மூன்று கால்கள் மட்டுமிருந்த அந்த நாற்காலிக்கு செங்கற்களை முட்டுக் கொடுத்து அதில் அவள் உட்காரவைக்கப்பட்டிருந்தாள். அவள் வயதுக்கு வந்தபோது உட்காரவைத்து சடங்கு செய்வதற்காக அவள் அப்பா குளித்தலை போய் வாங்கி வந்த நாற்காலியென முன்பொருமுறை சொன்னது நினைவிருக்கிறது. அவள் தாவணிப்பாவாடையணிந்து அந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கிற மாதிரி அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் கூட இன்னும் இருக்கிறது. எங்களுக்கு திருமணம் முடிந்து சென்னை வந்தபிறகு நைந்து போன அந்த கருப்பு வெள்ளைப்படத்தை ஏதோ பெரிய ரகசியம் போல தயங்கி தயங்கி தான் காட்டினாள். அந்தக் கதையெல்லாம் இப்போது எதற்கு நினைத்துப் பார்க்க வேண்டும்? ஆனால் மனைவி இறந்து போன நேரத்தில் இதை இதைத்தான் நினைக்க வேண்டுமென மனதுக்கு ஏதேனும் சட்டம் போடப்பட்டிருக்கிறதா என்ன? அப்படியே இருந்தாலும் சொன்னதைக் கேட்கிற மாதிரியான மனதா எல்லோருக்கும் வாய்த்துவிடுகிறது? நேற்றிரவு மாரடைப்பால் மரணமடைந்தவளைக் கொண்டு வந்து இந்த நாற்காலியில் உட்கார வைத்ததில் இருந்து அப்படியேதான் இருக்கிறாள். அப்போது இந்த திண்ணையில் சாய்ந்ததில் இருந்து நானும் இப்படியேதான் இருக்கிறேன். மனம் மட்டும் காலத்தை வருடக்கணக்கில் பின்தள்ளிக் கொண்டே இருக்கிறது. அவள் காலடியில் அழுதுகொண்டே இருக்கிற மகள், எரிந்து கொண்டிருக்கிற விளக்கை அவ்வப்போது தூண்டிவிடுவதுமாயிருக்கிறாள். இரவு முழுவதும் காரோட்டி வந்து சிவந்த போன கண்களில் வழிகிற கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சாய்ந்து அமரிந்திருக்கும் மகனை தாங்கியபடி நிற்கிறது இந்தப் பழையத் தூண்.இந்தத் தூண் அப்போது இன்னும் அழகாய் இருந்தது. இந்தத் திண்ணையில் விரித்திருந்த பாயில்தான் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். நாங்கள் என்றால், நானும், என் குடும்பமும். அன்று இந்தத் தூண் வரைக்கும் வந்து நின்றுவிட்டு, நிமிர்ந்துகூட பார்க்காமல் மறைந்துவிட்டாள். சாதகம் எல்லாம் பொருந்தியிருந்தும் மகளைச் சென்னைக்கு அனுப்ப அவள் வீட்டில் எல்லோருக்குமே தயக்கம்தான். அவள் சொல்லுகிற போதெல்லாம் கண்டிப்பாக ஊருக்கு அழைத்து வந்துவிடுவதாய் நான் வாக்குக் கொடுத்துதான் எங்கள் திருமணம் நடந்தது. சென்னை வந்து விட்ட இத்தனை வருடங்களிலும் ‘எங்க மகிளிப்பட்டில…’ என்று ஆரம்பித்து தினமும் பத்து முறையாவது சொல்ல, அவளுக்கு ஆயிரம் விசயங்கள் இருந்தன இந்த ஊரில். முதன்முறையாக ஊரைவிட்டு வெளியே வந்திருந்தாலும், ஒன்பதாவது வரையிலும் படித்திருந்ததால் சென்னை நாகரிகத்திற்கு தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்வதில் அவளுக்குப் பெரிய சிரமம் இருந்திருக்கவில்லை. ஆனாலும் இந்த ஊரை மொத்தமாய் தன்னோடு சுருட்டிக் கொண்டு வந்துவிட்டதைப் போல எப்போதும் இதனோடு நெருக்கமாகவே இருந்தாள். திருமணத்திற்குப் பிறகு என்னைப் பிரிகிற சில நாட்களும்கூட துயரமென அவள் வருந்தியபோதும், என்னோடு அவள் சென்னையில் இருந்த காலங்களை விட, அவளோடு நான் மகிளிப்பட்டியில் இருந்த காலங்களிலேயே அவள் முழுமையான மகிழ்ச்சியில் இருந்திருக்கிறாள். சென்னையிலிருந்து வரும்போது லாலாப்பேட்டையில் இறங்கும்போதே அவளிடம் தெரியும் அந்த மாற்றத்தை உணர்ந்திருக்கிறேன்.
லாலாப்பேட்டையில் இருந்து வரும் அடுத்த மினி பஸ்சின் சத்தம் கேட்கிறது. வாய்க்கால் முக்கில் இறங்கிய சொந்தங்களில் அங்கிருந்தே ஒப்பாரியை ஆரம்பித்து விட்ட ஒரு கிழவியின் குரலைக் கேட்டு, இங்கு அழுதழுது ஓய்ந்திருந்த பெண்களுக்கு மீண்டும் கேவல் ஆரம்பித்தது. அழுதுகொண்டே ஓடிவந்த பெண்களோடு இங்கிருந்த வர்களும் சேர்ந்து கொண்டு அழ ஆரம்பிக்க திடீரென சத்தம் அதிகமாகி, நினைவுக்குள் எதையெதையோ உடுக்கையடிக்கிறது எனக்கு. எல்லாப் பெண்களும் வட்டமாய்க் கட்டிப்பிடித்துக் கொண்டு அசைந்து அசைந்து ஒப்பாரி வைக்க, யாரும் நாற்காலியைத் தட்டி விட்டு விடக்கூடாதே என்கிற பயமெனக்கு. ஆடுகிறவர்கள் எல்லாரும் அவள் கையை இடித்து இடித்து விட அவள் கையை எடுத்து உள்ளே மடித்து வைக்கப் பார்க்கிறேன். ஆனால் அது நாற்காலியோடு கட்டப்பட்டிருக்க, அவள் கையையேப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். மகன் அதனை வித்தியாசமாகப் பார்க்கிறான். அதற்குள்ளாகவே அவளைப் பிணம் என்று அவனால் உணர்ந்துகொள்ள முடிந்திருக்கிறது போல. என்னால் இன்னும் முடியவில்லை. அவள் இறந்து விட்டாள் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக கிரகித்துக் கொள்ள முயன்றாலும், இது எல்லாமே கனவாக மாறி திடீரென நான் தூக்கத்தில் இருந்து விழிப்பேன்; எப்போதும் போல என் மார்பில் கை போட்டு அவள் துங்கிக்கொண்டிருப்பாள் என்றே நான் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.
நேற்றிரவு கூட என் மார்பில் கைபோட்டுக்கொண்டு தூங்கியவள்தானே இவள். திருமணத்திற்கு முன்பு நிமிர்ந்து பார்ப்பதற்கே வெட்கப்பட்டவள் திருமணத்திற்குப் பிறகு பல சமயங்களில் என்னையே வெட்கப்பட வைத்திருக்கிறாள். பேசும்போது கண்களைப் பார்த்து பேசுவது மட்டுமே நெருக்கமாய் இருப்பதை உணர்த்துமென்று நம்பிக் கொண்டிருந்த எனக்கு, கைகளையோ, தோள்களையோப் பிடித்துக் கொண்டு இவள் பேசும்போது அது பொய்யென தோன்றியிருக்கிறது. தொடுதல் உணர்த்தும் அர்த்தங்கள் புரியவைத்தவள் அவள். இத்தனை வயசிலும் இரவுத் தூக்கம் ஒரே மெத்தையில் தான். கையைப் பிடித்துக் கொண்டோ, மார்பில் கைபோட்டபடியோதான் தூங்குவாள். இரண்டு பிரசவத்தின்போதும் பக்கத்திலிருக்க சொல்லி என் கைகளைத்தானே பிடித்துக் கொண்டிருந்தாள். முதல் கர்ப்பத்தின் போது என்ன குழந்தை வேண்டுமென்று அவள் கேட்டபோது, ஆண் என்று நான் சொன்னதும் ஆச்சர்யப்பட்டாள். மகன் அம்மாவிடம்தான் அன்பாயிருப்பான், மகள் தான் அப்பாவிடம் அன்பாயிருப்பாள் என்று, எனக்கு விளக்கமெல்லாம் சொன்னாள். என் மேல் பாசமாயிருக்கிற மகளை விட அவள் மேல் பாசமாயிருக்கிற மகன் தான் வேண்டுமென்று சொல்லி வைத்தேன். ஆனால் அப்போது பெண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்து விட்டுச் சிரித்தாள். இரண்டாவது பிரசவத்தில் தான் ஆண்குழந்தை பிறந்தான். நேற்று நடந்தது போலிருந்தாலும் எல்லாம் முடிந்து முப்பது வருடமாகி விட்டது.
ஆண்கள் வரிசையாக வர ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது நான் எழுந்து நின்று இரு உள்ளங்கைகளையும் நீட்டிக் கொண்டிருக்க வேண்டுமாம். ஒவ்வொருவராக அவர்கள் கைகளினால் என் உள்ளங்கை தொட்டு என் துக்கத்தைப் பகிர்ந்து கொள்வார்களாம். வேடிக்கையாக இருக்கிறது. வேதனையாகவும்தான். துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறார்களாம். அவர்களுக்கும் துக்கமாக இருக்கிறது என்று சொல்லட்டும். ஆனால் என் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டதாக சொல்லுவதுதான் வேதனை. இருக்கிற துக்கத்தை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து விட முடியுமென்றால் நன்றாகத்தான் இருக்கும். முடியுமா? எல்லோரும் அங்கங்கே அமர்ந்து கொண்டபிறகு மீண்டும் திண்ணையில் சாய்கிறேன். ‘என்னைய்யா அருவது வயசு ஆம்பள அழுவலாமா? சந்தோசமா பொண்டாட்டிய அனுப்பி வைப்பியா’ தடி ஊன்றி வருகிற எழுபத்தைந்து வயது பெரியவர் என் தோளைப் பிடித்துக் கொண்டு சொல்லி விட்டு அமர்கிறார். பத்து வருடங்களுக்கு முன்பு இவர் மனைவி இறந்தபோது சாராயத்தைக் குடித்துவிட்டு அழுது தீர்த்தவர், இப்போது எனக்கு அறிவுரை சொல்கிறார். அவர் சாராயம் குடித்து விட்டு அழுதார். நான் சாராயம் குடிக்காமல் அழுகிறேன். ஆணென்றால் அழக் கூடாதென்று யார் சொன்னது?
ஆண் அழக்கூடாதென்று அவள் சொல்லியிருக்கிறாள். பத்து வருடங்களுக்கு முன் அவளுக்கு முதல் மாரடைப்பு வந்தபோது மருத்துவமனையில் அவளைத் தேற்றி விட்டு வெளியே வந்து நான் அழுததை எப்படியோ தெரிந்துகொண்டு விட்டாள். அறுவை சிகிச்சையறைக்கு அவளை உள்ளே அனுப்பும்போது பயப்படாமல் இருக்க சொல்லி நான் தேற்ற, ‘நான் உள்ள போனதும் நீங்களும் இங்க அழாதீங்க. ஆம்பள அழக் கூடாது’ என்று என்னைத் தேற்றி விட்டுப் போனாள். அதற்கு முன்பெல்லாம் நோயென்றா, உடல்நிலை சரியில்லையென்றோ மருத்துவமனைக்கேப் போகாதவள். எப்போதாவது இரவு நேரத்தில் தலைவலிக்கிறதென சொல்லுவாள். கொஞ்சம் சுக்கு தட்டி போட்டு சூடாக ஒரு டம்ளர் காப்பி வைத்துக் கொடுத்தால் குடித்துவிட்டு படுத்துக் கொள்வாள். காலையில் எழுந்து எப்போதும் போல இயங்க ஆரம்பித்துவிடுவாள். கடைசி வரைக்கும் அவளுக்காக நான் செய்த ஒரே சமையல் சுக்கு காபி மட்டும் தான். அவள் மீதான அன்பை வெளிப்படுத்துவதற்கு எந்த வேலையை செய்வதற்கும் அவள் என்னை அனுமதித்ததில்லை. அந்த குற்றவுணர்ச்சியில் அவளை நான் கவனித்துக்கொள்வதற்காகவேனும் தலைவலியென்று அவள் படுத்துக் கொள்ளக்கூடாதா என்று சில சமயம் யோசிப்பேன்.
நாற்காலியிலிருந்து இறக்கி நீள பெஞ்சில் அவளைப் படுக்க வைத்து விட்டார்கள். பெண்கள் எல்லாம் சேர்ந்து புடவைகளைச் சுற்றிப் பிடித்து மறைப்பு கட்ட, குளிப்பாட்டித் தயார்படுத்துகிறார்கள். வேறு புடவை உடுத்தி, பெஞ்சோடு அவளைக் கொண்டு வந்து நடு வாசலில் வைத்து சடங்குகள் துவங்குகின்றன. என்னையும் அழைக்கிறார்கள். அவள் நெற்றியில் சந்தனத்தை தடவுகையில் எனக்கு கை நடுங்குகிறது. அதற்கு மேல் முடியாமல் மீண்டும் திண்ணையில் வந்து அமர்ந்து கொள்கிறேன். எல்லா சடங்குகளையும் முடித்து அவளைத் தேரில் தூக்கி வைக்கிறார்கள். தேருக்கு முன்னால் நடந்து செல்ல நானும் எழுந்து போக வேண்டும்.
சொர்க்கத்திற்கு யார் முன்னால் செல்வதென்று ஒருமுறை பேசிக்கொண்டிருந்தோம். இந்த உலகத்தில் அவளை விட்டுத் தனியாக எனக்கு இருக்க தெரியாதாம். அதனால் நான் தான் முதலில் போக வேண்டுமென்றும், என்னை அனுப்பி வைத்து விட்டு அவள் பிறகு வர விரும்புவதாகவும் சொன்னாள். ஒருவேளை அவளை முதலில் அனுப்பி வைக்க வேண்டிய சூழ்நிலை எனக்கு வந்தால் என்ன செய்வது என்று கேட்டேன். ‘எமன எப்படியாவது ஏமாத்திட்டு திரும்பி உங்ககிட்டயே வந்துடுவேன்ல’ என்று சொல்லி சிரித்தாள்.
தேரில் படுத்துக்கொண்டு இப்போது கண்களைத் திறந்து என்னைப் பார்த்து சிரிக்கிறாளே இது நிஜம்தானா? என்னைத் தவிர வேறு யாரும் அவளைப் பார்க்கவில்லையா? அவள் மெதுவாக எழுகிறாள். இப்போதுதான் மற்றவர்களும் கவனிக்கிறார்கள். அழுது கொண்டிருந்த சத்தம் அப்படியே நின்று போகிறது. தேரைத் தூக்கப் போனவர்கள் அப்படி அப்படியே சிலை போல நிற்கிறார்கள். அடித்துக் கொண்டிருந்த மேள சத்தம் கூட நின்றுவிட்டது. என்னால் இன்னும் என் கண்களை நம்பவே முடியவில்லை. எழுந்து உட்கார்ந்தவள், கட்டப் பட்டிருந்த கைகளை விடுவித்துக் கொள்கிறாள். யாருக்குமே அவளுக்கு உதவ வேண்டும் என்று தோன்றவில்லை. எல்லாருமே ஆச்சர்யத்தில் அப்படியே வாயடைத்து சிலை போல நிற்கிறார்கள். இல்லை பயமா என்றும் தெரியவில்லை. ஆனால் அவள் வெகு சாதாரணமாக தூங்கி எழுபவளைப் போல கட்டுகளை அவிழ்த்து விட்டு என்னை நோக்கி நடந்து வருகிறாள். எனக்கு மீண்டும் ஒரு சந்தேகம் வருகிறது. எல்லாமே கனவாகத்தான் இருக்குமோ? வீட்டிலிருக்கும் மெத்தையிலிருந்துதான் தூங்கியெழுந்து வருகிறாளா? சுற்றிலும் நன்றாக உற்றுப் பார்த்தேன். இல்லை. இல்லவே இல்லை. நேற்றிரவு மாரடைப்பு வந்து மருத்துவமனை கொண்டு செல்வதற்குள் அவள் இறந்ததும் உண்மை. இரவோடிரவாக இங்கு மகிளிப்பட்டிக்கு கொண்டு வந்ததும் உண்மை. அவளைத் தேரில் தூக்கி வைத்தபின் உயிர் பெற்று எழுந்து வந்து இதோ என் முன் எப்போதும் போல அழகாக சிரித்துக் கொண்டிருப்பதும் உண்மைதான். சொன்னது போலவே எமனை ஏமாற்றிவிட்டு வந்துவிட்டாளா? இதெல்லாம் சாத்தியமா? எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். எனக்கு அவள் திரும்பி வந்ததே போதும். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவளிடம் பேசுகிறேன். இன்னுமிந்த ஆச்சர்யத்திலிருந்து விடுபடமுடியாமல் சத்தமே இல்லாமல் வெளி வருகின்றன என் வார்த்தைகள் – ‘சொன்ன மாதிரியே திரும்பி வந்துட்டியாம்மா?’. கேட்டதும் சிரித்துக் கொண்டே சொல்கிறாள் – ‘இல்லீங்க… நீங்க தான் வந்துட்டீங்க’
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
January 28th, 2008 at 10:19 pm
மிகவும் அருமையாக இருக்கு! மிகவும் ரசித்து படித்”தேன்”.
January 28th, 2008 at 10:24 pm
அருமை அருமை!
முடிவு நினைத்து பார்க்கவே இல்லை,மனச பாரமாக்கி விட்டுட்டீங்க.
ஒரு சாவு வீட்டில் பெண்களின் செயல் எப்படி இருக்கும் என்பதை அப்படியே உங்கள் எழுத்தின் மூலம் கண்முன் காட்சியாக விரிந்தது.
January 28th, 2008 at 10:30 pm
oh god.. அவரு செத்துட்டாரா..
நிஜம்மாவே அட்டகாசமான கதை தான்..அய்யோ சூப்பரு இனி கவிஞர்ன்னு சொல்றதவிட கதாசிரியர்ன்னு சொல்லிடலாமாட்டமா இருக்கு…
January 28th, 2008 at 10:41 pm
கணவன் மனைவி அந்நியோன்யத்தை மிக மிக அழகாக, துள்ளியமாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்…..மனதை கணமாக்கிய கதை என்றாலும், ரசிக்கும் படியாக நீங்கள் எழுதியிருப்பது சிறப்பு,என் மனமார்ந்த பாராட்டுக்கள்!!
January 28th, 2008 at 10:53 pm
அருமை!
January 28th, 2008 at 10:54 pm
பொங்கல் அன்று இரவு எங்கள் தாத்தா இறந்துட்டார். இதே போல் தான் அடுத்த நாள் நிகழ்வுகளும்…
காலை வந்தவுடன் மீண்டும் 10 நாட்களுக்கு முந்தைய நிகழ்வுகளுக்கு கொண்டு சென்று விட்டீர்கள்.
January 28th, 2008 at 11:01 pm
மிகவும் அருமையா இருக்குங்க,முடிவும் நல்லாதன் இருக்குதுங்க.
January 28th, 2008 at 11:27 pm
@குசும்பன்,
நன்றிங்க.
அண்ணே, முழுசாதானப் படிச்சீங்க??? ச்சும்மா தான் கேட்டேன்
@நாடோடி இலக்கியன்,
நன்றிங்க. மரணம் நினைத்துப் பார்க்காத நேரத்துல வர்றதுதான் இல்லையா?
January 28th, 2008 at 11:28 pm
@முத்துலெட்சுமி,
அவரும் செத்துட்டார்!
கதையெழுத முயல்பவர்னு சொல்லிக்கலாம்
@திவ்யா,
அதெல்லாம் ஒரு கற்பனைதாங்க…பாராட்டுகளுக்கு நன்றிகள்!!!
January 29th, 2008 at 12:07 am
நட்சத்திரமாகியதற்கு மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே
மாண்டு போனவள் எழுந்து வந்த போது ஒரு கனமாக உணர்ச்சிக் குவியல்
பக்கு வந்து மேவிப் போன ரணத்தை மறுபடியும் சொரிந்து விட்டுக் கொள்ளும் ரணமான சுகம்
உணர்வுகளை அழகாக கதையாய் கவிதையாய் ஆக்கும் வித்தை உங்களிடம் நிறைந்து இருக்கிறது.
காத்திருக்கிறோம் உங்களின் இன்னும் பல நல்ல படைப்புகளுக்காய்
சுமி
January 29th, 2008 at 12:23 am
மிக அருமையான கதை. நட்சத்திரம் பின்னுவதை காண முடிகிறது.
January 29th, 2008 at 1:42 am
நல்லா கீதுபா
January 29th, 2008 at 2:15 am
அருமை!!!!!!!
January 29th, 2008 at 2:25 am
@சுமி,
வாழ்த்துகளுக்கு நன்றிங்க!
“ரணமான சுகம்” நல்லாருக்கே இந்த வார்த்தை.
படைப்புகளோடு மொக்கையும் கலந்தே வரும்
@மதுரையம்பதி,
நன்றிங்க! பின்னுதுன்னா என்னங்க?
January 29th, 2008 at 8:57 am
மிக எளிய நடையில உணர்வுகளை மிக நெருக்கமா வருடுற கதை. தடையில்லாம, துருத்தி நிற்கிற வார்த்தைகள்/சம்பவங்கள் இல்லாம அன்பை விவரிக்கிற விதம் நல்லாயிருக்குங்க. ரொம்ப நாளைக்குப் பிறகு இப்பதான் வலைப்பக்கம் வந்தேன். ஒரு நல்ல கதையைப் படிச்சிருக்கேன். நன்றி.
January 29th, 2008 at 9:11 am
நச்சென்ற முடிவு. அருமையான திருப்பம். கதையோட்டம் தெளிந்த நீரோடை போலச் செல்கிறது. எந்த ஒரு நிகழ்வையும் கூர்ந்து கவனித்து உள் வாங்கி கதை எழுதுவது என்பது மிகவும் கடினமான செயல்தான்
January 29th, 2008 at 10:55 am
மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது அருள் !!! அருமையான கதை !!!
January 29th, 2008 at 3:09 pm
மிகவும் நேர்த்தியான அருமையான கதையோட்டம்.
ஒவ்வொன்றாகச் சுட்டிக் காட்டிப் பாராட்டு வேண்டும் போன்ற உணர்வை ஏற்படுத்திய
எழுத்தும், அதனூடு தோய்ந்திருக்கும் உணர்வுகளும்.
மிகவும் அனுபவித்து எழுதியது போன்ற வெளிப்பாடுகள்.
கடைசிப் பந்திக்கு வந்த போதுதான் ஏமாற்றி விட்டீர்களோ என்ற உணர்வு சட்டென்று
வந்தது. முடிவு அந்த ஏமாற்றத்தைப் போக்கி விட்டாலும் முந்தைய பத்திகளின் உயிர்ப்புக்கு
கடைசிப் பத்தி காணாது போன்ற ஒரு பிரமை.
ஆனாலும் தவறவிடாது இக்கதையை வாசித்ததில் பெரும் திருப்தி.
ஒவ்வொரு உணர்வுகளையும் செயல்களையும் நுணுக்கமாக அவதானித்து மிக அழகாக
உணர்வு பூர்வமாக எழுதியுள்ளீர்கள். மனதார்ந்த பாராட்டுக்கள்.
January 29th, 2008 at 3:24 pm
ஏம்ப்பா கண்ணக் கசிய வெக்கனும்னே முடிவு செஞ்சுட்டு எழுதுனியா….கடைசி வரவர முடிவை ஊகிச்சாலும்…படிக்கிறப்போ ஒரு இதுதான்…. எப்படியோ ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தாச் சரிதான்.
முருகா!
January 29th, 2008 at 4:56 pm
யோவ் அநியாயம்பா இதெல்லாம்.
இப்படி அருமையா எழுதுனா எனக்கெல்லாம் குற்ற உணர்ச்சி வந்து கொஞ்ச நாள் எழுதாமப் போயிருவேன்.
(அதனால யாருக்கு நட்டம்?
கதை ரெம்ப நல்லாயிருக்குது. யாருப்பா பதிவுகள்ல இலக்கியம் இல்லைன்னு பொரியுரது.
தொடர்ந்து கதை எழுதவும்.
January 29th, 2008 at 5:17 pm
அருள் அருமை..;))
நன்றாக சொல்லியிருக்கிங்க கதையை
January 29th, 2008 at 9:09 pm
ஓருயிர், ஈருடல் இப்படி ஆகுது.
பத்திரிக்கைகளில் வருதுல்லே எப்பவாவது.
கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி மரணம்/ மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவன் மரணம்.
நல்லா எழுதி இருக்கீங்க.
January 29th, 2008 at 10:00 pm
நல்லா எழுதி இருக்கீங்க!!
January 29th, 2008 at 10:27 pm
அருமையான நடையில், ஒரு நல்ல கதை. பெரியவர்கள் பலரும் இங்கே வந்து கருத்து சொன்னபின் நான் என்னத்த சொல்ல?
கவிதை மட்டுமின்றி கதையும் நன்றாக எழுத வரும் என மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்
January 29th, 2008 at 11:14 pm
@ஆழியூரான்,
நன்றிங்க ஆழியூரான். எளிய நடைதான் எழுதப்பழகியிருக்கேன். கொஞ்சம் கடின (செறிவான?) நடையெல்லாம் வாசிக்க மட்டும் தான் முடியுது
@சீனா,
ரொம்ப நன்றிங்க சீனா.
இன்னும் நச்சிலிருந்து வெளியே வரலையா நீங்க
@நவீன்,
நன்றிங்க நவீன். பின்னூட்டங்களும் கூட நெகிழ வைக்கின்றன.
@சந்திரவதனா,
அனுபவமெல்லாம் இல்லைங்க சந்திரவதனா. எல்லாம் பார்த்து, கேட்ட அனுபவம் மட்டும்தான். கடைசி பத்தியில் தான் அவன் உயிரிழக்கிறான். ஒவ்வொரு புலன்களாக செயலிழப்பதால் முந்தைய பத்திகளில் இருந்த ‘உயிர்ப்பு’ குறைந்திருக்கும். கடைசி வரியில் நின்று போயிருக்கும்!
நன்றி.
@ராகவன்,
கண்ணக் கசிய வைக்க எழுதலைங்க ராகவன். முப்பது ஆண்டுகாலம் அன்போடு வாழ்ந்த வாழ்க்கையை அன்புக்குரியவளோடு சேர்ந்து நிறைவு செய்து கொள்வது முழுக்க முழுக்க துயரமானது என்றே சொல்லிவிட முடியுமா என்ன? ரெண்டு பேரும் சந்தோசமாவே இருக்கட்டும்
நன்றி.
@சிறில்,
இவ்வளவு தன்னடக்கம் இருக்கக்கூடாதுங்க
அய்யயோ இலக்கியம்னு எல்லாம் சொல்லாதீங்க… அப்புறம் ஆசிப் அண்ணாச்சி இலக்கியவியாதினு கலாய்க்க ஆரம்பிச்சிடுவவர்
தொடர்ந்து கதையும் எழுதுகிறேன். நன்றி
@கோபி,
ரொம்ப நன்றிப்பா…ஏதோ நமக்குத் தெரிஞ்சவரைக்கும் சொல்ல வேண்டியதுதான்
@துளசி,
ஆமாங்க டீச்சர். இந்தகதைய சொன்னதும் அறைத்தோழன் கூட சொன்னானே இதே மாதிரி அவங்க ஊர்ல கூட நடந்திருக்குன்னு. நன்றிங்க…
@இலவசக்கொத்தனார்,
நன்றிங்க இகொ. முதல் வருகை?
@பிரேம்,
எல்லாமே எழுதுவோம், அதுக்கு அப்புறம் படிக்கிறவங்க பாடு 
வாங்க தல. நீங்கதான் ஏற்கனவே சொல்லிட்டீங்களே
January 30th, 2008 at 1:54 am
மக்கள் ஏற்கனவே எக்கச்சக்கமா பாராட்டிட்டங்க. எனவே எனது பங்கை சுறுக்கமாக முடித்துக்கொள்கிறேன்.
கதை ரெம்ப நல்லா இருந்துச்சு… ஃப்ளோவும் சூப்பர்.
January 30th, 2008 at 7:33 pm
கதையயைப் படிக்கும் போது, எங்கப் பாட்டி, தாத்தா, செத்தப் போனது நடந்தது எல்லாம்..நினைவுக்கு வந்திருச்சுங்க..
இப்ப எல்லாம், நகரங்களில் படுக்கப் போட்டுவிடுறாங்க..கிராமத்துலே, சன்னல் பக்கமா, நாற்காலியில் உட்கார வச்சி கட்டி விட்டுறுவாங்க.
தலைப்பிலே உயிர்தெழுந்தாள் என்று சொன்னதால, சரி..வந்துருவாங்கன்னுப் பார்த்தேன்..ஆனா, மாற்றிப் போட்டு கலக்கிட்டீங்க..
January 30th, 2008 at 11:06 pm
@கருப்பன்,
நன்றிங்க கருப்பன். எல்லோரோட ஊக்கமும் இன்னும் நல்லா எழுதனும்னு ஆவலத் தூண்டுது!!!
@டிபிசிடி,
ம்ம்ம் நானும் எங்கள் சொந்தங்களின் இழப்பில் நடந்தது, பார்த்ததை வைத்துதான் எழுதியிருந்தேன்.
இதுக்குன்னே ஒரு நாற்காலி இருக்கும்
அதுக்காகதான் அப்படி ஒரு தலைப்பு
April 21st, 2008 at 6:55 pm
ரொம்ப அருமையான கதை,
நிஜமாவே அழுதிட்டேன் …
April 21st, 2008 at 7:14 pm
/ரொம்ப அருமையான கதை,/
நன்றிங்க புகழ்!!!
/நிஜமாவே அழுதிட்டேன் /
அந்த அளவுக்கு சோகமா இருந்ததா என்ன?