தீப்பெட்டியென
நிலையாய் உன் நினைவு.
தீக்குச்சியாய்
உரசி உரசி எரியும் மனது.

*

என்னுடன் வாழாமல்
என்னில் வாழத்தான்
பிரிந்தாயா?

*

என் சொற்களுக்கும்
உன் மவுனத்திற்குமான இடைவெளியில்
புதைக்கப்பட்டது நம் காதல்.

*

உன் நினைவு
வரும்பொழுதெல்லாம்
உன்னை மறந்து விடுகிறேன்.

*

இரவுதோறும் வரும்
பகல் கனவு நீ!

***

வெறும் உவமை மட்டுமே கவிதையாக முடியுமா? மலரைப்போன்ற முகம், இசை மாதிரி குரல், கவிதை மாதிரி பெண் – இந்த கிளிஷேக்கள் எல்லாம் சலித்துப்போனாலும் சில உவமைகள் காலம் கடந்தும் நிற்கின்றன. பொருட்களை உவமையாக காட்டுவதைக் காட்டிலும் நிகழ்வுகளை உவமையாகக் காட்டுவது கவித்துவத்தோடு இருப்பதாகப்படுகிறது.

குறுந்தொகையில் பிரிவுத்துயரைச்சொல்லும் ஒரு பாடலில் வரும் உவமை :

‘மக்கள் போகிய அணிலாடு முன்றிற்
புலம்பில் போலப் புல்லென்று அலப்பென்’

மக்கள் சென்றபிறகு முற்றத்தில் அணில் விளையாடும் தனிமை/வெறுமை நிறைந்த வீட்டைப்போல தனிமையில் வாடுவதாக தலைவி வருந்துகிறாள்.

அணில் விளையாடுவது பெரிய உவமையா? எனத் தோன்றக்கூடும். ஆனால் அணிலின் இயல்பு மக்கள் இருக்குமிடங்களில் நெருங்காமல் இருப்பதுதான். அத்தகைய அணில் முற்றத்தில் துள்ளி விளையாடுகிறது எனும்போது மக்கள் இல்லாமல் அந்த வீடு நெடுங்காலம் வெறுமையாகக் கிடக்கிறதென்பதைப் புரிந்து கொள்ளலாம்.

கரூரில் நாங்கள் கடந்த ஆண்டு புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்த பிறகும் சில பொருட்கள் மட்டும் பழைய வீட்டிலேயேக் கிடந்தன. அடுத்து யாரும் குடி வராத அந்த அரசு குடியிருப்புக்கு ஒரு மாதம் கழித்து சென்ற போது இந்த சங்க காலத்துப் பாடலில் வரும் உவமை நிகழ்வு அங்கு கண்ணெதிரே நிகழ்ந்து கொண்டிருந்தது. சமையலறை அடுக்குகளில் பிறந்த குழந்தையின் பிஞ்சுக்கரம் போல மென்மையான கூடு கட்டிக்கொண்டு அணில்கள் விளையாடிக்கொண்டிருந்தன. எங்கள் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு அணில்களின் வீட்டை அணில்களிடமே விட்டுவிட்டுத் திரும்பினோம். அன்று, அந்த அழகான உவமை, அழகான காட்சியாகியிருந்தது.

இந்த பாடலின் ஆசிரியர் பெயர் தெரியாததால் இந்த உவமையாலேயே ‘அணிலாடு முன்றிலார்’ என அவருக்கு பெயர் வைத்துவிட்டார்கள்!

குறுந்தொகை – பாலைத்திணை – பாடல் எண் 41

காதலர் உழையர் ஆகப்பெரிது உவந்து
சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற
அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றிற்
புலம்பில் போலப் புல்லென்று
அலப்பென் – தோழி! – அவர் அகன்ற ஞான்றே.

- அணிலாடு முன்றிலார்

(எனக்குத் தெரிந்த) பொருள் :

காதலன் அருகிலிருக்கும்பொழுது, திருவிழா நடக்கும் ஊரைப்போல பெரிதும் மகிழ்ந்தேன். அவன் விலகிய நாளில், நெறி நிறைந்த நல்லவர் வாழும் ஊரில், மக்கள் சென்றபிறகு முற்றத்தில் அணில் விளையாடுகிற துயரமான வீட்டைப்போல தனிமையால் அழகழிந்து வாடுகிறேன்.

Related Posts...

  • கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன
    உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே இனிப்பாய் இருக்கிறது. நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய் நினைத்துக்கொள்வது!...
  • குறுங்கதையும் குறுந்தொகையும் – 2
    ‘வரும்போது குட் ந்யூசோட வரனும். ஓக்கே வா?' 'பாப்போம் பாப்போம்' தோழிகள் வழியனுப்ப, சிரித்துக்கொண்டே இளா கையசைக்க, எழும்பூரில் இருந்து மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் கிளம்பியது. அப்பர் பெர்த்திலேறி படுத்துக்கொண்டாலும் தூக்கம் வரவேயில்லை. நாளை முதன்முறைய...
  • எதனெதற்கோ இழுத்துச் செல்லும் மனதில்
    ‘காலைவணக்கம்’ சொல்லிக்கொண்டு வந்த மடலில் சிரித்தபடி அமர்ந்திருந்தது ஒரு குழந்தை. குழந்தையைப் பார்த்ததும் பால்யம்... பள்ளிக்கூடம்... தமிழய்யா... தமிழ்... என்றும், தமிழை நினைத்ததும் கவிதை... இலக்கியம்......
  • தப்பித்துச் சென்று சிறைபடுதல்
    எவருக்கும் அனுமதியற்ற எனது அறைச்சுவரெங்கும் ஆணியில்லாமல் தொங்குகின்றன உனது புகைப்படங்கள். ஒன்றில் சிரிக்கிறாய். ஒன்றில் சிணுங்குகிறாய். ஒன்றில் பயப்படுகிறாய். ஒன்றில் முகம்புதைத்து அழுகிறாய். ஒன்றில் தூர விலகி நடக்கிறாய். ...
  • குறுங்கதையும் குறுந்தொகையும் – 1
    அகவன் மகளே அகவன் மகளே மனவுக்கோப்பன்ன நன்னெடுங்கூந்தல் அகவன் மகளே பாடுக பாட்டே இன்னும் பாடுக பாட்டேஅவர் நன்னெடுங்குன்றம் பாடியபாட்டே. - அவ்வையார். “குறி சொல்பவளே! குறி சொல்பவளே! நல்ல நீண்ட கூந்தல் கொண்ட குறிசொல்பவளே! மீண்டும் சொல்! அவன் வ...

23 Responses to “பகல் கனவு – குறுந்தொகை – அணிலாடுமுன்றில்”

  1. /என்ன சொல்றதுன்னே தெரியல
    ரொம்ப அழகான பதிவு./

    நன்றிங்க தீக்ஷண்யா.

    /எவ்வளவு உண்மையான வார்த்தை! பிர்வுத்துயர் உணர்ந்தோர்க்கு இந்த வாக்கின் உண்மை விளங்கும்!/

    ம்ம்ம்!

    /வெறுமை என்னும் வார்த்த்தையின் பொருள் பிரிந்த காதலில் முழுமையாக உணரப்படும்!

    அருமையான வார்த்தைகளின் தேர்வுக்கு வாழ்த்துக்கள்.
    நல்ல பதிவு./

    மீண்டும் நன்றிகள் தீக்ஷண்யா!

  2. ‘நல்ல’ மறுமொழிக்கு நன்றிங்க செல்வா :)

  3. Just now came across ur blog,seems to be of interest.my blog http://www.muniappanpakkangal.blogspot.com, written in spoken tamil interestingly.Go thru my website also.Feedback on ur blog soon.Dr.V.Mohan,ok.

Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout
Press F12 to toggle between English and Tamil
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD