பார்வைகளை எனக்களித்துவிட்டு
வெறும் கண்களை மட்டும் வைத்துக்கொண்டு
என்ன செய்வான்?

*

எப்பொழுதும் கண்களையேப் பார்க்கிறானே
என்னைக் காதலிக்கிறானா?
கண்ணைக் காதலிக்கிறானா?

*

தினமும் பார்வையை வாங்கிக்கொண்டு
வெட்கத்தைக் கொடுக்கிறேன்.
மறுநாள் சந்திப்பிலோ வாங்கிய பார்வை அவனிடமும்
கொடுத்த வெட்கம் என்னிடமுமே மிஞ்சுகிறது.

*

ஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.
என்னிடம் இதழ்வசம் முத்தமே இல்லை.
இவனே கடன் கொடுத்தால்தான் என்ன?

*

என்ன சொன்னாலும் தலையாட்டுகிறவனை சீண்டுவதற்காகவே
‘சண்டை போடலாமா?’ என்று கேட்டால்…
‘சண்டையெல்லாம் கூடாது’ என்று சண்டைக்கு வராமல்
அதற்கும் ‘சரி’யென்று தலையாட்டுகிறவனிடம் எப்படி சண்டை போட?

குருதி தோய்ந்த நகங்களை நாவால் நக்கியபடி,
உயிர் குடிக்கும் உக்கிரத்துடன்
பதுங்கி பதுங்கி திரும்பவும் வருகிறது.
சிக்கிவிட்ட இரையென நடுங்குகிறேன் நான்.
இரக்கமேதுமின்றி மீண்டுமொருமுறை
என்னைக் கொன்றுவிட்டு
சலனமேயில்லாமல்
என்னருகிலேயே படுத்துறங்குகிறது உன் நினைவு.
மறுபடியும் உயிரூட்டி
மரண விளையாட்டு விளையாட!

*

நம் காதலின்
மிக நீண்ட உரையாடல்
உனது மௌனம்.

*

அழகான கவிதையாய்
நுழைந்தவள்
கனமான கவிதையை
விட்டுச் செல்கிறாய்

*

நீ. நான். காதல்.
முக்கோண விளையாட்டில்
எப்போதும் தோற்கிறோம்
நானும் காதலும்.

*

நாளை முதல்
உன்னை மறந்துவிடுவதாக சொன்னது உண்மைதான்.
ஆனால் எல்லா ‘நாளை’க்கும் ஒரு ‘நாளை’ இருக்கிறது.

நடந்து வந்து வீட்டுக்குமுன் படுத்துவிட்ட ஓவியம்போல
பக்கத்துவிட்டுப் பெண் தீட்டிவைத்த வாசல்கோலம்
மாலை வெயில் பட்டு மினுங்கிக் கொண்டிருக்கிறது.

எதிரில் வீடு கட்டுவதற்காய்க் குவித்து வைத்த ஆற்றுமணலில்
மணல்வீடு கட்டும் சிறுமிகளின் கைகளில் வழிந்துகொண்டிருக்கிறது
அடுத்த சிறுமியின் வீட்டுக்கான மணலும் அன்பும்.

போலிஸ்காரர்வீட்டின் வாசல்படியில் அமர்ந்துகொண்டு
கதைபேசும் நான்கைந்து கிழவிகளின் சிரிப்பில்
கடந்தகாலத்துக்கு நடைபோடுகிறதிந்த தெரு.

சுற்றுச்சுவரின்மீது எட்டிப்பார்த்து கீழே தொங்கும் பூஞ்செடி
கூந்தலிலெல்லாம் பூக்கள் சூடிக்கொண்டு மணப்பெண்ணென
தெருவையே வெட்கம் சுமந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

சற்றுநேரத்தில் வரப்போகிற
…தண்ணீர்லாரியினால் அழியக்கூடுமந்த கோலம்.
…மேஸ்திரியாள் துரத்தியதும் மணல்வீடுகள் மறுபடியும் வீட்டுமணலாகும்.
…போலிஸ்காரரால் நிகழ்காலத்துக்கு திரும்பிவிடும் தெரு.
…விபூதிக்காரரின் விரல்கள் கிள்ளி பூவிழந்து விதவையாகும் பூஞ்செடி.

அதனாலென்ன?
இருக்கும்வரை பார்த்துக்கொள்ளலாம்.
இல்லாது போனதும் நினைத்துக்கொள்ளலாம்.

‘காலைவணக்கம்’ சொல்லிக்கொண்டு வந்த மடலில்
சிரித்தபடி அமர்ந்திருந்தது ஒரு குழந்தை.

குழந்தையைப் பார்த்ததும்
பால்யம்…
பள்ளிக்கூடம்…
தமிழய்யா…
தமிழ்…
என்றும்,

தமிழை நினைத்ததும்
கவிதை…
இலக்கியம்…
திரைப்படம்…
இசை…
என்றும்,

இசையை நினைத்ததும்
இளையராஜா…
எஸ்பிபி…
எஸ்பிபி சரண்…
சென்னை 28…
என்றும்,

சென்னையை நினைத்ததும்
வெயில்…
கடல்…
கடற்கரை…
காதல்…
என்றும்,

எதை நினைத்தாலும்
எதனெதற்கோ இழுத்துச் செல்லும் மனதில்
அடுத்து
உன்னை நினைத்ததும்
நீ மட்டுமே நிறைகிறாய்!

எவருக்கும் அனுமதியற்ற
எனது அறைச்சுவரெங்கும்
ஆணியில்லாமல் தொங்குகின்றன
உனது புகைப்படங்கள்.

ஒன்றில் சிரிக்கிறாய்.
ஒன்றில் சிணுங்குகிறாய்.
ஒன்றில் பயப்படுகிறாய்.
ஒன்றில் முகம்புதைத்து அழுகிறாய்.
ஒன்றில் தூர விலகி நடக்கிறாய்.
இன்னும் பலவற்றில் இன்னும் பல மாதிரி.
என்னை வெறுமைக்கு துரத்துகிற பாவனையில்
தினமொன்றாய்ச் சேர்ந்து கொண்டே இருக்கிறது.

உன்னிடமிருந்து தப்பிக்கும் முடிவுடன்
எல்லாப் படங்களையும் மூட்டைகட்டி
கொல்லைப்புற ஆழத்தில் புதைத்துவிட்டு திரும்புகிறேன்.

புகைப்படங்கள் இருந்த இடத்திலெல்லாம்
உன்னை இன்னுமதிகமாய் நினைவூட்டியபடி
இப்பொழுது தொங்கிக்கொண்டிருக்கிறது
அவற்றை மூட்டைகட்டிய கணம், கனமாய்!

© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD