அடுத்த நாள் காலையில் நான் maths tuition-இல் இருக்கும்போது அங்கு வந்தாள், அவள்… maths tuition-இல் சேர்வதற்கு!
எப்போதும் போல ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த என்னை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டபடியே போய் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டாள்.
எனக்கு வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரே காரணத்திற்காகத்தான் maths-க்கு நான் அந்த ட்யூஷன் மாஸ்டரிடம் சேர்ந்திருந்தேன். அங்கு சேர்ந்திருந்த பெரும்பாலானவர்களும் அதே காரணத்திற்காகத்தான் சேர்ந்திருந்தார்கள்.
ஆனால் அவளுக்கோ வீட்டிலிருந்து மிகத் தொலைவில்தான் இருக்கிறது இந்த tuition centre. இன்னும் சொல்லப் போனால் அவள் வீட்டிலிருந்து இங்கு வருவதற்கு அவள் பள்ளிக்குப் போவதற்கு எதிர்த்திசையில் தான் வர வேண்டும். அவளுடையப் பள்ளியிலிருந்து ஒருத்திகூட இங்கு சேர்ந்திருக்கவில்லை. இங்கு வரும் எல்லாப் பெண்களுமே பக்கத்தில் இருக்கும் தெரசா ஸ்கூலில் படிப்பவர்கள்தான். அவளுக்குத் தெரிந்தவர்கள் என்று யாரும் இங்கு படிக்கவும் இல்லை.
இப்படி ஒவ்வொருக் காரணமாய் யோசித்து எல்லாவற்றையும் நிராகரித்தேன்.அப்படியிருக்க அவள் ஏன் இங்கு வந்து சேர்ந்திருப்பாள்?…ஒரு வேளை…. நான் யோசித்துக் கொண்டு இருக்கும்போதே ட்யூஷன் முடிந்து எல்லோரும் கலைந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவளை முன்னே விட்டு நான் மெதுவாய் கீழே இறங்கி வந்து என் சைக்கிளை எடுத்து மிதிக்க ஆரம்பித்தேன்.
பின்னாடித் திரும்பிப் பார்க்கலாமா என ஒருத் தயக்கத்தோடு நான் பின்னால் திரும்பிப் பார்க்க, அவள் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு என்னையேப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். நான் உடனே தலையைத் திருப்பிக் கொண்டு வேகமாய் மிதிக்க ஆரம்பித்தேன். எனக்கு அப்போது அதிகமாக மூச்சு வாங்கியது, ஆனால் சைக்கிள் மிதித்ததால் அல்ல!
அதன் பிறகு மூன்று ட்யூஷன்களிலும் ஆறு மாதங்களாய் நடந்தவை :
Maths tuition :
Maths tuition மட்டும் வாரத்தின் எல்லா நாளும் இருக்கும். அதுவும் நடுசாமம் 6 மணியில் இருந்து 7:30 வரை நடக்கும். தினமும் நான் அதிகாலை எட்டு மணிக்கு எழுந்திருப்பதே சன் டிவி செய்தி பார்ப்பதற்குத்தான். இவரிடம் ட்யூஷன் சேர்ந்ததில் இருந்து காலையில் 6 மணிக்கே தூக்கம் கலைக்க வேண்டியிருந்தது. தூங்கி வழியும் முகத்துடனேப் போய்க் கொண்டிருந்தேன்.நான் மட்டுமல்ல அங்கு வரும் எல்லாருமேக் கிட்டத்தட்ட அந்த நிலையில் தான் இருந்தோம். ஆனால் அவள் மட்டும் காலையிலேக் குளித்துவிட்டு ஸ்கூல் யூனிஃபார்மில் வந்து உட்கார்ந்துவிடுவாள். எல்லோருக்கும் மத்தியில் அவள் மட்டும் வித்தியாசமாய்!
தினமும் நடக்கும் சின்ன சின்ன தேர்வுகளில் நோட்டை எங்களுக்குள் மாற்றித் திருத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் தேர்வு எழுதி முடித்ததும் நோட்டை என்னருகில் வைத்துவிடுவாள்.அவளுக்கு என்னைத் தவிர வேறு யாரையும் அங்குத் தெரியாது. சேர்ந்த புதிது என்பதால் எனக்கும் அவளைத்தவிர மற்றவர்களிடம் பழக்கமில்லை.எங்கள் நோட்டுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.அவள் நோட்டில் நான் “டிக்” மட்டும் போட்டுக் கொடுக்க, அவளோ, “good” போடாமல் திருப்பித்தந்ததில்லை.முதலில் அதையெல்லாம் வாங்கியவுடனே அழித்துக்கொண்டிருந்தவன் அப்புறம் நிறுத்திக்கொண்டேன்.
புரியாதக் கணக்கை விளக்க சொல்லி, டெஸ்ட் பேப்பரை வாங்குவதற்கு என ஏதாவது காரணத்தோடு என்னிடம் பேச ஆரம்பித்தாள்.ட்யூஷன் முடிந்த பிறகும் மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டே பேச்சைத் தொடர்ந்த நாட்களும் உண்டு. என் வானரக் கூட்டம் இங்கு இல்லாததால் நானும் அவளிடம் அதிகமாகவேப் பேசத் தொடங்கியிருந்தேன். படிப்பில் ஆரம்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாம் பேசினோம்.ஒருநாள் அவள் “ காலைல குளிக்கலன்னாக் கூடப் பரவால்ல..அட்லீஸ்ட் முகத்தையாவது கழுவிட்டு வரலாமில்ல!” என சொல்லிவிட்டாள். அடுத்த நாளில் இருந்து 5 மணிக்கே எழுந்து வெந்நீர் வைத்துக் குளித்துவிட்டுக் கிளம்பிப் போகும் என்னை என் வீடே வித்தியாசமாய்ப் பார்த்தது. நானும் நிறைய மாறித்தான் போனேன் அந்த ஆறு மாதத்தில்.
Physics tuition :
Physics tuition-இல் எங்களுக்கு அடுத்த batch-இல் தான் அவள் வருவாள். நாங்கள் 5 மணி ட்யூஷனுக்கு, பள்ளி முடித்து விட்டு 4:30 மணிக்கே அங்கு சென்றுவிடுவோம்.மாஸ்டர் வரும்வரை அந்த மொட்டை மாடி தான் எங்கள் அரட்டை அரங்கம். 6 மணி ட்யூஷனுக்கு அவளும் பள்ளிமுடிந்து நேராக வந்துவிடுவாள் 4:30, 4:45க்கே. அந்தப் பத்துப் பதினைந்து நிமிடநேரத்திலும் என்னிடம் ஏதாவதுப் பேச ஆரம்பித்துவிடுவாள். தங்களுக்குள் பேசிக்கொள்வது போல் நாங்கள் பேசுவதையே ஒட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என் நால்வர் அணியினர். நானும் வார்த்தைகளை அளந்தேப் பேசுவேன்.
“என்னடாப் பொண்ணு பத்து நிமிஷம் பேசறதுக்காக வேர்த்துக் கொட்ட சைக்கிள மிதிச்சுட்டு வந்துட்றா…பிக்கப் ஆயிடுச்சுப் போல இருக்கு?” – மதன்.
“டேய்..அதெல்லாம் ஒன்னும் இல்லடா” – நான்.
“எங்கப்பாக் குதிருக்குள்ள இல்ல! – அந்தக் கததான”
“மாஸ்டர் வந்துட்டாருக் கிளம்பு!”
இப்படி அவர்கள் துருவித் துருவிக் கேட்கும்போதெல்லாம் அப்படியெதுவுமில்லை என்று சொன்னாலும் அப்படி எதுவும் இருக்கக் கூடாதா என ஒரு ஏக்கம் வந்து மறையும்.
வாரம் ஒருமுறைத் தேர்வு எழுதும்போது, நான் எப்போது எழுதவருவேன் என்று கேட்டு அதே நேரம் அவளும் வருவாள். தேர்வு முடிந்ததும் மார்க் விசாரிப்பதுபோல் ஆரம்பித்து 1 மணி நேரத்துக்குக் குறையாமல் பேசுவாள். நான் விடுமுறை நாட்களில் ட்யூஷன் முடிந்தவுடன் நூலகம் சென்று விடுவது வழக்கம். அங்கும் அவள் வர ஆரம்பித்தாள். அவள் படித்தப் புத்தகங்களை என்னிடம் கொடுத்துப் படிக்க சொல்லுவாள். நான் ஏற்கனவே படித்தப் புத்தகமாக இருந்தாலும் மறுபடியும் படிப்பேன் புதிதாய்ப் படிப்பவனைப் போல.அவளும் ஒவ்வொரு நாளும் நெருக்கமாகிக் கொண்டே வருவது போல் இருந்தது. அதே சமயம் பயமாகவும் இருந்தது. எந்நேரம் என்ன நடக்குமோ என்ற தவிப்போடு நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தேன்.
Chemistry tuition :
Chemistry tuition-இல் தான் எனக்குள்ளும் அந்த வேதியியல் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன.
(தொடரும்)
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
May 21st, 2006 at 5:28 am
வேதியியல் டியூசனில் உடம்பில் வேதியல் மாற்றமா?????
May 21st, 2006 at 5:53 am
உடம்பில் வேதியியல் மாற்றம்,
மனசில் உயிரியல் மாற்றம்!
அன்புடன்,
அருள்.
May 21st, 2006 at 6:13 am
ஒரே மூச்சில் படித்துமுடித்தேன்.
உணர்வுபூர்வமான எழுத்து நடை!!.
படிக்கும்போது அருகில் இருந்து பார்ப்பது போல் உள்ளது.வாழ்த்துக்கள்.
அன்புடன்,
துபாய் ராஜா.
May 21st, 2006 at 6:35 am
சூப்பரா எழுதறீங்க. போட்டுத் தாக்குங்க.
May 21st, 2006 at 8:32 am
ராஜா,
தொடர்ந்து படிக்கிறீங்கனு நினைக்கும்போதே மகிழ்ச்சியா இருக்கு..
உங்கள் வாழ்த்துக்கு மறுபடியும் நன்றி!!
அன்புடன்,
அருள்.
May 21st, 2006 at 9:04 am
கொத்சு,
//சூப்பரா எழுதறீங்க.//
ரொம்ப நன்றிங்க
//போட்டுத் தாக்குங்க.//
நானேத் தாக்கப்பட்டுக் கிடக்கேன் - இதுல நான் எங்கப் போய்த் தாக்கறது? :))
அன்புடன்,
அருள்.
May 22nd, 2006 at 6:53 am
என்ன எம்ஜியார் கணக்கா தலைவியை கனா காண வைச்சுட்டுருக்கீங்க !
May 22nd, 2006 at 7:17 am
அட என்ன மணியன் நீங்க வேற எம்ஜியார்னு சொல்லிட்டுப் போயிட்டீங்க…யாராவது நம்பியார் மாதிரி வந்துடப் போறாங்க
அன்புடன்,
அருள்.
May 22nd, 2006 at 11:12 am
இன்றைக்குத்தான் முதல் முதலில் படித்தேன். நல்லா எழுத்றீங்க. மூன்று பகுதிகளையும் படித்து விட்டேன் அடுத்த பகுதி எப்பொழுது போடுவீங்க ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
சந்தோஷத்துடன்.
சந்தோஷ்.
May 22nd, 2006 at 10:29 pm
//இன்றைக்குத்தான் முதல் முதலில் படித்தேன். நல்லா எழுத்றீங்க. //
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சந்தோஷ்!!
அடுத்தப் பகுதிப் போட்டாச்சே!!
அன்புடன்,
அருள்.
May 22nd, 2006 at 11:13 pm
என்னய்யா இது?
சும்மா பழைய விஷயங்களை எல்லாம் கிண்டிக் கெழங்கெடுக்கிறீங்களே.
நாங்க எல்லாம் ஆபீசுல வேலை பாக்க வேணாமா? நான் பழசையெல்லாம் நினைச்சு திருதிருன்னு முழிச்சுக்கிட்டு ஒக்காந்திருக்கேன், வேலை வெட்டி பாக்காம!
May 23rd, 2006 at 3:10 am
//அவள் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு என்னையேப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். … எனக்கு அப்போது அதிகமாக மூச்சு வாங்கியது, ஆனால் சைக்கிள் மிதித்ததால் அல்ல!//
போதுமே என்ன ஒரு அருமையான நிகழ்வின் பதிவு !! மிக அருமை அருள் !!
May 23rd, 2006 at 10:01 am
பிரதீப்,
/சும்மா பழைய விஷயங்களை எல்லாம் கிண்டிக் கெழங்கெடுக்கிறீங்களே./
பழசக் கிண்டினா ஒரு கிழங்கு மண்டியே வைக்கலாம் போல!! :))
//நாங்க எல்லாம் ஆபீசுல வேலை பாக்க வேணாமா? நான் பழசையெல்லாம் நினைச்சு திருதிருன்னு முழிச்சுக்கிட்டு ஒக்காந்திருக்கேன், வேலை வெட்டி பாக்காம! //
அடப் போங்கப்பு..உங்க பின்னூட்டத்துக்கு எல்லாம் பதில் சொல்லலாம்னு ப்ளாக்கரத் திறந்து வச்சு உட்காந்திருந்தா அந்த PL வந்து பொன்னையனப் பார்க்கிற அம்மா மாதிரி முறைக்கிறாரு..அப்படியே மூடி வச்சிட்டு வேலையப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்..
May 23rd, 2006 at 10:02 am
நவீன்,
/போதுமே என்ன ஒரு அருமையான நிகழ்வின் பதிவு !! மிக அருமை அருள் !!
/
உங்களுக்கு இந்த திக் திக் அனுபவம்லாம் நடந்தது இல்லையா?? சும்மா சொல்லுங்க…
அன்புடன்,
அருள்.
May 23rd, 2006 at 2:38 pm
“ காலைல குளிக்கலன்னாக் கூடப் பரவால்ல..அட்லீஸ்ட் முகத்தையாவது கழுவிட்டு வரலாமில்ல!” என சொல்லிவிட்டாள். அடுத்த நாளில் இருந்து 5 மணிக்கே எழுந்து வெந்நீர் வைத்துக் குளித்துவிட்டுக் கிளம்பிப் போகும் என்னை என் வீடே வித்தியாசமாய்ப் பார்த்தது. நானும் நிறைய மாறித்தான் போனேன்…”
காதல் வந்தால் இப்படித்தான் அருள்.
மாறங்கள் பல வந்துடும். ம்…ம்…
சந்தேகமே இல்லை இருவருக்குள்ளும் காதல்தான்.
நன்றாகவே எழுதுறீங்கள் அருள். பாராட்டுக்கள்.
May 24th, 2006 at 5:45 am
சத்தியா,
/காதல் வந்தால் இப்படித்தான் அருள்.
மாற்றங்கள் பல வந்துடும். ம்…ம்…
/
ம்..ம்..ஆமாங்க…ஆமா