவ்வளவுதான்.

சரி மாமா. வேற கத சொல்லு மாமா.

வேற என்ன கதை?

ஹார்ஸ் கதை.

ஹார்ஸ் கதையா?

ம்ம்ம் பிங்க் கலர் ஹார்ஸ் கதை.

பிங்க் கலர் ஹார்ஸ் கதையா? அதெல்லாம் எனக்குத் தெரியாது ஜனனி.

இல்லனா ரெட் கலர் ஹார்ஸ் கதை சொல்லு மாமா.

அந்தக் கதையெல்லாம் எனக்குத் தெரியாது ஜனனி.

அப்பன்னா முட்டக் கதை சொல்லு மாமா.

இப்பதான முட்டக் கத சொன்னேன்.

பெரிய முட்டக் கத சொல்லு மாமா.

ஜனனி, மாமாவுக்குத் தெரிஞ்ச கதையெல்லாம் சொல்லிட்டேன். இனிமே நீதான் எனக்கு ஒரு கத சொல்லனும்.

(மிரட்டும் தொனியில்) வேற கத சொல்லு மாமா…

வேற கதையா? இரு சொல்றேன். ஹைதராபாத்ல உன்ன மாதிரியே ஒரு குட்டி பாப்பா இருந்துச்சு. அவங்க மாமா கிட்ட கத சொல்ல சொல்லி கேட்டுச்சாம். அவங்க மாமாவும் மூனு கத சொன்னாங்களாம். அப்பறமும் அந்த பாப்பா இன்னொரு கத சொல்லு மாமா இன்னொரு கத சொல்லு மாமா னு அடம் பண்ணிகிட்டே இருந்துச்சாம் பாரு, அந்த பாப்பாவுக்கு ஒரு அடி கொடுத்தாங்களாம் அவங்க மாமா. அந்தப் பாப்பா அதுக்கப்புறம் கதையே கேட்கலையாம். கம்முனு தூங்கிடுச்சாம்.

அப்பறம்?

அப்பறம்? கதை அவ்வளவுதான். உனக்கு இந்த கதை புரிஞ்சுதா இல்லையா ஜனனி?

புரிஞ்சுது மாமா. நீ வேற கத சொல்லு மாமா.

வேணாம் ஜனனி. அப்பறம் மாமா அழுதுடுவேன்!

 

—–நான் அழைக்கும் மூவர் :

1. ஸ்ரீ
2. நாடோடி இலக்கியன்
3. தேவ்

—–

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

 

தலைப்ப பார்த்ததும் யாரும் திட்ட வந்துடாதீங்க. பேர் வைக்கிறதுக்காக நம்ம மக்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்க பாருங்க. காங்கேயம் பக்கத்துல ஒரு டீக்கடையோட பேரு ‘அடேங்கப்பா’ டீஸ்டால். ஒரு தடவை மதுரை போற வழியில ‘திடீர் உணவகம்’னு ஒரு கடை பார்த்தேன். ஹைதரபாத் வந்த பின்னாடி இந்த மாதிரி பேரெல்லாம் சாதாரணம்னு தோண ஆரம்பிச்சுடுச்சு. சென்னைல ஒரு டைடல் பார்க், பெங்களூருல ஒரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மாதிரி இங்க ‘ஹைடெக் சிட்டி’ னு ஒன்னு இருக்கு. அதோட தாக்கம் அதிகமாகி நெறைய இடங்கள் ல பார்த்தா ‘ஹைடெக் சலூன்’, ‘ஹைடெக் ரெஸ்டாரண்ட்’, ‘ஹைடெக் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’ னு ஹைதராபாத்தே இப்போ ஹைடெக் மயமாகிட்டு வருது :) . படத்துக்கு பேரு வைக்கிறதுலையும் இங்க ஒருத்தர் கலக்கறார். ‘இதுதாண்டா போலீஸ்’ புகழ் டாக்டர் ராஜசேகர் தான். ‘எவனா இருந்தா எனக்கென்ன?’ னு ஒரு படம் வந்து பட்டயக்/பயத்த கிளப்புச்சாம். சமீபத்துல கூட ‘உடம்பு எப்படியிருக்கு’னு ஒரு படம் வந்துச்சே! அப்புறம் ஹைதராபாத் பிரியாணிக்கு பேர் போன ஊருங்க… எந்தளவுக்குன்னா, இங்க ஒரு தெலுங்கு பண்பலைல ஒரு இரவு நிகழ்ச்சியோட பேரு – மிட்நைட் பிரியாணி :)

*

முன்னலாம் தெலுங்குப் படம் பார்த்தா நக்கல் பண்ணிட்டே பார்க்கிறதுக்கு நல்லாருக்கும். அதுக்காகவே வாரம் ஒரு படம்னு குறி வச்சு பாத்துட்டு இருந்தோம். ( ஆனா அதுவே பழக்கமாகி இப்போ என்னையே அறியாம தெலுங்குப் படத்த ரசிக்க ஆரம்பிச்சுட்டனோன்னு ஒரு பயம் வந்துடுச்சுங்கறது வேற விசயம் ) போன மாசம் விஜயதசமினு ஒரு படத்துக்கு நண்பன கூப்பிட்டப்போ அவன் வர முடியாதுனு சொல்லவும் சரி சிங்கம் சிங்கிளாதாண்டா போகும்னு நான் மட்டும் போய் அசிங்கமானதுதான் மிச்சம். அந்த போஸ்டர்ல அந்த ஹீரோ(?) பட்டாச சுத்தினப்பவே நான் புரிஞ்சிருக்கனும். அது ‘சிவகாசி’யோட ரீமேக். விஜய் படத்த எல்லாம் போஸ்டர்ல கூட பாக்கக்கூடாதுனு தீர்மானம் பண்ணி வச்சிருந்தவன, அத தெலுங்குல ரீமேக் பண்ணி தியேட்டர்ல வந்து பாக்க வச்சிட்டாங்க. அடுத்தவாரம் ஸ்டேட்ரவுடி னு ஒரு படம் வந்துச்சு. சரி பேர்லையே ஒரு டெரர் இருக்குதே, இது பக்கா தெலுங்குப் படமாதான் இருக்கும்னு நெனச்சு, தூக்கம் வருதுனு சொன்ன நண்பனையும் இழுத்துட்டுப் போனா அது நம்ம ‘எதிரி’யோட ரீமேக் :( விக்ரமாதித்யன் மாதிரி நானும் விடாம அடுத்த வாரமும் போனேனே டக்கரி னு ஒரு படத்துக்கு! படம் பேரே டக்கரா இருக்குதுல்ல? ஆனா பாருங்க அதுவும் நம்ம ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தோட ரீமேக். இவ்வளவு டேமேஜான பின்னாடியும் தெலுங்குப் படம் பாக்க போறதுக்குக் காரணம் ‘கோதாவரி’ புகழ் சேகர் கம்முலாவோட சமீபத்திய ‘ஹேப்பி டேஸ்’, சண்டை, தனி காமெடி ட்ராக் எதுவும் இல்லாம, வந்த சுமாரான திகில் படமான ‘மந்த்ரா’ மாதிரியான படங்கள் தான்!

*

கொஞ்ச நாள் முன்னாடி பெங்களூர்ல இருந்து சேலத்துக்குப் போறதுக்கு புதுசா விட்டிருக்கிற தமிழ்நாடு பேருந்துல ஏறினேன். காசு அதிகம் தான். சரி சீக்கிரம் கொண்டு போய் சேர்த்துடுவாங்கன்னு அதுல ஏறிட்டேன். ஓசூர் தாண்டறதுக்குள்ள 15 பேருந்து, 23 லாரி, கணக்கு வழக்கு இல்லாம காருங்கனு எங்க பேருந்த முந்திகிட்டு போய்கிட்டு இருக்கு. கண்டக்டர்கிட்ட கேட்டேன் ‘அண்ணே 60 ரூவா கூட வாங்குறீங்களே கொஞ்சம் வேகமா போகக்கூடாதா? டவுன் பஸ்செல்லாம் முந்திகிட்டு போகுதே’ அப்படின்னு. அவர் என்ன சொன்னார் தெரியுங்களா? ‘தம்பி இது சொகுசுப் பேருந்து! விரைவு பேருந்து கிடையாது! நம்ம வண்டி சொகுசாதான் போகும். வேகமா எல்லாம் போகாது’ னு சொல்லிட்டார். அதுக்கப்புறம் நான் எதுவும் பேசாம சன்னல்ல வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டேன் :(

*

அதேமாதிரி தீபாவளிக்கு ஊருக்குப் போகும்போது சேலத்துல இருந்து கரூர் பேருந்துல ஏறி, இடப்பக்கம் இருக்கிற ரெண்டு பேர் இருக்கைல தனியா உட்காந்திருந்தேன். கொஞ்சம் நேரம் கழிச்சு ஏறின ஒரு ஒன்பதாவது/பத்தாவது படிக்கிற பொண்ணும் அவங்க அம்மாவும், உட்கார இடமில்லாம பாத்துட்டே இருந்தாங்க. அந்த பொண்ணு தனியா உட்காந்திருந்த என்ன பார்த்து, பக்கத்து இருக்கைல மாறி உட்கார சொல்லிட்டா. எனக்கு ஒரே வருத்தமா போயிடுச்சு. இடம் மாறி உட்காரனுமேங்கறதுக்காக இல்ல; என்னை அந்த பொண்ணு அப்படி கூப்பிட்டதாலதான். அட ‘அண்ணா’ னு கூப்பிட்டிருந்தா கூட சந்தோசப் பட்டிருக்கலாம். ‘அங்கிள்’ னு கூப்பிட்டுட்டாளே. இந்த கண்ணாடிய கழட்டிட்டு ஆறு மாசத்துக்கு முன்னாடி வாங்கி தொடாமலே வச்சிருக்கிற காண்டெக்ட் லென்சதான் இனிமே போடனும்!

நம்ம பேர்ல வேற ஒருத்தர் எழுதினா அவர போலினு சொல்லலாம்
நாம எழுதினத, மத்தவங்க அவங்க பேர்ல எழுதினா அவங்கள என்னனு சொல்ல?


இதைப் போலவே என்னுடைய இன்னும் சில பதிவுகளும் அவர் பெயரில் அங்கே இருக்கின்றன.

இங்கே உள்நுழைந்து பார்க்க முடியாததால் என் பக்கத்திற்கு லிங்க் எதுவும் கொடுத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. கொடுத்திருந்தால் நன்றி.
இதே போல ஆர்க்குட்டில் சில கவிதை குழுக்களில் நான் எழுதிய சில கவுஜைகளை மற்றவர்கள் பெயரில் பார்த்துவிட்டு, எழுதியவருக்கு மடலனுப்பினால் ரிப்லை இல்லை. ஸ்க்ராப் பண்ணினால் மிக வேகமாக அதனை டெலிட் செய்து விடுகிறார் :) இப்போது அலுவலகத்தில் ஆர்க்குட் தடை செய்யப்பட்டிருப்பதால் ஆர்க்குட் பக்கம் எட்டிப் பார்த்து மாதங்களாகிவிட்டது.

இப்படியெல்லாம் நடக்கிறதென்றுதான் நண்பன் ஒருவன் சொன்ன மாதிரி, கவிதைகளை எழுதி அனுப்பாமல், Paint –இல் பிக்சராக எழுதி ஒரு ஓரமாக நம்ம வலைப் பக்க முகவரியும் எழுதி படங்களாக அனுப்பினேன். எங்கேப் போனாலும் நம்ம முகவரியும் கூடவேப் போகும் என்று ;-) ஆனால் அதையும் கில்லாடிகள், படத்தில் இருக்கும் வலைப்பக்க முகவரியை மட்டும் வெட்டிவிட முயற்சி செய்திருக்கிறார்கள். அதில் வலைப் பக்க முகவரியை வெட்டினால் கவிதை வரியும் கொஞ்சம் சேதாரமாகும் என்ற நிலையில் சில படங்களில் மட்டும் வெட்ட முடியாமல் போய் விட்டது என்று நினைக்கிறேன். முகவரியில்லாத கவிதைப் படங்கள் சில இங்கே

 


இப்பொழுதெல்லாம் எல்லாப் படத்திலும் குறுக்கும் நெடுக்குமாக வலைப்பக்க முகவரியோ, மின்னஞ்சல் முகவரியோ போட்டு விடுகிறேன். எனக்கே இது ஓவராகத்தான் தெரிகிறது :-) ஆனால் வேறு வழியில்லை.
இன்னொருவர் என் பதிவுகளுக்காக தனியே ஒரு வலைப்பதிவே ஆரம்பித்துவிட்டார்

. கடைசி வரியில் மட்டும் இவர் பெயரைப் போட்டுக் கொண்டாலும் இவர் கொஞ்சம் நல்லவர். எல்லாப் பதிவுகளுக்கும் இரண்டு லிங்க் கொடுத்திருக்கிறார். ஒன்று இவர் பதிவுக்குப் போகும். இரண்டாவது என்னுடைய பதிவுக்கு வரும் :-)
புத்தகமாகப் போட்டால் தான் நாம் எழுதுவதற்கு எல்லாம் காப்பிரைட் கிடைக்குமோ??? மக்கா, நான் எழுதினத யாரும் எங்கேயும் எடுத்துப் போடக்கூடாதுனு எல்லாம் சொல்லல. அப்படி போடும்போது என்னோட பக்கத்துக்கும் ஒரு லின்க் கொடுத்திடுங்கனு மட்டும் தான் சொல்ல விரும்பறேன். நன்றி.

***

இன்னொரு Forum – இல் என்னுடைய கவிதையை சிறந்த காதல் கவிதையாக குறிப்பிட்டிருந்தார் வெங்கிராஜா என்பவர். அவருக்கு நன்றி. ஆனாலவருக்கு, நான் பெரிய கவிஞனாக இருப்பேனோ என்று என்னைப் பற்றி தவறான எண்ணமும் இருக்கிறது போல.
இங்கே தபூ சங்கரைப் பற்றி குறிப்பிடும்போது

“இவர் அருட்பெருங்கோ என்ற துணைக்கவிஞரோடு இணைந்தும் கவி புனைவார்” என்று இருக்கிறது :-) அண்ணே, நான் தபூ சங்கர நேர்ல பாத்தது கூட கிடையாது :-) அவரோட சில புத்தகங்கள மட்டும் தான் வாசிச்சிருக்கேன்.
***

இந்தப் பதிவில் எதாவது கவுஜை எழுதியிருப்பேன் என்று நம்பி வந்தவர்கள் மன்னிக்கவும். புதன் கிழமையன்று கொஞ்சம் அழுகாச்சி கவுஜைகள் போடுகிறேன் ;-)

 

© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD