Jul 30

ஜனனி : மாமா எங்கம்மாவும் உங்கள மாதிரி எஞ்சினியர் ஆகப்போறாங்க
அண்ணா : என்ன பாப்பா சொல்ற?
ஜனனி : ஆமா, மாமா எங்கம்மா டெய்லர் க்ளாஸ் போறாங்க, அப்றம் டெய்லர் எஞ்சினியர் ஆகிடுவாங்க!

*

ஜனனி : அம்மா, மூச்சுவிடாம நாம இருக்க முடியுமா?
அக்கா : இல்ல பாப்பா. மூச்சு விட்டாதான் நாம உயிரோட இருக்க முடியும். எதுக்கு கேட்கற?
ஜனனி : எங்க மிஸ் எப்ப பாத்தாலும் ‘யாரும் மூச்சு விடக்கூடாது’, ‘யாரும் மூச்சு விடக்கூடாது’ ன்னே சொல்றாங்கம்மா..
அக்கா : யாரும் பேசக்கூடாதுங்கறத தான் அப்படி சொல்றாங்க. மிஸ் சொல்றாங்கன்னு நீ மூச்சு விடாம இருந்துடாத பாப்பா!

*

அப்பா : என்ன ஜனனி நீ. நல்லாவே எழுத மாட்டேங்கற. நிறுத்தி நிதானமா எழுது.
ஜனனி : தாத்தா, நான் ஒழுங்காதான் தாத்தா எழுதறேன். இந்த பென்சிலுக்கு தான் தூக்கமா வருதுன்னு நெனைக்கறேன். அதான் இப்படி எழுதுது.

இதற்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாமல் அப்பா முழிக்க, அடுத்து அவள் சொன்னது…’நான் எப்பவும் உண்மையேதான் தாத்தா பேசுவேன். பொய்யெல்லாம் பேச மாட்டேன்’

*

அக்கா : கையெழுத்தெல்லாம் முத்து முத்தா இருக்கனும் பாப்பா.
ஜனனி : ஹைதராபாத்ல இருந்து மாமா வாங்கிட்டு வந்த முத்தாம்மா?
அக்கா : ஜனனீஈஈஈஈ, அழகா குண்டு குண்டா எழுதுன்னு சொல்றேன்.
(நல்ல வேளை பெங்களூர்ல வெடிச்ச குண்டான்னு கேட்கல)

*
அம்மா : சரி ஜனனி நான் ஊருக்கு போயிட்டு வர்றேன்.
ஜனனி : சரி அம்மாச்சி. மனசுல என் ஞாபகம் வந்துச்சுனா ஒடனே கெளம்பி வந்துடுங்க. காலைலயா இருந்தா வாங்க. நைட்டா இருந்தா வராதீங்க இருட்டா இருக்கும். நான் கனவுல வந்து பிஸ்கட் தர்றேன், சாப்பிட்டு தூங்கிட்டு காலைல எந்திருச்சு வந்துடுங்க.

*
ஜனனி : மாமா, நான் சின்ன பாப்பாவா, பெரிய பாப்பாவா?
நான் : நீ சின்ன பாப்பா தான்.
ஜனனி : நான் சென்னைக்குப் போனா?
நான் : சென்னைக்குப் போனா, மித்ரா சின்ன பாப்பா. நீ பெரிய பாப்பா.
ஜனனி : சேலத்துக்குப் போனா?
நான் : சேலத்துக்குப் போனா, அம்சா பெரிய பாப்பா. நீ சின்ன பாப்பா.
ஜனனி : என்ன மாமா. மாத்தி மாத்தி சொல்ற? எதாவது ஒன்னு சொல்லு மாமா!
(வர வர ஜனனி கூட என்னைக் கலாய்க்க ஆரம்பித்து விட்டாள்)

*
நான் : ஜனனி, ஊருக்கு வரும்போது உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும்?
ஜனனி : பச்சக் கலர் கேரட் வாங்கிட்டு வா மாமா.
(இனிமேல் அவளிடம் எதுவும் கேட்க் கூடாதென்று முடிவு செய்திருக்கிறேன்)

written by அருட்பெருங்கோ \\ tags: , ,

Jun 16

இன்று முதல் ஜனனிக்கு ஆசிரியைகளாக வரப்போகிறவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஜனனியிடமிருந்து அவர்களை ஆண்டவன் காப்பாற்றட்டும் :)

Get the Flash Player to see this player.

written by அருட்பெருங்கோ \\ tags:

Jun 15
jananibw.jpg jananinew.jpg

written by அருட்பெருங்கோ \\ tags: , , ,

May 29

காரக்குழம்பு வைத்தால் காரமாக இருக்க வேண்டுமென்பதன் புரிதலில் உப்புமா என்றால் உப்பாக இருக்க வேண்டுமென என் அக்கா தவறாக புரிந்து கொண்ட ஒரு காலைப்பொழுதில் தட்டில் வைத்த உப்புமாவை தொடாமல், தொட்டுக்கொள்ள வைத்திருந்த சர்க்கரையை மட்டும் உள்ளே தள்ளி கொண்டிருந்தாள் ஜனனி. அதைக் கவனித்த அக்கா, ‘ஜனனி, இப்போ ரெண்டு பேர்ல யார் மொதல்ல சாப்பிட்றாங்கன்னு பாக்கலாம் சரியா? தட்டுல எதுவும் மிச்சம் வைக்கக் கூடாது.’ என்று சொல்லிவிட்டு அக்காவும் சாப்பிட ஆரம்பிக்க, என்ன செய்வதென்று புரியாமல் தவித்த ஜனனி, உப்புமாவை உருண்டை உருண்டையாக உருட்டி, அக்கா குனியும்போது, பக்கத்திலிருந்த நாற்காலிக்கு அடியில் உருட்டிவிட ஆரம்பித்தாள். நான்காவது உருட்டலில் இதனைக் கவனித்து விட்ட அக்கா, நாற்காலிக்கடியில் நான்கு உப்புமா உருண்டைகளைப் பார்த்ததும், ஜனனியைப் பார்த்து முறைத்தார். சற்றும் தாமதிக்காமல் ஜனனியிடமிருந்து பதில் வந்தது – ‘அம்மா, அந்த எறும்புங்க எல்லாம் பாவம்தான? அதுக்கெல்லாம் பசிக்கும் தான? அதுக்குதான் நான் உப்புமா போட்டேன்!’

*

அக்கா : ‘வெயில் காலத்துல தண்ணி ஜில்லுனு குடிக்காத பாப்பா’

ஜனனி : ‘அப்போ night காலத்துல?’

*

அக்கா : ‘துணி தேய்க்கறவங்களே ரெண்டு நாளா வரல. தொவச்ச துணியெல்லாம் அப்படியே இருக்கு’

மாமா : ‘அவங்க வரலன்னா, முன்னாடியிருக்கிற கடைல கொடுக்க வேண்டியதுதான’

ஜனனி : ‘ஐயோ, ரெண்டு பேரும் ஏன் இப்படி வம்பு பண்றீங்க? Iron box மேல தான இருக்கு. எடுத்து தேய்ங்களேன்!’

அக்காவும், மாமாவும் கப்சிப்.

*

ஜனனி : ‘மாமா, அம்மாவ விட்டுட்டு நான் மட்டும் தனியா கரூர்ல அம்மாச்சி வீட்டுக்கு போனேனே’

நான் : ‘அப்பறம் ஏன் அம்மாகிட்டப் போறேன்னு அடுத்த நாளே திருப்பூர் ஓடிட்ட?’

ஜனனி : ‘நான் தூங்கும்போது அம்மா காத பிடிச்சுட்டு தான தூங்குவேன்? கரூர்ல அம்மாச்சி காதுதான் இருந்தது. அதான் திருப்பூர் போயிட்டேன்’

*

அக்கா : ‘குட்டி, இவளுக்கு ஸ்கூல் லீவ் விட்டதுல இருந்த எப்போ பாத்தாலும் அந்த tom & jerry CD யே போட்டு பாத்துட்டு இருக்கா. Tom & jerry பைத்தியமாவே ஆகப்போறான்னு நெனைக்கிறேன்’

அக்காவிடமிருந்து செல்பேசியைப் பிடுங்கி ஜனனி சொன்னாள் – ‘மாமா, அம்மா எப்போ பாத்தாலும் சீரியலே பாத்துட்டு இருக்காங்க. சீரியல் பைத்தியமாவே ஆகப்போறாங்க’

*

கடந்த வாரம் குடும்பம் மொத்தமும் சென்னையில் இருந்த போது ஜனனிக்கு தூக்கம் வருகிற நேரம் மட்டும் எல்லோரும் காணாமல் போய்விடுவார்கள். பின்ன என்னங்க? கத சொன்னா தூங்கனும். திரும்ப திரும்ப கதையே கேட்டுட்டு இருந்தா? அவள கத சொல்லி தூங்க வைக்கிறதுக்குள்ள எனக்கு தூக்கம் வந்து நான் உளற ஆரம்பிச்சுட்றேன். அவளுக்கு கரடிக்கதை சொல்லிட்டே வந்து தூக்கத்துல சுந்தரா ட்ராவல்ஸ் ஓட்ட ஆரம்பிச்சுட்றேன். முதல் கத சொல்லும்போது ஒவ்வொரு வரிக்கும் ‘அப்பறம் மாமா’ ன்னு கேட்டுட்டே வருவா. கொஞ்ச நேரத்துல அது ‘அப்பறம்’ னு சுருங்கும். இன்னும் கொஞ்சம் கதை ஓட்டினோம்னா, அந்த ‘அப்பறமும்’, ‘ம்ம்ம்’ னு சின்னதாகிடும். அப்புறம் நாந்தான் கத சொல்லிட்டே இருப்பேன் அவகிட்ட இருந்து சத்தமே இருக்காது. மெதுவா அவ கைய எடுத்துட்டு, போர்வைய போத்தினதும், போர்வைய விலக்கிட்டு, காத பிடிச்சுட்டு ‘வேற கத சொல்லு மாமா’ னு மறுபடியும் ஃப்ரெஷ்ஷா ஆரம்பிப்பா பாருங்க.. எனக்கு அப்பவே கண்ண கட்ட ஆரம்பிச்சுடும். அடுத்து அவளுக்கு சொல்றதா வாக்கு கொடுத்திருக்கிற கதையோட பேரு – ‘அஞ்சு தல யான முட்டக் கத’. உங்களுக்கு யாருக்காவது இந்த கதை தெரியுமா?

written by அருட்பெருங்கோ \\ tags: ,

Feb 03

கடந்த வாரம் நட்சத்திர வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கும் வாழ்த்தியவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ஒரு வாரமாய் எனது பதிவுகளை வாசித்தவர்கள், பின்னூட்டமிட்டவர்கள், மடலனுப்பியவர்கள், நேர்மையான விமர்சனம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும்… அழியாத எனது அன்பும், நன்றிகளும்!
ஒரு வாரம் தொடர்ந்து எழுதினால் அயற்சி ஏற்படுமென்பதற்கு மாறாக இன்னும் சிறப்பாக எழுதவேண்டும் என்கிற ஆவல் உண்டாகியிருப்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சிறுகதை எழுதப் பழக வேண்டுமென்கிற எனது ஆசை அதிகப்பட்டிருப்பதாகவே உணர்கிறேன். ( எனது மொக்கைகள் கவுஜை வடிவத்தில் மட்டுமல்ல கதை வடிவத்திலும் இனி உங்களை இம்சிக்கும் :) )
அனைவருக்கும் நன்றி.***

நான் எழுதியப் பதிவுகளில் பிடித்ததொன்றைப் பற்றி பதிவிட அழைத்திருந்தார் எழில்.
எல்லாப் பதிவுகளுமே பிடித்த பதிவுகள்தாமென்றாலும், நான் எழுதிய பிற கவிதைகளின் நடையிலிருந்து மொத்தமாய் மாறுபட்டிருக்கும்

இந்தக் கவிதையெனக்கு மிகவும் பிடிக்கும்.***

இன்று தனது முதல் பிறந்துநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் என் அண்ணன் மகள் மித்ராவுக்கும் இந்தப் பதிவில் எனது வாழ்த்துகள்!
 
Happy Birthday Mithra

written by அருட்பெருங்கோ \\ tags: ,