இது காதல் பூக்கும் மாதம் -முதல் பகுதி


19.
குறிப்பறிவுறுத்தல்

 

எல்லாவற்றையும் பங்கிடுவோம் என்றாய்.
நான் காதலைக் கொண்டு வந்தேன்.

நீ பிரிவைக் கொண்டு வந்தாய்.

கொண்டு வந்த பிரிவை என்னிடம் கொடுத்து விட்டு,

காதலை மட்டும் நீ வாங்கிக் கொள்ளவே வில்லை!

 

 

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

 

வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்.

 

நீ பேரழகி என்று நான் பிதற்றுவதெல்லாம் பொய்தான்.
ஆனால் அதைக் கேட்டதும் வெட்கப்படுகிறாயே

அப்போதே அது உண்மையாகி விடுகிறது.

 

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.

 

கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்.

 

நீ கலந்து கொள்ளும் அழகிப் போட்டியில் மட்டும்
போட்டியின்றி ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்

உன்னை!

 

 

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு.

 

மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.

 

நீ சிரிக்கும் போதெல்லாம்
வழுக்கி வழுக்கி விழுகிறேன்

உன் கன்னக் குழியில்.

 

 

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

 

மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.

 

என் ஆயுள் முழுவதுக்குமான
ஆனந்தம் முழுவதும் ஒளிந்திருக்கிறது

உன் அரை நொடிச் சிரிப்பில்!

 

 

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன் றுடைத்து.

 

வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.

 

“மீண்டும் சந்தித்தால்
கட்டிப் பிடிப்பாயா?” என்றால்,

“ம்ம்ம்… மீண்டும் பிரியாமலிருக்க

பிடித்துக் கட்டுவேன்” என்கிறாள்.

இவளைக் கட்டிப் பிடித்துக் கட்ட வேண்டும்

காதலால்!

 

 

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.

 

ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே.

 

நீண்டப் பிரிவுக்குப் பிறகு என்னைக் கண்டதும்,
உன்னை விட்டுப் பிரியப் போகிற கவலை…

உன் ஆடைகளுக்கு!

 

 

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.

 

குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!

 

“என்னைப் பிரிந்திருந்த போது எப்படி உணர்ந்தாய்?” என்றவளிடம்
“சொர்க்கத்தில் இருந்ததைப் போல” என்றதும் அழுகிறாள்.

உயிர் போனால்தான் சொர்க்கத்துக்குப் போக முடியும் என்பது

இவளுக்குத் தெரியாதோ?

 

 

 

நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.

 

நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே.

 

நீ சிகப்பாம்.
நான் கருப்பாம்.

கேலி பேசுகிறார்கள்.

உன்னையேத் தொடரும்

உன் நிழல் பின் எப்படியிருக்கும்?

 

 

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.

 

பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்.

 

“பிரிந்து விடு! பிரிந்து விடு!”
என்று ஆயிரம் வார்த்தைகளில் சொல்லிவிட்டு

ஒற்றைப் பார்வையில் உயிர் போகக் கெஞ்சுகிறாளே

இவளை விட்டு எப்படிப் பிரிய?

 

 

பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.

 

காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது.

இது காதல் பூக்கும் மாதம் – 200

நீ காதல் பறவை.
எனக்குள்
காதல் பற்ற வை!

*

அழகால் கொத்தும்
அதிசயப் பறவை நீ!

*

இந்த உதடுகள் மோசம்.
முத்தம்
தருகிறதா? பெறுகிறதா?

*

உன்னுதடு தொடும் என்னுதடு.
தடுப்பதென்றால்
உதட்டால் தடு!

*

காதல் தேவதை.
காதலித்தே வதை!

*

முத்தங்களால் நிறைகின்றன.
காதல் மடலும், காது மடலும்.

*

நான்
உன் காதல் கண்ட
கனவன் – கணவன்!

*

நீ
என் காதல் பாடத்தின்
மாணவி – மனைவி!

இது காதல் பூக்கும் மாதம் – முதல் பகுதி

18. அவர்வயின் விதும்பல்

உன்னையே எதிர்பார்த்து
என் கண்ணெறிந்த கனலால்
வீதியில் தீ.

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.

வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.

என் மனதுக்குத் தெரியாமல்
உன்னை நானும் மெதுவாய் விலக்க…
விலகிப் போகிறது என் உயிர்.
வேகமாய் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறேன்…
உன்னையும், என்னுயிரையும்!

இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.

காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி.

நீ வரும் வரை
நுழையக்கூடாதென உத்தரவிட்டிருக்கிறேன்.
என் வீட்டு வாசலில்
மன்றாடிக் கொண்டிருக்கும்
மரணத்திடம்!

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.

ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்.

உள்ளேயிருந்தால் உன் வருகையைப்
பார்க்க முடியாமல் போய்விடுமாம்.
மேலே வந்து
கண்வழியே எட்டி எட்டி பார்க்கிறது
என் இதயம்.

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.

காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது.

கருப்பு வெள்ளையாய்
இருக்கும் என் கண்களும்
உனைக் கண்டால்
வண்ணங்களாய்ப் பூக்கும்!

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்தோள் பசப்பு.

கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்.

நீண்ட பிரிவுக்குப் பிறகு சந்தித்ததும்,
கட்டிப் பிடித்து முத்த மழை பொழிகிறாள்.
“எங்கிட்ட பேசவே மாட்டேன்னு சொன்ன?” என்று கேட்டால்
“பேச மாட்டேன்னு தான சொன்னேன்” என்று
சுவரில் எழுதிக் காட்டுகிறாளே… இவளை என்ன செய்ய?
என் பங்குக்கு நானும் கொஞ்(சு)சம் முத்தமிடுவதைத் தவிர…

வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.

என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும். வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்.

பிரிந்தவர் கூடும்பொழுது
வார்த்தை கை விடுமாம்…
சரி விடு!
முத்தம் கை கொடுக்கும்!

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்ணன்ன கேளிர் வரின்.

கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல், கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது.

வெற்றி பெற்று
உன்னிடம் வாழ்த்துப் பெறுவது இன்பம்தான்!
ஆனாலும் தோற்கும்போதெல்லாம்
ஆதரவாய் நீ தலை கோதுகிறாயே…
அந்த சுகத்துக்கே
எல்லாவற்றிலும் தோற்றுப் போகலாம்!

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

தலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வெண்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப விருந்துதான்.

நாம் சேர்ந்திருந்த பொழுதுகளில்
நொடிமுள் வேகத்தில் மணிமுள்ளும்
பிரிந்திருக்கும் பொழுதுகளில்
மணிமுள் வேகத்தில் நொடிமுள்ளும் சுற்றுகின்றன.
இந்த கடிகாரத்தைப் பழுது பார்க்க வேண்டும்!

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு.

நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்.

தூக்கத்திலும்
தூக்கிக் கொஞ்சுகிறேன்
நீ தரும் துயரங்களை!

பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.

துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடவதினாலோ, என்ன பயன்?

தவமாய்த் தவமிருந்து
தான் பெற்ற மகளும்
தாயாகிவிட்டப் பரவசம்
அம்மாவின் முகத்தில்…

அள்ளிக் கொஞ்சிட
அழகாய் ஒரு பேத்தி
அம்சமாகப் பிறந்ததில்
அப்பாவுக்கும் ஆனந்தம்…

மடியில் கிடத்தி
பாசத்தோடு சீர் செய்ய
மருமகள் கிடைத்துவிட்ட
மனநிறைவில் அண்ணன்…

தன்னை சித்தியென்றழைக்க
புதியதோர் ஜீவன்
பூத்துவிட்ட களிப்பில்,
பூரித்திருக்கும் தங்கை…

இப்படி…
எனக்குப் பிறந்தக் குழந்தையின் சிரிப்பில்
மகிழ்ச்சியைக் கொண்டாடும் இவர்களுக்கு,
கேட்டுவிட வேண்டாம்…

இவர்களுக்காகவே
எனக்குள் நான் கொன்று போட்ட
என் காதலின் அழுகை!

கண் நடிக்கிறது.
ஆனால் காதல்
கண்ணடிக்கிறது.
~
உன் மார்பில்
தாவணி.
என் மார்பில்
தாவ நீ.
~
இயல்பாய் சிரித்தாய்.
என் முத்தம் உறங்க
இதழ் பாய் விரித்தாய்.
~
உன்னைப்பார்த்து
‘ஓ’ வென வியக்கிறது
ஓவியம்.
~
உன் கண் பார்த்து
ஆடிப்போனது
கண்ணாடி.
~
என்னில் விழுந்தாய்.
எனக்கே விழுதாய்.
~
முத்தம் இடு.
பின்
முத்தம் எடு.
~
நீ கவிதை.
தலைப்பு?
தலை பூ!
~
காதல்
உனக்கு வலி.
எனக்கு வலிமை.
~
காதல்
என்னில் ஊஞ்சலாடுகிறது.
உன்னில் ஊசலாடுகிறது.
© 2010 கவிதைகள் Suffusion WordPress theme by Sayontan Sinha

Featuring Recent Posts Wordpress Widget development by YD