Jul 31

மயூரேசன் அழைத்ததால்…

b – http://www.bbc.co.uk/tamil பிபிசி தமிழோசை சின்ன வயசுல இருந்து கேட்டுப் பழக்கமாகிடுச்சு. இப்போவும் வானொலியில அப்பப்போ கேட்கிறதுண்டு. ஆனா கண்டிப்பா தினமும் வலைல படிச்சிடுவேன்.
c – http://charuonline.com அடிக்கடி இல்லனாலும் அப்பப்போ வாசிப்பேன்
d – http://www.dinamani.com மசாலா இல்லாத தமிழ்ச் செய்திகளுக்கு
e – http://en.wikipedia.org உருப்படியா தேட
f -  http://feedburner.com என்னோடப் பதிவையும் 250 பேர் வழக்கமா வாசிக்கிறாங்க :)
g – http://www.google.com கண்டதையும் தேட
i – https://imo.in அலுவலகத்துல gmail, gtalk எல்லாம் தடை பண்ணிட்டதால gtalkல பேசறதுக்கான குறுக்குவழி. இன்னொரு வசதி GTalk, Yahoo Messenger எல்லாத் தொடர்புகளோடவும் ஒரே சமயத்துல, ஒரே விண்டோவுல இருந்தே பேசலாம்.
   http://indiaglitz.com தெலுங்குப் படம் பாக்கப் போறதுக்கு முன்னாடி இங்க தான் கதை படிச்சுட்டுப் போறது ;)
j – http://javapassion.com, http://java.sun.com கொலைவெறியோட நாலு மாசமா எனக்கு வாழ்வா ஜாவா போராட்டம் நடந்தது இங்கதான். நல்ல பலன் கிடைக்கும். கிடைச்சிருக்கு :) http://jeyamohan.in அடிக்கடி இல்லனாலும் அப்பப்போ வாசிப்பேன்.
k – http://keetru.com கதை, கவிதை, கட்டுரை இன்னும் பல
m – http://www.maatru.net தேர்ந்தெடுத்த பதிவுகள வாசிக்க…
n – http://www.newindpress.com மசாலா இல்லாத ஆங்கிலச் செய்திகளுக்கு!
p – http://www.puthinam.com ஈழச்செய்திகளுக்கு. தினமும் நான் திறக்கிற முதல் தளம் இதுதான்.
s – http://sramakrishnan.com அடிக்கடி இல்லனாலும் அப்பப்போ வாசிப்பேன்
t – http://thamizmanam.com blogspot.com பதிவுகளும் அலுவலகத்துல தடை பண்ணிட்டதால தமிழ்மணத்தோட print friendly சேவைதான் ஒரே வழி.
v – http://vikatan.com வர வர உருப்படியா ஒன்னும் இல்ல. ஆனா பணம் கட்டிட்டேனே!

தொடரப் போகும் மூவர்:
1. ப்ரேம்குமார் 
2. எழில் 
3. Sri

Rule:

  1. The Tag name is A for Apple
  2. Give preference for regular sites
  3. Ignore your own blogs, sites.
  4. Tag 3 People.

written by அருட்பெருங்கோ \\ tags:

Jul 17

செய்தி 1 : நேற்று நண்பர் பிரேம்குமார், அழகான ஆண்குழந்தைக்கு தந்தையாகியிருக்கிறார். குழந்தைக்கு ‘ப’ வரிசையில் பெயர் வைக்க வேண்டுமென்பதால் பிரேம்குமார் என்றே வைத்துவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் ;-)

செய்தி 2 : தங்கச்சி ஆகாயநதிக்கு நேற்று மாலை அழகான ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. தாயும், சேயும் நலம்!

செய்தி 3 : மேலேயுள்ள இரண்டு செய்திகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை :-)

வாழ்த்து சொல்ல – prem.kavithaigal@gmail.com அல்லது 09884812363

written by அருட்பெருங்கோ \\ tags:

Apr 08

மழ வருது மழ வருது நெல்லு வாருங்க
முக்காப்படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க
ஏரு ஓட்ற மாமனுக்கு எண்ணி வையுங்க
சும்மா இருக்கிற மாமனுக்கு சூடு வையுங்க

போன மாதம் முத்துலெட்சுமியக்காவோட பதிவ படிச்சதும் நினைவுக்கு வந்தது இந்த பாட்டுதான். இது பள்ளிக்கூடத்துல படிச்ச மாதிரி நினைவில்ல. மழை வரும்போது வீட்ல அம்மா சொல்லிக்கொடுத்ததுன்னு நினைக்கிறேன். பள்ளிக்கூடத்துல படிச்சதுனு எடுத்துகிட்டா இந்த பாட்டெல்லாந்தான் நினைவுக்கு வருது :

அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப்போல நல்லார்
ஊரில் யார் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஒளவை சொன்ன மொழியாம்
அஃதே நமக்கு வழியாம்

o0o

நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடிவா
மலைமீது ஏறிவா
மல்லிகைப்பூ கொண்டுவா
நடுவீட்டில் வை
நல்லதுதி செய்

o0o

அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டுப் பழம் கொண்டு வா
பாதிப் பழம் என்னிடம்
பாதிப் பழம் உன்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்

o0o

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
போகாத இடந்தனில் போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
சேராத இடந்தனில் சேர வேண்டாம்
செய் நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
….அதுக்கப்பறம் மறந்து போச்சு 

மறக்காம இருக்கிற இன்னும் சில பாட்டுகள் :

கொல கொலயா முந்திரிக்கா
நரிய நரிய சுத்தி வா
கொள்ளயடிச்சவன் எங்க இருக்கான்?
கூட்டத்துல இருக்கான் கண்டுபுடி.

o0o

கண்ணாமூச்சி ரே ரே
கண்டுபுடி ரே ரே
ஊளமுட்டையெல்லாம் நீ தின்னுட்டு
நல்ல முட்டையெல்லாம் கொண்டு வா

o0o

டிக் டிக்
யார் அது?
திருடன்
என்ன வேண்டும்?
நகை வேண்டும்.
என்ன நகை?
கலர் நகை.
என்ன கலர்?
பச்ச கலர்.
…அப்பறம் எல்லாரும் பச்சக்கலர தேடி ஓடனும்!

o0o

for ( int i = 1 ; i <= no. of players ; i++)
{
Player.sing( i +“ குடம் தண்ணி ஊத்தி” + i + “பூ பூத்துது”);
}

கி கி கி இதுவும் சின்ன வயசில பாடினதுதான் ;)

நானும் மூனு பேரக்கூப்பிடனும்ல?
அண்மையில் அரைசதமடித்த
1. ஸ்ரீ மற்றும்
2. மெய் புங்காடன்
கண்ணாடி மழையில் நனைய வைக்கும்
3. எழில் பாரதி

written by அருட்பெருங்கோ \\ tags: , ,

Feb 03

கடந்த வாரம் நட்சத்திர வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கும் வாழ்த்தியவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ஒரு வாரமாய் எனது பதிவுகளை வாசித்தவர்கள், பின்னூட்டமிட்டவர்கள், மடலனுப்பியவர்கள், நேர்மையான விமர்சனம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும்… அழியாத எனது அன்பும், நன்றிகளும்!
ஒரு வாரம் தொடர்ந்து எழுதினால் அயற்சி ஏற்படுமென்பதற்கு மாறாக இன்னும் சிறப்பாக எழுதவேண்டும் என்கிற ஆவல் உண்டாகியிருப்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சிறுகதை எழுதப் பழக வேண்டுமென்கிற எனது ஆசை அதிகப்பட்டிருப்பதாகவே உணர்கிறேன். ( எனது மொக்கைகள் கவுஜை வடிவத்தில் மட்டுமல்ல கதை வடிவத்திலும் இனி உங்களை இம்சிக்கும் :) )
அனைவருக்கும் நன்றி.***

நான் எழுதியப் பதிவுகளில் பிடித்ததொன்றைப் பற்றி பதிவிட அழைத்திருந்தார் எழில்.
எல்லாப் பதிவுகளுமே பிடித்த பதிவுகள்தாமென்றாலும், நான் எழுதிய பிற கவிதைகளின் நடையிலிருந்து மொத்தமாய் மாறுபட்டிருக்கும்

இந்தக் கவிதையெனக்கு மிகவும் பிடிக்கும்.***

இன்று தனது முதல் பிறந்துநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் என் அண்ணன் மகள் மித்ராவுக்கும் இந்தப் பதிவில் எனது வாழ்த்துகள்!
 
Happy Birthday Mithra

written by அருட்பெருங்கோ \\ tags: ,

Jan 09

2007 இல் நான் பிடித்த படங்களில் எனக்குப் பிடித்த ஒன்றை பதிவிட்டு அதனைப் பற்றி சில வரிகள் எழுத சொல்லி சர்வேசன் அழைப்பு விடுத்ததால் இந்தப் பதிவு.புகைப்படமெடுப்பதை கலையாக செய்யும் கலைஞனல்ல நான். நிகழ்வுகளைப் பதிவு செய்து கொள்ளும் வசதிக்காகவே கடந்த ஆண்டு ஒரு படப்பொட்டி வாங்கியிருந்தேன். “புது சட்டில போட்டா, நாயி ஏழு ஆப்ப கழி திங்குமாம்” – இப்படி ஒரு சொலவடை எங்களூரில் உண்டு. அதற்கு நானும் விதிவிலக்கல்ல. வாங்கிய புதுசில் படப்பொட்டியைத் தூக்கிக் கொண்டு கண்ணில் படுவதையெல்லாம் சுட்டுக் கொண்டிருந்தேன். பார்க்கும்போது அழகாய்த் தெரிந்தவையெல்லாம் படத்தில் அழகாய் வரவில்லை. சில காட்சிகள் நேரில் பார்த்ததை விடவும் படத்தில் அழகாய் இருப்பதாய்த் தோன்றின. படமெடுப்பது ஒரு கலை. படமெடுத்தே அதனைக் கற்றுக்கொள்வதென ;) முடிவெடுத்து எப்படி விழுந்தாலும் படமெடுப்பது என சுட்டுத் தள்ளிக் கொண்டு இருந்தேன். அப்புறம் ஆர்வமில்லாமல் படப்பொட்டியை ஊரிலேயே விட்டாயிற்று.

கடந்த ஆண்டு முன் திட்டமெதுவுமில்லாமல் கங்கைகொண்டசோழபுரத்திற்கு சென்றபொழுதொன்றில் எடுக்கப்பட்டது இந்தப்படம். கோயில் வளாகத்தின் மையத்தில் இருந்த ஒரு கோபுரத்தையும், அதற்கு சற்றுத் தள்ளியிருந்த ஒரு கோபுரத்தையும் ஒரே கட்டடமாகப் படத்தில் காட்டலாம் என முயற்சி செய்து எடுத்தப் படம். படம் கொஞ்சம் சாய்வாகவும், தென்னங்கீற்றுகள் கொஞ்சமாய் மறைத்தபடி இருந்தபோதும் எடுத்தப் படங்களிலேயே இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்களும் பார்த்து சொல்லுங்கள் எப்படி இருக்கிறதென்று.

 

இந்த கோயிலின் மேலும் சில படங்களைக் காண

இங்கே செல்லவும்.

நான் அழைக்கும் மூவர் :1. பிரபாகரன்
2. விழியன்
3. இளவஞ்சி

 

written by அருட்பெருங்கோ \\ tags: ,