இது காதல் பூக்கும் மாதம் – முதல் பகுதி

15. உறுப்பு நலன் அழிதல்

வளையல் கழன்று விழுமளவுக்கு
இளைத்துப் போனதாய் சொல்கிறாய்

உன் வளையலில் நுழையுமளவுக்கு

நான் இளைத்ததை யாரிடம் சொல்ல?

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக.


உன் அழகை அழிக்கிறது…

எனக்கு அழுகையை அளிக்கிறது…

நம் பிரிவு!

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன.

உன்னை நினைத்தே
இளைத்துப் போகிறது உடல்…

உன்னால்தான் இளைக்கிறேனென உலகம் பேச

களைத்துப் போகிறது மனமும்!

தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக்
கொடியார் எனக்கூறல் நொந்து.

என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்.


என் வருத்தங்களை எல்லாம்

உன்னிடம் சொல்ல

வாய் வந்தால் மனம் தடுக்கிறது..

மனம் வந்தால் சொல் மறுக்கிறது!

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.

நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?

எல்லோருக்கும் முன்னும்
என் கைகோர்த்தே நடக்கிறாய்…

கூச்சத்தில் நானும் கைகளையெடுத்தால்

அழ ஆரம்பித்து விடுகிறாய்.

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.

இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது.

காற்று கூட
நம்மைப் பிரிக்கப் பார்க்கிறதென அழுகிறாய்.

வா! காற்றில்லாத கனவுலகம் ஓடிப் போகலாம்!

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.

இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன.

என் கன்னங்களில்
முத்தங்களாய் வழிந்தவள்

கண்ணீராய் வழிகிறாய்

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.

பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது.

இது காதல் பூக்கும் மாதம் – 160

Related Posts...

  • புணர்ச்சி விதும்பல் – காதல் பூக்கும் மாதம் – 200
    “உன்னை எனக்குப் பெயர் வைக்க சொன்னால் என்ன பெயர் வைப்பாய்?” என்று கேட்பவளிடம், ‘மதுமதி’ என்றேன். போதை தரும் நிலவுக்கு வேறென்ன பெயர் வைக்க முடியும்? உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. மதுவை அருந்தினால்தான் இன்...
  • குறிப்பறிவுறுத்தல் – காதல் பூக்கும் மாதம் – 190
    எல்லாவற்றையும் பங்கிடுவோம் என்றாய். நான் காதலைக் கொண்டு வந்தேன். நீ பிரிவைக் கொண்டு வந்தாய். கொண்டு வந்த பிரிவை என்னிடம் கொடுத்து விட்டு, காதலை மட்டும் நீ வாங்கிக் கொள்ளவே வில்லை! கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்ட...
  • அவர்வயின் விதும்பல் – காதல் பூக்கும் மாதம் – 180
    உன்னையே எதிர்பார்த்து என் கண்ணெறிந்த கனலால் வீதியில் தீ. வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல். வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறிய...
  • நிறையழிதல் – காதல் பூக்கும் மாதம் – 170
    நீயிருந்தவரை உனக்கு அடங்கிக் கிடந்துவிட்டு நீ பிரிந்ததும் என்னையே அடக்குகிறது காதல். காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு. காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட ம...
  • நெஞ்சொடு கிளத்தல் – காதல் பூக்கும் மாதம் – 160
    காதல் நோய்க்கு காரணம் யாரெனக் கேட்டால் உன்னைக் காட்டியது… மருந்து என்னவென்று கேட்டாலும் உன்னையேக் காட்டுகிறது உன்னைப் போல தான் குறும்பு செய்கிறது இந்த மனமும்! நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோ...

3 Responses to “உறுப்பு நலன் அழிதல் – காதல் பூக்கும் மாதம் – 150”

  1. சேதுக்கரசி says:

    //உன் வளையலில் நுழையுமளவுக்கு
    நான் இளைத்ததை யாரிடம் சொல்ல?//

    இது ஆனாலும் ரொம்ப ஓவர்!!

    //என் வருத்தங்களை எல்லாம்
    உன்னிடம் சொல்ல
    வாய் வந்தால் மனம் தடுக்கிறது..
    மனம் வந்தால் சொல் மறுக்கிறது!//

    *எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்
    என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது!*

    //என் கன்னங்களில்
    முத்தங்களாய் வழிந்தவள்
    கண்ணீராய் வழிகிறாய்//

    இது ரொம்ப அழுத்தமா இருக்கு. சொற்சிக்கனத்துடன்!

  2. அருட்பெருங்கோ says:

    / //உன் வளையலில் நுழையுமளவுக்கு
    நான் இளைத்ததை யாரிடம் சொல்ல?//

    இது ஆனாலும் ரொம்ப ஓவர்!!/

    மோதிரத்தில் நுழௌயுமளவுக்கு என்று சொல்லியிருக்க வேண்டுமோ?

    /
    *எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்
    என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது!*/

    :-( (

    /
    இது ரொம்ப அழுத்தமா இருக்கு. சொற்சிக்கனத்துடன்!/

    வார்த்தையில் கஞ்சன் நல்ல கவிஞனாம் :-)

  3. Venkatesh says:

    //
    உன் வளையலில் நுழையுமளவுக்கு
    நான் இளைத்ததை யாரிடம் சொல்ல?
    //

    உங்களுக்கு “அது” இருந்துச்சே? இப்போ சரியா போச்சா?
    “அது” இருந்தாலும் உடல் இளைக்கும்ன்னு சொல்லிக்கிறாங்க..
    எதுக்கும் டாக்டர மறுபடியும் போய் பாத்துகோங்க..

Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout
Press F12 to toggle between English and Tamil
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD