இது காதல் பூக்கும் மாதம் - முதல் பகுதி
4. நலம் புனைந்து உரைத்தல்
நீ தூங்க அனிச்சப்பூக்களைத் தூவினேன்,
கதறுகின்றனப் பூக்கள்…
உனக்கு வலிக்குமென!
நன்னீரை வாழி யனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.
அனிச்சப்பூவே! நல்ல மென்மைத்தன்மை பெற்றிருக்கின்றாய்! நீ வாழ்க! யாம் விரும்பும் காதலி உன்னைவிட மெல்லிய தன்மை உடையவள்.
மொட்டுப் பூவாவதை
பார்க்க ஆசை.
மெதுவாக இமைகளைத் திற!
மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண்
பலர்காணும் பூவொக்கு மென்று
நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குன்றாய்!
மூங்கில் தோள்; மாந்தளிர் மேனி;
முத்துப் பல்; நறுமணம் வியர்வை ;கூர்வேல் கண்.
- இலக்கணப்படி உவமை.
காதல்படி உண்மை.
முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேனி; முத்தே பல்; இயற்கை மணமே மணம்; வேலே மையுண்ட கண்.
பூங்காப் பக்கம் செல்லாதே.
உன் கண்போல் பூக்கவில்லையேயென
பூக்களெல்லாம் கண்ணீர் விடுகின்றன.
காணிற் குவளை கவிழ்ந்து நிலநோக்கும்
மாணிழை கண்ணொவ்வே மென்று.
குவளை மலர்கள் காணும் தன்மைப்பெற்றுக் கொண்டால், “இவளுடைய கண்களுக்கு யாம் ஒப்பாகவில்லையே என்று தலைகவிழ்ந்து நிலத்தை நோக்கும்”
உன் கூந்தலேறிய மகிழ்ச்சியில்
அநிச்ச மலர் சிரிக்கிறது.
அதன் எடைதாங்காமல்
உன் மெல்லிடையோ அழுகிறது.
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.
அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினாள்; அவற்றால் நொந்து வருந்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.
நட்சத்திரமெல்லாம் மின்னுகிறதா?
அடிப்போடி…
நிலவெது? உன் முகமெது? எனத் தெரியாமல்
மலங்க மலங்க விழிக்கிறது!
மதியு மடந்தை முகனு மறியா
பதியிற் கலங்கிய மீன்.
விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.
உன் முகம் நிலா என்கிறேன்.
கோபிக்கிறாய்.
சரி சரி பௌர்ணமிதான்!
அறுவாய் நிறைந்த வவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.
குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளதுபோல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ? இல்லையே!
உன் முகம்போல் ஒளியில்லாததால்
என்னிடமிருந்து தப்பித்தது…
நிலவு!
மாதர் முகம்போலொளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.
திங்களே! இம் மாதரின் முகத்தைப்போல் ஒளி வீச உன்னால் முடியுமானால், நீயும் இவள்போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.
உன் போல ஒளிவீச
நிலவுக்கும் ஆசையாம்.
என்ன ரகசியமென சொல்லிக்கொடு.
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயிற்
பலர்காணத் தோன்றன் மதி.
திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.
பூக்களும் மயிலிறகும் கூட
உன் பாதத்துக்கு வலிக்கிறதா?
இனி தென்றலில் நட!
அனிச்சமு மன்னத்தின் றூவியும் மாத
ரடிக்கு நெருஞ்சிப் பழம்.
அனிச்ச மலரும் அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவை மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
February 5th, 2007 at 7:39 pm
அன்பு அருட்…
எல்லாம் அருமை :))
February 6th, 2007 at 12:20 am
வாங்க கோபி,
/அன்பு அருட்…/
அருள்?
/எல்லாம் அருமை :)) /
நன்றிங்க… தொடர்ந்து வாசிக்கிறீங்க
February 6th, 2007 at 7:58 am
//
மொட்டுப் பூவாவதை
பார்க்க ஆசை.
மெதுவாக இமைகளைத் திற!//
//பூக்களும் மயிலிறகும் கூட
உன் பாதத்துக்கு வலிக்கிறதா?
இனி தென்றலில் நட! //
ஒவ்வொன்றும் காதலாகி கசிந்துருகியிருக்கு..
அவுக கொடுத்து வச்சவுகதான்.
என்ன சாமி, இரண்டு நாளா காதல்ப்பூ பூக்கலியா?
February 6th, 2007 at 10:20 am
என்னப்பா (அண்ணே ன்னு சொன்னா கோச்சிக்கிட்டீங்கள்ல அதான்… ;))
தினமும் உங்க தோட்டத்துல மட்டும் எப்டீங்க காதல் பூக்குது…
நமக்குத்தான் இதுவரை லக்கே இல்ல…
February 7th, 2007 at 5:44 am
வாங்க பிரேம்,
/ஒவ்வொன்றும் காதலாகி கசிந்துருகியிருக்கு..
அவுக கொடுத்து வச்சவுகதான்./
அது சரி :-)))
/என்ன சாமி, இரண்டு நாளா காதல்ப்பூ பூக்கலியா?/
இல்லப்பு … நான் சித்தப்பா ஆகிட்டேன்ல அதான் ஊருக்குப் போயிட்டேன்…
February 7th, 2007 at 6:42 am
வாங்க ஜி,
/ என்னப்பா (அண்ணே ன்னு சொன்னா கோச்சிக்கிட்டீங்கள்ல அதான்… ;)) /
:-)))
/தினமும் உங்க தோட்டத்துல மட்டும் எப்டீங்க காதல் பூக்குது…/
சரி சரி கண்ணுப் போடாதீங்க… எல்லாம் வள்ளுவர்கிட்ட இருந்து சுட்டதுதான?
/நமக்குத்தான் இதுவரை லக்கே இல்ல…/
கவிதை எழுதறதுக்கு லக்கு வேணுமா?