மேகம் உடைந்து அழும் ஒரு மழை நாளில்
கூட்டம் சுமந்த பயணியர் நிழற்குடையில்
வருகிற பேருந்துக்காக காத்திருக்கும் நீ.
வந்த பேருந்தில் இறங்கிய நான்.

பூக்களும் சிரிக்கும் மணமன்றத்தில்
மௌனங்களை உதிர்த்தபடி
மணமகளின் தோழியென நீ.
மணமகனின் நண்பனாய் நான்.

நம் இரவுரயில்கள் நின்ற சந்திப்பில்
ஆவின் கடைக்கு முன்
குழந்தைக்குப் பால்வாங்க நீ.
ஒரு தேநீருக்காக நான்.

நம் பிரிவைப் போன்றே
எதிர்பாராத கணத்தில்
எங்கேனும் இப்படி நிகழக்கூடும்
நம் சந்திப்பு.

அப்போது நேரமிருந்தால்…
என்னிதயத்திற்கும் சொல்லிக்கொடு.
எப்படி மறந்தாயென?

ஓரு காதல் பயணம் – முதல் பகுதி

தனது பெற்றோரின் நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் இடையில் நடந்தவையெல்லாம் ரசனையோடு பதிவு செய்யப்பட்டிருந்த அந்த டைரியைப் படித்துக் கொண்டிருந்தாள், அடுத்த நாள் தனது இருபத்தியோராவது பிறந்தநாளைகொண்டாட தனது அம்மாச்சி வீட்டுக்கு வந்திருக்கும் தமிழ். ஆனால் அந்த டைரியின் அடுத்தடுத்தப் பக்கங்களைப் புரட்ட புரட்ட எல்லாமே வெறுமையாய் இருந்தன. ஆர்வத்தோடு அந்தப் பழைய அலமாரியை அலசினாள். வேறு டைரிகள் எதுவும் இல்லாவிட்டாலும் ஒரு பழைய ஃபைல் கிடைத்தது. “Ilavarasi – Medical Reports” என்று மேலட்டையில் எழுதப்பட்டிருந்த அந்த ஃபைலை படிக்க ஆரம்பித்தாள். அவளுடைய அம்மா இளவரசியின் கர்ப்ப கால மருத்துவப் பரிசோதனைகளின் விவரம் அடங்கிய ஃபைல் அது.

A SINGLE INTRAUTERINE FETUS OF ABOUT 18 WEEKS SIZE. HEART PULSATIONS NORMAL. LIQUOR ADEQUATE. NO ANOMALIES.

என்று ஆரம்பித்து, மாதாந்திரப் பரிசோதனைகள், இடையில் எடுக்கப் பட்ட இரண்டு ஸ்கேன், இன்னும் பல விவரங்களோடு போய்க்கொண்டிருந்த அதில் இறுதியாக இருந்தது பிரசவத்தின் குறிப்பு. அதில்
DEATH DUE TO POST PARTUM HEMORRHAGE.. என்ற வரியைப் படித்ததும் லேசாக மயக்கம் வருவது போலிருந்தது தமிழுக்கு.முழுவதுமாய்ப் படித்து முடிக்கும்போது கடைசிப் பக்கத்தில் தமிழில் எதோ எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தாள்.
உன் இழப்புஎனக்கு பேரிழப்பல்ல…உயிரிழப்பு!
*
நீ பிறந்ததில்எனக்கும் மறுஜென்மம்.
என்று இரண்டு குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன.
ஒன்று இறந்துபோன தன் அம்மாவைப் பற்றியும், மற்றொன்று அன்று பிறந்த தனக்காகவும், தன் அப்பாவால் எழுதப்பட்டது என்பது அவளுக்குப் புரிந்தது. படித்ததும் அழுகை அழுகையாய் வரக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே “அம்மாச்சி” என்று அலறினாள்.

“என்ன பாப்பா” கேட்டுக்கொண்டே அந்த அறைக்குள் நுழைந்தார் அவளுடைய தாய்வழிப் பாட்டி.

“அம்மா எப்படி எறந்தாங்கன்னு உண்மைய சொல்லுங்கம்மாச்சி…”

சோகமாய் இருக்கும் பேத்தியைப் பார்த்ததும் கலக்கமானவர், சுதாரித்துக் கொண்டு சொன்னார்.
“என்ன பாப்பா இவ்வளவு நாள் கழிச்சு இப்போ திடீர்னு கேட்கற? உங்கிட்ட தான் சொல்லிருக்கேனே நீ ரெண்டு வயசுக் குழந்தையா இருந்தப்ப நாம எல்லாரும் ஊட்டிப் போகும்போது கார் ஆக்சிடெண்ட் ஆகி…”

“போதும்ம்மாச்சி எல்லாரும் சேர்ந்து இத்தன வருசமா என்கிட்ட பொய் சொல்லி வச்சது போதும்….ஐயோ இத்தன வருசமும் எங்கம்மா இறந்த நாளன்னைக்கா சந்தோசமா பிறந்தநாள்னு கொண்டாடிட்டு இருந்திருக்கேன்?” சொல்லிக்கொண்டிருக்கும்போதே அழ ஆரம்பித்துவிட்டாள்.

அவள் அம்மாச்சிக்கும் கண்ணீர் தானாக வழிய ஆரம்பித்தது. அழுகையின் போது அமைதியாக இருப்பதே உத்தமமென்று அமைதியாக இருந்தார் அவர்.

அவளே கேட்டாள் “ஏம்மாச்சி எங்கிட்ட மறச்சாங்க? அப்பாவும் எங்கிட்ட பொய் சொல்லிட்டாங்கல்ல”

“இல்லமா எல்லார் மாதிரியும் உன் பிறந்த நாள் அன்னைக்கு நீயும் சந்தோசமா இருக்கனும்னுதான் உங்கப்பா…”

“என்னம்மாச்சி…பிறந்தநாளன்னைக்கு நான் மட்டும்தான சந்தோசமா இருப்பேன்… நீங்க எல்லாரும் எப்படி இருந்திருப்பீங்க…ஐயோ என்னோட ஒவ்வொரு பிறந்த நாள் அன்னைக்கும் அப்பாவுக்கு எப்படி இருந்திருக்கும்?” மறுபடியும் அழுதாள்.

அவள் அம்மாச்சியோ எதுவும் பேசமுடியாமல் சோகமாய் உட்கார்ந்திருந்தார்.

“ஹாஸ்பிடல்ல தான அம்மாச்சி பிரசவமாச்சு…அப்புறம் எப்படி அம்மா எறந்தாங்க?”

“என்னத்த சொல்றது, அவ கல்யாணத்துல இருந்து எல்லாமே நல்லாதான் நடந்துச்சு…ரெண்டு பேரும் நல்லாதான் இருந்தாங்க… யார் கண்ணு பட்டுச்சோ… இப்படி அல்பாயுசுலப் போயிட்டா”

பேசிக்கொண்டே இருந்ததில் நெடுநாள் பேசாமலிருந்த கதையெல்லாம் ஆரம்பத்தில் இருந்து சொல்ல ஆரம்பித்தார்.

“உங்க அம்மாவப் பொண்ணுப் பார்க்க வந்த அன்னைக்கே உங்கப்பா பேசினதுல எங்க எல்லாருக்கும் அவர பிடிச்சுப் போயிடுச்சு… பொண்ணப் பிடிச்சிருக்கானு கேட்டதுக்கும் பொண்ணுக்குப் புடிச்சிருந்தா எனக்கும் சம்மதம்னு உங்கப்பா ஒரே வரியில சொல்லவும் உங்கம்மா அப்பவே புடிச்சிருக்குனு சொல்லிட்டா… அப்புறமென்ன அன்னைக்கே தாம்பூலமும் மாத்தியாச்சு…கல்யாணத் தேதியும் குறிச்சு பத்திரிக்கையும் அடிக்கப் போறப்ப உங்கப்பா வந்து கல்யாணத்த ஒரு வாரம் முன்னாடி வச்சிக்கலாம்னு பிடிவாதம் பிடிக்கிறார்… உங்கம்மாவோட பொறந்தநாளன்னைக்கே கல்யாணத்த வச்சிக்கனும்னு அவர் ஆசப்பட்டதெல்லாம் உங்கம்மா சொன்ன பிற்பாடுதான் எங்களுக்குத் தெரியும்…எல்லாருக்கும் உங்கப்பா மேல ரொம்ப நல்ல அபிப்ராயம் இருந்ததுனாலதான் ஐயரில்லாமத் தாலி கட்றதுக்குகூட உங்க தாத்தா ஒத்துக்கிட்டாங்க”

இந்தக் கதையெல்லாம் டைரி ஏற்கனவே அவளுக்கு சொல்லியிருந்தது.

“பொண்ண வெளியூர்ல கட்டிக் கொடுத்தா நாளுங்கெழமையும் போய்ப் பார்க்க செரமமா இருக்கும்னுதான் உள்ளூர்லையேக் கொடுத்தோம்…அப்ப உங்கப்பா வேலைக்கு தெனமும் ட்ரெயின்ல திருச்சிக்குப் போயிட்டு வந்துட்டு இருந்தார்…கல்யாணமான ரெண்டு மாசத்துலையே அவருக்கு மெட்ராசுக்கு மாத்தலாயிடுச்சு…அப்புறம் அவங்கள மெட்ராசுக்குப் போய் குடிவச்சிட்டு வந்தோம்…உங்கம்மா முழுகாம இருந்தப்ப, நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாம்னு அஞ்சாவது மாசம் நானும் உங்கத் தாத்தாவும் போறோம்… புருசன விட்டுட்டு வர முடியாதுங்கறா… அப்புறம் ஏழாவது மாசம் நாங்க போய்ப்பேசினா எங்கள அங்க இருந்துக்க சொல்றாளேயொழிய உங்கப்பாவ விட்டுட்டு வர மாட்டேனுட்டா, அப்புறம் உங்கப்பாவும் உங்கம்மாகிட்ட கெஞ்சிதான் அனுப்பி வச்சாங்க…ஹ்ம்ம்ம்… உங்கப்பா அப்படி பாத்துக்கிட்டாரு உங்கம்மாவ…” பெருமூச்சு விட்டுக்கொண்டார் அவள் அம்மாச்சி.

“ம்ம்ம்…அப்புறம்”

“அப்புறம் ஒரு மாசத்துலையே கொழந்தப் பொறக்கறதுக்கு ஆசுபத்திரில தேதிலாம் குறிச்சுக் கொடுத்துட்டாங்க… இருந்தாலும் பத்திருவது நாள் முன்னக்கூடி வந்துடலாம்னு சொன்னாங்க… அத கேட்டு உங்கப்பாவும் ஒரு மாசம் ரீவு போட்டு நம்ம வீட்டுக்கே வந்துட்டார்… எப்ப வலி வந்தாலும் ஆசுபத்திரி கூட்டிட்டுப் போறதுக்கு கார கொண்டாந்து வாசல்லையே நிப்பாட்டிக்கிட்டார்…அன்னைக்கு ஒங்கப்பாவுக்கு பொறந்தநாளு…காலையில 9 மணி இருக்கும்… உங்கம்மா லேசா வலிக்குதுனு சொன்னா… ஒடனே ஆசுபத்திரிக்கும் கூட்டிட்டுப் போயிட்டோம்… போகும்போதே சொல்லிக்கிட்டு வந்தா “நான் சொன்னமாதிரியே உங்க பிறந்தநாளன்னைக்கே நமக்கு கொழந்த பொறக்க போகுது”ன்னு… உங்கப்பாவுக்கும் சந்தோசம்தான்… அங்க பிரசவத்தப்பவும் உங்கம்மாகிட்டயேதான் உங்கப்பா இருந்தார்… அவர் கையதான் கெட்டியாப் புடிச்சிகிட்டு இருந்தாளாம் உங்கம்மா…தலப்பிரசவங்கறதால நாங்க உசுரக் கையிலப் புடிச்சிக்கிட்டு வெளிய நிக்குறோம்… நாங் கொலதெய்வத்த எல்லாம் வேண்டிகிட்டு இருக்கேன்… ஹும்… ஆனா ஒரு சாமிக்கும் கண்ணில்லாமப் போச்சே…” என்று சொல்லிக்கொண்டே அழ ஆரம்பித்தார்.
அவர் அழுவதைப் பார்த்து அவள் அழ, அவர் முந்தானையில் முகத்தைத் துடைத்தபடி அழுகையை நிறுத்திவிட்டு ஆரம்பித்தார்.
“உங்க அப்பாதான் பாவம்… பொண்டாட்டி மயக்கமாதான் இருக்கானு நெனச்சு குளிப்பாட்டின பிள்ளைய எங்ககிட்ட வெளிய வந்து காட்டிட்டு இருக்கும்போதே டாக்டருங்க கூப்பிட்டு ஏதோ சொல்லவும் இடிஞ்சுபோன மனுசனா உள்ள போனவர்தான்…அதிகம் ரத்தம்போனதால உங்கம்மா உசுர் போச்சுன்றதெல்லாம் எங்களுக்கு பிற்பாடுதான் தெரியும்… அப்புறம் உங்கப்பா வேலைய திருச்சிக்கே மாத்திகிட்டு வந்துட்டாரு… உங்க அப்பாயியும், நானுந்தான் மொத ரெண்டு வருசம் உன்னப் பாத்துக்கிட்டதெல்லாம்…அப்புறம் உன்னையும் கூட்டிட்டு உங்கப்பா மெட்ராசுக்கேப் போயிட்டார்… உங்க சித்திய அவருக்கு ரெண்டாந்தாரமா கட்டிக்கொடுக்கலாம்னு உங்க சித்தியயையும் கேட்டுட்டு அவர்கிட்ட சொல்லும்போது இளவரசிக்குத் தங்கச்சின்னா எனக்கும் தங்கச்சி மாதிரிதான்னு சொல்லி மறுத்துட்டார்… அதுவுமில்லாம வேற கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லனும் சொன்னதுக்கப்புறம் அவர யாரும் கட்டாயப்படுத்தல… எல்லாமே நேத்து நடந்த மாதிரிதான் இருக்கு…ஆச்சு இருவத்தி ரெண்டு வருசம்”

கொஞ்ச நேரம் இருவருமே அமைதியாக இருந்தார்கள்.

அவள் அம்மாச்சியே மறுபடியும் ஆரம்பித்தாள், “நாளைக்கு உனக்கு மட்டும் பொறந்தநாள் இல்லமா…உங்கப்பாவுக்கும்தான்… ஆனா உங்க அம்மாசெத்த நாளும் இதான்னு உங்கிட்ட மறச்சுட்டு, ஊர்ல வந்து உம்பொறந்த நாள கொண்டாட்றதெல்லாம் அதத்தெரிஞ்சு நீயும் இந்த நாள்ல வெசனப்படக்கூடாதுனுதான்… நீ சந்தோசமா இருக்கிறதப் பாத்துதான் அவரும் ஏதோ இருக்கார்… மெட்ராசுல இருந்து மதியம் கிளம்பிட்டேன்னு போன் பண்ணுனாரில்ல… ராத்திரிக்குள்ள எப்படியும் வந்துடுவார்…அவருகிட்ட நீ எதுவும் கேட்டுடாதம்மா…எப்பவும் போலவே நடந்துக்க…”

அடுத்த நாள் குடும்பத்தினர் எல்லோரின் வாழ்த்துக்கள்+முத்தங்களோடு தன் இருபத்தியோராவது பிறந்தநாளைக் கொண்டாடினாள் தமிழ்.
எல்லோரும் போன பிறகு அன்று மாலையில் தனிமையில் அவள் அப்பாவிடம் கேட்டாள்.

“ஏம்ப்பா நான் பிறந்தப்போதான் அம்மா எறந்தாங்கன்றத எங்கிட்ட மறச்சுட்டீங்க?”

அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தார் அருள்.

“இன்னைக்கு தான் உங்கப் பிறந்தநாளும்னும் எனக்குத் தெரியும்ப்பா. அம்மாவோட நினைவுநாளும் இன்னைக்குதான்னும் எனக்குத் தெரியும். நான் கஷ்டப் படக்கூடாதுன்னுதான் இத எங்கிட்ட இருந்து மறச்சிருக்கீங்கன்னாலும் இத தெரிஞ்சபின்னாடி எனக்கு எவ்வளவு வேதனையா இருக்கு தெரியுமா? நாம/நம்மள நேசிக்கிறவங்க சந்தோசமா இருக்கனும்ங்கறதுக்காக நம்ம கஷ்டத்த மறச்சுக்கறது நல்லதுதான். ஆனா என்னால இந்த ஒருநாளே முடியல…நீங்க எப்படி இத்தன வருசமா இருக்கீங்கனு எனக்குப் புரியலப்பா… உங்க கஷ்டம் இந்த வருசத்தோடப் போகட்டும். அடுத்த வருசம் இதே நாள் என்னோடப் பொறந்த நாளா இருக்க வேணாம். அம்மாவோட நினைவுநாளாதான் இருக்கனும்”

“நினைவு நாள்னு தனியா நெனச்சுக்க என்னமா இருக்கு? எல்லா நாளுமே…”

“ம்ம்ம்…இவ்வளவு நாளா நீங்க வேற கல்யாணம் பண்ணிக்காம இருக்கும்போதே அது தெரியுதுப்பா. ஆனா நான் சொல்றதுதான் இனிமே! இனிமே அம்மாவோடப் பிறந்தநாள் அன்னைக்கே நாமளும் பிறந்த நாள் கொண்டாடிக்கலாம். அம்மாவோட நினைவு நாள் அன்னைக்கு வேணாம். அவ்வளவுதான்!”
கொஞ்சம் பாரம் குறைந்தவராயானார் அருள்.

“இந்தாங்க உங்களுக்கு என்னோட பிறந்தநாள் பரிசு” என்று சொல்லி அந்த டைரியையும் கொடுத்துவிட்டுப் போனாள்.
பிரசவத்துக்கு இளவரசி வரும்போது எடுத்துவந்து தொலைந்துபோன அந்த டைரி மீண்டும் கிடைத்ததும் ஆர்வமான்வராய் அதன் பக்கங்களைப் புரட்டியதில் மெல்லியப் புன்னகையுடன் பழைய நினைவுகளில் மூழ்க ஆரம்பித்தார் அருள்.

நினைவுகள் இருக்கும்வரை துயரங்கள் ஏதுமில்லை.

(மருத்துவக் குறிப்புகள் கொடுத்துதவிய delphine மேடத்திற்கு நன்றிகள் )

ஓர் இடம்
ஒரு சொல்
ஒரு காட்சி
ஒரு பாடல்
ஒரு கனவு

என ஏதேனும் ஒன்றின் சலனத்தில்
விருட்சமென வளர்கிறது உன் நினைவு.
இதயமெங்கும் படர்கிறது
மரணத்தின் நிழல்!

உன் வருகை தோறும்…
மலருமென் மனமொரு,
நிலவுகாந்தி!

 

திருமணத்திற்கு முந்தைய நாள் மாலைப்பொழுது.
திருமண மண்டபத்தில் உங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைகள் எல்லாம் உன் உறவினர்கள்/தோழிகளால் நிறைந்திருக்கின்றன.
உன்முகம் தேடியெடுத்துவர ரகசியமாய் என் பார்வைகளை அனுப்பி வைக்கிறேன்.
என்னைப் போல என் பார்வையும் நிலைகொள்ளாமல் அலைந்து உன் சாயலில் இருந்த உன் தங்கையை இழுத்து வருகிறது.
அருகே வந்தவள் மேல்நோக்கி கைகாட்டிவிட்டு மறைந்துபோனாள்.
நானும் மேல் தளத்துக்கு வருகிறேன்.
தோழிகளின் பின்னணிச் சிரிப்போடு அந்த அறையிலிருந்து மெல்ல வெளிப்படுகிறாய், மேகமவிழ்க்கும் நிலவாய்.

துலக்கி வைத்த பொன்மஞ்சள் நிறமுகம்.
அது மச்சமா? பொட்டா? எனத் தெரியாதபடி நெற்றி மையத்தில் கருந்சாத்துப்பொட்டில் சிறுபுள்ளி.
உன் ஒவ்வோர் அசைவுக்கும் வெவ்வேறு லாவகத்தில் உன் காதோடு ஊஞ்சலாடியபடி சின்னதாய் ஒரு ஜோடி தோடு ஜிமிக்கி.
எப்போதும் உன் பல்லில் கடிபட்டபடி இருக்கும் மெல்லிய செயின் அப்போது மட்டும் சமர்த்தாய் உன் மார்பில் சாய்ந்திருந்தது.
நகைகளைப் போல நகையும் குறுநகையாகவேப் பூத்திருந்தது. காரணம் நானா? நாணமா? தெரியவில்லை.
இரண்டு கைகளையும் பின்னால் கட்டியபடி உன்நடை நடந்து நெருங்குகிறாய்.
சுடிதாரில் கொள்ளையடிக்கும் உன் அழகு, சேலையிலோ கொலையே செய்கிறது.

“இப்போவும் பழையமாதிரி டயலாக் அடிக்காம உண்மைய சொல்லு புடவைல எப்படி இருக்கேன்?”

“பாரதிராஜா கிட்டதான் சொல்லனும்”

“என்ன உளர்ற?”

“தேவதைகளோட காஸ்ட்யூம இனிமே வெள்ளைல இருந்து உன்னோட இந்த காஸ்ட்யூமுக்கு மாத்த சொல்லதான்…”

“ம்ம்ம்…அப்புறம்?”

“உண்மைய சொல்லனும்னா, இப்படியே தாலிகட்டிடலாம் போல அவ்வளவு அம்சமா இருக்க!!!”

“அப்போ நாளைக்கு கல்யாணத்துக்கும் இப்படியே வந்துடவா?”

“ம்ம்ம்…எனக்கெதுவும் பிரச்சினையில்ல…தாராளமா வா…உங்கப்பாதான் பாவம் ஃபீல் பண்ணுவார்… அது சரி என்னது அது பின்னாடி என்னமோ மறச்சு வச்சிருக்க?”

“வெட்கம்”

“வெட்கமா?”

“ஆமா நீயென்ன வெட்கப்பட வைக்கும்போதெல்லாம் முகத்தப் பொத்தி பொத்தி , முகத்துல இருந்த சிவப்பெல்லாம் கைல ஒட்டிக்கிச்சு”

“அடிப்பாவி, எப்போல இருந்து நீயும் இப்படியெல்லாம் பேச ஆரம்பிச்ச?”

வெட்கப்பட்டுக்கொண்டே மருதாணியில் சிவந்த கைகளை விரிக்கிறாய்.
மார்கழி மாத அதிகாலை வாசலாய்க் கோலமிடப்பட்டிருந்தன உன் உள்ளங்கைகள்.

“எவ்வளவு சிவந்திருக்குனு சொல்லு”

“உன் வெட்கத்த விட அதிகமாவே சிவந்திருக்கு”

“நெஜமாவா?”

“அதிலென்ன சந்தேகம்?”

“இல்ல… மருதாணிக்கை எந்தளவுக்கு சிவக்குதோ, அந்தளவுக்கு நல்லப் புருசனா கிடைப்பாங்கன்னு எங்க சித்தி சொன்னாங்க…அதான் கேட்டேன்”

“ஓஹோ…உங்க தோழிங்ககிட்ட எல்லாம் காட்டியிருப்பியே, அவங்க என்ன சொன்னாங்க?”

“உன்னப் பார்த்தா நல்லவன் மாதிரி தெரியலையாம்…அதனால இத நம்ப மாட்டாங்களாம்”

“சரி விடு அவங்க எல்லோருக்கும் நல்லவனா என்னாலயும் இருக்க முடியாது. உனக்கு மட்டும் நல்லவனா இருக்கேன்”

“ஓ அந்த ஆசைகூட இருக்கா ஐயாவுக்கு? நாளைல இருந்துதான் இருக்கு உனக்கு”

“நாளைல இருந்து எனக்கு என்ன இருக்கு?” என்று நான் மீண்டும் மீண்டும் கேட்க முகம்பொத்தியபடி ஓடினாய்.
கையில் இருந்த சிவப்பெல்லாம் மீண்டும் முகத்தில் ஒட்டிக்கொண்டது.

***

முந்தின நாள் சடங்கெல்லாம் முடிந்த இரவுப்பொழுது.
நீ வெளிப்படுவாயா என்று நோட்டமிட்டபடி,
உன் அறைக்கதவின் அசைவுக்கெல்லாம் மலர்ந்து சாய்கின்றன என் விழிகள்.
உறக்கம் எங்கோ தொலைந்துவிட்ட அந்த இரவுப்பொழுதில் சூரியனைத் தேக்கியபடி என் விழிகள் மட்டும் விழித்திருக்கின்றன.
நாளை நீ பிறந்து 25 ம் ஆண்டு.
உனக்கான பிறந்த நாள் வாழ்த்துக்களோடு 12 மணி வரை காத்திருக்கிறேன்.
மெல்லப் பிரியும் இமையைப் போல ஓசையின்றி உன்கதவு திறக்கப்படுகிறது.
இரவின் ஒளியாய் நீ வர நிலவுகாந்தியாய் நான் மலர்கிறேன்.
எதிர்பார்த்தவள் போல என்னிடமிருந்து வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டு கண்களால் நன்றி சொல்லிவிடைபெற பார்க்கிறாய்.
நன்றி மட்டும்தானா? என ஏக்கத்தை நான் பார்வையில் தேக்க…
என் உள்ளங்கையில் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டு விலகினாய்.
உன் உதட்டின் ஸ்பரிசம் தாங்காமல் என் உடல் சிலிர்க்க இயங்க மறுத்து நின்று போயின என் விழிகள்.
நீ முத்தமிட்டுத் திரும்பிய பிம்பமே மனதில் நிலையாயிருக்க, சந்தேகத்தோடு மீண்டுமொருமுறை என் பக்கம் திரும்பியவள்,
என் உள்ளங்கையை எடுத்து என் கன்னத்தில் வைத்துவிட்டுப் போனாய்.
உள்ளங்கையில் நீ நட்டு வைத்த முத்தம் என் கன்னத்தில் வந்து பூத்தது.
முதல் முத்தம் கொடுத்த/வாங்கிய சிலிர்ப்போடு அறைதிரும்பினோம்.
விடிந்தால் திருமணம். நானோ “கன்னத்தில் கைவத்தபடி” உறங்கிப்போனேன்.

***

நம் திருமணத்திற்கு வாழ்த்து சொல்ல முதல் ஆளாய் காலையிலேயே வந்து சேர்ந்தது சூரியன்.
காற்றில் கூட திருமணக் களை கலந்திருந்த அன்று மலர்ந்த மலர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அது ஒரு பொன்னாளின் தொடக்கமென்று.
நினைவெல்லாம் எங்கோ மிதந்துகொண்டே இருக்க, காலையில் எழுந்ததும் குளித்துக் கிளம்பியதும் என எல்லாமே கனவாய் மட்டுமே நினைவில் இருக்க,
மணமகன் கோலத்தில் உனக்காக மணமேடையில் அமர்ந்திருக்கிறேன்.
வெகுநேரக் காத்திருப்பிற்குப் பிறகு பொற்சிலையென நீ வருகிறாய்.
அருகில் வந்து நீ அமர்ந்ததும், மண்டபம் கீழிருக்க மணமேடை மட்டும் வானில் உயர்வதாக எனக்குள் பிரமை.
சரியாக நீ பிறந்த கணத்தில் நம் பெற்றோர் தாலியெடுத்துக் கொடுக்க, மலர்தூவி, “மணமக்கள் வாழ்க” வாழ்த்தொலியோடு
தமிழ் முறைப்படி எளிமையாக நடந்து முடிந்தது நம் திருமணம்.
மூன்று முடிச்சுகளையும் முடிந்துவிட்டு உனக்கு மட்டும் தெரியும்படி என் உள்ளங்கை விரிக்கிறேன்.

“திங்களுக்கு வெள்ளி விழா.
கொஞ்சம் சிரி
எங்களுக்கு வெள்ளி விழும்.”

எழுதப்பட்டிருந்த அந்த வரிகளை வாசித்ததும் புன்னகைப் பூக்கிறாய். கூடவே சிந்துகின்றன சில கண்ணீர்த்துளிகள்.

பதறியவனாய், “ஹே, கேமராவெல்லாம் இருக்கு…அழாத” கிசுகிசுக்கிறேன்.

“அட லூசு… நான் சிரிச்சுட்டுதான் இருக்கேன்…ஆனா கண்ணுலயும் தண்ணி வருது”

கண்ணீரோடு நீ சிந்திய புன்னகை, பனித்துளியோடு இருக்கும் அதிகாலை ரோஜாவாய் மலர்ந்திருக்க, அழகாய் ஆரம்பமானது ஒரு வசந்தகாலத்துக்கான முதல் நொடி!

(இப்படியே சுபம் போட்டு முடிச்சிடலாம்னுதான் எனக்கும் ஆசை. ஆனால் அடுத்த திங்கட்கிழமைதான் “கதை முடிகிறது” )

…உலகத்துல எத்தனையோ கண்டம் இருக்கு. அதுல ரொம்பப் பெருசு நம்ம ஆசியாக்கண்டம்தான் அப்படிங்கறதும் சில அறிவுஜீவிகளுக்குத் தெரிஞ்சிருக்கும். அந்தப் பெரிய கண்டத்துல பல நாடுக இருந்தாலும் இந்தியாவ மட்டும்தான் துணைக்கண்டம்னு சொல்லுவாங்களாம். அதுல பல மொழிகள் பேசப்பட்டாலும் ரொம்பப் பழமையான மொழிகள்ல இந்தத் தமிழும் ஒன்னு. பழசா இருக்கிற அளவுக்கு அது புதுசாவும் இருக்குனு சொல்லுவாங்க.(பதிவு சரியான மொக்கையா இருக்கேன்னு இதோட நீங்கப் போயிட்டா அதுவும் இந்தப் பதிவோட வெற்றி தான்;)) புதுசாவும் இருக்கிறதுக்கு கணினி உலகத்துலயும் அது கோலோச்சிக்கிட்டு இருக்கிறதுதான் காரணம். அதுலயும் இந்த வலைப்பதிவுகள்லயும் அது புகுந்து விளளயாடிட்டு இருக்கு. வெளியூர் வந்து பொட்டி தட்டுற நெறைய தமிழ் ஆளுங்க பொழுதுபோக்கா இல்ல பொழப்பாவே வலைப்பதிவுகள் எழுதுறாங்களாம். அப்படியிருக்கிற தமிழ்வலைப்பதிவுகள்ல பல அறிவிக்கப்படாத சங்கம் / அறிவிக்கப்பட்ட சங்கம் எல்லாம் இருந்தாலும் இந்த வ.வா.சங்கம்னு ஒன்னு எல்லாரையும் சிரிக்க வச்சிட்டு இருக்கு. அதுல வேலையில்லாத வெவசாயி ஒருத்தர் மொக்கைப் பதிவு எழுதறதுக்குஒரு போட்டி வச்சிருக்கார். அதுல மொக்கைப் போட்றதயே முழுநேரத் தொழிலா நடத்திட்டு இருக்கிற செந்தழல் ரவி, நாமக்கல் சிபி மாதிரியான ஆட்கள் எல்லாம் களத்துல இருக்கும்போது அப்பப்போ கவிதைங்கற பேர்ல மொக்கைப் போட்டுட்டு இருக்கிற அருட்பெருங்கோங்கற ஆசாமிக்கும் ஒரு மொக்கைக் கதை எழுதனும்னு ஆசை வந்து எழுதியும் போட்டுட்டார். அவர் எழுதினக் கதை இதுதான் : “பரந்து விரிந்த இந்த ….”

(கதையின் தொடர்ச்சிக்கு மறுபடியும் இந்தப் பதிவின் முதல் வரிக்கு செல்லவும் )

இது வ.வா.சங்கம் அறிவித்திருக்கும் மொக்கைப் பதிவுகள் போட்டிக்கு எழுதப்பட்டது. உண்மையிலேயே சிறுகதை எதிர்பார்த்து வந்தவர்கள் மன்னிக்கவும் ;)

© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD