May 28

16 மே 2008 வெள்ளிக்கிழமை

சுந்தரா ட்ராவல்ஸ் பதிவுக்கு பிறகு நான் ஊருக்கு கிளம்பினாலே ‘என்ன சுந்தரா ட்ராவல்ஸ்லயா?’ என்று அலுவலகத்தில் நண்பர்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.அதனால் இம்முறை முன்பதிவு செய்துவிட வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன். ஆனால் வழக்கம்போல் எனது பொறுமை, சோம்பேறித்தனமெனும் எல்லையைத் தொட்டுவிட்டதால் பயண நாள் வரை முன்பதிவு செய்யவில்லை.

மதியம் மணி 2:00 :

மதியம் உண்ட மயக்கத்தில் உறக்கம் தள்ள, அலுவலகத்துக்குள்ளேயே இருக்கும் விடுதியில் தங்கியிருந்த நண்பனிடம் அறை சாவியை வாங்கிக்கொண்டு அவன் அறைக்கு சென்றுவிட்டேன். ‘தூங்கக்கூடாது, கொஞ்ச நேரம் கண்ணை மூடி படுத்திருந்துவிட்டு எழுந்துவிடலாம்’ எனும் தெளிவான முடிவோடு படுக்கையில் சாய்ந்துவிட்டு எழுந்தபோது மணி 3:00.

மதியம் மணி 3:00 :

அலறியடித்து வண்டியைக் கிளப்பிக்கொண்டு வீட்டிற்குப் பறந்தேன். 6 மணிக்கு மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் பெங்களூர் செல்லும் கர்நாடகா அரசுப்பேருந்தை பிடித்துவிட திட்டம். அதற்கு லிங்கம்பள்ளியில் 5 மணிக்கு மின்ரயிலைப் பிடிக்கவேண்டும். 4:30 மணிக்காவது வீட்டிலிருந்து கிளம்பவேண்டும். வீட்டிற்கு 4 மணிக்கு போய்விட்டால் போதும். இன்னும் நேரமிருக்கிறது என்ற கெத்தில் வீட்டிற்கு அருகில் வந்ததும் அழகியதமிழ்மகனில்(ATM) பணமெடுத்துக்கொண்டு கடையில் சில பொருட்களை வாங்கிக்கொண்டு கரும்புச்சாறு கடைக்கு வந்தேன். இரண்டு கப் குடித்துவிட்டு பையிலிருந்து பணத்தையெடுக்கும்போது கையோடு வந்த நண்பனின் விடுதியறை சாவி என்னைப்பார்த்து எகத்தாளமாக சிரித்தது.

மதியம் மணி 3:45 :

‘மச்சான், நாந்தாண்டா பேசறேன். உங்கிட்ட இன்னொரு ரூம் சாவி இருக்கா’
‘இல்லடா.. என் ரூம்மேட் ஊருக்கு போயிட்டான். ஒரு சாவிதான் இருக்கு. ஏண்டா?’
‘ஒன்னுமில்ல. நீ ஆஃபிஸ் கேட்டுக்கு வா. நான் சாவிய எடுத்துட்டு வர்றேன்’
வந்த வழியே திரும்பி போய் அவனிடம் சாவியைக் கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தபோது மணி 5

மாலை மணி 5 :

இனிமேல் அந்த கர்நாடகா பேருந்தைப்பிடிக்க வாய்ப்பில்லாததால் 8 மணிக்கு கிளம்பும் ஆந்திரா பேருந்தை பிடிக்க பொறுமையாக கிளம்பலாமென்று பைக்குள் எல்லாவற்றையும் திணித்துவிட்டு ஒரு குளியலைப் போட்டேன். தலைக்கு குளித்ததும் தூக்கம் வருகிற மாதிரி இருந்தது. ‘தூங்கக்கூடாது, கொஞ்ச நேரம் கண்ணை மூடி படுத்திருந்துவிட்டு எழுந்துவிடலாம்’ எனும் அதே தெளிவான முடிவோடு படுக்கையில் சாய்ந்துவிட்டு எழுந்தபோது மணி 6:30.

மாலை மணி 6:30 :

ஆட்டோவுக்கு காத்திருந்து சலித்து, நடந்து, பின் லிஃப்ட் கேட்டு ஒருவழியாக ரயில் நிலையம் சென்றபோது மணி 6:45. நாம்பள்ளி செல்லும் அடுத்த ரயில் 6:55 க்கு கிளம்ப தயாராக நின்று கொண்டிருந்தது. கவுண்டரில் பயணச்சீட்டு வாங்க எனக்கு முன்னால் இன்னும் மூன்றே பேர் இருந்த போது அந்த ரியலும் ‘கூ’ என்று (எனக்கு சங்கு) ஊதியபடி கிளம்பிப் போய்விட்டது. அடுத்து செக்கந்தராபாத் செல்லும் ரயிலில் பேகம்பேட் வரை சென்றுவிட்டு அங்கிருந்து ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் போகலாமென்று அதி உன்னத முடிவெடுத்து பேகம்பேட்டுக்கே சீட்டு வாங்கினேன். 7:20 க்கு அந்த ரயில் கிளம்பியது.

இரவு மணி 8 :

பேகம்பேட் ரயில்நிலையத்துக்கு வெளியே வந்து ஆட்டோ பிடித்து பேரம் பேசி ஏறியமர்ந்தபோது பத்து நிமிடம் கழிந்திருந்தது.
‘அண்ணா கொஞ்சம் சீக்கிரம் போங்க. பஸ்ச புடிக்கனும்’
‘பஸ் எத்தன மணிக்கு?’
‘8 மணிக்கு’
‘மணி என்ன இப்போ?’
‘8:10’
என்னை முறைத்துவிட்டு முறுக்கினார் ஒரு இருட்டு சந்துக்குள். ஒரு கிலோ மீட்டர் போனதும் அங்கு ஒரு கடமை தவறாத கண்ணியமான காவல்துறை அகராதி ‘இது ஒன் வே. திரும்பிப் போ…போஓஓஓஓஓ’ என்று ஜெயம் சதா மாதிரி (ஆனால் தொப்பை இருந்தது) கை நீட்ட, வந்த வழியே ஆட்டோ திரும்பியது. நான் எங்காவது தனியாக கிளம்பினால் எனக்கு கம்பெனி கொடுக்க சனியனும் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பிவிடும்போல! உருண்டு புரண்டு ஆட்டோ பேருந்து நிலையம் வந்தபோது மணி 8:45.

இரவு மணி 9 :

பெங்களூர் செல்லும் கடைசி அரசுப்பேருந்து கிளம்பிக்கொண்டிருந்தது. சீட்டிருக்கிறதா என்று நடத்துனரைக்கேட்டால் ஒன்றே ஒன்றுதான் இருப்பதாக பாவமாக சொன்னார். எனக்கு அரை டிக்கட் இருந்தாலே போதுமென்று சொல்லி ஏறிக்கொண்டேன். இருக்கையில் சாய்ந்து, ‘தூங்கலாமா? கண்ணை மட்டும் மூடிப் படுத்திருக்கலாமா?’ என்று யோசித்துக்கொண்டே தூங்கி விட்டேன்

17 மே 2008 சனிக்கிழமை

காலை மணி 9:00 :

மெஜஸ்டிக்கில் இறங்கியதும் நண்பனுக்கு தொலைபேசி, அலுவலகம் செல்ல இருந்தவனை வீட்டிலிருக்க சொல்லி, 171 பிடித்து கோரமங்களா போய் அவன் வீட்டைக்கண்டுபிடித்தபோது மணி 10 ஆகியிருந்தது. இரண்டு சமையலறை அளவுக்கு இருந்த அந்த வீட்டின் வாடகை 7500 ரூபாய்! குளித்து முடித்து சமைத்து வைக்கப்பட்டிருந்த சப்பாத்தி, வெண்டைக்காயையும், நண்பன் சூடாக்கிக்கொடுத்த தேநீரையும் பருகிய பிறகு உலகம் அழகாக தெரிந்தது.(எரிக் , நீ நல்லாருப்படா!) அப்பொழுதே கிளம்பி இரவுக்குள் நாமக்கல் செல்லலாமா அல்லது இரவு கிளம்பி காலை நேராக திருமணத்துக்கு போய்விடலாமா என்று குழப்பமாக இருந்ததால், இம்சையரசிக்கே தொலைபேசினேன். நள்ளிரவு 3:30 மணிக்கு (காலையில் என்று பொய் சொன்னார்) திருமணமென்பதால் இரவு தங்கிக்கொள்ள வசதி செய்திருப்பதாக சொல்லவும், உடனே கிளம்ப முடிவெடுத்தேன்.

காலை மணி 11 :

கோரமங்களா வாட்டர் டேங்க் அருகே ஓசூருக்கு பேருந்தேறினேன். ஊர்ந்து ஊர்ந்து சென்றது. மடிவாலா – எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மேம்பாலப்பணிகள் இன்னும் முடிவடையவில்லை. பல இடங்களில் மரங்களை வெட்டிப்போட்டிருந்தார்கள். ஆனாலும் பெங்களூருக்கே உரிய அந்த ‘பசுமை’ மாற வில்லை ;) 12:30 மணிக்கு ஒசூரை அடைந்தேன்.

மதியம் மணி 1 :

சேலம் செல்லும் அரசு விரைவுப்பேருந்திலேறி படுத்ததுதான் தெரியும். எப்பொழுது சேலம் வந்ததென்றே தெரியவில்லை. 6 மணிக்கு சேலத்திலிறங்கி கடைவீதிக்கு சென்று பரிசுப்பொருள் வாங்கிக்கொண்டு திரும்பினேன். அன்று/அடுத்தநாள் வீரபாண்டி ஆறுமுகத்தின் பேத்திக்கு திருமணமென்பதால் சேலமே ஒளிமயமாக இருந்தது. அடுத்த பேருந்தைப்பிடித்து நாமக்கல்லை அடைந்தபோது மணி 8.

இரவு மணி 8 :

‘ஹலோ’
‘சொல்லுங்க’
‘sam பேசறேன்’
‘யாரு?’
‘சாம்ராஜ் பேசறேன்’
‘ ’
‘அருட்பெருங்கோ பேசறேங்க’
‘அவ தூங்கறா. நான் அவ ஃப்ரெண்ட் பேசறேன். ஒரு நிமிசம் இருங்க அவ தம்பிக்கிட்ட கொடுக்கறேன்’
‘சரிங்க’
‘அண்ணா நீங்க இப்போ எங்க இருக்கீங்க?’
‘பஸ்டாண்ட்லதான்ப்பா’
‘பஸ் எல்லாம் வெளிய வர்ற இடத்துல வெயிட் பண்ணுங்க. நான் வந்துடறேன்’
‘ஓக்கே’

‘ஹலோ…அண்ணா எங்க நிக்கறீங்க?’
‘நீ சொன்ன எடத்துலதாம்ப்பா’
‘நானும் பஸ் வெளிய வர்ற இடத்துலதான் நிக்கறேன்’
‘பக்கத்துல ஒரு டைட்டன் வாட்ச் கடை இருக்கு’
‘நானும் அங்கதான் நிக்கறேன்’
‘தம்பி கொஞ்சம் பின்னாடி திரும்பு’
‘ஹை’
‘ஹை’

இரவு மணி 9 :

விடுதிக்கு சென்று மீண்டுமொரு குளியலைப்போட்டேன். அறையில் கட்டில் ஒரு மூலையிலும் தொ.கா.பெட்டி இன்னொரு மூலையிலும் இருந்தது. அதில் நமீதாவே த்ரிஷா மாதிரிதான் தெரிந்தார். சின்னத்திரையை விட்டு பெரிய திரைக்கு போக முடிவெடுத்து வெளியே வந்தேன். நடக்கும் தூரத்தில் இருந்த KS திரையரங்கில் யாரடி நீ மோகினி ஓடிக்கொண்டிருந்தது. கூட்டம் அதிகமில்லை. பக்கத்திலேயே ஒரு பரோட்டா கடையில் சாப்பிட்டுவிட்டு (வெகுநாட்களுக்கு பிறகு நிறைவாக சாப்பிட்ட திருப்தி) திரையரங்கிற்குள் நுழைந்தேன். வலைப்பதிவில் வேண்டிய அளவுக்கு இதன் விமர்சனங்களைப் படித்துவிட்டதால் சில காட்சிகள் தவிர மீதிப்படம் சப்பென்று இருந்தது.
நயன் அழகாக இருந்தார். அவர் தங்கையாக வந்த மலையாளக் கவிதை அழ்ழகாக இருந்தார்.

இரவு மணி 1:30 :

விடுதியறைக்கு திரும்பி ‘தூங்கலாமா, கொஞ்ச நேரம் கண்ணை மூடி படுத்திருக்கலாமா’ என்று யோசித்ததில், இரண்டில் எதைச் செய்தாலும் திருமணத்துக்கு போக முடியாதென்று அனுபவ அறிவு சொல்லவும் விழித்தபடியே ஒரு லோக்கல் சேனலில் இளையராஜாவை ரசித்துக்கொண்டிருந்தேன்.

இரவு மணி 2:30 :

‘ஹலோ..ஜெயந்தி பேசறேன்’
‘சொல்லுங்க முழிச்சுட்டுதான் இருக்கேன்’
‘3 மணிக்கு அங்க பஸ் வரும். கிளம்பி ரெடியா இருங்க’
‘நான் கிளம்பிக்கறேன். நீங்கதான் கல்யாணப்பொண்ணு நீங்க மொதல்ல கெளம்புங்க’
‘நானும் கிளம்பி ரெடியா இருக்கேன். சும்மாதான உட்காந்திருக்கேன்னு எல்லாரையும் எழுப்பி விட்ற வேலைய எனக்கு கொடுத்துட்டாங்க’
‘சரி நீங்க அடுத்த ஆள எழுப்புங்க. நான் போய் கெளம்புறேன்’

இரவு மணி 3:00 :

குளித்து முடித்து கிளம்பி பேருந்துக்காக காத்திருந்தபோது அறைக்குள் புயல் மாதிரி ஒருவர் நுழைந்தார்.
‘ஹாய்.. ஐ யாம் பாலா’
என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கேட்டேன், ‘ஜெயந்தி ஃப்ரெண்டா?’
‘ம்ம்ம் ப்ளாக் மூலமா தெரியும்’
‘ஓ.. நீங்களும் ப்ளாக் எழுதுவீங்களா?’
‘இல்ல இல்ல படிக்கறதோட சரி. உங்களுக்கு எப்படி ஜெயந்திய தெரியும்?’
‘எனக்கும் ப்ளாக் மூலமாதான். அப்பறம் ஒரே கம்பனிலதான வேலை செய்யறோம்’
‘நீங்களும் ப்ளாக் எழுதறீங்களா?’
‘ம்ம்ம் ஆமாங்க’
‘என்ன பேர்ல?’
‘அருட்பெருங்கோ ங்கற பேர்ல எழுதறேன்’
‘நீங்க தான் அருட்பெருங்கோவா?’ நம்பிக்கையே இல்லாமல் கேட்டார். இது எப்பொழுதும் நடப்பதுதான். என்னை நேரில் பார்க்கும் யாருமே நான்தான் அருட்பெருங்கோ என்று சொன்னால் நம்ப தயங்குகிறார்கள் :)

18 மே 2008 ஞாயிற்றுக்கிழமை

அதிகாலை மணி 4:00 :

நாமக்கல் அருகே இருக்கும் வள்ளிபுரம் சிவன் கோவில் களை கட்டியிருந்தது.உறவினர், நண்பர்கள் புடை சூழ சரியாக 4:42 மணிக்கு மோகன் பிரபு கைது செய்யப்பட்டார். கைது செய்த ஜெயந்திக்கு பரிசு கொடுத்து வாழ்த்தலாமென்றால் அம்மணியை பிடிக்க முடியவில்லை. மாப்பிள்ளை வீட்டு அழைப்பு என்று மாயமாக மறைந்துவிட்டார். ஒருவழியாக காத்திருந்து அவர்களிருவரும் சாப்பிடப்போன நேரம் தட்டைப்பிடுங்கிவிட்டு பரிசைக்கொடுத்துவிட்டு கிளம்பினோம்.

காலை மணி 8 :

நானும் பாலாவும் அறைக்குத் திரும்பி பைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம். கோவையிலிருந்து சென்னை செல்லும் வெஸ்ட்கோஸ்ட் ரயிலை சேலத்தில் 10 மணிக்கு பிடித்துவிட திட்டம். எந்த பேருந்தும் அந்த இடத்தில் நிறுத்தாததால் ஆட்டோ பிடித்து பேருந்துநிலையம் சென்று, காத்திருந்து, பேருந்து வந்ததும் அடித்து பிடித்து ஏறி நிற்பதற்கு இடம் பிடித்தபோது மணி 8:45. ஒரு மணி நேரத்தில் சேலத்துக்கு சென்று ரயிலை பிடிப்போமா என்று சந்தேகமாகத்தான் இருந்தது. அம்மா, அப்பா, அக்கா எல்லோரும் அந்த ரயிலில்தான் திருப்பூரிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து கொள்ளலாமென்றுதான் அடுத்தநாள் வரவேற்புக்கு செல்லாமல் முதல்நாள் திருமணத்துக்கு சென்றிருந்தேன். 9:55 க்கு பைபாஸ் சாலையில் இறங்கியதுமே, ‘ரயில், சேலம் சந்திப்பில் நின்று கொண்டிருப்பதாக’ அக்கா தொலைபேசினார். அவசரமாக ஆட்டோ பிடித்து ஜங்சனை அடைந்து வரிசையில் நின்று டிக்கட் வாங்கி முதலாம் பிளாட்பாரத்திற்கு நாங்கள் போவதற்குள்…. ரயில் போய்விடவில்லை :) நிதானமாக ஏறி, ஜனனியோடு விளையாடி, பின் நன்றாக தூங்கிக்கொண்டே சென்னை சென்று சேர்ந்தேன்.

கவிதைப் பிரியர்களுக்காக அந்த மலையாளக் கவிதை :

written by அருட்பெருங்கோ \\ tags: , ,

Jan 28

பாடத் தெரியாது என்பதனைவிட எனக்குப் பாடல்களை முணுமுணுக்கக் கூடத் தெரியாது என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும். ஆனாலும் பாடல்களை கேட்பது எப்போதும் பிடித்தமான ஒன்று. பாடல்களைக் கேட்கும்போது எனக்கு பாடல்வரிகள் கோர்வையையாய் மனதில் ஏறுவதில்லை; மாறாக அந்த பாடலைக் கேட்கும் சூழலும் அந்தப் பாடலின் இசையோடு சேர்ந்து மனதில் எங்கோப் போய் தங்கிவிடுகிறது. எல்லோருக்கும் இப்படித்தானா என்று தெரியவில்லை. காலங்கள் கடந்து அந்தப் பாடலைக் கேட்கும்போது இசையோடு சேர்ந்து முதன் முதலில் அந்த பாடல் கேட்ட சுழலின் நினைவுகளும் கேடவே எழுந்து வருகின்றன. கண்களை மூடிக்கொண்டால் அந்த கடந்த காலத்துக்குப் போய் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வந்ததான உணர்வு வரும். அதிலும் குறிப்பாக ஒரே சூழலில் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட பாடல்களை கேட்கும்போது அந்த உணர்வு அழுத்தமாய்ப் பதிகிறது. என்னை முழுக்க முழுக்க பழைய சூழலில் தள்ளிவிடுகிற சில பாடல்களைப் பற்றி மட்டும் இங்கு.எல். ஆர் ஈசுவரியின் மாரியம்மன் பாடல்களை எப்பொழுது கேட்டாலும் நினைவுக்கு வருவது என் அம்மாவின் ஊரில் நடக்கும் மாரியம்மன் திருவிழாக்கள். அது நினைவுக்கு வருகிறது என்பதனைவிடவும் என்னை அழைத்துச் செல்கிறது என்று சொன்னால் சரியாயிருக்கும். பள்ளியில் படித்த காலத்தில் எந்த விடுமுறையென்றாலும் அம்மாவின் ஊருக்குதான் செல்வோம். மாரியம்மன் திருவிழாவின் போது ஊரில் இருக்கும் எல்லோருடைய உறவினர்களும் வெளியூர்களிலிருந்து வந்து ஊரே புதிதாய் இருக்கும். மாவிளக்குப் படையலில் வரிசையில் இருக்கும் மாவிளக்குத் தட்டுகளைப் பார்த்திருக்கிறீர்களா? ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசில் இருக்கும். சர்க்கரைப்பாகில் பிடிக்கப்பட்டு வெள்ளையாய், வெல்லப்பாகில் செய்து பொன்னிறத்தில், எள், பொட்டுக்கடலை எல்லாம் போட்டு புள்ளிப்புள்ளியாய், இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். சரியான பதத்தில் செய்வதும் ஒரு கலைதான். பாகு குறைந்து போயிருந்தால் மறுநாளே கட்டடத்தை இடிக்கிற மாதிரி இடித்து எடுக்க வேண்டிய அளவுக்கு இறுகிப் போயிருக்கும். பாகு அதிகம் கலந்துவிட்டாலோ, படைப்பதற்குப் போகும்போது நிற்க வைத்த மாவு, திரும்பி வருவதற்குள் படுத்துப் போன மாதிரி இளகிப் போயிருக்கும். அதன் மேலே செருகிக் கொள்ள வண்ண வண்ண விசிறிகள். கோவிலுக்கு முன்னே முன்னூறுக்கும் மேலே மாவிளக்குத் தட்டுடன் நின்றுகொண்டிருப்பார்கள்.பார்ப்பதற்கே அழகாயிருக்கும். வள்ளித்திருமணமோ, அல்லது ஏதேனும் சமூக நாடகமோ, அப்புறம் கரகாட்டம், பொன்னர்-சங்கர் கதை, திரைப்படம் (முதலில் ஒரு பக்திப்படம், ரெண்டாவது ஒரு எம்ஜியார் படம் (பெரும்பாலும் எங்க வீட்டுப் பிள்ளை), மூன்றாவதாக ஒரு ரஜினி படம் என்ற வரிசையில் போடுவார்கள், எப்பொழுதும் இரண்டாவது படத்தின் பாதியிலேயே தூங்கி விடுவேன்) என ஒரு வாரத்திற்கும் மேலான இரவுகள் விழித்தபடியே கழியும். அங்கேயே அடுப்பு மூட்டி சுக்குக்காப்பி போட்டு ஒரு ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருப்பார் ஒருவர். சாக்கோ, பாயோ எடுத்துக்கொண்டு போய்விடுவோம். தூக்கம் வருகிற வரை பார்த்துவிட்டு அங்கேயேத் தூங்கி, எல்லாம் முடிந்தபின் தூக்கத்திலேயே தலையில் பாய்/போர்வைகளை சுமந்து வீட்டிற்கு வந்து காலையில் விழித்துப் பார்த்தால் எப்பொழுது வந்தோம் எனப் புரியாது. சில நாட்களில் விழித்துப் பார்த்தால் நாடகக்கொட்டாய் முன்னாலேயே பாயில் கிடப்போம். இன்னும் சொல்வதற்கு ஏராளம் இருக்கின்றன. அத்தனை நிகழ்வுகளையும் மீண்டுமொருமுறை அனுபவிக்கும் சுகம் தருபவை அந்தப் பாடல்கள். திருவிழாவுக்குக் கம்பம் சாட்டிய நாளிலிருந்தே குழாய் ஒலிபெருக்கிகளில் மரத்துக்கு மரம் முழங்க ஆரம்பித்துவிடுவார் எல்.ஆர் ஈசுவரி. முக்கியமாக “மாரியம்மா…எங்கள் மாரியம்மா”, “கற்பூர நாயகியே கனகவள்ளி”, “அங்காளம்மா எங்கள் செங்காலம்மா மங்கலம் பொங்கிட மனதினில் வந்திடும் மாரியம்மா”, “ஈசுவரியே மகமாயி மாரியம்மா…” முத்து மாரி அம்மனுக்கு திருநாளாம்” கேட்க கேட்க மனதெங்கும் திருவிழாஞாபகங்கள்!

கரகாட்டக்காரன்,சின்னத் தம்பி, தளபதி – இந்தப் படங்களில் உள்ளப் பாடல்கள் ஆத்தூரில் கழிந்த எனது பால்யங்களை கண்முன்னே நிறுத்தும். அப்போது எங்கள் தெருவில் தொலைக்காட்சி என்பது ஆடம்பரம். பக்கத்து வீட்டில் புதிதாக பிலிப்ஸ் டேப் ரிக்கார்டர் வாங்கியிருந்தார்கள். கூடவே கரகாட்டக்காரன் கேசட்டும் வாங்கியிருந்தார்கள். பாடல் கேட்பதற்காக அவர்கள் வீட்டுக்குப் போய் டேப் ரிக்கார்டர் முன்னால் காதை வைத்துப் படுத்துக்கொண்டு சங்கீதம் தெரிந்தவர்களைப் போல் தலையாட்டிக்கொண்டு பாடல் கேட்டதை நினைத்துப் பார்த்தால் இப்பொழுதும் சிரிப்பு வருகிறது. சின்னத்தம்பிப் படப்பாடல்கள் தேய்ந்து போகிற அளவுக்கு அப்போது எல்லா விசேசங்களிலும் ஒலித்துத் தள்ளினார்கள். பள்ளிக்கூடம் முடிந்துவந்தால் இரவு வரை அந்த செம்மண் புழுதியில் போட்ட ஆட்டங்கள் அத்தனையும் சின்னத்தம்பியோடு இணைந்திருந்தது. கில்லி, பம்பரம், ஆபியம், கோலி, என ஆட்டம் முடிந்துவருகையில் முழங்காலுக்குக் கீழே மண்ணால் ஒர் ஆடை படிந்திருக்கும். இரவெல்லாம் வாசலில் உட்கார்ந்து கதை பேசும் அம்மாக்களோடு அப்படியே கதை கேட்டுக் கொண்டே தூங்கியிருக்கிறோம். ராக்கம்மா கையத்தட்டு பாடல் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த சமயம் அது. ஒவ்வொரு படத்தின் பாடலுடன் நாங்கள் அங்கு குடியிருந்த ஒவ்வொரு வீட்டின் ஞாபகங்கள் கலந்திருந்தன. அப்போது கேப்டன் பிரபாகரன் படத்தில் வந்த ஆட்டமா சதிராட்டமா பாடலுக்கு நடனம் இல்லாமல் எந்தப் பள்ளிக்கூட ஆண்டுவிழாவும் நடந்ததில்லை. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் ஆண்டுவிழாவில் வழக்கமாக நடனமாடும் ஒரு பெண்தான் நினைவுக்கு வருகிறார், முகம் நினைவில்லாத போதும்!

பம்பாய் படத்தின் பாடல்கள் திரும்ப திரும்ப ஒலித்த காலகட்டங்களில் நாங்கள் சேலத்துக்கு குடிபோயிருந்தோம். எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலும் ஒரு முசுலீம் குடும்பம் இருந்தது, என் வயதில் உள்ள ஒருப் பெண்ணோடு ;) அதுவரை அரைடிராயர் அணிந்துகொண்டிருந்த நான் இனி லுங்கிதான் அணிவேன் என அடம்பிடித்து லுங்கிக் கட்ட ஆரம்பித்தப் பருவம். பள்ளியில் தேசிய மாணவர் படையில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் தேர்வாகி ஃபேர்லேண்ட்ஸ் பகுதியில் இருக்கும் இராணுவக் கிடங்கில் அடுத்தகட்ட பயிற்சிக்காக தினமும் மாலையில் போய்க்கொண்டிருந்தேன். என் பள்ளியில் இருந்து அங்கு செல்வதற்கு அந்தப் பக்கத்து வீட்டுப் பெண் படிக்கும் பெண்கள் பள்ளி வழியாகதான் போக வேண்டும். முதல் நாள் ஓர் ஆர்வக்கோளாறில் அந்த பள்ளிமுடிகிற நேரம் பார்த்து போன போதுதான் புரிந்தது, நூறு இருநூறு பெண்கள் ஒன்றாக எதிரில் வரும்போது நண்பர்கள் இல்லாமல் தனியாக போவது ஒரு மாதிரி அவஸ்தையாகத்தான் இருக்குமென்று :) ஆனாலும் மனசுக்குள் அந்த அரபிக்கடலோரம் அவள் அழகைக் கண்டேனே என்று இசையடிக்கும். முத்து படத்தின் தில்லானா தில்லானா பாடல் கேட்டாலும் சேலம் ஞாபகம் தான்!

கரூர் வந்து பத்தாம் வகுப்பில் சேர்ந்தபோதுதான் பாடலின் தாக்கம் அதிகமானது. இரண்டு பக்கத்திலும் ஒட்டியபடியிருக்கும் வாடகை வீடுகள். இரண்டு வீட்டிலும் இரண்டு ஸ்பீக்கர் பெட்டிகள் வைத்த பெரிய டக்காய் செட்டுகள் இருந்தன. ஒரு வீட்டில் எப்போதும் மெலடிப் பாடல்கள் தான். இன்னொரு வீட்டில் குத்துப்பாடல்கள்/நாட்டுப்புறப்பாடல்கள் பட்டையைக் கிளப்பும். நான் படித்துக் கொண்டிருக்கும்போதெல்லாம் ஒரு பக்கம் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்றோ, என்னைத் தாலாட்ட வருவாளோ என்றோ ஹரிஹரண் உருகிக் கொண்டே இருப்பார். மற்றொரு பக்கம் எட்டுப் பட்டி ராசா, என் ஆச ராசாவே, வீரத்தாலாட்டு என முழங்கிக் கொண்டிருக்கும். என் அம்மா இரண்டு பேரிடமும், ‘பையன் படிச்சிட்டிருக்கான் கொஞ்சம் சத்தம் கம்மியா வையுங்க’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த சூழலில் நான் வெகுவாய் ரசித்த என் வீட்டு ஜன்னலெட்டி ஏன் பாக்குற?, இளவேனிற்காலப் பஞ்சமி, தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் போல இன்னும் சிலப் பாடல்களைப் பற்றி கரையோரத்தென்றலில் தனிப்பதிவாகப் போடுகிறேன்.

கோவையில் கல்லூரியில் சேர்ந்த பிறகு விடுதியில் தங்கியிருந்ததால் ஆண்டுக்கொருமுறை அறைமாறுவோம். நான் இரண்டாமாண்டே விடுதியை விட்டு வெளியேறிவிட்டாலும் (உண்மையைச் சொன்னால் வெளியேற்றி விட்டார்கள் :) ) நண்பர்களோடு எப்பொழுதும் உள்ளேதான் தங்கியிருந்தேன். ஒவ்வோர் ஆண்டும் வந்தப் படங்களில் சில பாடல்கள் அந்தந்த ஆண்டின் நினைவுகளை மீட்டும். சிநேகிதியே/தெனாலி தான் கல்லூரி வந்தபிறகு பார்த்த முதல் படம். ராதை மனது ராதை மனது பாடல் இன்னுமும் கல்லூரியின் முதல் சில வாரங்களின் நினைவுகளையேத் தந்துகொண்டிருக்கிறது. டும் டும் டும், துள்ளுவதோ இளமை பாடல் கேட்கும்போதெல்லாம், தேநீர் குடிக்கும்போது வந்து மொய்க்கிற ஈக்களுக்காக தனியே கொஞ்சம் தேநீர் ஊற்றி வைத்த புத்திசாலி/இரக்கமுள்ள சீனியர், அத்தான் வருவாக பாடலுக்கு தமிழ் புரியாத ஒருவனுக்கு நான் சொன்ன இல்லாத அர்த்தங்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன. இப்படி ஒவ்வோராண்டுக்கும் கொஞ்சம் பாடல்கள். சொன்னால் தீராதவை :)

கடைசியாக இந்த மாதிரி காலங்களை மீட்டு வரும் மாதிரியான பாடல்களாக எனக்கு அமைந்தவை ‘ பார்த்த முதல்நாளே’, ‘முன்பே வா அன்பே வா ‘ – இரண்டு பாடல்களும். கடந்த ஆண்டு பெங்களூரில் இருந்த அழகான நாட்கள் அவை. அதிகம் வேலையிருக்காது. அந்த குளிரை ரசித்தபடி வலையில் எதாவது வாசித்துக் கொண்டே இருக்கலாம். பின்னணியில் இந்த இரண்டு பாடல்களும் இசைந்து கொண்டிருக்கும். கடந்த வருடம் எழுதிய பல காதல் கவிதைகளை இந்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டேதான் எழுதினேன். பெங்களூரில் இருந்தவரை ‘பார்த்த முதல் நாளே’ தான் என் மொபைலின் காலர் ட்யூனும் கூட. அதன் பிறகு மும்பையில் இருந்த கொஞ்ச காலத்தையும் கண் முன்னே நிறுத்தும் இந்தப் பாடல் அட்னன் சாமி பாடியது!

என்னவளே படத்தில் ஒரு பாடல் வரும். “ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கும் நெஞ்சே” என்று…எனக்கு அது ரொம்பவேப் பொருந்தும். உங்களுக்கு எப்படி?

 

written by அருட்பெருங்கோ \\ tags: ,

Jan 26
“கோ, உன்னதான் இந்த வாரம் தமிழ்மணத்துல நட்சத்திரமா தேர்ந்தெடுத்திருக்காங்களாமே. என்ன சொல்லப் போற?”

“என்னத்தங்க சொல்றது. இது எனக்கு வந்த சோதனையா? இல்ல படிக்கிறவங்களுக்கு வந்த சோதனையானு யோசிச்சுட்டு இருக்கேன்!”

“என்னப்பா? உன்ன மதிச்சு நட்சத்திரமாக்கியிருக்காங்க. நீ இப்படி சொல்ற”

“அய்யயோ. நான் தப்பா எதுவும் சொல்லலங்க. எப்பவும் நான் பாட்டுக்கு ஒரு ஓரமா கண்ணே, மணியே னு கவுஜ மட்டும் எழுதிகிட்டு இருந்தேன். அத மட்டும் படிக்கிறவங்கப் படிச்சுட்டுப் போயிடுவாங்க. நட்சத்திரமாகிட்டா இன்னும் கொஞ்சம் அதிகமா வந்து வாசிப்பாங்களே. இந்த வாரமும் எப்பவும் போல அன்பே, ஆருயிரே னு எழுதினா புதுசா படிக்க வர்றவங்களுக்கும் ஏமாற்றம்தான். வேற எதாவது எழுதலாம்னு பார்த்தா எனக்கு ஓரளவுக்குத் தெரிஞ்சதே அது மட்டும்தான். அதான் அப்படி சொன்னேன்”

“இந்தப் பதிவுக்கு மட்டும் “நட்சத்திர வாழ்த்துகள்” அப்படினு அதிகமா கொஞ்சம் பின்னூட்டம் வரும். அதுக்கு இத்தன பில்டப்பா? சரி அத விடு… நீ(யெல்லாம்) எதுக்கு வலைப்பதிவ ஆரம்பிச்ச?”

“இணையத்துல இலவசமா கிடைக்குதுன்னு சொன்னாங்க. சரினு ஒன்ன ஆரம்பிச்சுட்டேன் ;-) அது வந்துங்க, என்னோட கல்லூரி காலத்துல எப்பவுமே படிக்கிறதுக்கு ஏதோ ஒரு புத்தகம் (ஓசில தான்) கெடச்சுடும். படிக்க, கும்மியடிக்க னு என்ன மாதிரியே உருப்படாததுங்க எல்லாம் ஒன்னாவே சுத்துவோம். பொழுதும் போச்சு. கல்லூரி முடிச்சுட்டு வேலைல சேர்ந்தபின்னாடி ஒரு நாலு மாசம் பயிற்சின்னு சொல்லி மைசூர்ல சக்கையாப் பிழிஞ்சாங்க. அடுத்த நாலு மாசம் வேலையே கொடுக்காம கொல்ட்டி தேசத்துல சும்மா உட்கார வச்சிட்டாங்க. படிக்கிறதுக்கும் ஒன்னும் கிடைக்கல. கூடவும் நம்ம கூட்டாளிப் பயலுக ஒருத்தனும் இல்ல. சும்மா இருந்த நேரத்துல இணையத்துல மேஞ்சப்பதான் தமிழ்மணம், இ-கலப்பை எல்லாம் அறிமுகமாச்சு. ஒரு பக்கம் பதிவுகளுக்கு வாசகனா இருந்துகிட்டே, இன்னொரு பக்கம் +2 காதல், காதல் பயணம் னு கதைகள எழுதி நம்ம கூட்டாளிகளுக்கு மட்டும் மடல்ல அனுப்பிக்கிட்டு இருந்தேன். அதுல ஒரு ரணம்விரும்பி, இதையெல்லாம் வலைப்பதிவுல போட்றா மச்சான்னு உசுப்பேத்த (அவனத்தான் தேடிட்டு இருக்கீங்களா? கூட்டாளிய காட்டிக் கொடுக்கமாட்டோம்ல ;-) ) ஒரு சுபயோக சுபதினத்துல நானும் வலைப்பதிய ஆரம்பிச்சு ரெண்டு வருசம் ஓடிப்போச்சு. இதுதாங்க நான் வலைப்பதிய ஆரம்பிச்சதோட வரலாறு, புவியியல் எல்லாம்”

“அது சரி. ஒரே விசயத்த மட்டும் திரும்ப திரும்ப எழுதறயே. உனக்கே சலிக்கல?”

“என்னப் பண்றது வேற எதுவும் எழுதத் தெரியலையே :(

“ப்ரொஃபைல்ல உன்னோடப் படத்தப் போடாம, காதல் னு எழுதி வச்சிருக்கியே நீயென்னா லூசா?”

“கி..கி..கி… நான் வலைப்பதிவ ஆரம்பிச்சப்போ கருப்பு நிறத்துலதான் பின்னணி நிறம் வச்சிருந்தேன். அதுல என்னோட புகைப்படத்தயே போட்டிருந்தா கண்டிப்பா என் முகம் தெரிஞ்சிருக்காதுங்க. அதனாலதான் அப்போதைக்கு கருப்பு பின்னணியில வெள்ளைல எழுதியிருந்தது பிடிச்சிருந்ததால அத வச்சேன். அப்புறம் தமிழ்மணத்துல வரும்போது புகைப்படமும் தெரியுமாம்ல. சரி ‘காதல்’ னு இருந்தா நெறைய பேர் வாசிப்பாங்கனு பாத்தா அந்த வார்த்தைய பார்த்ததும் தெறிச்சு ஓடினதுதான் நெறைய பேர்னு நெனைக்கிறேன். ஆனா அந்தப் படத்துனால என்ன காதல் கவுஜன் னு கொஞ்சம் பேர் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அது வேற விசயம் ;-)

“இப்போ மட்டும் எதுக்கு உன்னோட புகைப்படத்த போட்டுட்டியாம்?”

“இந்த வாரம் நீ நட்சத்திரமாகிட்டதால உன்னோட வலைப்பதிவுக்கு நெறைய திருஷ்டி வர வாய்ப்பிருக்கு. அதப் போக்கனும்னா வலைப்பதிவோட மூலைல ஒரு திருஷ்டி பொம்மைய தொங்கவிடுன்னு சிவல்புரி சிங்காரம் தனி மடல்ல கேட்டுகிட்டாரு. அதான் :-)

“சரி சரி இந்த வாரமாவது வழக்கமாப் போட்ற மொக்க கவுஜைய விட்டுட்டு உருப்படியா எதாவது எழுது”

“உருப்படியா எழுத முயற்சி பண்றேன். ஆனா கவுஜ எழுதலன்னா எனக்கு மனசு நடுங்குமே”

“உன்னையெல்லாம் திருத்த முடியாதுடா”

“கி..கி..கி…நீங்க யாருன்னு சொல்லவேயில்லையே”

“கண்ணாடியப் போயிப் பாரு”

—-

ஆரம்பமே படு மொக்கையா இருக்கா? அப்படின்னா இதப் பாருங்க!

அடுத்த நட்சத்திரப் பதிவு மாலை நான்கு மணிக்கு ;-)

 

written by அருட்பெருங்கோ \\ tags:

Jan 07
பிப்ரவரி மாதப் பதிவுகளுக்காக மல்லாக்கப் படுத்து விட்டத்தை வெறித்தபடி சில காதல் கவிதைகளை யோசித்துக் கொண்டிருந்த போது

கோபித்துக் கொண்டு
என்னோடு நீ பேசுவதில்லையென
முருகனிடம் முறையிடப்
போனால்
அவனோ,
இரண்டு நாட்களாய்
வள்ளி தன்னிடம்
பேசுவதில்லையென
மயிலிடம் புலம்பிக் கொண்டிருக்கிறான்.

இப்படி ஒரு கவுஜையை எழுதி அறைத் தோழனிடம் காட்டிய போது ‘நல்லாதான் இருக்கு. ஆனா இது கவிதை எழுத வேண்டிய சரக்கு இல்ல. இதையே வச்சி ஒரு கதை எழுது’ என்று சொன்னபொழுது அதை எப்படி கதையாக்குவது என்ற யோசனை துவங்கியது. அப்போதுதான் சர்வேசனின் நச்சுனு ஒரு கதை போட்டி அறிவிப்பும் வந்திருந்தது. அவசரமாக, காதலனுக்கும் காதலிக்கும் ஊடல் போலவும் அதனைத் தீர்க்க காதலன் கோவிலுக்கு போகும்போது அங்கே முருகனும் இதே மாதிரி புலம்பி கொண்டிருப்பதைப் போல ( ஒருவரியில சொல்லும்போதே சிரிப்பு வருதா? விடுங்க ;-) ) வும் எழுதி அறைத் தோழனுக்கு மட்டும் அனுப்பினேன். ‘ரொம்ப கேவலமா இருக்கு’ என்று சொல்லக் கூச்சப் பட்டுக்கொண்டு நான்கைந்து வாக்கியங்களில் அதனையே மென்மையாக சொல்லியிருந்தான். மீண்டும் அதேக் கதையை முருகனே சொல்லுவதுபோல (ஆனால் சொல்லுவது கடவுள் முருகன் தான் என்பது கடைசியில் தெரிவது போல) ஊடல் என்ற பெயரில் கதையாக எழுதி சில நண்பர்களுக்கு மட்டும் அனுப்பியிருந்தேன். கொஞ்சம் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனாலும் ‘திருப்பம் இருக்கிறது. ஆனால் கதையில் ஏதோ குறைவது போல இருக்கிறது’ என்று நண்பர் நந்தா சொன்னது உண்மை போல இருந்தது. மீண்டும் ஒருமுறை அதனை வாசித்துப் பார்த்தால் முதன் முறை இருந்த அந்த ஆர்வம் இல்லை. என் கல்லூரி நண்பர்களும் ‘இது நல்லாதான் இருக்கு. ஆனா உங்கிட்ட இருந்து இதவிட இன்னும் நல்ல கதைய எதிர்பாக்குறோம்’ என்று உசுப்பேத்த, அந்தக் கதையை வலைப்பதிவில் இட்டிருந்தாலும் சர்வேசன் போட்டிக்கு அதனை இணைக்கவில்லை.

அதன் பிறகு ‘அஞ்சலி’ என்றொரு கதையை எழுதி சில நண்பர்களுக்கு மட்டும் மடலில் அனுப்பியிருந்தேன். பாதி பேர் நன்றாக இருந்தது என்றும் பாதி பேர் மொக்கை என்றும் சொல்லவும் அனுப்பலாமா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. முன்பு உசுப்பேத்திய நண்பர்களுள் ஒருவன், ‘இது மாதிரி ஒரு மொக்க கதைய உங்கிட்ட இருந்து எதிர்பார்க்கல’ என்று சொல்லவும், ‘பழைய காலத்து வார இதழ்களில் வரும் கதை போல இருக்கிறது’ என்று பிரேமும் சொல்லவும் அந்தக் கதை மடலோடு மடிந்துபோனது. வலைப்பதிவேறவில்லை.

இறுதியாக ஒரு தொடர்கதையாக எழுத வைத்திருந்த கருவை முடிந்தளவுக்கு சுருக்கி சென்னைக் காதலும் திருச்சிக் காதலும் என்ற பெயரில் எழுதி நண்பர்கள் சிலருக்கும், பண்புடன் குழுமத்திற்கும் அனுப்பியிருந்தேன். கதையில் இருந்த சில குறைகளை பண்புடன் நண்பர்கள் அபுல்ஃபாசல் அவர்களும், பிரேம் அவர்களும் சுட்டிக் காட்ட அவற்றை சரி செய்து மீண்டும் பதிவிட்டேன். போன கதையை மொக்கையென்ற நண்பனும் கூட இதனைப் பாராட்டியிருந்தான். முடிவை இன்னும் கொஞ்சம் சுருக்க சொல்லியிருந்தான். ஆனால் செய்யாமல் விட்டு விட்டேன். கதை மிகவும் நீளமாக இருந்தது என்பதையே பலரும் குறையாக சொல்லியிருந்தார்கள். வலைப்பதிவில், பதிவின் நீளத்தைப் பார்த்து படிக்கத் துவங்கும் ரகம் தான் நானும் :) மக்கள் வாசிப்பார்களா என்பதே சந்தேகமாகத் தான் இருந்தது. சர்வேசனும் கூட போட்டி விதிகளுள் கதை “சிறு”கதையாக இருக்க வேண்டுமென்று சொல்லியிருக்கவும் அவரிடமே கேட்டிருந்தேன் இதனை சேர்க்கலாமா? என்று. ‘நச்’க்காக கண்டிப்பாக சேர்க்கலாம் என்று சொல்லி அவரும் இணைத்துக் கொண்டார்.

போட்டியில் இணைக்கப் பட்டிருந்த எல்லாக் கதைகளையும் வாசித்த பிறகு இன்னும் சிறியதாக எழுதியிருக்கலாமோ என்ற எண்ணம் வராமலில்லை. முக்கியமாக மோகன் தாஸ், அரைபிளேடு, நாடோடி இலக்கியன், பெனாத்தல் சுரேஷ், இலவசக்கொத்தனார் ஆகியோரது கதைகளை வாசித்த போது அவை சிறியதாகவும், சிறப்பானதாகவும் தோன்றின.

ஆனாலும் எப்படியோ தப்பித்து முதல் கட்ட தேர்வில் தேறி இறுதி கட்டத்திற்கு வந்த போது, நடுவர்களும் மதிப்பிடுவார்கள் என்றதும் “இந்தப் பிரதியின் கருத்தியலில் உள்ள நுண்ணரசியல் சமூகக் கேடானது”, “மற்றுமொரு வார இதழ் பாணியிலான காதல் கதை” இந்த மாதிரி எதாவது நடுவர்கள் கதையைத் துவைத்து விடுவார்களோ என்று தான் நினைத்துக் கொண்டேன் :) ஆனால் நடுவர்களும் சிறப்பான மதிப்பெண்கள் கொடுத்து ஊக்கப் படுத்திவிட்டார்கள்!!!

உண்மையில் வாக்குகள் எதிர்பார்ப்புக்கும் அதிகமாகவே விழுந்திருந்தன. ஆரம்பம் முதலே நல்ல விமர்சனங்களைத் தந்த எனது அறைத்தோழன், கல்லூரி நண்பர்கள், அலுவலக/மின்மடல் சகோதரிகள் ( போட்டியப் பத்தி, தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் பிரச்சாரம் பண்ணின அளவுக்கு பாசக்காரத் தங்கச்சிங்க), சுவரொட்டி ஒட்டாத குறையாக விளம்பரம் செய்த நண்பர் பிரேம்குமார், “நம்ம கதைல காதல் இருக்கு செல்லம். கண்டிப்பா ஜெயிக்கும் :) ” என்று உற்சாகப் படுத்திய நண்பன் ஸ்ரீ, கதையை சீர்படுத்தி,ஊக்குவித்த பண்புடன் குழும நண்பர்கள் – அபுல், ப்ரியன், எழில் இன்னும் பலர், பின்னூட்டமிட்டு, மடலனுப்பி வாழ்த்திய வலைப்பதிவர்கள்/வாசகர்கள், வாக்களித்த வாக்காளர்கள், நடுவர்கள் அனைவருக்கும் நன்றி.

புத்தாண்டில் ஓர் இனிய துவக்கமாக இது அமைவதற்கு வாய்ப்பளித்த சர்வேசனுக்கு பாராட்டுகள் கலந்த நன்றி.

முன்பே சொல்லியிருந்தால் நானும் வாக்களித்திருப்பேனே என்று கடிந்து கொண்ட பாசக்கார நட்புகளுக்கும் நன்றி :)

பிகு – எதுக்கிப்போ இவ்வளவு ஆர்ப்பாட்டம்னு கேட்காதீங்க :) எழுதிய மூன்றாவது சிறுகதைக்கே ஒரு அங்கீகாரம் கிடைச்ச மகிழ்ச்சி வேற ஒன்னுமில்ல ;-) முதல் இரண்டு சிறுகதைகளும் கூட ஓரளவுக்கு நச் கதைகள் தான். படித்துப் பாருங்கள் – ஒரு குட்டிக் காதல் கதை , ஊடல்

written by அருட்பெருங்கோ \\ tags: ,

Nov 04

முன்னலாம் கல்யாண வீடுகள்ல ஒவ்வொரு வேலையையும் செய்யறதுக்குனு சொந்தக்காரங்கள்ல சில நிபுணர்கள் இருப்பாங்க.

ஸ்டோர் ரூம் பாத்துக்கிறதுக்குனு ஒருத்தர் இருப்பார். சமையல் காரங்க சொன்ன அளவவிட கொஞ்சம் அதிகமாவேதான் நாம பொருட்கள் எல்லாம் வாங்கிப் போடுவோம். அத அளவா வேணுங்கும்போது மட்டும் கொஞ்சம் கொஞ்சமா ரிலீஸ் பண்ணி கால்வாசிப் பொருட்கள மிச்சம் பண்ணி கல்யாணம் முடிஞ்சதும் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துடுவாங்க இந்த ஸ்டோர் கீப்பர்ஸ்.

அப்புறம் பந்தி பரிமாறுவதும் ஒரு கலை. வரிசையா ஒவ்வொரு ஐட்டமா வச்சிட்டுப் போறதுதானன்னு சாதாரணமா நெனச்சுட முடியாது. பந்தியில பொதுவா யாருமே என்ன வேணும்னு கேட்கிறதுக்கு தயங்குவாங்க. அவங்க முகக்குறிய வச்சே என்ன வேணும்னு கேட்டுப் பரிமாறுறதுல இருந்து, எவ்வளவு பேர் சாப்பிட்டாங்க, இன்னும் எவ்வளவு பேர் வருவாங்க, என்னென்ன ஐட்டம் தீந்து போச்சு, பத்தலன்னா ரெடி மேடா என்ன செய்யலாம்? இப்படி முடிவெடுக்கிற வல்லமை படைச்ச ஆளுங்க தான் இதுக்கெல்லாம் லாயக்கு.

அடுத்தது பந்தல், மேளம், போக்குவரத்து வசதி, லைட் செட், மேடை அலங்காரம் இப்படி அததுக்குனு இருக்கிற ஆளுங்களப் பிடிச்சி சேர்க்கிறதுக்கு நல்ல வெளிவட்டார தொடர்பு இருக்கிற ஆளு வேணும். கடைசி நேரத்துல எது வேணும்னாலும் இவருகிட்ட சொன்னா போதும் எங்க இருந்தோ, எப்படினோ தெரியாது ஆனா கேட்டது கிடைச்சிடும். எப்பவும் கல்யாணம் முடிஞ்சு மண்டபத்த விட்டு கடைசியா போற ஆளு இவராத்தான் இருப்பாரு.

ஆனா இப்போ இந்த மாதிரி எல்லா வேலைகளையும் அவுட்சோர்சிங் பண்ணிடறாங்க. சமையல் + பரிமாற ஒரே காண்ட்ராக்ட். யூனிஃபார்ம போட்டுகிட்டு அவங்களும் மெசின் மாதிரி வேலைய முடிச்சிட்றாங்க. அப்புறம் மண்டபம் + மேடை + பந்தல் எல்லாம் ஒரே கணக்கில் வந்துடுது. எதுக்கும் பெரிசா அலைய வேண்டியதில்லை. ஆனா எல்லா வேலையும் இப்படி அவுட்சோர்சிங்க்ல போனாலும் இன்னமும் சொந்தக்காரங்களே பாத்துக்கிட்டு இருக்கிற வேலை இந்த மொய்யெழுதுறது மட்டும்தான். பண விசயமாச்சே… நம்மாளுங்க உசாராத்தான் இருப்பாங்க :)

தாலி கட்டின அடுத்த நொடியே மண்டப வாசல்ல ரெண்டு பக்கமும் ஆளுக்கு ஒரு டேபிள் சேர இழுத்துப் போட்டு மாப்பிள்ளை & பொண்ணு வீட்டு ஆளுங்க உக்காந்துடுவாங்க. பொண்ணு வீட்டு மொய், மாப்பிள்ள வீட்டு மொய் ரெண்டும் கலந்துடக் கூடாதுனு கொஞ்சம் உசாரா எதிர் கோஷ்டி பக்கம் போற ஆளுங்கள நோட் பண்ணிகிட்டே இருக்கனும். நாற்பது பக்க நோட்டெல்லாம் போய் இப்போ அர குயர் நோட்டு வந்துடுச்சு. ஒரு ஆள், பெயர் + தொகை எழுதிகிட்டே வர இன்னொரு ஆள் பணத்த வாங்கி ஒரு மஞ்ச பைக்குள்ள போட்டுக்குவாரு.(இந்த மஞ்ச பை எப்போதான் மறையும்?) எங்க வீட்டு விசேசங்கள்ல எப்பவும் எல்லா வேலைகள்லையும் கை வச்சிட்டாலும் இந்த மொய்யெழுதுற வேலைல இப்போ கடசியா ரெண்டு மூனு கல்யாணத்துலதான் உக்காந்தேன். எனக்கு இருக்கிற பயம் என்னன்னா என்னோட கையெழுத்து பதினாலு கோழி சேந்து கிறுக்கின மாதிரியே இருக்கும். அத அந்த மொய்நோட்டுல காலத்தால் அழியாச்சின்னமா வைக்கனுமாங்கறதுதான். ஆனா பழைய மொய் நோட்டுகளப் பாத்த பின்னாடி என் கையெழுத்து எனக்கே அழகா தெரிஞ்சது. அப்புறம் துணிச்சலா உக்காந்தாச்சு. இப்ப போன மாசம் தங்கச்சி (சித்தப்பா பொண்ணு) கல்யாணத்துல மொய் எழுத உக்காந்தப்ப அத ஒரு பதிவா போடுவேன்னு நெனைக்கல ;-)

மொத பேரு எழுதும்போதே கஷ்டமாப் போச்சு. பேர ஏழுமலை னு சொன்னா எனக்கு ஏழுமலைனு எழுத வர மாட்டேங்குது. Ezumalai னு எழுதப் போறேன். மொத பக்கம் ஒரு இருபது பேர் எழுதின பின்னாடிதான் தமிழ் கொஞ்சம் தானா வர ஆரம்பிச்சுது. இனிமே அப்பப்போ தமிழ்ல பேனா எடுத்து எழுதனும்.

ஆனா கிராமத்து ஆளுங்க இன்னமும் தமிழோடதான் இருக்காங்க. பேர் சொல்லும்போது ஒருத்தர் ஆவன்னா திருஞானம் னு சொன்னார். நானும் ‘ஆவன்னா திருஞானம்’னே தான் எழுதினேன். அவரு தம்பி ஆவன்னா தலையெழுத்துப்பா ன்னாரு. தலையெழுத்தா? இவருக்கு தலையெழுத்து கூட தெரிஞ்சிருக்குமோனு பாத்தா இனிசியல தான் தலையெழுத்துனு சொல்றாருனு புரிஞ்சது. அப்புறம் அவர் பேர ஆ. திருஞானம்னு ஒழுங்கா எழுதியாச்சு. தலையெழுத்த அதாங்க இனிசியல இன்னமும் தமிழ்ல சொல்ற ஆளுங்களும் இருக்காங்க.

இன்னொருத்தர் பேர சொல்லிட்டு ‘முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்’னு அடுப்புக்குள்ள போடுங்கன்னாரு. எந்த அடுப்புக்குள்ள போட்றதுன்னு நான் முழிக்க, அவர் திரும்ப திரும்ப அடுப்புக்குள்ள போடுங்க அடுப்புக்குள்ள போடுங்கன்னே சொல்லிட்டு இருந்தாரு. எனக்கு அப்புறம் தான் புரிஞ்சது அவர் அடப்புக்குள்ள ( இந்த மாதிரி அடைப்புக்குறிக்குள்ள:-) ) போட சொல்றாருன்னு. நாந்தான் இன்னும் ப்ராக்கெட்டுக்குள்ள போட்டுட்டு இருக்கேன் :(

இன்னொரு பாட்டி வந்தாங்க. ‘யாரு சின்னபுள்ளயோட சின்ன மவனா? நல்லாருக்கியா கண்ணு’னு கேட்டுட்டு சுருக்குப் பையில இருந்து பணத்த எடுத்து கொடுத்துட்டு தாத்தா பேர்ல எழுதீருனு சொல்லிட்டாங்க. நான் காலேஜ் சேந்த பின்னாடி எங்க வீட்டுக்குப் போறதே எப்போவாதுதான். சொந்த கிராமத்துக்குப் போய் பல வருசமாச்சு. சொந்தக்காரங்க பேரு, உறவுமுறையெல்லாம் அம்மாகிட்ட அடிக்கடி கேட்டுதான் ரெப்ரஷ் பண்ணிக்குவேன். இவங்களே எந்த பாட்டி, அம்மா வழி சொந்தமா, அப்பா வழி சொந்தமானு ஒன்னும் புரியல. இதுல தாத்தா பேருக்கு நான் எங்க போறது? தாத்தா பேரு என்னனு அவங்க கிட்டவே கேட்கிறதுக்கும் தயக்கமா இருந்துச்சு. எப்பவும் ஒரு மூலைல அமைதியா இருந்தாலும் அப்பப்போ என் மூளையும் வேலை செய்யும். ‘தாத்தாவோட முழுப் பேரு (என்னமோ பாதிப் பேரு எனக்குத் தெரிஞ்சுட்ட மாதிரி) என்னம்மாயி?’ னு கேட்டேன். (அந்த பாட்டி எனக்கு அம்மாயி முறையா அப்பாயி முறையானும் தெரியல) நல்லவேளை பாட்டிக்குத் துணையா வந்த ஒரு அக்கா தாத்தாவோட முழுப் பேர சொல்லிக் காப்பாத்திட்டாங்க. அப்புறம் ஊர்ப்பேரயும் நான் கேட்டதும் ‘ஒம் பேரன் ஊர் பேரு கூட தெரியாத மாதிரி கேக்குது பாரு’னு சொல்லி சிரிச்சுட்டு அந்த அக்காவும் கைவிரிச்சுட்டுப் போய்ட்டாங்க. எனக்கும் ஒரு வழியும் தெரியல. தாத்தா பேருக்கு முன்னாடி அம்மா சொந்த ஊரையும், பின்னாடி அப்பா சொந்த ஊரையும் போட்டுட்டேன். ரெண்டுல ஒரு ஊராதான் கண்டிப்பா இருக்கும் :-)

அப்புறம் ஒருத்தர் வந்தாரு. ‘பொனாசிப்பட்டி நரசிங்கபுரம் வடக்குத் தோட்டம் சொக்காஞா பெரிய மவ வூட்டுப் பேரன், கான்னா ராமலிங்கம், தாய் மாமன் பணமாக எழுதிக்கொண்டது…’ னு ஒரு தொடர்கதை எழுதற மாதிரி சொல்லிக்கிட்டே போறாரே ஒழிய நிறுத்தமாட்டேங்கறாரு. அவரு பேர எழுதுறதுக்கே தனியா மொய் வசூலிச்சிருக்கனும்.

அப்புறம் இப்போ புதுசா இன்னொன்னு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. பணத்த ஒரு கவருக்குள்ள போட்டு வெளிய ஊரு பேரு எல்லாம் தெளிவா எழுதிக் கொடுத்துட்றாங்க. நமக்கும் அது வசதிதான். ஆனா என்ன… உள்ள பணம் இருக்குதான்னு கொஞ்சம் பாத்துக்கனும் :-) அப்படிதான் ஒருத்தரு வந்தாரு கையில ஒரு ஏழு கவரோட. தம்பி அமவுண்ட் கரெக்டா இருக்கானு பாத்துக்கப்பானு பக்கத்துலையே நின்னுட்டாரு. கவருக்கு வெளிய குறிச்சிருந்த தொகையும் உள்ள இருக்கிற பணமும் சரியா இருக்கானு ஏழு கவர்லையும் சரி பாத்துட்டு சரியா இருக்குண்ணே னு சொன்னேன். போகும்போது கேட்டாரு. இது மாப்பிள்ள வீட்டு மொய் தான னு. அத மொதல்லையே கேட்டிருக்கலாம்ல? ‘இது பொண்ணு வீட்டு மொய்ணே மாப்பிள்ள வீட்டு மொய் அந்தப்பக்கம்’னு சொல்லி அனுப்பிட்டேன். அவர் கிட்ட ஆமான்னு சொல்லியிருந்தா சித்தப்புக்கு ஒரு அமவுண்ட் லாபம் தான் ;-) ஆனா விட்டுட்டேன்…

இதனால நான் சொல்ல வர்றது என்னன்னா அடுத்த முறை சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போனா மொய் வைக்கிறீங்களோ இல்லையோ மொய் எழுதுங்க, இந்த மாதிரி ஒரு மொக்கப் பதிவு போடறதுக்காகவாவது பயன்படும் :-)

written by அருட்பெருங்கோ \\ tags: , ,