Jan 31

நண்பர்களே இது திருக்குறளுக்கான உரையுமல்ல, மரபுக்கவிதையிலிருந்து புதுக்கவிதைக்கான மொழிபெயர்ப்புமல்ல. ஏனென்றால் திருக்குறளின் பொருள் பார்த்து மட்டும் நான் இதை எழுதவில்லை. ஏதாவது ஒரு கருவை மட்டும் எடுத்துக்கொண்டு எனக்குத் தெரிந்த வடிவத்தில் எழுதியிருக்கிறேன். உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.

1 .தகையணங்குறுத்தல்

வெள்ளை சுடிதாரில் தேவதையாகிறாய்…
பச்சை, நீல வண்ணங்களில் மயிலாகிறாய்…
எப்பொழுது பெண்ணாவாய்?

அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் னெஞ்சு

தெய்வப் பெண்ணோ!மயிலோ?கனமாக குழை(காதணி) அணிந்த மனிதப் பெண்ணோ? என் நெஞ்சம் மயங்குகின்றதே!

உன்னைப் பார்க்கையில்,உன்னழகே இப்படித் தாக்குகிறதே…
நீ எதிர்பார்வையெல்லாம் பார்த்தால், என்னால் முடியாதடி!
அது உன் தலைமையில் ஒரு தேவதைப்படையே தாக்குவதைப்போல…

நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

இவள் என் நோக்கிற்கு எதிர் நோக்குதல், தானே தாக்கி வருத்தும் ஓர் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.

எமன் எப்படியிருப்பான்?
உன் வெட்கப் பார்வை வீசும் ‘பாச’க்கயிறு
உயிரை இறுக்கும் போது புரிகிறது.
உன்னைப் போலதான் இருப்பாள்!

பண்டெறியேன் கூற்றெ பதனை இனியறிந்தேன்பெண்டகையாற் பேரமர்க் கட்டு.

எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன்; இப்பொழுது கண்டறிந்தேன் ; அது பெண் தன்மையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது.

எல்லா பாகங்களும் அழகாக வெட்கப்படும்போது
உன் பார்வை மட்டும் என் உயிரைக் குடிக்கிறதே
உனக்குள் ஏனிந்த முரண்பாடு?

கண்டா ருயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப்பேதைக் கமர்த்தன கண்.

பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.

நீ பார்க்கும்போது
எமனாய் மாறி என்னைக் கொல்கிறது!
நான் பார்க்கும்போது
மானாய் மாறி அங்குமிங்கும் ஓடுகிறது!
நாம் ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொள்ளாத தருணங்களில் மட்டுமே
உன் கண்கள், கண்களாய் இருக்குமோ?

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவர
னோக்கமிம் மூன்று முடைத்து.

எமனோ? கண்ணோ? மானோ? இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கின்றது.

புருவங்களே!
கொஞ்சம் இவள் கண்களை மறையுங்களேன்..
பார்த்தேக் கொல்கிறாளே!

கொடும்புருவங் கோடா மறைப்பி னடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்.

வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கணகள் யான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

உன் துப்பட்டாவிற்குத் தெரியுமா?
அது கோயில்யானையின் முகபடாமை
விட பெருமை வாய்ந்ததென்று?

கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்
படாஅ முலைமேற் றுகில்.

மாதருடைய சாயாத மார்பின்மேல் அணிந்த ஆடை மதம் பிடித்த ஆண்யானையின்மேல் இட்ட முகபடாம் போன்றது.

உன் இருவிழிகளின் ஒளி தாங்காமல் தான்
நீ நிலம் நோக்கும் போதுமட்டும் உன்னைப் பார்க்கிறேன்!
ஆனால் உன் ஒற்றை நெற்றிப் பார்த்தே
என் இதயம் நொறுங்குகிறது!

ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் முட்குமென் பீடு.

போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்குக் காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே!

மற்ற பெண்களெல்லாம் கண்மை தீட்டினால்
நீ “இளமை” தீட்டி வருகிறாய் கண்ணுக்கு.
முகத்துக்கு மஞ்சள் பூசியும் அலுத்துவிட்டதா?
இப்படி வெட்கத்தைப் பூசிக் கொண்டு வருகிறாய்.
இதற்குமேலும் வேறென்ன வேண்டும் உன் முகத்துக்கு?

பிணையேர் மடநோக்கும் நாணும் முடையாட்
கணியவனோ ஏதில தந்து.

பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?

கள்ளைப் பருகினால்தான்
போதை தலைக்கேறுமாம்.
கள்ளி! உன்னைப் பார்த்தாலே
போதை மனதுக்கேறுகிறதே!

உண்டார்க் ணல்ல தடுநறாக் காமம்போற்
கண்டார் மகிழ்செய்த லின்று.

கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லை.

இது காதல் பூக்கும் மாதம் – 20

written by அருட்பெருங்கோ \\ tags:

Jan 31
கடந்தவாரம் ஊரில் இருந்த பொழுது பெரம்பலூருக்கு ஒரு திருமணத்திற்கு செல்லவேண்டியிருந்தது. காலையிலேயே திருமணம் முடிந்தபிறகு திருச்சிக்கு செல்வதற்காக பேருந்துநிலையத்தில் நின்றிருந்தபோதுதான் சுற்றுலாத்துறையின் ஒரு விளம்பரப் பலகையைப் பார்த்தேன். கங்கை கொண்ட சோழபுரம் -> 60 கி.மீ என்று போட்டிருந்தது. சரி வந்தது வந்து விட்டோம் அந்த ஊரிலும் என்ன இருக்கிறது என்று பார்த்துவிடலாம் என்று அங்கு செல்வதற்காக ஜெயங்கொண்டம் செல்லும் பேருந்தில் ஏறிவிட்டேன். (ஜெயங்கொண்ட சோழபுரம்தான் ஜெயங்கொண்டம் ஆகி விட்டது). ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இறங்கும்போது மணி மதியம் 1. உச்சி வெயில் உச்சியைப் பிளந்தது. பொதுவாக பயணம் செய்யும்போதோ, கூட்டமாக இருக்கும்போதோ என்னால் சாப்பிட முடியாது. சரி பழச்சாறு எதுவும் குடிக்கலாம் என்றால் நல்லதாக ஒரு கடையையும் காணோம். சரி தமிழனின் தேசிய பானம் தேநீரையேக் குடிப்போம் என்று ஒரு கடையில் ஒதுங்கினேன். ( தேநீர் குடிப்பதை கொஞ்ச நாட்களாக நிறுத்தியிருந்தேன். இப்போது மறுபடி ஆரம்பமாகிவிட்டது ) வீட்டில் டம்ளரில் ( தமிழில் கோப்பை? ) வழிய வழிய கொடுப்பார்கள். அந்தக் கடையில் கொடுத்தது தொண்டை நனைவதற்குள் தீர்ந்து விட்டது. மறுபடி இன்னொன்றையும் வாங்கி நானே குடிப்பதை அந்தக் கடைக்காரர் ஒரு மார்க்கமாக தான் பார்த்தார். அப்புறம் அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் இருக்கும் கங்கை கொண்ட சோழபுரத்துக்குப் பயணமானேன். நான் எதிர்பார்த்தது பழைய கோட்டை, அரண்மனை எதுவும் இருக்கும் என்றுதான். அங்குபோனால் இருந்தது என்னவோ ஒரே ஒரு கோயில் தான். அதுதான் பிரகதீசுவரர் கோயிலாம். ( அப்போ தஞ்சையில் இருப்பது என்ன? எனக்கும் தெரியவில்லை.)

முகப்பில் நுழையுமுன் எடுத்தப்படம்.

புல்தரையெல்லாம் நன்றாகப் பராமரித்து வைத்திருக்கிறார்கள்.

இது என்னவென்றே தெரியவில்லை உள்ளே எட்டிப்பார்க்கலாம் என்று நுழைந்தபோது ஒரு காதல் ஜோடி இருந்தது.அமைதியாக வந்துவிட்டேன்.

வெயிலின் பின்னணியில் கோபுரம்.

வெயிலின் முன்னணியில் (:-) ) கோபுரம்.

இருப்பது ஒரே கட்டடம் அல்ல. ஒன்றன் பின் ஒன்றாய் இரண்டு கட்டடங்கள்.


நீலத்துக்கும் பச்சைக்கும் இடையே கோபுரம்.

வெள்ளை நந்தியும் கருப்பு நந்தியும்

வெளியே வந்த பிறகு ஒரு மூலையில் இருந்து எடுத்தப் படம்.

written by அருட்பெருங்கோ \\ tags:

Jan 30

இரண்டு படங்களுக்கும் 6 வித்தியாசங்கள் எல்லாம் இல்லை… ஒன்றே ஒன்றுதான்! :-)

written by அருட்பெருங்கோ \\ tags:

Jan 30

இது தான் அமராவதி ஆறு.முன்பெல்லாம் ஆற்றில் குளிக்கிற அளவுக்கு தண்ணீரும் போகுமாம், சுத்தமாகவும் இருக்குமாம்.
பிறகு சாயப்பட்டறைகள் பெருகி சாயக்கழிவுகள் கலந்து ஆறு நாறிப்போனது. எப்போதாவது மழை வந்து ஆற்றை கழுவி விட்டுப் போகும். அப்போது மட்டும் ஆற்றில் ஊற்றுத் தோண்டி குளிக்கலாம். அப்புறம் ஆற்றில் இறங்கிவிட்டாலே வீட்டில் வந்து ஒருமுறை குளிக்க வேண்டிய நிலைமையில் இருந்தது. இப்போது இரண்டாண்டுகளாக பரவாயில்லை கொஞ்சமாகவேனும் தண்ணீர் ஓடிக் கொண்டு இருக்கிறது. நான் பார்க்கும்போது ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள். சுத்தமாகதான் இருக்கும்போல ;-)

இதுதாங்க நான் பள்ளிவாழ்க்கையின் கடைசி மூன்றாண்டுகள் போய் வந்த பள்ளிக்கூடம். ( படித்த பள்ளிக்கூடம் என்று பொய் சொல்ல விருப்பமில்லை ;-) ) திரு. வா. செ. குழந்தைசாமியும் இங்கே படித்திருக்கிறார். ஜான் டேவிட்டும் இங்கே படித்திருக்கிறார். நூற்றாண்டு கண்ட பழமையானப் பள்ளிகளுள் இதுவும் ஒன்று. தேய்த்து தேய்த்து வழுவழுப்பாகிப்போன மரப்பெஞ்சுகள், மரப்படிகள், அந்தக்கால மச்சு என இன்னும் பழமை மாறாத பள்ளி!


கரூர் பசுபதீசுவரர் கோயில் கோபுரம். இதுவரை ஒரே ஒரு முறைதான் உள்ளே சென்றிருக்கிறேன். வரலாற்று(?) செய்திகளை நிறையப் படங்களாக வரைந்து வைத்திருக்கிறார்கள். பொறுமையாகப் படித்தால் கொஞ்சம் பழையக் கதைகளைத் தெரிந்து கொள்ளலாம். உள்ளே கரூர்ச் சித்தர் என்பவரின் சமாதியும் உள்ளது. தமிழில் குடமுழுக்கு செய்யப்பட்ட திருமுக்கூடலூரும் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் , ஆனால் நேரமில்லை :-(





எங்கள் பள்ளிக்கூடத்தில் முதல் பாடவேளையிலேயே வருகைப் பதிவெல்லாம் முடிந்துவிடும். அப்புறம் யார் எங்கு போகிறார்கள் என்றெல்லாம் யாரும் கவனித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். வகுப்பில் மாணவர்கள் எண்ணிக்கையெல்லாம் சாதாரணமாக மூன்றிலக்க எண்ணில்தான் இருக்கும். எங்கள் வகுப்பில் 10 வதில் 80 பேர் இருந்தோம். 11, 12 ம் வகுப்பில் 120 பேருக்கு மேல்!!! அரசுப் பள்ளி என்பதால் ஆசிரியரும் கண்டிப்பாக இருப்பதில்லை. அதனால் முக்கால்வாசி நேரம் வெளியில்தான் சுற்றிக்கொண்டிருப்போம். பள்ளிக்குப் பக்கத்திலேயே நூலகம் இருந்தது. அங்கே ஒரு கல்கியையோ, சாண்டில்யனையோ எடுத்துக்கொண்டு இந்த இடத்துக்கு வந்துவிடுவேன். இதுதான் பழைய ரயில்வே நிலையம் இருந்த இடம். படிப்பதற்கு ஏற்ற வகையில் அமைதியாக இருக்கும். பள்ளிநேரத்தில் பாதிப்பொழுது இங்கேதான் கழிந்தது.

தாந்தோன்றிமலையில் உள்ள பெருமாள் கோயில். இந்தக் கோயிலுக்குப் போகிற வழியில் ஒரு முனியாண்டி விலாஸ் உணவகம் இருக்கிறது. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, அமாவாசை என்று வீட்டில் அசைவம் கிடைக்காத நாட்களில் நமக்கு விருந்து வைக்கும் இடம் அது.



இதுதான் திண்ணப்பா திரையரங்கம். இந்த திரையரங்கத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொருக் காட்சியிலும் படம் திரையிடப் படுவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கும். மக்களும் எழுந்து நிற்பார்கள். இது இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.


கரூரில் பெரியாருக்கு சிலையில்லாத குறை சிலவருடங்களுக்கு முன்புதான் தீர்ந்தது. முதலில் மார்பளவு சிலையாக வைத்தார்கள்; அண்மையில் ஒரு பேருந்து மோதியதில் அதுவும் சிதைந்து போகவும், பிறகு முழு உருவச்சிலையாக வைக்கப்பட்டிருக்கிறது. சிலை வைத்தவர்கள் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள்.







அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

written by அருட்பெருங்கோ \\ tags:

Jan 29

காதலைத் தவிர்த்து மற்ற விசயங்களையும் எழுதுங்கள் என்று சுதர்சன்.கோபால் அன்பு(?) கட்டளையிட்டதால் இந்தப் பதிவு.

மருமகளுக்கு (அக்காவின் மகள்) மொட்டை அடிக்கும் நிகழ்ச்சி இருந்ததால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்தவாரம்தான் வீட்டிற்கு(கரூக்கு)ப் போக வாய்ப்புக் கிடைத்தது. நான்கு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு கடந்த வெள்ளிக்கு முந்தைய வெள்ளி ஊருக்குக் கிளம்பிவிட்டேன். ரயில் பயணம் என்பது எனக்கு எப்போதுமே அரிதாகவே அமைகிறது. காரணம் , பயணங்களை இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன்பே திட்டமிடுவதுமில்லை, முன்பதிவு செய்யுமளவுக்கு நான் சுறுசுறுப்புமில்லை. எப்போதுமே பேருந்து பயணம்தான் எனக்கு வசதியாகப் படுகிறது. அதுவும் தனியார் சொகுசுப் பேருந்துகளிலும் பயணிப்பதில்லை. அரசுப் பேருந்துதான். இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கி ஒரு தேநீரைக் குடித்துவிட்டு அடுத்தப் பேருந்தில் மாறி மாறிப் பயணிக்கிற அரைத்தூக்கப் பயணம்தான் எனது விருப்பம். மிகத்தாமதமாக பெங்களூர் இசிட்டியில் இருந்து கிளம்பியதால் ஒசூர் போய்ச்சேரவே இரவு மணி 12 ஆகியிருந்தது. பேருந்தில் ஜன்னலோரம் தான் எனக்குப் பிடிக்கும். அதுவும் பின்படிக்கட்டுக்கு முந்தைய இருக்கையென்றால் மிக விருப்பம். சேலம் செல்லும் பேருந்தில் அப்படியே ஓர் இருக்கை கிடைக்க ஏறிவிட்டேன். சன்னலைத் திறந்தால் குளிர்காற்று வீசுகிறது. மூடி வைக்கவும் மனமில்லை. அவஸ்தைதான், ஆனாலும் அதற்கே ஏங்குகிறது மனமும். (காதலைப் போலவா என்று யாரும் கேட்கக்கூடாது ;-) ) எப்படியோ அரைத்தூக்கத்தோடே சேலம் போய், பின் கரூர் போய்ச்சேர காலை மணி 8 ஆகியிருந்தது.

அடுத்த நாள் – சமயபுரம். தனிப்பட்ட முறையில் கோயில்களைப் பழந்தமிழர்களின் கட்டடக்கலைக்கான எடுத்துக்காட்டு என்பதைத் தவிர வேறெந்த எண்ணத்தோடும் நான் பார்ப்பதில்லை. மருமகளின் மொட்டைக்காக இந்தமுறை சமயபுரம் கோயிலுக்குள் போனபோதுதான் பார்த்தேன். கோவிலுக்குள்ளே தரையெல்லாம் மழையில் ஊறிய தெருவைப் போல இருந்தது. கூட்டமும் அதிகம். சுத்தம்தான் குறைவு. கோவிலுக்கு வந்த பட்டாடைகளையெல்லாம் ஏலத்தில் விட்டுக் கொண்டு இருந்தார்கள். அதில் கொஞ்சம் சுத்தத்துக்கும் செலவு செய்யலாம். மொட்டையடிக்கும் போதெல்லாம் அழாமல் இருந்த மருமகள் மொட்டையடிக்கப் பட்ட பிறகு “மொட்டையடிச்சுட்டாங்க…மொட்டையடிச்சுட்டாங்க” என்று தலையை தொட்டுப் தொட்டுப் பார்த்து அழுததில் அவளுக்கு இரண்டு நாட்களாக விடவில்லை காய்ச்சல்.

வீட்டில் எப்போதும் தொலைக்காட்சி பார்ப்பதைவிட வானொலி கேட்பதையே அதிகம் விரும்புவேன். இந்த முறை, மக்கள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி மிகவும் கவர்ந்தது. தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் “சொல் விளையாட்டு” என்ற நிகழ்ச்சிதான் அது. முதல் சுற்றில் தமிழ் எழுத்துக்கள் சிலவற்றில் இருந்து சரியான சொல்லைக் கண்டுபிடிக்க வேண்டும். அடுத்த சுற்றில் விடுப்பட்ட எழுத்துக்களை நிறைவுசெய்து ஒரு சொல்லைக் கண்டுபிடிக்க வேண்டும். மூன்றாவது சுற்றில் ஒரு பிரபலத்தின் புகைப்படம் கொஞ்சம் கொஞ்சமாகக் காண்பிக்கப் படுகிறது. அவர் யாரெனக் கண்டுபிடிக்கவேண்டும். உண்மையிலேயே ஆர்வத்தைத் தூண்டுகிற நிகழ்ச்சி. மக்கள் தொலைக்காட்சியின் மற்ற நிகழ்ச்சிகளைப் போலவே இதில் வரும் அறிவிப்பாளரும் நல்ல தமிழிலேயேப் பேசுகிறார். நேயர்களையும் தமிழில் பேச ஊக்கப் படுத்துகிறார். அதற்காகவே மக்கள் தொலைக்காட்சிக்கு தாராளமாக ஒரு ஓப் போடலாம்!

தூக்கம் வராத ஒரு பின்னிரவில் படுக்கையில் கண்களை மூடிக்கொண்டு வானொலியின் காதைக் திருகிக்கொண்டு இருந்தேன். ஏதோ ஒரு இடத்தில் சன்னமாக இலங்கைத் தமிழ் கேட்கவும், பழைய ஆண்டெனாவை எடுத்து வானொலியோடு இணைத்துப் பார்த்தேன்.பிறகு தெளிவாகக் கேட்டது. இலங்கையில் இருந்து ஒலிபரப்பாகும் தென்றல் FM. இதுவரைக் கேட்டிராத பல பாடல்களை ஒலிபரப்பினார்கள்.எத்தனை வாக்மேன், ஐ பாட் எல்லாம் வந்தாலும் இரவு நேரத்தில் வானொலியில் பாட்டு கேட்கிற சுகம் தனிதான். அடுத்து என்னப் பாட்டு வரும் என்று காத்திருக்க வைக்கிற சுவாரசியம்தான் வானொலியின் சிறப்பு. அதிலும் எப்பொழுதாவது நாம் எதிர்பார்க்கிற பாட்டே ஒலிபரப்பாகும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவேது? அன்று அப்படித்தான் நடந்தது. இரவின் மடியில் என்றொரு நிகழ்ச்சியில் ஒலிபரப்பான முதல் இரண்டு பாடல்கள் – “உயிரே…உயிரே” (பம்பாய்) மற்றும் “அன்பே… அன்பே” (ஜீன்ஸ்). ரஹ்மான் இசை. ஒரு சொல்லே இரண்டு முறை வருகிறது. அடுத்தப்பாடலாக “வெண்ணிலவே…வெண்ணிலவே” (மின்சாரகனவு) வருமோ என்று நான் நினைத்திருக்க அதேபாடல்தான் ஒலிபரப்பானது. அடுத்த பாடலையும் கண்டுபிடிப்போம் என்று அதே மாதிரியான பாடல்களையெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருக்க வந்ததென்னவோ காதலுக்கு மரியாதையிலிருந்து “இது சங்கீதத் திருநாளோ” தான்.

written by அருட்பெருங்கோ \\ tags: