Dec 27

கல்லூரி – பாலாஜி சக்திவேலின் படம் என்பதால் கொஞ்சம் அதிகமான எதிர்பார்ப்போடு போனேன். நாயகியைத் தவிர மற்ற அனைத்து நடிக, நடிகையர்களும் புதுமுகமாம். ஆனால் எல்லோருமே நம்மோடு பழகிய பழைய முகங்கள் போலவே இருப்பது இயல்பு. ஏழ்மைப் பின்னணியில் இருந்து கல்லூரிக்குப் படிக்க வரும் அந்த பள்ளி கால நண்பர்களை, தம் வீட்டுத் துயரங்களை மறந்தும் சிரிக்க வைக்கிறது அவர்களுக்கிடையேயான நட்பு. பயணம், உணவு, துயரம், நெருக்கடி என எல்லா சூழலிலும் இணைபிரியாத அந்த நட்பு வட்டத்துக்குள் இழுக்கப்பட்டு அவர்களுக்குள் ஒருத்தியாக மாறுகிறாள், பணக்கார பின்னணியுடன் வரும் நாயகி. நாயகியாகவும் மற்ற பாத்திரங்களைப் போலவே இயல்பான ஒரு தமிழ்முகத்தையே நடிக்க வைத்திருந்தாலும் இந்தத் திரைப்படம் இப்போதிருக்கும் தரத்திலிருந்து எந்தவிதத்திலும் குறைந்திருக்காது என்பது என் எண்ணம். நட்புக்கும் காதலுக்கும் இடையில் நாயகனும், நாயகியும் தவித்துக்கொண்டிருக்க, படம் கல்லூரி காலநிகழ்வுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. நாயகி தோழியிடம், நாயகன் மீதான காதலை வெளிப்படுத்துகையில் பொசுக்கென கிளைமேக்ஸ் வந்து கதை முடிகிறது. ‘காதல்’ படத்தின் கிளமேக்ஸ் காட்சியில் அழுகை ஓவர்டோசாக இருந்தது. அதனைத் தவிர்க்க நினைத்தோ என்னவோ இதில் கிளைமேக்ஸில் அந்த காட்சிக்குரிய அழுத்தம் இல்லாமலிருப்பதாக எனக்குப் பட்டது. தனித் தனியாக எல்லாம் சரியாக இருப்பது போலத் தோன்றினாலும் ஏதோ ஒன்று குறைவது போல இருக்கிறதே என்று யோசிக்கும்போது, நண்பன் சொன்னான் – ‘மச்சான்… மொதல்ல கிளைமேக்ச முடிவு பண்ணிட்டு, அப்புறம் கதையெல்லாம் யோசிச்சிருப்பாங்களோ?’ இருக்கலாம். படம் முடிந்த பிறகும் நினைவில் நிற்கும் கதாபாத்திரங்கள் – கயல்விழியும், நாயகனின் தங்கையும்.*

பில்லா – பூவெல்லாம் கேட்டுப் பார் படத்திற்குப் பிறகு இதுதான் திரையரங்கம் சென்று பார்க்கும் அஜித்தின் படம். பில்லாவாக வரும் அஜித் நடந்தார், சூட்கேஸ் மாற்றினார், சுட்டார், கூலிங் கிளாஸ் கழற்றிப் பேசினார், மீண்டும் நடக்க ஆரம்பித்து விடுகிறார். பில்லாவாக மாறும் வேலு வந்தபிறகுதான் படத்தில் கொஞ்சம் கலகல. அதிலும் பிரபுவை அவர் கலாய்ப்பது கலகலகல. படம் ரிச்சாக வந்திருக்கிறது என்று வலைப்பதிவில் படித்திருந்தது உண்மைதான். பிரம்மாண்டம் என்ற பெயரில் ஒரு செட்டுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து எடுப்பதற்குப் பதில் இப்படி எடுக்கலாம். நயனைப் பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை; வெள்ளித் திரையில் காண்க :) முக்கியமாக பின்னணி இசையும், ஒளிப்பதிவும் நன்றாக இருந்தன. கடைசி வரை படத்தில் நமீதாவை எதற்கு சேர்த்தார்கள் என்று புரியவில்லை. மொத்தமாகப் பார்த்தால் கொடுத்த காசுக்கு பாதகமில்லை.

*

நீலம் – சுனாமி குறித்து அறிவுமதி அவர்கள் இயக்கிய குறும்படம். இப்போதுதான் பார்த்தேன். பத்து நிமிடங்களுக்கும் குறைவான கால அளவில் அத்தனைப் பெரிய இழப்பின் வலியைச் சொல்லியிருக்கிறார். ஒற்றைப் பனைமரம் நிற்கும், காகம் கரையும் ஒரு கடற்கரை. கடலை நோக்கி நடந்து வரும் சிறுவன் + சிறுவனை நோக்கி வரும் கடலைலகள் என இரண்டு காட்சிகள். சோகம் அப்பிய முகத்துடன் நிற்கும் சிறுவன் கடலையேப் பார்த்துக் கொண்டிருக்கிறான். பிறகு எதனையோ கண்டு கொண்டவனாய் ஓடிப்போய் ஓரிடத்தில் மணலைத் தோண்டி உள்ளிருந்து ஒரு நண்டை எடுக்கிறான். அதனிடம் ‘எங்க அம்மாவப் பாத்தியா? நீ தான் தெனமும் கடலுக்குள்ள போயிட்டு வர்றல்ல. ஒனக்குத் தெரியும். சொல்லு எங்கம்மாவ பாத்தியா?’ என அழுகிறான். பின் மணலிலும் படுத்துக்கொண்டு மணலை அணைத்தபடி புலம்பியழுவதுடன் படம் முடிகிறது.கடலும், சிறுவனும், நண்டும் மட்டுமே நடித்திருக்கிறார்கள். சிறுவனாக அரவிந்த் பச்சானின் நடிப்பு சிறப்பாக இருந்தது. மண்ணுக்குள் புதைந்த நண்டை தோண்டியெடுத்து அதனைப் பார்த்து அவன் புலம்பியழும்போதும், மணலை அணைத்துக் கொண்டு அழும்போதும் நமக்கு துக்கம் தொண்டைக்குள் உருள்கிறது. அதற்கேற்றாற்போல் நிருவின் இசையும் சோகத்தைப் பின்னணியில் இசைக்கிறது. ஒளிப்பதிவு – தங்கர்பச்சான். சுனாமி வந்து மூன்றாண்டுகளுக்குப் பின்னும் அதன் பாதிப்பு இன்னும் இருக்கதான் செய்கிறது :(

*

மறைபொருள் – பொன்.சுதா என்பவர் இயக்கியிருக்கும் குறும்படம். வசனங்கள் ஏதுமில்லை. ஒரு வீட்டின் அறைக்குள் ஓர் இளம்பெண்ணைக் காண்பிக்கிறார்கள். குளித்துவிட்டு வந்து அலமாரியில் இருக்கும் உடைகளில் பிடித்தமான ஒன்றை வெகு நேரம் தேடியெடுக்கிறார். கண்ணாடி முன் நின்று உடையைத் தன்மேல் வைத்துக்கொண்டு நன்றாக இருக்கிறதா என பார்த்துக் கொள்கிறார். பிறகு அந்த உடையை அணிந்துகொண்டபின் கண்ணாடி முன் நின்றபடி தலைவாருகிறார். கண்மையிடுகிறார். நகப்பூச்சு பூசிக்கொள்கிறார். பவுடர் அடித்துக் கொள்கிறார். எல்லா ஒப்பனைகளையும் முடித்துவிட்டு அலமாரியிலிருக்கும் அதனை எடுத்து உடுத்திக் கொள்கிறார். இது வரை விருப்பத்துடன் அணிந்துகொண்ட உடை + ஒப்பனைகளை மறைத்தபடி திரையென விழுகிறது அந்த பர்தா. எல்லாம் மறைக்கப்பட்டு பெண்ணின் கண்கள் மட்டும் கேமராவின் பார்வையில் தெரிகின்றன. அதனுடன் முடிகிறது படம்.

*

ஒரு நினைவூட்டல் – சர்வேசனின் நச்சுனு ஒரு கதை போட்டியில் பங்கு கொண்டவர்களின் எண்ணிக்கை 57. அதற்கான வாக்கெடுப்பு மூன்று கூர்களாகப் பிரித்து சர்வேசன் வலைத்தளத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை பதிவான மொத்த வாக்குகள் 57 கூட தொடவில்லையாம். கதைகளை எழுதியவர்கள் + வாசித்தவர்கள் அனைவரும், நீங்கள் ரசித்த கதைக்கு மறக்காமல் வாக்களியுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

 

written by அருட்பெருங்கோ \\ tags: , , , , ,

Aug 29

காதல் கூடம் மூன்றாம் பகுதியில் வந்த இலக்கண விதிகளுக்கான விளக்கப் பதிவு :)

பெருமை + ஊர் = பேருர்

முதலில், ஈறு போதல் என்ற விதிப்படி நிலைமொழியின் ஈற்றில் உள்ள ‘மை’ அழிந்து பெரு + ஊர் ஆனது.
பின், உயிர் வரின் உ குறள் மெய் விட்டோடும் எனும் விதிப்படி வருமொழியில் ஊ எனும் உயிரெழுத்து வர நிலைமொழியீற்றிலுள்ள ரு எனுமெழுத்தில் ர் எனும் மெய்யெழுத்தைவிட்டு உகரம் அழைந்து பெர் + ஊர் ஆனது.
பின், ஆதி நீடல் எனும் விதிப்படி நிலைமொழியின் ஆதியெழுத்தான பெ என்பது பே என நீண்டு பேர் + ஊர் ஆனது.
பின், உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி ர் எனும் மெய்யெழுத்தோடு + ஊ எனும் உயிரெழுத்து ஒன்றி ரூ என்றாகி பேரூர் ஆனது.

(இது 10 / +1 வகுப்புகளில் மிகவும் பிரபலமான இலக்கணக் கேள்வி  . ஏதேனும் தவறிருப்பின் தமிழறிஞர்கள் திருத்தவும்!!!)

அடுத்தது இந்தக் கவிதை எழுதும்போது ஒரு முக்கியமான ஐயம் வந்தது.
பூ தொட்டி, பூத்தொட்டி, பூந்தொட்டி – இவற்றில் ( இவைகளில் என்று எழுதுவது தவறு, இவற்றில் என்பதே சரி!) எது சரியென்று எனக்குத் தெரியவில்லை.
தெரிந்தவர்களிடம் கேட்போமென இராம.கி ஐயாவிடம் கேட்டேன். அவர் மிகப் பெரிய விளக்கமளித்தார் பூந்தொட்டி, பூத்தொட்டி இரண்டுமே சரிதானென. அது வட்டார வழக்கைப் பொருத்து எப்படியும் வரும் என்று சொல்லியிருந்தார். ஆனாலும் எனக்கு திருப்தியாயில்லை.  பூங்கா என்றுதான் சொல்கிறோம் பூக்கா என்று சொல்வதில்லை. பூக்கூடை என்கிறோம். பூங்கூடை என்று கேள்விப்பட்டதில்லை. ஆனால் பூத்தோட்டம் என்பதை விட பூந்தோட்டம் என்பதே சரியெனத் தோன்றுகிறது. குழப்பத்தோடு வலையில் தேடிய போது இரண்டுமே சரியென்று தான் தோன்றுகிறது.

வல்லினம் மிகும் இடங்கள் எனும் பகுதியில் ஓரேழுத்து ஒருமொழியையடுத்து வல்லினம் மிகும் என்று சொல்லப் பட்டிருக்கிறது.

எ-கா தீ+பெட்டி = தீப்பெட்டி, பூ + சரம் = பூச்சரம்.

அதே சமயம் புணர்ச்சி விதிகளில் பூ எனும் நிலைமொழிக்கு சிறப்பு விதியாக இது கொடுக்கப்பட்டுள்ளது.

பூ பெயர் முன் இன மென்மை உம் தோன்றும்

பூ எனும் பெயரை அடுத்து வரும் வல்லின எழுத்துக்களுக்கு இனமான மெல்லெழுத்தும் தோன்றும்.

இன மென்மை தோன்றும் என சொல்லாமல் இன மென்மை உம் தோன்றும் என்று சொல்லியதால் வல்லெழுத்தும் மிகலாம் எனக் கருதலாம்.

எனவே பூ + தோட்டம் = பூத்தோட்டம், பூந்தொட்டி இரண்டுமே சரி.
பூ + கூடை = பூக்கூடை , பூங்கூடை இரண்டுமே சரி.

பூப் போன்ற பெண்களிடம் உம் கொட்டும் ஆண்களின் சுபாவத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை ;)

written by அருட்பெருங்கோ \\ tags: ,

Dec 15
நம்ம ஊர்ப்பக்கம் பாத்தீங்கன்னா நடு நெலம வாதின்னு சொல்லிக்கிட்டு
நெறயப்பேர் திரியறாங்க!
ஒரு தடவ மாமனுக்கும் மச்சானுக்கும் தகராறுன்னு நம்ம நடுநெலம
வாதியக் கூப்பிட ஊர் மக்க வந்திருந்தாங்க!
பிரச்சன என்னான்னா நம்ம மாமங்காரங் ஒரு ஆயிரம் ரூவாவ
மச்சாங்காரங்கிட்ட குடுத்து வச்சிர்ந்திருக்கான்.
இப்பத் திருப்பிக் கேட்டா மச்சாங்காரன் தர முடியாதுன்னுட்டான்.
சரி நம்ம நடு நெலமக் கார்ரு எப்பட்றா பிரச்சனயத்
தீக்கறார்னுப் பாத்தேன்.
நேரா மச்சாங்கிட்டப் போனவரு ஆயிரத்தையும் புடுங்குனாரு.
மாமங்கிட்ட ஐநூறு, மச்சாங்கிட்ட ஐநூறு எண்ணிக்
குடுத்துட்டுப் போய்ட்டாரு.
நாங் கேட்டதுக்குச் சொல்றாரு :
“ரெண்டுப் பக்கமும் பிரச்சினப் பண்ணிக்கக் கூடாதில்ல – அதாம்ப்பா”.
நாங் என்னாச் சொல்றன்னா நாயம்னு தெரிஞ்சா அந்தப்
பக்கஞ் சாஞ்சிட வேண்டியதுதான? இதுல என்னா வெக்கம்?
என்னங்க நாஞ் சொல்றது?

written by அருட்பெருங்கோ

Dec 14

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சி/கூட்டணி ஆட்சி பீடம் ஏறும், எந்த கட்சி/கூட்டணி மண்ணைக் கவ்வும் என்பதைத் தேர்தல் முடிந்ததும் தெரிந்து கொள்ளலாம் :-) ))

நமது கரையில் நடக்கும் தேர்தலில் நீங்கள் வெற்றி பெறும் கூட்டணியிலா, இல்லையா? என்று தெரிய பக்கத்தில் உள்ள வாக்குப் பெட்டியில் உங்கள் வாக்கைப் பதியும் படி கேட்டுக் கொள்கிறோம்! நன்றி வணக்கம் _/\_ வாக்குபோட —–>

-சந்திப்போம்.

updated 0n – 16 – 02 – 2008 :

இங்கு நடந்த தேர்தல் நீங்கள் கையெழுத்துப் போடுவது தமிழிலா இல்லை ஆங்கிலத்திலா என்பது பற்றி. டெம்ப்ளேட் மாற்றியதில் வாக்குப்பெட்டி காணாமல் போய்விட்டது :) உங்கள் கையெழுத்தைப் பற்றி கருத்து சொல்ல விரும்பினால் மறுமொழியிடவும். நன்றி.

written by அருட்பெருங்கோ

Dec 01


பொருள் – 1 :

களவும் – திருட்டு ( முதலான தீயப் பழக்கங்களை )
கற்று மற – எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு பிறகு மறந்து விட வேண்டும்……

பொருள் – 2:

களவும் கற்று – களவு வாழ்க்கையின் நினைவுகளை
மற – கற்பு ( திருமண ) வாழ்க்கையில் மறக்கவும்….

இரண்டில் எது சரி ?
இரண்டுமே தவறா?

தமிழறிந்தவர்கள் சொல்லுங்கள்!

பிறகு,

தாயை நேசிப்பதாகச் காட்டிக்கொள்ள மனைவியைக் கொடுமைப் படுத்தும் கணவர்களுக்குப் பிடித்தப் பழமொழி – தாய்க்குப் பின் தாரம்!
ஏதோ தாய்க்கு அடுத்த நிலையில் தாரத்தை வைப்பது போல அந்தப் பழமொழி அர்த்தப்படுத்தப் பட்டு விட்டது.

பொதுவாக ஒருத் துறையில் சிறந்து விளங்கும் ஒருவரை அதேத் துறையில் கடந்த காலத்தில் சிறந்து விளங்கிய ஒருவரோடு ஒப்பிட்டுப் பேசும்போது,
அவருக்குப் பிறகு இவர்தான் சிறந்தவர் என்று சொல்லுவது வழக்கம்.

உ-ம் : சிவாஜிக்குப் பிறகு சிறந்த நடிகர் கமல்தான்! ( உதாரணத்துக்கு தான் சொல்லியுள்ளேன்… )

அது போல ஒருவனுடைய வாழ்விலும் முதல் 25 – 30 வருடங்களுக்குத் தாய்த் துணையாய் இருக்கிறாள்…
அதற்குப் பிறகு அல்லது அவளுடைய காலத்துக்குப் பிறகு துணையாய் இருப்பவள் – மனைவி…

எனவே சுருக்கமாக சொன்னால்,

தாய்க்குப் பின் தான் தாரம் – என்பது தவறு
தாய்க்குப் பின் தாரம் தான் என்பதே சரி – எனது கருத்து

written by அருட்பெருங்கோ